இன்றைய கல்வியின் சிக்கல்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

அறம் இணைய இதழில் சாவித்ரி கண்ணன் எழுதிய மூன்று செய்திக்கட்டுரைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். கல்வியின் வருங்காலம் என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரையை கண்டபின் இதை உங்கள் கவனத்துக் கொண்டுவர தோன்றியது. பச்சையப்பன் அறக்கட்டளை எத்தனை தொன்மையானது என உங்களுக்குத் தெரியும். அதை கையில் வைத்திருந்தவர்கள் எவருமே பொதுவாழ்க்கையிலுள்ளவர்கள் அல்ல. அவர்கள் அரசியல்வாதிகளின் பினாமிகள். அவர்களை விலக்கி நீதிமன்றம் நியமித்த புதிய நிர்வாகிகள் அந்த அறக்கட்டளையில் ‘பணம்பெறாமல் தகுதிப்படி’ ஆசிரியர்களை நியமிக்க நடத்திய சட்டப்போராட்டம், அதன் வெற்றி ஆகியவற்றைப் பற்றியது இந்தக் கட்டுரை.

பாக்தாத் திருடர்களும், பச்சையப்பன் அறக்கட்டளையும்! உச்சகட்ட ஊழலில் தமிழக உயர் கல்வித் துறை! லஞ்சம் தராமல் போராடி வென்ற பச்சையப்பன் அறக்கட்டளை!

‘தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பது என்பது ஒரு கல்வித்துறையின் முதல் விதிகளில் ஒன்று. தமிழகத்தில் அதுவே நிகழ்வதில்லை. கல்லூரி ஆசிரியர் பணிக்கு ஒரு கோடி ரூபாய் வரை கையூட்டு என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பயிற்றியலின் நுட்பங்களைப்பற்றியோ அதன் அடுத்த கட்ட வளர்ச்சியைப்பற்றியோ பேசுவதைப்போல பொருளற்ற ஏதுமில்லை’.

–என்று உங்கள் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்த அடிப்படையான ஒரு விஷயத்திற்கு இன்று நேர்மையானவர்களும் நாடறிந்தவர்களுமான நிர்வாகிகள் எத்தனைபெரிய போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது என்று மட்டும் நீங்கள் கவனிக்கவேண்டும். எவருக்கு எதிராக? அதை அறிய கீழே காணும் நக்கீரன் செய்தியை மட்டும் பார்க்கலாம். இது அந்த நேர்மையான நிர்வாகிகளுக்கு எதிராக அரசியல்தரப்பு தொடுக்கும் அவதூறுப்போரின் பதிவு.

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் விதிமீறல்; செயலர் மீது குவியும் குற்றச்சாட்டு?

இச்சூழலில் நம்மில் ஒரு சாரார் கல்விச்சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதனால் என்ன பயன் உருவாக முடியும்? இங்கே ஒவ்வொரு சிறிய விஷயமும் பெரிய செய்தியாக ஆகி பல நாட்கள் விவாதிக்கப்படுகிறது. தக் லைஃப் என்ற ஒரு சினிமா பற்றி ஆயிரக்கணக்கான விமர்சனங்கள் எழுதப்பட்டன. அறிவுஜீவிகள் எல்லாரும் ஆளுக்கொரு கட்டுரை எழுதினார்கள். (நீங்கள் உட்பட) ஆனால் இந்த அடிப்படையான செய்தியைப் பற்றி ஒரே ஒரு எழுத்தாளர்கூட ஒரே ஒரு வரிகூட எழுதவில்லை. எவருக்கும் எந்த அக்கறையும் இல்லை.

ஏன்? இன்றைய இணைய ஊடகம் அரசாலும் ஆதிக்கத்தாலும் கைப்பற்றப்பட்டுள்ளது. சில்லறை லாபங்களை அளித்து அத்தனைபேரையும் கையில் வைத்திருக்கிறார்கள். ஆதிக்கம் எதைப் பேசுகிறதோ அதைப்பேசவே இங்கே ஆளிருக்கிறது. எதிர்க்கட்சிகளும் ஆளும்கட்சியும் இதில் ஒரே தரப்புதான். இன்றைய சூழல் தமிழகத்தில் என்றைக்குமே வந்ததில்லை. அத்தனை எழுத்தாளர்களும், ஒருவர்கூட பாக்கியில்லாமல் ஆளும்கட்சியின் ஜால்ராக்களாக மாறியிருக்கிறார்கள். பயம், சபலம் எல்லாம்தான் காரணம். நீங்கள்கூட.

என்.விஜயராகவன்.

அன்புள்ள விஜயராகவன்,

நான் ஆளும்கட்சியின் ஆதரவாளன் அல்ல. எந்தக் கட்சியின் ஆதரவாளனும் அல்ல. ஆனால் அரசியல் விவாதங்களில் ஈடுபட இப்போது ஆர்வமில்லை. ஒரு காலத்தில் மெல்லிய ஆர்வமிருந்தது. இன்று அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். ஏனென்றால் இன்று எல்லாமே விவாதங்கள்தான். விவாதம் என்பது தெளிவையும், தெளிவிலிருந்து செயலையும் உருவாக்கும் என்ற நிலை இன்று இல்லாமலாகிவிட்டிருக்கிறது. இன்று விவாதங்கள் செயலுக்கு மாற்றாக உள்ளன. விவாதங்களுக்காகவே விவாதங்கள் நிகழ்கின்றன. ஒருவகை கேளிக்கைகள் அவை. அந்தக் கேளிக்கைத்தொழிலை நடத்துபவை சமூக ஊடகங்களை உருவாக்கி நடத்தும் பன்னாட்டு நிறுவனங்கள். விவாதிப்பவர்கள் அந்த ஊடகங்களின் நுகர்வுப்பொருளான விவாதங்களின் நுகர்வோரும், உற்பத்தியாளர்களுமாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவை  இன்றைய மனிதர்களை பிரம்மாண்டமான ஒரு மாய உலகுக்குள் கொண்டுசென்று வைத்திருக்கின்றன. மேட்ரிக்ஸ் திரைப்படம் போல .இன்றிருக்கும் ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு என்னும் விவாதக்களத்தில் எந்தத் தரப்பை எடுத்து பேசிக்கொண்டிருப்பவர்கள்மீதும் எனக்கு ஈடுபாடில்லை. அது ஒருவகையான நேரவிரயம் மட்டுமே.ஆகவே இன்று எதையேனும் செய்பவர்கள் மீது மட்டுமே கவனம் கொள்ளவேண்டும், எதையாவது செய்யவேண்டும் என நினைக்கிறேன். சிறிய அளவிலானாலும் சரி.

நீங்கள் குறிப்பிட்ட செய்திகளை நான் பார்க்கிறேன். இந்தச் செய்திகளின் அடிப்படையை இங்கே அரசியல் களத்தில் விவாதிக்க ஏதுமில்லை. அத்தனைபேருக்கும் மிகவெளிப்படையாகவே தெரிவது இன்றைய கல்விச்சூழலில் பணியிடங்கள் நிரப்பப்படும் விதம். (ஆனால் அண்மையில் தமிழக அரசு கல்வியிடங்களை நிரப்பும் பணியில் தகுதி அடிப்படை மட்டுமே கருத்தில்கொள்ளப்பட்டது, அமைப்புசார்ந்த ஊழல் இல்லை என்று அணுக்கமான நண்பர்கள் சொன்னார்கள். அதைப் பதிவுசெய்தால் நான் ஆளும்கட்சி ஆதரவாளன் என்பீர்கள்). இந்த கல்வித்துறை ஊழல் நீண்டகாலமாக உருவாகி நிலைகொண்டுவிட்டது. இதில் பங்குபெறாத எந்த அரசியல்தரப்பும் இன்றில்லை. இதைப்பற்றிய விழிப்புணர்வை அறம் இதழ் போன்ற  ஊடகங்கள் உருவாக்குவதிலும், உங்களைப் போன்றவர்கள் அக்கறை காட்டுவதிலும் எனக்கு மகிழ்ச்சியே. மாற்றங்கள் உருவாகி வரட்டும். ஆகவே உங்கள் கடிதத்தை வெளியிடுகிறேன். ஆனால் இன்றைய என் மனநிலையில் அச்செய்திகளுக்குள் சென்று எது உண்மை எது பொய் என்றெல்லாம் விவாதிக்க முடியாது. நான் தொடர்ச்சியாக ஒரு ‘பின்வாங்கும் உளநிலை’யில்தான் இருக்கிறேன். என் செயல் சார்ந்த சிறிய வட்டத்துக்குள் நின்றுவிட விரும்புகிறேன்.

நான் பேசிக்கொண்டிருப்பது இன்னொருவகைக் கல்வி பற்றி. இன்றையக் கல்வியின் நோக்கமே மேலைநாடுகள் உருவாக்கி வைத்திருக்கும் மிகையுற்பத்தி- நுகர்வு என்னும் தொழில் – பொருளியல் சூழலுக்கு உகந்த ஊழியர்களை உருவாக்கி அளிப்பது மட்டுமே. வேலைவாய்ப்பு மட்டுமே இன்றைய கல்வியின் நோக்கம். அத்தனை கல்விநிலையங்களும் ‘பிளேஸ்மெண்ட்’ என்பதை மட்டுமே வாக்குறுதியாக அளிக்கின்றன. இச்சூழலில் அதை தவிர்க்கவும் முடியாது , நம் பொருளியலே அதை நம்பி உள்ளது. தொழில்சார்ந்த கல்வி வேண்டாம் என்று சொல்ல நடுத்தரவர்க்கத்தினரால் முடியுமா என்ன? அந்த பயிற்சியை எவ்வளவு குறைவான செலவில், எவ்வளவு மிகுதியாக நாம் அளிக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் நம்மால் இன்று பொருளியலில் தாக்குப்பிடிக்க முடியும். நம் வாழ்க்கையே நம்மிடமிருக்கும் மலிவான தொழிற்கல்வி சார்ந்து உள்ளது. நான் அதற்கு மேல் கூடுதலாக அளிக்கப்படவேண்டிய பண்பாட்டுக் கல்வி, கலைக்கல்வி பற்றி மட்டும் பேசுகிறேன். அத்தகைய கல்விக்கான ஆர்வம்கொண்டவர்களுக்கு அதற்கான இடம் இங்கே இருக்கவேண்டும் என்பதை மட்டுமே முன்வைக்கிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.