மின்னணு அடிமைத்தனமும் மீட்பும்

எனக்கு வரும் கடிதங்களில் கணிசமானவை தங்களுடைய பிள்ளைகள் எதையுமே படிப்பதில்லை என்றும், பெரும்பாலான நேரங்களை ஏதேனும் மின்னணு ஊடகத்தில் செலவழிக்கிறார்கள் என்றும் மனக்குறைபட்டு பெற்றோர் எழுதுபவைதான்.

தமிழ்ச்சூழலில் ஒரு பெற்றோர் அவ்வாறு உணர்வதே மிக அரிதானது. நான் பார்த்தவரை மிக இளவயதிலேயே செல்பேசிகளையும் கணிப்பொறிகளையும் குழந்தைகளின் கைகளுக்கு எடுத்துக்கொடுப்பவர்கள் பெற்றோர்தான். அவர்கள் அதில் கணிப்பொறி விளையாட்டுகளையும் சூதாட்டங்களையும் விளையாடும்போது பெற்றோர் அடையும் பரவசத்தை காண்கிறேன். குழந்தைகளின் வெறியைக் கண்டு தன் பிள்ளைகள் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதாக நினைத்துக்கொள்பவர்களை நிறையவே கண்டிருக்கிறேன். ரயிலில் ஏதேனும் ஒரு தாய் ’எந்நேரமும் கம்ப்யூட்டர் தாங்க கைய வச்சான்னா எடுக்க மாட்டான்’ என்று தாள முடியாத பெருமிதத்துடன் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

இந்த மனநிலையை உண்மையிலேயே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னுடைய குழந்தைகள் ஒரு அச்சிட்ட நூலை புரட்டிப் பார்த்தால்கூட படிப்பிலிருந்து கவனம் விலகிவிடும் என்று பதறியடித்து பிடுங்கி அப்பால் வைக்கும் அதே பெற்றோர்தான் செல்போனை அவர்களிடம் எடுத்துக் கொடுத்து அதில் கொட்டிக்கிடக்கும் மின்னணு விளையாட்டுகளை விளையாட வைக்கிறார்கள். அதிலுள்ள சமூக வலைத்தளங்களிலெல்லாம் இணைந்துகொண்டு முகம் தெரியாதவர்களிடம் எல்லாம் உரையாடி என்னவென்றே தெரியாத தொடர்புகளை உருவாக்க வழியமைக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு ஆறாம் வகுப்பிலிருந்தே பிள்ளைகளை ’போர்னோகிராபி’க்குள் செல்லவும் ராஜபாதை அமைத்துக்கொடுக்கிறார்கள்.

ஓரிருமுறை ரயிலில் இந்தப்பெற்றோருடன் பேசிப்பார்த்திருக்கிறேன். இதிலுள்ள அபாயங்களை சொல்லி புரியவைக்க முயன்றிருக்கிறேன். அவர்கள் மூர்க்கமாக  ‘அதெல்லாம் அவன் ரொம்ப பிரில்லியண்ட். அவனுக்கு அதெல்லாம் தெரியும்’ என்று தவிர்த்துவிடுகிறார்கள்.

உண்மையான பிரச்னை இருப்பது நம் பெற்றோர்களிடம்தான். அவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பம் என்பது நவீன அறிவியல் என்ற எண்ணம் இருக்கிறது. அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்குமான வேறுபாடு அவர்களுக்குத் தெரிவதில்லை. தொழில் நுட்பமே அறிவியல் என்றோ எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம் என்பது பெரும்பாலும் இன்று நுகர்வின் கருவிதான்.  நுகர்வியத்தைத்தான் நவீன அறிவியல் உலகம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் பெரும்பாய்ச்சல் என்ன என்று நமக்குத்தெரியாது. தகவல்சேகரிப்பு, ஆய்வில் அடைந்துள்ள முன்னேற்றம் தெரியாது. ஏனென்றால் நமக்கு எந்த அறிவுத்துறையில் அறிமுகம் இல்லை.  ’உங்களுக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தைச் சொல்லுங்கள்’ என்றால் பெரும்பாலானவர்கள் செல்பேசி, தொலைக்காட்சி அல்லது ஏதாவது நுகர்வு இயந்திரங்களைத்தான் சொல்வார்கள்.

இந்த மனப்போக்கு இருப்பதனால் நுகர்வுப்பொருட்களாகிய செல்போன் போன்றவற்றின் மேல் பெரும் மோகம் நம் மக்களுக்கு இருக்கிறது. அது உண்மையில் பழங்குடிகளுக்கு புதியபொருட்களின் மீது இருக்கக்கூடிய ஒருவகையான அப்பாவித்தனமாக மோகம் தான். Gods Must Be Crazy படத்தில் வானத்தில் இருந்து விழும் கொக்கோகோலா புட்டி மீது அந்த மக்கள்ம் அடையும் வியப்பும் பரவசமும்தான் அது.. அம்மக்கள் அந்தப் புட்டியை கடவுளாக வழிபடுவதும், அது அவர்கள் வாழ்க்கையை அழிக்க ஆரம்பிப்பதும் நமது செல்போன் மோகத்துடன் ஒப்பிடப்படவேண்டியது.

இன்று செல்போன் மோகத்தில் மூழ்கிக்கிடக்கும் ஒரு  சமூகம் தன்னுடைய அடுத்த தலைமுறையையும் செல்போனுக்குள் கொண்டு செல்கிறது. செல்போனுக்கு அடிமையான பெற்றோருக்கு அதில் தெரிந்தது ஒன்றிரண்டு விஷயங்கள்தான். ஆனால் அவர்களின் குழந்தைகள் உள்ளே செல்லும்போது அவர்கள் மிக எளிதில் மிகப்பெரிய ஒரு வலைச்சிக்கலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். அது அவர்களால் கையாளப்படத்தக்க அளவுக்கு சிறியது அல்ல. எந்த ஒரு தனிமனிதனும், அவன் எத்தனை மெய்ஞானியாக இருந்தாலும் இன்றைய சமூக வலைத்தளங்களின் விரிவை, இன்றைய கணிப்பொறி சூதுகளின் உலகை, தனித்து கையாள முடியாது. தானாக விரும்பி அதிலிருந்து வெளிவரவும் முடியாது. அதற்கு அதற்கே உரிய வழிமுறைகள் தேவை. அதற்கு நீண்ட காலம் ஆகும். இன்று அதற்குள் செல்லாமல் இருப்பதே மிகச்சிறந்தது.

இவ்வாறு ஒரு சமூகத்தின் மக்களில் பெரும்பாலானவர்கள் இதில் உழன்று கொண்டிருக்கும்போது அதில் ஒரு குழந்தை மட்டும் தனித்திருப்பதென்பது சாதாரண ஒன்றல்ல. அந்தச் சவாலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு கட்டிடத்தின் இருக்கும் ஒரு செங்கல் மட்டும் தனித்திருப்பது போல. அந்தச் செங்கல் மீதுதான் அக்கட்டிடத்தின் மொத்த எடையும் வந்து அழுத்தும். அந்த செங்கல்லுக்கு உடையும் வாய்ப்பும் அதிகம். ஒரு குழந்தை பள்ளியில், நண்பர்கள் மத்தியில் வேறுபட்டிருப்பது என்பது பெரும் வதை. அந்த வேறுபடுத்தலின் வழியாக உருவாகும் தனிமையை வெல்லவே சற்று புத்திசாலியான குழந்தைகள் கூட பிற குழந்தைகள் விளையாடும் அதே ’கேம்ஸ்’ உலகில், ’சோஷியல் மீடியா’ உலகில் சென்று சேர்கிறார்கள்.

இதை நாம் தடுப்பது என்பது ஒருவகையில் அவர்கள் மேல் இன்னொரு வன்முறையை செலுத்துவதாகவே அமையும். தடுத்து, கட்டுப்படுத்தி இன்றைய தொழில்நுட்ப விளையாட்டுகளின், சமூக வலைத்தளங்களின் உலகிலிருந்து எந்தக்குழந்தையையும் வெளியே கொண்டு வந்துவிட முடியாது. தன்னடிமைத்தனம் (Addiction) என்று சொல்லப்படும் எதற்கும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழி என்பது மேலும் தீவிரமான ஒன்றைப் பற்றிக்கொள்வதுதான். மதுஅடிமைகள் மதுவை நிறுத்திவிட்டால் அதே அளவுக்கு ஆட்கொள்ளும் இன்னொன்றுக்கு செல்லவில்லையென்றால் அதிகபட்சம் ஓராண்டுக்குள் மீண்டும் மதுவுக்குள் திரும்பிச் செல்வார்கள். அந்த இன்னொன்று என்ன என்பதுதான் கேள்வி.

அந்த இன்னொன்று புத்தக வாசிப்பாக இருக்கலாம். புத்தகங்களுக்குள் சென்ற ஒருவர் அதன் பிறகு அந்த பிரம்மாண்டமான அறிவுலகத்தையும் வீச்சையும் விரிவையும் அறிந்த பிறகு ஒருபோதும் மின்னணு உலகத்திற்குள் வரமாட்டார்கள். ஆனால் அதில் மிகக்குறைவான பேரால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். அனைவருக்கும் அது இயல்வதல்ல. அதிலும் குறிப்பாக குழந்தைகள் அத்தனை எளிதாக புத்தகங்களுக்குள் செல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் மின்னணு ஊடகங்களில் உள்ள மின்னும் விரைவுக்குக் கண்ணும் மனமும் பழகிவிட்டால் புத்தகத்தின் நிலைத்த உலகம் மிகமிக அன்னியமானதாக இருக்கும். காணொளிக்கு பழகிய ஒருவரால் ஒரு பக்கம்கூட படிக்கமுடியாது. ஏற்கனவே நிறைய படித்துக்கொண்டிருந்தவர் கூட அந்த திறனை இழக்கக்கூடும். குழந்தைகளால் அதிலிருந்து வெளியேறி வாசிப்புக்கு வர முடிவதேயில்லை.

குழந்தைகள் புத்தகங்களுக்குள் செல்ல வேண்டுமென்றால் அந்தப் பெற்றோர் ஏற்கனவே புத்தகங்களுக்குள் வாழ்பவர்களாக இருக்கவேண்டும். பெற்றோரில் ஒருவர் புத்தகங்களின் மீதான் வெறுப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தால் கூட குழந்தைகள் புத்தகங்களுக்குள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. அவர்கள் மின்னணு ஊடகங்களுக்கும் இணைய வலைத் தொடர்புகளுக்கும் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம். நமது தமிழ்ச்சூழலில் குடும்பப்பெண்கள் குழந்தைகளை புத்தகங்களிலிருந்து அகற்றி செல்போன் உலகுக்குள் செலுத்துவதில் முழுமூச்சாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெற்றோர் வாசிப்பவர்களாக இருந்து ,மிக இளம் வயதிலேயே வீட்டில் தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி, வாசிப்பின் சுவையை இளமையிலேயே குழந்தைகளுக்கு அளித்துவிட்டால் அவர்கள் வாசிப்பிற்குள் செல்வது மிக எளிது. மேலை நாடுகளில் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பது அதுதான். இன்று அதை ஒரு இயக்கமாகவே அமெரிக்க்கா போன்ற நாடுகளில் முன்னெடுக்கிறார்கள். நமது நாட்டில் அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அப்படிப்பட்ட சிறு வாசிப்பு குழுக்களை அல்லது வாசிப்புச் சமூகங்களை உருவாக்கி அதற்குள்ளேயே குழந்தைகளை ஈடுபடுத்தி வாசிப்பு உலகிற்குள் கொண்டு வர முடியும்.

இன்னொன்று வாசிப்புக்கு இணையாக செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது. எங்களுடைய அனுபவத்தில் செல்போனில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளை வெளியே கொண்டு வருவதற்கு புத்தக வாசிப்பதை விட உதவியாக இருப்பவை நேரடிச் செயல்பாடுகள் தான். அதாவது பறவை பார்த்தல், தாவரங்களை அவதானித்தல் போன்ற களச்செயல்பாடுகள். அவை நேரடியாக இயற்கையை அறிமுகம் செய்கின்றன. குழந்தைக்குள் இருக்கும் அறிந்துகொள்ளும் துடிப்பை, செயலாற்றும் விசையை அவை வளர்க்கின்றன. குழந்தை மிக எளிதாக அவற்றில் ஈடுபடமுடிகிறது. புத்தக வாசிப்பில் இருப்பது உடல் ரீதியான ஒரு சோம்பல், கூடவே மூளை ரீதியான ஒரு செயலூக்கம். குழந்தைகளின் உடல் மிகச்செயலூக்கமானது என்பதனால் அமர்ந்து வாசிப்பது என்பது அவர்களுக்கு மிகக் கடினமாக இருக்கக்கூடும். ஆனால் ஒரு பகல் முழுக்க பறவையைத்தேடி காட்டுக்குள் அவர்களால் செல்ல முடியும். ஒரு தாவரத்தை அடையாளம் காண்பதற்கான முழுநாளும் தோட்டத்திற்குள் சுற்றிவர முடியும். அது அவர்களை இன்னும் தீவிரமாக ஈடுபடுத்துகிறது.

அப்படி செயல் வழியாக ஒரு கற்றலும் அதன் துணைச் செயல்பாடாக வாசிப்பும் இருக்குமென்றால் குழந்தைகளை வாசிப்புக்குள் எளிதில் கொண்டுவர முடியும் என்பது எங்களுடைய நடைமுறை அனுபவமாக இருக்கிறது. மிகக்குறைந்த அளவில் அதை செய்து பார்க்கிறோம். அச்செயல்முறை தொடர் வெற்றியைத்தான் அளித்து வருகிறது அதிகபட்சம் நூறு குடும்பங்களுக்குள் மட்டுமே எங்களுடைய இச்செய்தி சென்று சேர்ந்திருக்கிறது. தமிழகத்தின் மனநிலையை வைத்துப்பார்த்தால் அந்த நூறு குடும்பங்களே அரிதானவர்கள், தனித்தவர்கள் என்று தோன்றுகிறது. அந்த எண்ணிக்கையைப் பெருக்கவே தொடர்ந்து முயல்கிறோம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.