மனு நூற்கொடை இயக்கம்

அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு

சூழலியல் ஆவணப்படமான ‘தி கிரீன் பிளானட்‘ படத்தில் சூழலியலாளர் டேவிட் அட்டன்பரோ, ஆளிவிதைச் செடிவகையின் பரவல் குறித்து விவரித்திருப்பார். கான்கிரீட் கட்டிடங்களும் தார்ச்சாலைகளும் நிறைந்த நகர்ப்புறப் பகுதிகளிலும்கூட அச்செடிகள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அங்குள்ள நெருக்கடிச்சூழல்களைத் தாக்குப்பிடித்து வளர்கின்றன. காற்று, நீர் மற்றும் விலங்குகளின் உரோமங்களில் ஒட்டிக்கொண்டு பயணித்து வருகிற சின்னஞ்சிறு விதைகள் நகர்ப்புற சாலைகள் மற்றும் சுவர்களில் உள்ள விரிசல்களுக்குள் புகுந்துவிடுகின்றன.

அவ்வாறு விரிசல்களுக்குள் தஞ்சமடையும் விதைகள் தகுந்த காலச்சூழல் வரும்வரை தீராப்பொறுமையுடன் காத்திருக்கின்றன. உகந்த சூழ்நிலை உருவாகி உரிய சத்துக்களும் தண்ணீரும் பெற்றடைந்த பிறகு அவ்விதைகள் முளைத்து வேர்பரப்பி வளர்ந்தெழுகின்றன. சிறுகொடிகளாகவும் படர்கொடிகளாகவும் ஆளிவிதைகள் முளைத்து ஊதாமஞ்சள் பூக்களாகப் பூத்துச் செழிக்கின்றன. நகரத்து தார்ச்சாலைகளிலும் கான்கிரீட் சுவர்களிலும் பச்சையிலைகளைப் படரவிட்டு சுருள்சுருளாக முளைத்திருக்கும் அச்செடிகள் ஒவ்வொன்றுமே… இறுகிப்போன கற்பரப்பில் நம்பிக்கையின் வெளிச்சம் படிந்த நூறாயிரம் சிறுபூக்களை மலர்த்துகின்றன.

மண்ணில் புதைந்து இருளைத்தாங்கும் சின்னஞ்சிறிய விதைகளின் கனவென்பது வானின் வெளிச்சத்தைத் தங்கள் இலைகளால் வாழ்நாள் வரைப் பருகிமகிழ்தலே. தன்னிலிருந்து இன்னொன்றாகத் தன்னையே பிறப்பித்து பல்லாயிரம் தலைமுறைகள் தாண்டி விதைகள் தங்கள் கனவுகளைக் காப்பாற்றுகின்றன. மனித மனம் இவ்வாழ்வின் மீது மீளமீள நம்பிக்கையடைவதற்கான நற்குறியீடு இது. அவநம்பிக்கையும் அறமின்மையும் பெருகத்துவங்கியுள்ள சமகாலத்தில் அன்பை முளைப்பிக்கும் செயல்கள் அனைத்துமே மானுடத்தின் மீட்சிக்கானவை. அத்தகைய மானுடச் செயல்பாடுகளின் சிறுநீட்சியே ‘மனு அறக்கட்டளை‘. 

மனு அறக்கட்டளைச் செயல்பாடுகளின் நல்லசைவாக ‘மனுநூல்கொடை இயக்கம்‘ துவங்கப்படுகிறது. இச்செயலசைவின் முதன்மைநோக்கம் என்பது மிகச்சிறந்த புத்தகங்களை சமகால இளைய வாசிப்பு மனங்களுக்கு கொடையாக அளிப்பதே. புத்தகங்களைத் தேர்ந்த நேர்த்தியுடன் உருவாக்கி, அவைகளை விலையில்லா பிரதிகளாக அனுப்பிவைத்தலே இந்நூல்கொடை இயக்கத்தின் பணியாக அமையும். வாசிப்பு எனும் முன்னெடுப்பின் வழியாக நிறைய இருதயங்களைச் செயலைநோக்கி விருப்புறச்செய்வது மனுநூல்கொடையின்அகநோக்கங்களுள் ஒன்று. முதற்கட்டமாக நான்கு புதிய புத்தகங்களைப் பதிப்பிக்கும் பணி துவக்கமடைந்துள்ளது.  அதில் முதலாவதாக வருவது தாவரயியலாளர் டாக்டர் லோகமாதேவியின் இரு நூல்கள்.

தந்தைப்பெருமரம்கல்லெழும் விதை

குக்கூ காட்டு பள்ளியில் வருகின்ற 28ம் தேதி வெளியீட்டு நிகழ்வு

எதும்மற்று பொட்டல் மலையாக இருந்த திருவண்ணாமலையை பசுமையாக மாற்றும் முயற்சியை 35 வருடங்களுக்கு முன்பு துவங்கி இப்போது வரை செயலாற்றும் சுப்பிரமணி, இந்தியாவெங்கும் மரபு விதைகளை தேடி அலையும் யாத்ரிகன் யசோக், மரபு காய்கறி உற்பத்தி சார்ந்து ஒரு பெரும் இயற்கையியல் அறிவை தன்னகத்தே வைத்து, தமிழகத்தின் எண்ணற்ற குறுங்காடுகளை உருவாக்கி வரும்  கருப்பசாமி நண்பர்கள், காளிங்கராயன் பாசன பகுதிகளில் சத்தம் இல்லாமல் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பல்லுயிர் சூழலை காக்கும் பச்சைஇதயம் பார்த்திபன் ஆகியோர் நூலை பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்த காலகட்டத்தில் நடக்கும் எல்லாவற்றிற்கும் துவக்கம் நீங்கள்தான்.  ஒவ்வொரு நாளும் நன்றியோடு நினைத்து கொள்கிறோம்.

நன்மையைத் தருவித்தலின் வழியாக ஒரு மனிதக் கனவை நம்மால் நீளாயுள் கொண்டதாக நிலைநிறுத்த முடிகிறது.

எந்த ஒரு உயிரின் தன்மையும் எல்லா உயிர்களிடமும் நிறைந்திருப்பதை நாம் அறிதலும், அந்தப் புரிதலினால் நம் அகம் நிறைதலும் இவ்வாழ்வை அருளப்பட்டதாக மாற்றுகிறது. ஏதோவொரு ஒற்றைமனிதரின் நீட்சிதான் இங்குள்ள எல்லா மனிதர்களும் என்கிற தெளிவுண்மையை நாமடைவது அக்கணம்தான். எல்லா கோட்பாடுகளையும் அறிந்து கொள்ளுங்கள். ‘எல்லா நுட்பங்களையும் ஆராய்ந்து திறனடையுங்கள். ஆனால், ஒரு மனித ஆன்மாவைத் தொடும்போது மற்றொரு மனித ஆன்மாவாகவே இருங்கள்‘ என உளவியலாளர் கார்ல் யுங் சொல்வது அந்த மானுட ஞானத்தைத்தான்.

மானுடத்தை போதிக்கும் அத்தனை தத்துவங்களையும் கைதொழுது வணங்கி மனுநூல்கொடையின் கனவாக இதை விதையூன்றுகிறோம்.

Manu Foundation

manufoundation2024@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2025 11:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.