குமரகுருபரன் விஷ்ணுபுரம் விழா, கவிதைவிவாதம்- கடிதங்கள்

ஜெ
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. நான் மிகமிகக் குறைவாகவே இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். சென்னையில் நிகழும் பெரும்பாலான இலக்கிய நிகழ்ச்சிகள் மாபெரும் நேரவிரயங்கள். எந்தத் தயாரிப்பும் இல்லாமல், பேச்சுத்திறனும் இல்லாமல் நிகழ்த்தப்படும் நீண்டநேர பேச்சுக்கள்தான் அங்கே நிகழ்கின்றன. விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா எந்த விதமான சலிப்பும் இல்லாமல் ஒரு முழுநாளும் நிகழ்ந்தது என்பது அதிசயம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக இப்படித்தான் நிகழ்ந்து வருகிறது என்பது இன்னொரு அதிசயம்.
2011 ல் பூமணிக்கு நீங்கள் எடுத்த விழாவில் நான் கலந்துகொண்டேன். அன்று முதல் இன்று வரை அதே ஒழுங்கும், கட்டுப்பாடும், இலக்கியம் மீதான கவனமும் ஆச்சரியம் அளிக்கின்றன. இன்னொரு விஷயம், இந்த விழா இப்படிச் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒரு காரணம் வந்திருக்கும் அரங்கு. இலக்கிய ஆர்வமும் இலக்கியத்தின் மேல் அர்ப்பணிப்பும் உடையவர்கள் மட்டுமே கொண்ட அரங்கு அது. நன்றிகூறல் நிக்ழும்போதுகூட அரங்கிலே கூட்டம் அப்படியே இருந்தது. நுட்பமான இலக்கியச் செய்திகளையும் பகடிகளையும்கூட உடனே ரசித்து எதிர்வினை அளித்தது. பாராட்டுகள்.
தெய்வநாயகம், பெரம்பூர்
அன்புள்ள ஜெ,
அந்திமழை இதழில் விஷ்ணுபுரம் குமரகுருபரன் நிகழ்ச்சிப்பதிவைப் பார்த்தேன். விழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. ஆனால் அந்த விவாதம் சுவாரசியமாக இருந்தாலும் ஒரே புள்ளியில் கொஞ்சம் சம்பந்தமில்லாமல் சுற்றிவந்ததுபோல் இருந்தது. தமிழின் மூன்று முக்கியமான கவிஞர்களின் உரையாடலில் இன்னும் கொஞ்சம் ஆழமாக கவிதை எழுதுவதன் சிக்கல்கள், சவால்கள் பற்றிப் பேசப்பட்டிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
ஶ்ரீரங்கராஜன்
தமிழ்நாடு இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது!-ஜெயமோகன் (அந்திமழை)அன்புள்ள ஶ்ரீ,
இந்தவகையான விவாதங்கள் இன்ன திசையில்தான் செல்லவேண்டும் என எவரும் முன்னரே சொல்லமுடியாது. எதிர்பார்க்கவும்கூடாது. அந்த தருணத்தில் எது திரண்டு வருகிறதோ அதுதான் விவாதப்பொருள். அந்த விவாதப்பொருள் உண்மையில் சூழலில் ஏற்கனவே முனைகொண்டுள்ள பிரச்சினையாகத்தான் இருக்கும். அது தெளிவற்ற ஒரு சிந்தனையாக இருந்து அங்கே விவாதமுகமாக ஆகிறது. அந்தத் தற்செயல் முக்கியமானது. அதுவே நாம் எதிர்பார்க்கவேண்டியது. தவறான விவாதம் என்பது இரண்டுதான். ஒன்று, தனிப்பட்ட தாக்குதல்கள். இரண்டு, சம்பிரதாயமான பேச்சுக்கள்.
ஜெ
கல்விநீக்கம் – ஒரு விவாதம்.Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
