காவியம் – 58

நாணயம், தர்மவிருக்ஷம். சாதவாகனர் காலம். பொயு 1 மதுரா

”ராதிகா பிறந்தபோது அஸ்வத் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அப்போதே அவனுடைய உலகம் தனக்கான நண்பர்களும்,  தனக்கான சிறிய குற்றச்செயல்களுமாக முழுமையாக உருவாகிவிட்டிருந்தது. அவனுடைய நண்பர்களில் அவன்தான் வயதில் இளையவன். ராம்குமார் யாதவ் என்னும் நண்பன் அப்போது அவனுக்கு இருந்தான். அவன் நண்பர்களில் பிராமணன் அல்லாதவன் அவனும் இன்னொருவனும் மட்டும்தான். அஸ்வத்துக்கு அவன் எண்ணியிராத உலகங்களை எல்லாம் அறிமுகம் செய்தவன் ராம்குமார்தான்” என்று கானபூதி தொடர்ந்து சொன்னது.

அவர்கள் கங்கைக்கரை சுற்றுலா பயணிகள் வரும் மையங்களில் வெவ்வேறு வகையான ரகசியக் களியாட்டுகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவை மிக இயல்பாக இருந்தன. சுற்றுலா வரும் பெண்களை சீண்டுவது, பெண்களுடன் வரும் ஆண்களைத் ரகசியமாகத் தொடர்ந்து சென்று அவர்கள் உறவு கொள்வதை வேடிக்கை பார்ப்பது, சமயம் வாய்த்தால் ஆண்களை பயமுறுத்தி துரத்தி விட்டு அந்த பெண்களை பாலியல் வல்லுறவு கொள்வது, விபச்சாரிகளிடம் வம்பு செய்வது என்று ஒவ்வொரு நாளும் புதிய கேளிக்கைகளை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். ராம்குமார் எந்த வன்முறையையும் அணுவளவுகூடத் தயக்கமில்லாமல் செய்பவனாக இருந்தான். செய்தபின் அப்படியே அதை முழுமையாக மறந்துவிடவும் அவனால் முடிந்தது. அந்தத் தயக்கமின்மையும் கடந்துசெல்லுதலும் அஸ்வத்தை அவன் மேல் பிரமிப்பு கொள்ளச் செய்தது.

தொடர்ந்து புதிய வேடிக்கைகளை கண்டுபிடித்து அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவனாக சதானந்த் என்ற ஒல்லியான சிறுவன் இருந்தான். அதற்கென்றே பிறந்தவன் போலிருந்தான். அவனால் செய்யமுடியாத எதுவுமே இல்லை என்று அப்போது அஸ்வத் எண்ணினான். அவனால் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள்  தைரியமாக உள்ளே நுழைந்து, ஒரு பொய்ப்புகாரை , அளித்து போலீஸ்காரர்களை நாள் முழுக்க அலையவிட முடியும். ஆசாரமான பிராமண வீட்டுக்குள் தன்னை ஒரு பிராமணன் என்று சொல்லி உள்ளே சென்று, அங்குள்ள பெண்களிடம் ஆபாசமாக எதையாவது பேசிவிட்டு, அவர்கள் திகைத்து குழப்பம் செய்வதற்குள் வெளியே கிளம்பிவிட முடியும். ஒவ்வொன்றையும் இறுதியில் வெறும் கேலிக்கூத்தாக ஆக்கி சம்பந்தப்பட்டவர்களையே சிரிக்கவைக்க முடியும்.

சதானந்த் தன்னை ஒவ்வொரு முறையும் விதவிதமாக உருமாற்றி வெவ்வேறு மனிதர்களாக மாற்றிக்கொண்டான். அது நடிப்பு அல்ல, அவன் உண்மையாகவே அகத்தில் அப்படி தன்னை ஆக்கிக்கொண்டான். ஆகவே அவன் நடிக்கிறான் என்று எவருக்கும் தெரியவுமில்லை. சதானந்த் தன் நண்பர்களை ஒவ்வொரு நாளும் திகைக்க வைக்கும் புதிய இடங்களுக்கு கொண்டு சென்றுகொண்டே இருந்தான். ராம்குமார் யாதவ் ஒரு வகை, சதானந்த் இன்னொரு வகை. அஸ்வத் இரண்டு வடிவங்களிலும் தன்னை மாறிமாறிக் கற்பனை செய்துகொண்டான். ராம்குமார் செல்லாத இடங்களுக்கெல்லாம் சதானந்த் செல்லமுடிந்தது. ஆனால் சதானந்த் ஆக ஒருவன் பிறந்து வரவேண்டும், அவனாக மாற முடியாது.

அந்த உலகிற்கு வெளியே தன் வீடு என்பது இரவு வந்து தங்கி தூங்கிவிட்டு காலையில் கிளம்பிச்செல்லும் ஓரிடமாக அவனுக்கு இருந்தது. பெற்றோர் மிக விலகிச் சென்றிருந்தார்கள். அவன் கணக்குப் பிள்ளையிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டான். பணத்தை கணக்குப் பாராமல் செலவழித்தான். அவனுடைய நண்பர்களில் நான்குபேர் மட்டுமே பணம் செலவழிக்கவேண்டும் என இருந்தது. ஹரீந்திரநாத் அவனுக்குத் தேவையான பணத்தை கொடுக்கும்படி சொல்லியிருந்தார். அவனுடைய பணத்தை எந்தவகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையை அவர் அடைந்திருந்தார். ஏனென்றால் அவருக்கு அவன் மேல் பயம் வரும் சில தருணங்களை அவன் உருவாக்கியிருந்தான். தன்னைப்பற்றி அவனுக்கு என்ன தெரியும் என்ற நிரந்தரமான குழப்பத்திலேயே ஹரீந்திரநாத் இருந்தார். தன்னை அவன் பின் தொடர்ந்து விடக்கூடாது என்று எண்ணினார். அவன் பின் தொடர்ந்தால் தன்னுடைய முழுச் சுதந்திரமும் இழக்கப்பட வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக அவனுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால் அவன் அந்த செலவுகளை செய்வதிலேயே முழுமையாக மூழ்கிவிடுவான் என்று எண்ணினார்.

ராதிகா பிறந்தபோது ஒரு நாள் கழித்தே அந்த செய்தியை அஸ்வத் அறிந்தான். நண்பர்களுடன் வெளியூர் சென்ற அவன் அதை வீட்டில் பள்ளிச்சுற்றுலா என்று சொல்லியிருந்தான். பயணம் முடிந்து வந்திறங்கி வீட்டுக்குள் நுழைந்தபோதுதான் வேலைக்காரியாகிய சம்பா அவனிடம் வந்து அவனுக்குத் தங்கை பிறந்திருப்பதாகச் சொல்லி அழைத்துச்சென்றாள். அவள் காட்டிய தொட்டிலில் படுத்திருந்த செக்கச் சிவந்த கிழங்கு போன்ற சிறு உயிர் மேல் அவனுக்கு அப்போதே ஒவ்வாமை உருவாகிவிட்டது. அதன்பிறகு எப்போதுமே அவன் அதன் அருகே செல்லவோ விளையாடவோ கொஞ்சவோ செய்ததில்லை.

அவள் பள்ளி செல்லத்தொடங்கும்போது அவன் உண்டு உறைவிடப்பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்தான். எப்போதாவது விடுமுறைக்கு வரும்போது மட்டும்தான் அவளைச் சந்தித்தான். அவள் தொடக்கத்தில் அவனிடம் விளையாடவும் நெருங்கவும் முயன்றாலும் கூட அவனுடைய விலக்கத்தினால் அவள் முற்றிலும் அகன்று சென்றாள். அவன் வீட்டுக்கு வரும்போது அவளிடம் அவள் கண்களைப் பார்க்காமல் ஓரிரு சொற்கள் பேசுவதுடன் சரி. அவளுடன் இணைந்து எங்குமே வெளியே சென்றதில்லை. அந்த வீட்டின் முறையும், ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதோ பேசிக்கொள்வதோ போல் இருக்கவில்லை. பெண்கள் தனி உலகில் வாழ்வது நல்லது என்று அந்த வீட்டைக்கட்டிய ஃபணீந்திரநாத் எண்ணியிருந்தார்.

அஸ்வத்திடம் ராதிகா நெருங்காமலிருப்பது நல்லது என்று ருக்மிணியும் எண்ணினாள். அவனிடம் அவள் ஏதாவது பேசத்தொடங்கினால் இயல்பாக அங்கே வருவதுபோல ருக்மிணி அங்கே வருவாள். அந்த உரையாடலை திசைதிருப்பி ராதிகாவை அவனிடமிருந்து அகற்றி அனுப்பிவிடுவாள். ஒரே ஒருமுறை சதானந்துடன் அவன் சாலையில் நடக்கும்போது எதிரே ராதிகா வந்தாள். அப்போது அவளுக்கு எட்டுவயது, நான்காம் வகுப்பில் சேர்ந்திருந்தாள். சதானந்த் அவளிடம் ஏதோ கேட்க அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டுச் சென்றுவிட்டாள். அதன்பின் அவள் அஸ்வத்திடம் வந்து பேசியதேயில்லை.

ராதிகாவை வளர்ப்பதிலேயே ருக்மிணி முழுமையாக ஈடுபட்டாள். இளமையிலேயே அவளுக்கு வீட்டுக்கு வந்து ஒரு பண்டிட் இசை கற்பித்தார். இன்னொருவர் சம்ஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தார். பள்ளியில் அவள் முதல் மாணவியாக வெற்றி பெற்றாள். பாட்டிலும் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை உச்சரிக்கும் போட்டிகளிலும் தொடர்ந்து பரிசுகளைப் பெற்றுவந்தாள்.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது அவளுக்கு விளையாட்டில் ஈடுபாடு வந்தது. அவள் பேட்மிண்டன் விளையாடச் செல்லவேண்டும் என்று சொன்னபோது ஹரீந்திரநாத் எரிச்சலுடன் அதெல்லாம் எதற்கு என்றார். ருக்மிணி ”தீனபந்து ராயின் மகள் விளையாடுகிறாள்” என்றாள்.

அவர் நிமிர்ந்து பார்த்து ”ம்” என்றார்.

அதற்கு மேல் அவரால் எதுவும் சொல்ல முடியாதென்று அவள் அறிந்திருந்தாள். எது உயர்குடிகளின் வழக்கமோ அதை தானும் செய்தாகவேண்டும், செய்யாவிட்டால் உயர்குடிகளின் உலகில் இடமில்லை என்பதை நன்கு அறிந்தவராக இருந்தார் ஹரீந்திரநாத்.

ராதிகா பேட்மிண்டனில் மாநில அளவிலேயே விளையாடத்தொடங்கினாள். அவள் ஒரு சைக்கிள் வாங்கி அதில் பள்ளிக்கூடம் சென்றாள். அதன்பிறகு ஓர் இருசக்கர வண்டியை வாங்கிக் கொண்டாள். அதில் நகரிலேயே வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வந்தாள். அவளுடைய தோழிகளும் அவளைப் போலவே உரக்கச் சிரிப்பவர்களாகவும், கத்திப்பேசி ஓசையிடுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் அவனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

அஸ்வத்  எதனாலோ அவர்களை அஞ்சினான். அவளுடைய தோழிகள் வீட்டில் இருக்கிறார்கள் என்றால் அவன் வீட்டுக்கே வருவதில்லை. வீட்டுக்கு வந்திறங்கி அவர்களுடைய சத்தம் கேட்டால் எதையோ மறந்துவிட்டவன் போல உடனடியாகக் கிளம்பிச் சென்று, நெடுநேரம் கழிந்துத்தான் திரும்பி வந்தான். அந்தப் பெண்களின் உற்சாகத்திலும் சிரிப்பிலும் அவன் அஞ்சும் ஏதோ ஒன்று இருந்தது. அவர்கள் வாழும் உலகம் கண்கூச வைக்கும் ஒளியுடன் இருப்பதாக அவனுக்கு அவ்வப்போது தோன்றியதுண்டு. பெரும்பாலான இடங்களில் பேட்மிண்டன் விளையாட்டுக்கான வெள்ளை ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தது காரணமாக இருக்கலாம் என்று ஒருமுறை அவன் யோசித்துக்கொண்டான்.

ராதிகா தன்னை மிகச்சரியாகத் தெரிந்து கொண்டிருப்பவள் என்பது அவன் கல்லூரி படிக்கும்போதுதான் அவனுக்குத் துல்லியமாகத் தெரிந்தது. அவன் கல்லூரி விடுமுறையில் வந்து வீட்டில் தங்கியிருக்கும்போது அவள் தோழிகள் வந்திருந்தார்கள். அவன்  கீழிறங்கி வரவில்லை. அவர்கள் கீழே உணவு உண்டு திரும்பிச் சென்றார்கள். சற்று நேரத்தில் அவர்களில் ஒருத்தி மட்டும் திரும்பி வந்து தன்னுடைய கைப்பையை அங்கே மறந்துவிட்டதாகச் சொன்னாள்.

அவள் அதை தேடிச்சலித்து எரிச்சலுடன் இருக்கும்போது அவன் கீழிறங்கி வந்தான். ”என்ன?” என்று அவளிடம் கேட்டான்.

அவள் ”என்னுடைய கைப்பையைக் காணவில்லை” என்றாள்.

அவன் அவள் மட்டும் இருப்பதனால் மெல்லிய துணிச்சலை அடைந்து “எங்கு வைத்தீர்கள்?” என்றான்.

“தெரியவில்லை” என்று அவள் சொன்னாள்.

அவன் ”நீங்கள் வெளியே இருந்து உள்ளே வாருங்கள்” என்றான்.

“எப்படி?” என்று அவள் கேட்டாள்.

“நான் இங்கு நிற்கிறேன். நீங்கள் ஏற்கனவே செய்ததுபோல திரும்பச் செய்யுங்கள். உள்ளே வந்து சாதாரணமாகப் பேசி டைனிங் டேபிளுக்குச் சென்று உட்கார்ந்து சாப்பிடுவது போல நடித்து விட்டு திரும்பி வாருங்கள்” என்றான்.

அவள் அதுபோலவே உள்ளே வந்து முகம் கழுவிவிட்டு டைனிங் டேபிளுக்கு செல்வதற்குள் அவன்  அவள் முகம் கழுவிய கண்ணாடிக்கு அருகிலிருந்த சிறிய அலமாராவிலிருந்து அவளுடைய கைப்பையை எடுத்துக்கொடுத்தான்.

“இது எப்படி! அய்யோ இது எப்படி!” என்று அவள் வியந்தாள்.

“இதை எங்கோ நான் சினிமாவில் பார்த்திருக்கிறேன். நாம் பெரும்பாலான விஷயங்களை நம்மை அறியாமலேயே இயல்பாக செய்கிறோம். அது ஒரு பழக்கம் போலத்தான்.  நம் கைகளுக்கும் கால்களுக்கும் அந்தப்பழக்கம் மட்டும்தான் தெரியும். ஆகவே ஒருமுறை செய்ததைத்தான் திரும்பவும் செய்வோம். நீங்கள் முதலில் உள்ளே வந்தபோது எப்படியெல்லாம் சென்றீர்களோ அதைத்தான் மீண்டும் செய்திருப்பீர்கள். அந்த இடங்களில் எங்கோதான் இந்தக் கைப்பை இருக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒரு துப்பறியும் நிபுணர்  கொலையை கண்டுபிடிப்பதை படத்தில் பார்த்தேன்” என்றான்.

“அப்படியா? எந்தப் படம்?” என்று அவள் கேட்டாள்.

அவன் அந்தப்படத்தை பற்றி சொன்னான்.

“எனக்கு துப்பறியும் படங்கள் பிடிப்பதேயில்லை. எப்படித் துப்பறிகிறார்கள் என்று புரிவதே இல்லை“என்று அவள் சொன்னாள்.

“கொஞ்சம் கவனித்தால் புரியும். கொலையைப்பற்றியெல்லாம் மறந்துவிட வேண்டும் எப்படி மனிதனுடைய பழக்க வழக்கங்களை அவர்கள் கூர்ந்து பார்க்கிறார்கள் என்றுதான் நாம் கவனிக்கவேண்டும்.  இப்படி எவ்வளவோ நுணுக்கமான விஷயங்கள் துப்பறியும் கதைகளில் இருக்கின்றன. இப்போது இந்தப் பையை நீங்கள் திட்டமிட்டு ஒளிக்கிறீர்கள் என்றால்கூட அதற்கு உங்கள் மனம் ஒரு நாலைந்து வழிகளைத்தான் கண்டுபிடிக்கும். ஏற்கனவே ஒரு பொருளை எப்படி மறைத்தீர்களோ அதே வழியில்தான் மீண்டும் மறைப்பீர்கள். இதை பேட்டர்ன் என்று சொல்வார்கள் குற்றங்கள் பேட்டர்ன்கள் வழியாகத்தான் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஏனென்றால் பேட்டர்ன் இல்லாமல் குற்றங்கள் கிடையாது” என்று அவன் சொன்னான்.

அவன் பேசிக்கொண்டிருக்கும்போது ராதிகாவின் தோழிகள் உள்ளே வந்து  “என்ன செய்கிறாய் இங்கே?” என்று கத்தினார்கள்.

“நான் வருகிறேன். நாம் மறுபடியும் இதைப்பற்றி பேசுவோம்” என்று சொல்லி அவள் வெளியே ஓடினாள்.

அன்று மாலை அவன் தன் அறையில் படித்துக்கொண்டிருக்கும்போது ராதிகா அங்கே வந்தாள். வந்து அவன் அறைக்குள் நுழையாமல் வெளியே நின்றுகொண்டு ”உன்னிடம் பேச வேண்டும்” என்றாள்.

“என்ன?” என்று அவன் கேட்டான்.

“ஒன்றுமில்லை” என்றபின் அவள் வாசலில் நின்று ”நீ இன்று லக்ஷ்மியுடன் பேசினாயா?” என்றாள்.

“யார்?” என்று அவன் கேட்டான்.

“கைப்பையை மறந்துவிட்டு வந்தவள், லக்ஷ்மி” என்றாள்.

“ஆமாம்” என்றான்.

“இனி என் தோழிகளிடம் பேசாதே” என்றாள்.

அவன் சீற்றத்துடன் திரும்பி அவள் கண்களைப் பார்த்தான். ”ஏன்?” என்றான்.

“அவர்கள் நல்ல பெண்கள்” என்றபின் அவன் கண்களை கூர்ந்து பார்த்து ஏதோ சொல்ல வந்து உதடு விரிந்தபின் அப்படியே விட்டுவிட்டு திரும்பிச் சென்றாள்.

அவன் அவள் தன்னை ஓங்கி அறைந்துவிட்டு சென்றது போல் உணர்ந்தான். நெடுநேரம் அந்த நடுக்கத்திலிருந்து  அவனால் விடுபட முடியவில்லை. அந்தப்புத்தகத்தை கையில் ஏந்தியிருக்கக் கூட முடியவில்லை. அதை மேஜை மேல் வைத்துவிட்டு எழுந்து நின்றான். பதற்றம் தாங்காமல் மீண்டும் அமர்ந்துகொண்டான். பின்னர் பால்கனிக்குச் சென்று நின்று சிகரெட் பிடிக்கத்தொடங்கினான்.

தன்னை அந்த வீட்டில் முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பவள் அவள் மட்டும் தான் என்று தோன்றியது. அது வெறும் பிரமையா என்று அவன் எண்ணிக்கொண்ட போதெல்லாம் அவளுடைய கண்களின் அந்தப்பார்வை நினைவுக்கு வந்தது. ஒவ்வொருமுறையும் அது ஒரு கூரிய ஆயுதத்தை தொடுவது போலிருந்தது. அவன் மறுநாள் விடியற்காலையிலே கிளம்பிச் சென்றுவிட்டான். பிறகு அவள் இருக்கும்போது எப்போதுமே வீட்டுக்கு வந்ததில்லை.

அவள் காசிக்கு மேற்படிப்புக்காக செல்கிறாள் என்று தெரிந்தபோது அவனுக்கு ஒரு மெல்லிய ஆறுதல் எண்ணம் வந்தது. அவள் அவனைவிட நன்றாகப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆகியிருக்க முடியும். அதற்கான வழிகள் எல்லாமே பிகாரில் பணத்திற்கான ஓடைகளாக வகுக்கப்பட்டிருந்தன. அவள் நல்ல மதிப்பெண்களையும் பெற்றுவிட முடியும். அவள் இலக்கியம் படிக்கப் போனாள் என்பது ஒருபோதும் அவள் அதிகாரத்தை அடையப்போவதில்லை என்று அவனுக்குத் தெரிவித்தது. ஒருவேளை அவள் ஐ.பி.எஸ் அதிகாரியாக வந்துவிடுவாளா என்றுகூட ஒருசில முறை அவன் ஐயப்பட்டது உண்டு.

அவள் ஒரு பங்கியுடன் காதலில் இருக்கிறள் என்ற செய்தி உண்மையில் அவனுக்கு ஒரு விந்தையான திருப்தியைத்தான் அளித்தது. “அது அப்படித்தான் போகுமென்று எனக்குத் தெரியும்” என்று அவன் சிகரெட் புகையை தன் சுட்டுவிரலால் தட்டியபடி ராம்சரண் நாயக்கிடம் சொன்னான்.

“அவள் குடும்பத்திலிருந்து விலகிப்போக ஆரம்பித்து நெடுங்காலம் ஆகிறது. குடும்பத்தில் என்னென்ன விஷயங்கள் உயர்வாக நினைக்கப்படுகின்றனவோ அவை எல்லாவற்றையுமே தலைகீழாகச் செய்யவேண்டும் என்று அவள் நினைக்கிறாள். அதன் வழியாகத்தான் அவள்  சுதந்திரமானவளாக ஆக முடியுமென்று எண்ணுகிறாள். எங்கள் வீட்டில் பெண்கள் தலையை மறைக்காமல் ஆண்கள் முன் வருவதே இல்லை. அவள் குட்டைப்பாவாடை அணிந்துகொண்டு டென்னிஸ் விளையாடப் போனதே அதற்கு நேரெதிராக எதையாவது செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.”

“எல்லா பெண்களும்தான் விளையாடுகிறார்கள்” என்றான் ராம்சரண் நாயக்.

“மற்ற வீடுகளில் அம்மாக்கள்தான் பெண்களை கட்டுப்படுத்துவார்கள். இங்கே மகளை தூண்டிவிட்டதே அம்மாதான்” என்று அஸ்வத் சொன்னான். “அவளுக்கு என் அப்பா மீது ஏதோ கோபம். அப்பாவுக்குப் பிடிக்காததை வலுக்கட்டாயமாகச் செய்யவேண்டும் என்று நினைத்தாள்… பெண்களால்தான் குடும்பங்கள் அழிகின்றன.”

“பெண்கள் ஆண்களால் அழிகிறார்கள். பெண்கள் அழியும்போது குடும்பம் அழிகிறது” என்று ராம்சரண் நாயக் சொன்னான். அவன் கண்களில் கிண்டல் இருக்கிறதா என்று அஸ்வத் பார்த்தான். இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டான். “தொடக்கம் முதலே அவளை நான் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். இப்படி ஏதோ ஒன்று நிகழுமென்று எனக்கு நன்றாகவே தெரியும்.”

ராம்சரண் நாயக் சிகரெட்டை ஆழ இழுத்து ஆஷ்ட்ரேயில் போட்டபடி ”பெண்கள் எப்போதுமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். வெளிப்படையாக இப்படி மீறாவிட்டால் உள்ளே வேறெப்படியாவது மீறிக்கொண்டிருப்பார்கள்” என்றான்.

சட்டென்று திடுக்கிட்டு அவன் முகத்தைப்பார்த்த அஸ்வத். ராம்சரண் நாயக் தடித்த உயரமான மனிதன். அவன் முகம் வழக்கம் போல வெறும் சதையுருண்டையாகத் தென்பட்டது. கொழுத்த சதைக்குள் புதைந்திருந்தவை போன்ற அவன் உணர்ச்சியற்ற கண்களைப் பார்த்தபடி ”என்ன சொல்கிறாய்?” என்றான்.

”ஆண்களாகிய நாம் பெண்களை அப்படியெல்லாம் வேவு பார்க்கவோ,  அவர்களைப் புரிந்துகொள்ளவோ  முயலக்கூடாது. நாம் எரிச்சலடைந்து விடுவோம். நம் வீட்டுப்பசு நமக்குப் பால் தரவேண்டும், அதற்கப்பால் அது என்ன செய்கிறது என்றெல்லாம் நாம் பார்க்கக்கூடாது.”

அஸ்வத் ”பசு மலத்தைத் தின்று விட்டு வந்தால் என்ன செய்வாய்?” என்றான்.

”கங்கைக்கரையில் அலையும் பெரும்பாலான பசுக்கள் மலத்தைத்தான் தின்கின்றன. அந்தப் பசுக்களின் பாலைத்தான் சிவலிங்கத்தின் தலையில் கொட்டுகிறார்கள். அங்கே காசியில் விஸ்வேஸ்வரனுக்கே அதுதான் அமுத அபிஷேகம்” என்று ராம்சரண் நாயக் சொன்னான்.

அந்த விவாதத்தை நீட்டிக்க விரும்பாமல் அஸ்வத் எழுந்து சென்று ஜன்னலோரம் நின்று, ”ஆனால் பெண் நம்முடைய குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்றுபவள். அவளை வைத்துத்தான் நம்முடைய இடம் என்ன என்று தீர்மானமாகிறது. பாட்னாவில் எங்கள் குடும்பத்தின் கௌரவம் மட்டும்தான் இப்போது எங்களுடைய ஒரே அடையாளமாக இருக்கிறது .எங்கள் தாத்தா இன்றைக்கும் பாட்னாவில் தெய்வமாக வழிபடப்படுகிறார். அவருக்குக் கோயில் இருக்கிறது தெரியுமா?” என்றான்.

ராம்சரண் ”ஆமாம் தெரியும், உன் அப்பா கட்டியது” என்று சொன்னான்.

”ஒருநாளைக்கு ஐநூறு பேராவது அவரை வணங்கி ஆசி பெற்றுச் செல்கிறார்கள்”

”லக்னோவில் கிஷன் யாதவ் என்பவனுக்கு பூட்டான் லாட்டரியில் ஒரு கோடி விழுந்தது. ஒரு நாளைக்கு நூறுபேர் அவனைக் கண்டு காலைத் தொட்டு வணங்கிச் செல்கிறார்கள். அவனைப் பார்த்தால் ஐஸ்வரியம் வரும் என நினைக்கிறார்கள்.”

அஸ்வத் அதைக் கவனிக்காமல் “என் அப்பா இன்று பாட்னாவில் பெரிய பணக்காரர் அல்ல. ஆனால் எந்தப் பணக்கார சபையிலும் அவருக்கொரு நாற்காலி உண்டு. அது என் தாத்தா ஃபணீந்திரநாத்துடைய பேரால்தான்” என்றான்.

”அவரை funny dog என்று சொல்வார்கள் இல்லையா?”

கிண்டலை அப்போதுதான் அஸ்வத் உறுதியாக உணர்ந்தான். ராம்சரண் நாயக்கிடம் இருக்கும் அந்த ஏளன மனநிலையை அஸ்வத் அறிந்திருந்தான். அந்தக் நையாண்டி வழியாகத்தான் அவன் தான் செய்யும் அனைத்து செயல்களையுமே ஏதோ வகையில் தனக்கு ஒத்துக்கொள்ளக் கூடியதாக மாற்றிக் கொள்கிறான் என்று அவனுக்குத் தோன்றியதுண்டு.

ராம்சரண் நாயக் படித்தவன். ஒரு குற்றத்தை செய்வதற்கு முன் அதற்குரிய எந்த ஒரு விளக்கத்தையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த நியாயங்கள் அனைத்தையுமே நையாண்டி வழியாக முற்றும் உடைத்த பிறகு, அதை குற்றம் மட்டுமாகவே செய்வதுதான் அவனுடைய வழக்கம். ஆகவே பிற குற்றவாளிகளிடம் பேசுவதுபோல ஒரு குற்றத்தை ஏன் செய்தே ஆகவேண்டும், செய்யாமலிருக்க ஏன் முடியாது என்ற வகையில் அவனிடம் பேசக்கூடாது என்று அஸ்வத் முன்னரே அறிந்திருந்தான்.

”உன்னுடைய பிரச்னை என்னவென்றால் நீ படித்த கிரிமினல் என்பதுதான்” என்று அஸ்வத் சொன்னான்.

ராம்சரண் நாயக் புன்னகைத்து “பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. போலீஸில் சிக்கிக்கொண்டால் நான் கொடுக்கும் வாக்குமூலத்தில் ஒரு ஷேக்ஸ்பியர் மேற்கோள் இருக்க வாய்ப்பிருக்கிறது அவ்வளவுதான்” என்றான்.

அஸ்வத் சிரித்துவிட்டான். ”அவளை அப்படியே விட்டுவிடலாம். ஆனால் இரண்டு வாய்ப்புகள் இருக்கிண்றன. ஒன்று பாட்னாவின் உயர் வட்டாரத்தில் அதை கொஞ்சநாள் பேசிவிட்டு அப்படியே விட்டுவிட வாய்ப்புண்டு. என் அப்பா அதை மறந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒருவேளை அவர்கள் அதைப் பேசிப் பேசி பெரிதுபடுத்துவார்கள் என்றால்,  அதைக் கொண்டே அவரை ஒருபடி கீழிறக்க முயல்வார்கள் என்றால், அதை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர் அழுவது அதை எண்ணித்தான். ஏற்கனவே அவருக்கு உண்மையான மதிப்பு எதுவும் அங்கு கிடைக்கவில்லை என்று அவருக்குத் தெரியும். ஆனால் அந்த இடங்களுக்கு அவரால் போகாமலிருக்கவும் முடியவில்லை. ஏனெனில் அவருக்கு போக வேறு இடமில்லை. அவர் அவர்களிடம் ஏதேனும் ஒரு மதிப்பை ஈட்டுவதற்காகவே தொடர்ந்து எதையாவது செய்து வருகிறார்”

அஸ்வத் தொடர்ந்தான்.“ஆகவேதான் தன் அப்பாவின் திதி விழாவை இப்போதெல்லாம் மிகப்பெரிய அளவில் கொண்டாடுகிறார். நகர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுகிறார். எட்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கிறார். இந்த ஆண்டு அமைச்சரை அழைத்தால் என்ன என்று என்னிடம் கேட்டார். இதற்கெல்லாம் அமைச்சர்கள் வரமாட்டார் என்று நான் சொன்னேன். இல்லை இது மதவிழா என்று சொன்னால் கண்டிப்பாக வருவார், ஓர் அமைச்சர் ஒரு ஐந்து நிமிடம் வந்து சென்றால்கூட நல்லதுதான் என்றார்.”

”இரண்டும் நடக்கலாம். பொதுவாக எவரும் எவரையும் பற்றி யோசிப்பதில்லை. எல்லாமே ஒருவார வம்புதான். ஆனால் உன் அப்பா அவர்களின் அகங்காரத்தைச் சீண்டிக்கொண்டே இருந்தால் பிரச்னைதான்” என்றான் ராம்சரண் நாயக்.

”அவர்கள் பெரிதுபடுத்தாமல் இருக்கவேண்டும் என்றால் அப்பா தன்னுடைய இடத்தை இன்னும் கொஞ்சம் சிறிதாக்கிக் கொள்ள வேண்டும். அவர் இந்த பூசைவிழாவை பெரிதாக நடத்தக்கூடாது. தன்னுடைய தந்தையின் பெருமைகளைப்பற்றி எங்கும் சொல்லக்கூடாது. இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் கொஞ்சமாக பாட்னாவின் உயர்குடிகளின் சபையிலிருந்து விலகிவிடவேண்டும். எப்போதாவது அவர்களை கிளப்புகளில் சந்தித்து ஒரு சாதாரணமான பேச்சுடன் நிறுத்திக்கொள்ளவேண்டும். சீட்டாட்ட சபைகளிலோ அல்லது வேறு நிகழ்ச்சிகளிலோ சென்று முக்கியமாக அமரக்கூடாது. அந்த சபையில் ஏற்கனவே இடம் பெற்றிருப்பவர்களிடம் போட்டி போட முயலக்கூடாது” என்று அஸ்வத் சொன்னான்.

“ஆனால் என்ன பிரச்னை என்றால் உங்கள் அப்பாவால் அப்படி செய்யாமலிருக்க முடியாது. ஏனென்றால் சாதியிலும் தகுதியிலும் தன்னைவிட உண்மையாகவே மேலானவர் என்று உங்கள் அப்பா ஒத்துக் கொள்ளக்கூடிய ஒருவர் தன்னை விட மேலான இடத்தில் இருப்பதை அவர் பார்க்க வாய்ப்பே இல்லை. இந்த ஐம்பதாண்டுகளில் எல்லா நகரத்திலும் பணமும் செல்வாக்கும் அடைந்து மேலே வந்து இதே போன்ற இடங்களில் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாருமே ஊழலும் குற்றமும் வழியாக சம்பாதித்த அற்பர்கள்தான். அவர்கள் தங்கள் அற்பத்தனத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். தாங்கள் எத்தனை சாமானியப் பின்னணியிலிருந்து வந்தோம் என்பதும், அது அந்த இடத்திலிருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும் என்பதும் எப்போதும் அவர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும்” என்றான் ராம்சரண் நாயக்.

ராம்சரண் நாயக் சிகரெட்டை இழுத்து புகைவிட்டபடி தொடர்ந்தான் “உங்களுக்கே தெரியும் பாட்னா சந்தையில் மூட்டை தூக்கிப்பிழைக்கத் தொடங்கிய ஒருவன்தான் இன்று உங்கள் லயன்ஸ் கிளப்பின் தலைவன். பிறர் மறந்தாலும் தான் மூட்டை தூக்கியவன் என்பதை அவன் மறக்கப்போவதில்லை. பிறரும் மறக்க மாட்டார்கள். அவர்கள் தன்னை புகழும்போதெல்லாம் தன்னை மூட்டை தூக்கியவன் என்று நினைத்துதான் புகழ்கிறார்கள் என்று தான் அவன் நினைப்பான். அவனுடைய ஒரே இன்பமே உங்கள் தந்தையைப்போன்ற ஒருவரை மட்டம் தட்டி மகிழ்வதுதான். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் அவன் விடமாட்டான். ஒருவேளை அவன் தன் மகளுக்கு ஒரு பெரிய குடும்பத்தில் பெண் எடுத்தான் என்றால் அதுவே உங்கள் தந்தையை மட்டம் தட்டி சிறுமைப்படுத்துவதாக ஆகிவிடும்”

”உண்மைதான்” என்று அஸ்வத் சொன்னான். “இந்தக் காலம் சீரழிந்து கிடக்கிறது. ஒரே தலைமுறைக்குள் பரம அற்பர்கள் மேலே வந்து அமர்ந்துவிடுகிறார்கள்.”

நாயக் சிகரெட்டை குத்தி அணைத்தபடி “அது எல்லாத்தலைமுறையிலும் அப்படித்தான். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தப்பாட்னாவில் பரம்பரை அரச குடும்பங்களைவிடவும் அதிகமான பணம் சேர்த்து பெரிய மாளிகைகளை கட்டிக்கொண்டவர்கள் எல்லாம் சிறிய அளவில் வட்டிக்கு விட ஆரம்பித்தவர்கள்தான்” என்றான்.

அஸ்வத் திரும்பிப் பார்க்க, ராம்சரண் நாயக் புன்னகைத்து ”நான் பொதுவாகச் சொன்னேன்” என்றான்.

அஸ்வத் அதை அப்படியே கடந்து, ”என்ன செய்ய வேண்டும் என்று நான் இன்னமும் முடிவெடுக்கவில்லை எனக்குக் குழப்பமாகத்தான் இருக்கிறது. அவளை திரும்பி வரச்சொல்லியிருக்கிறேன். வந்தபின் அவளிடம் பேசிப்பார்ப்போம். இங்கே வந்தபின் அவள் எல்லாவற்றையும் முற்றிலும் விட்டுவிட்டாள் என்றால் ஒன்றும் இல்லை. அந்தப் பையனை அவளால் திருமணம் செய்யமுடியாது. திருமணம் செய்தால் தந்தை ஒரு பைசா கொடுக்கப்போவதில்லை. அவனுடன் சென்று அவள் சேரியில் வாழப்போகிறாளா என்ன? முதலில் இதெல்லாம் புரட்சிகரமாகத் தோன்றும். வாழ்க்கை என்பது பெரிது. அதை அவளிடம் விளக்கமாக சொன்னால் புரிந்துகொள்வாள்  என்று தோன்றுகிறது. என்ன இருந்தாலும் அவள் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் மகள், ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டேயின் பேத்தி”

“ருக்மிணி தேஷ்பாண்டேயின் மகளும்கூட” என்று ராம்சரண் நாயக் சொன்னான்.

அஸ்வத் திரும்பி அவனைப் பார்த்தபின், அவன் என்ன சொல்ல வந்தான் என்பதை புரிந்துகொள்ள முயல்வதைக் கைவிட்டு, ”என்ன செய்வது என்று நான் நாளைக்குள் சொல்லிவிடுகிறேன். நீ நேரில் சென்று அவளை உடனடியாக இழுத்து வரவேண்டியிருக்கும். அவள் தானாகவே வரமாட்டாள் என்று நினைக்கிறேன்” என்றான்.

நாயக் “செய்துவிடலாம்” என்றான். “நாம் எளிதில் கையாள முடிவது பெண்ணின் உடலை. கையாள முடியாதது பெண்ணின் மனதை” என்றபின் இன்னொரு சிகரெட்டை எடுத்துக்கொண்டு “நல்ல கவிதை இல்லையா?” என்றான்.

“பள்ளிக்காலத்தில் எனக்கு இரண்டு நண்பர்கள் இருந்தார்கள், அவர்கள் இரண்டுபேரையும் கலந்தது போல இருக்கிறாய் நீ” என்றான் அஸ்வத். “ஒருவன் குற்றவாளி. இன்னொருவன் கோமாளி. இரண்டுபேரும் எதற்கும் துணிந்தவர்கள்”.

ராம்சரண் நாயக் சிரித்துக்கொண்டு “வெறும் குற்றவாளிகள் முட்டாள்கள். புத்திசாலியான குற்றவாளிகளிடம் கொஞ்சம் கோமாளித்தனமோ கிறுக்குத்தனமோ இருக்கும்” என்றான். “ஆனால் நான் எதையும் கேலிக்கூத்தாக ஆக்குவதில்லை. கொஞ்சம் நாடகத்தனமாக ஆக்குகிறேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் நான் இலக்கியம் படித்தவன்”

“ராம்குமாரை அவன் தம்பியே குத்திக் கொன்றான். சதானந்த் குடிகாரனாக மாறி தெருவில் செத்தான். எப்போதாவது என் காருக்கு குறுக்கே பாய்ந்து குடிக்க காசு கேட்பான்…” என்று அஸ்வத் சொன்னான்.

“மிகச்சரியான பொருந்தி வரும் முடிவுகள். எனக்கென்னவோ ஷேக்ஸ்பியர் சொன்னது போல இது ஏதோ முட்டாள் எழுதிய கலவரமும் ஓலமும் கொண்ட நாடகம் அல்ல என்று தோன்றுகிறது. இது மகத்தான கதைசொல்லி ஒருவனால் திறமையாகச் சொல்லப்படும் கதை.” என்றான் ராம்சரண் நாயக். “நான் அவனுடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்று. Yes, I mean it!”

“நான் கிளம்புகிறேன், வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறேன். நாளை காலை பத்துமணிக்கு நான் அழைக்கிறேன். நீ என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறேன்” என்றபடி அஸ்வத் கிளம்பினான்.

ஆனால் அன்றிரவே அஸ்வத் தன் படுக்கையறையில் இருந்து ராம்சரண் நாயக்கை  தொலைபேசியில் அழைத்து   ”அவளை நாளைக்கே கூட்டி வா” என்றான்.

”ஆமாம், குழம்பிக் கொண்டிருப்பதை விட எதையாவது செய்வது மேல். அந்த விஷயம் அங்கேயே முடியும்” என்று ராம்சரண் நாயக் சொன்னான். “எல்லா அதிரடி முடிவுகளும்  முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் இருந்து வெளியேறுவதற்காகத்தான் எடுக்கப்படுகின்றன”

“நீ என்ன செய்யப்போகிறாய்?”

ராம்சரண் நாயக் சிரித்துக்கொண்டே “குழப்பம் கடுமையாக இருந்தால் அங்கே காசியில் படிக்கும் இன்னும் இரண்டு மாணவர்களைக்கூடக் கொல்லலாம்…” என்றான்.

“நீ குடித்திருக்கிறாய்”

“ஆமாம், இரவில் குடிக்காமலிருக்க நான் என்ன காந்தியா?” என்றபின் “அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் நமக்குத் தேவை உறுதியான ஏதாவது ஒரு செயல். அதைச் செய்தால் எல்லாம் கண்கூடாக ஆகிவிடுகிறது, அதாவது கல்மண் போல. அதை நம்மால் கையாள முடியும். இப்போது எல்லாமே சொற்களாக இருக்கின்றன, அதாவது புகைபோல. நம்மால் இதைக் கையாள முடியாது. ஆகவே செய்வோம்… வேண்டுமென்றால் வழிப்போக்கர் நான்குபேரைக்கூட கொல்லலாம்” என்று ராம்சரண் நாயக் சொன்னான்.

“நீ போதையில் இருக்கிறாய்… போனை வை. நாளை உன்னிடம் பேசுகிறேன்” என்றான் அஸ்வத்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2025 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.