கருவிலிருந்து காவியம் வரை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தத்துவ வகுப்பு முடிந்து வந்ததுமே, திங்கட்கிழமை காலையிலேயே மறுபடியும் “கரு” நாவலை எடுத்து வாசித்தேன். அது ஏன் எனக்குள் ஒரு அலைக்கழிப்பை உருவாக்குகிறது என்பது ஒரு புதிராகத்தான் உள்ளது. எத்தனை முறை படித்தாலும் புதிது புதிதாக ஏதோ கிடைக்கிறது. கர்ம வினை எச்சங்களின்றி, அகாலத்தில் இருக்கவே ஆழ்மனம் விழைகிறது. ஆனால் எல்லா மதங்களும் அதற்குள்ளேயே செல்வதில்லை. முக்தா சொல்லுவது போல் புற உலகத்தை நடந்து கடக்கலாம் . ஆனால் அகப்பயணம் சென்றடைவது கடினம் தான். சில நேரங்களில் எதை தேடுகிறோம் என்பதிலேயே குழப்பம் ஏற்படுகிறது.
இந்த நாவலில் குறிப்பிடும் தரவு/reference படித்து தீர முடியாதது. இந்த முறை படித்த போது மிகவும் ரசித்தது yarlow tsangpo canyon பற்றிய வர்ணனைகளை. Grand canyon விட மிகப்பெரியது. பிரம்மபுத்திராவின் திபெத்திய Yarlang Tsangpo காலத்தால் இமாலயத்தை விட மிகப் பழமையானது ( antecedent river) நாவலில் வரும் மனிதர்களின் காலம் 50 அல்லது 60 வருடத்திற்ககுள் என்றால், நதிகள் புரண்டோடும் காலம் கோடானு கோடி வருடங்கள்.
முக்தா சொல்லுவது போல் இப்புவியின் வாழ்க்கை என நாம் அறிவது அறியமுடியாமைகளால் கோத்து நாம் உருவாக்கிக்கொள்வது. இது வினாக்களின் பெருந்தொகை. ஆனால் அறிவால் தொகுத்துக்கொள்வது என்று நாம் நம்புகிறோம். இவற்றை நேரில் உணர்ந்த பின்னரே வேதாந்தத்தில் இவை ஃபாஸம் என்றும் ஃபானம் என்றும் விளக்கப்படுகின்றன.
நீங்கள் தற்போது எழுதும் காவியத்தின் நாவலிலும் இந்த தொடர்ச்சியை காண முடிகிறது. கானபூதி காலத்திற்கு அப்பால் நின்று, வெவ்வேறு கதைகளும் வினாக்களும் வழியே கோர்க்க உதவ முற்படுகிறது. கதைகளில் எப்படியும் அது கோர்க்கப்படலாம், ஆனால் வாழ்க்கையில் தான் ஒன்றோடு ஒன்று தனித்தனியாக இயங்குவது போல் தோற்றமளிக்கிறது.
அன்புடன்,
மீனாட்சி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
