காவியம் – 57

அஸ்வத் முதன்முதலாக ஊர்வசியை அவள் ஊரின் சிறிய கோவிலில் பெண் பார்த்தபோது அவள் அவனுடைய நெடுங்காலக் கற்பனையில் இருந்தது போல அவனை மீட்க வந்த தேவதையாகத்தான் தோன்றினாள். திரும்பி வந்து அவளை பற்றிய கற்பனைகளை ஓட்டிக்கொண்டிருந்தபோது ஒரு தடவை பிரகாஷை நினைவு கூர்ந்தான். பிரகாஷின் அந்த திரைக்கதைதான் அவளைப் பற்றிய தன்னுடைய எல்லாக் கற்பனைகளையும் உருவாக்கியிருக்கிறது என்று புரிந்துகொண்டிருந்தான். கடுமையானவன், கோபக்காரன், ஆனால் உள்ளே நல்லியல்பு கொண்டவனாகிய கதாநாயகன். அவன் எந்தக் களங்கமுமற்ற பேரழகியான கதாநாயகியை கண்டுகொள்கிறான். திருமண ஏற்பாடு நடந்த ஒரு மாதமும் அந்தக் கற்பனை அவனை அவ்வப்போது புன்னகைக்க வைத்துக்கொண்டே இருந்தது.
காவல்துறை வேலைகள் அவனுக்கு மிக எளிதாகவே இருந்தன. காவல்துறை வேலைக்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணம் முன்பு அவனுக்கு இருந்ததில்லை. ஒருமுறை ஒரு நண்பருடன் சென்று ஒரு போலீஸ் அதிகாரியை பார்த்துவிட்டு வரும்போது அந்தச் சூழலில் இருந்த மௌனமான அதிகாரம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் வீட்டிலும் எப்போதுமே வேலைக்காரர்கள் இருந்தார்கள். அவன் வேலைக்காரர்களை ஏவியே வாழ்ந்தான். ஆனால் போலீஸ் துறையில் இருந்த அந்த அதிகாரம் அவர்கள் வீட்டில் இருக்கவில்லை. போலீஸ்காரர்கள் அதிகாரிக்கு முன்பு மறுசொல் இலாது பணிந்தார்கள். அது அந்த அமைப்பு நெடுங்காலமாக உருவாக்கி வைத்திருந்த ஒரு மனநிலை.
மாறாக, அவனுடைய வேலைக்காரர்கள் மிகையான பணிவை நேரில் காட்டினார்கள். ஆனால் உரிமையாளர்கள் இல்லாதபோது அவர்களைப்பற்றி கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டார்கள். அவதூறைப் பரப்பினார்கள். முடிந்தபோதெல்லாம் திருடினார்கள். அங்கு வந்து சேரும் ஒரு புதிய வேலைக்காரன்கூட அந்தக் கேலி கிண்டல் வழியாகத்தான் தன் முதலாளிகளைப் பற்றிப் புரிந்துகொண்டான். அதன்பிறகு அவன் எவ்வளவு பணிவு காட்டினாலும் அவன் கண்ணிலும் உடல் பாவனைகளிலும் அந்த கிண்டல் ஒரு துளியேனும் இருந்துகொண்டே இருந்தது, எப்படியோ அது முதலாளிக்கும் தெரிந்திருந்தது.
அவன் தந்தையும் அதைப்பற்றி சொல்லியிருந்தார். ”நமக்கும் வேலைக்காரர்களுக்கும் உள்ள உறவென்பது ஓர் எழுதப்பட்டாத ஒப்பந்தம். நாம் அவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நமக்கு ஏதேனும் வேலை செய்வார்கள். அவர்கள் கொஞ்சம் திருட நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். மிக கடுமையாக பிடிக்கக்கூடாது. அப்போதுதான் அவர்கள் நமக்கு பணிந்திருப்பார்கள். நமது வசைகளை கேட்டுக் கொள்வார்கள்” என்றார்
“வசை பாடாமல் அவர்களை நடத்தலாமே என்று நீ கேட்கலாம்” என்று அவரே தொடர்ந்தார். “வசை பாடாமல் இருந்தால் நமக்கு இந்த நிறுவனத்தை நடத்திய நிறைவு வராது. நமது உணர்ச்சிகளை அவ்வப்போது நாம் வெளிக்காட்டாவிட்டால் நாமும் உள்ளுக்குள் எடை மிகுந்து ஒருநாள் வெடித்துவிடுவோம். இங்கே நீண்ட காலமாகவே இந்த வசைபாடும் வழக்கமும் இருந்து வருகிறது. நம் தந்தை வசைபாடுவதை யாராவது கேட்டால் உடனடியாகச் சென்று கங்கையில் குளிக்க வேண்டும். அவ்வளவு வார்த்தைகளை பயன்படுத்துவார். இந்த வசைபாடும் வழக்கம் வழியாகத்தான் இங்கே நாம் நமது அதிகாரத்தை செலுத்திக்கொண்டிருக்கிறோம். ஜட்கா வண்டியில் கட்டிய குதிரைக்கு அடிக்காவிட்டாலும் கூட வெறுமே சாட்டையின் ஒலியை எழுப்பிக் கொண்டே இருக்கவேண்டும் என்பது போல.”
அவன் மனதில் அதிகாரம் உள்ள அரசுவேலைதான் முதலில் இருந்தது. அதற்கு ஆட்சிப்பணிதான் வேண்டும் என்று பிறகு தெரிய வந்தது. அதற்காகப் படிக்கத் தொடங்கியபோது அது அத்தனை எளிது அல்ல என்று புரிந்தது. அவன் மிக நல்ல மாணவனாக இருந்தபோதும் கூட. ஆனால் பிகாரில் எந்த ஒரு தேர்வையும் உடைப்பதற்கான வழி இருந்தது. பிகாரின் அரசியல்வாதிகள்தான் எப்போதுமே டெல்லியை ஆட்சி செய்தார்கள். ”பிகாரிலிருந்து டெல்லிக்கு சுரங்கப்பாதை உண்டு” என்று ஒரு தரகர் அவனிடம் சொன்னார். அவன் பணத்துடன் அந்த வழியாக உள்ளே நுழைந்தான்.
அதிகாரம்தான் அரசு அமைப்பின் அடிப்படை என்று தெரிந்துகொண்டது அவனுடைய மிகச் சரியான புரிதலாக இருந்தது. அந்த அமைப்பை அவன் திறம்பட நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது. அந்த அமைப்பில் ஒவ்வொரு உயரதிகாரியும் தனக்கு நேர் கீழே இருக்கும் அதிகாரிக்கு மட்டுமே பொறுப்பானவர். தனக்கு மேலிருக்கும் அதிகாரிக்கு மட்டுமே கடமைப்பட்டவர். பிற எதைப்பற்றியும் எப்போதுமே தெரிந்துகொள்ளவோ கவலைப்படவோ கூடாது. தன் முன் வரும் விஷயங்களை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வது வேலையை எளிதாக்கும். அது தன் கீழுள்ள அதிகாரியை அதிகாரப்படுத்துவது வழியாகவே முடியும். ஆனால் அவர்மேல் மட்டும் முழு அதிகாரத்தையும் கொண்டிருக்கவேண்டும்.
ஆகவே ’இதை நீங்களே பார்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. உங்களுடைய திறமை பற்றி எனக்குத்தெரியும்’ என்று அவன் ஒவ்வொரு கீழ் அதிகாரியிடமும் சொன்னான். அதை போலவே ’நான் பார்த்துக்கொள்கிறேன் சார். நீங்கள் தலையிட வேண்டிய அளவுக்கு இது பெரிய விஷயம் அல்ல’ என்று ஒவ்வொரு மேலதிகாரியிடமும் சொன்னான். தன் கீழுள்ள அதிகாரிகளை கண்களை நோக்கிப் பேசுவதையே தவிர்த்தான். புன்னகைப்பதோ உபச்சாரங்கள் சொல்வதோ இல்லை. கூடுமானவரை சுருக்கமான ஒற்றைச் சொற்களால் பேசினான். மறுசொல் அற்ற பணிவை அவர்களிடம் எதிர்பார்த்தான். அதையே மேலதிகாரிகளுக்கும் திரும்ப அளித்தான்.
அந்தப் பிரம்மாண்டமான எந்திரத்தின் உறுப்புகள் ஒன்றோடொன்று உரசிக் கொள்ளாமல் இருந்தால் போதுமானது. அவை ஒன்றை ஒன்று இணைந்து ஒருபோதும் வேலை பார்ப்பதில்லை. நூற்றுக்கணக்கான அகங்காரங்களின் தொகுப்புதான் அரசாங்க அதிகாரம். ஒவ்வொருவரும் அவர்களுக்கு வசதியானதையும் பிடித்ததையும் மட்டுமே செய்வார்கள். இன்னொருவருடன் இணையும் எண்ணமே எவருக்கும் இருப்பதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாகவே அது ஒரே எந்திரமாகவும் இயங்கியது. அதை ஒரு எந்திரமாக ஆக்குவது அதிலுள்ள ஒருங்கிணைப்பல்ல, அந்த அமைப்பின் ஒட்டுமொத்தத்திலுள்ள நோக்கமும் அதன் விசையும் மட்டும்தான்.பலநூறு அகங்காரங்களும் சுயநலன்களும் இணைந்து ஒற்றை அதிகாரமாக ஆவதன் விந்தையே அரசு என்பது.
பெரும்பாலான குற்றங்கள் பிகாரில் அந்த சிற்றூர்களில் ஊர்ப்பஞ்சாயத்துகளால் சாதி அடிப்படையிலும் பணபலத்தாலும் தீர்த்துவைக்கப்பட்டன. படுகொலைகள், ஆயுதமேந்திய கொள்ளை போன்ற சில விஷயங்கள் மட்டுமே போலீஸிடம் வந்தன. போலீஸ் அவற்றையும் கீழ்நிலையிலேயே சமரசம் பேசி முடித்துவைத்தது. மிக அரிதாகத்தான் ஒரு செய்தித்தாள் புயல் கிளம்பி, மேலதிகாரிகள் தலையிடும் அளவுக்கு பிரச்னை வளர்ந்தது. அந்தப் பிரச்னையையும்கூட அதற்கே உரிய மரபான வழிகளின் வழியாக போலீஸ் கையாண்டது. அந்த பதிந்துபோன வழி அப்படியே தொடர்கிறதா என்று மட்டுமே அஸ்வத் பார்த்துக்கொண்டால் போதுமானதாக இருந்தது.
அஸ்வத்திடம் அவனுடைய மேலதிகாரி ஒருமுறை சொன்னார். ”போலீஸ் வேலை மிக எளிதாக இருக்கும் ஊரென்பது உத்தரப்பிரதேசமும் பிகாரும்தான். ஏனென்றால் பழையகால நிலப்பிரபுத்துவ அமைப்பு அப்படியே இங்கே இருக்கிறது. அதன் உள்ளூர் கட்டமைப்பை மீறி போலீஸிடம் எதுவும் வருவதில்லை. வந்தாலும் அதையெல்லாம் கீழ்நிலைப் போலீஸே செய்து முடித்து விடுகிறது. நாம் நேரடியாக அரசியல்வாதிகளுக்கு பதில் சொன்னால் போதுமானது. தெற்கு மாநிலங்களில் போலீஸ் நீதிமன்றத்துக்கு பணிகிறது. ஒவ்வொரு குற்றத்தையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு குற்றங்களை நிரூபிக்க வேண்டும். தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும். அங்குதான் சட்டமும், மரபுகளும் எல்லாம் வருகின்றன. போலீஸ் குன்றிப்போவதும் செயலற்றவனாவதும் நீதிமன்றத்தின் முன்னால்தான். போலீஸின் பெரும்பாலான வேலைகள் நீதிமன்றத்திற்காகத்தான். நாம் இங்கு நீதிமன்றத்திற்கு மிகக்குறைவான வழக்குகளைத்தான் கொண்டு செல்கிறோம். அப்படி கொண்டுசெல்லும் வழக்குகளில்கூட மிகப்பெரும்பாலானவை நீதிமன்றத்தில் இருக்கும் ஊழல்கள் வழியாக முடிவு செய்யப்படுகின்றன.”
அங்கு நீதிமன்றத்தால் பணம் பெற்றுக்கொண்டு விடுதலை செய்யப்படும் வழக்குகளே எவை, அதற்கு பணம் அளிக்க வசதியற்ற ஏழைகளின் வழக்குகள் எவை என்று போலீஸ்காரர்களுக்கு தெரிந்திருந்தது. ஆகவே அதற்குரிய விகிதத்தில் நீதிமன்றத்துக்கு வழக்குகளை கொண்டு சென்றார்கள். எண்ணிக்கை அடிப்படையிலும், சதவீத அடிப்படையிலும் எந்த வெளிப்பார்வையாளனுக்கும் திருப்தி வரும் வரும்படியாக வழக்குகள் நீதிமன்றத்துக்குக்கொண்டு செல்வது என்பது பிரிட்டிஷ் காலம் முதல் நடைமுறையில் இருந்தது. பிகாரின் நீதிமன்றங்களில் பெரும்பாலான ஏழைகள் உடனடியாக தண்டனை பெற்றார்கள். கீழிருந்து மேல் வரை அவர்கள் தண்டனை பெறுவார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது. தண்டனை கிடைக்காவிட்டால் விசாரணை கைதிகளாகவே சிறையில் ஆயுள் தண்டனையைவிட அதிக காலம் வாழ்பவர்களும் இருந்தார்கள்.
சாதியிலோ பணத்திலோ அதிகாரத்திலோ ஏதேனும் தகுதி கொண்டவர்கள் மிக எளிதாக நீதிமன்றத்திலிருந்து தப்ப முடிந்தது. அதன் வழியாக உண்மையான அதிகாரம் எவருடையது என்பது நகரங்களிலிருந்து சிற்றூர் வரைக்கும் தெள்ளத் தெளிவாக ஒவ்வொருவருக்கும் தெளிவாகிக் கொண்டிருந்ததனால் பணமும் சாதியும் கொண்டவர்களே ஒரு சமானமான அரசாங்கமாக மாறினார்கள். அவர்களுக்கு எதிராக ஒரு குரல்கூட கீழிருந்து மேல்வரை வரவில்லை.
”இங்கு இரண்டு அரசாங்கங்கள் உள்ளன” என்று தெற்கிலிருந்து வந்த மேலதிகாரியான தம்பி ராஜ்குமார் அவனிடம் சொன்னார். ”வரி பெற்றுக்கொண்டு, போலீஸ் நீதிமன்றம் எல்லாம் வைத்து ஆட்சி செய்யும் ஒரு அதிகாரம். சிறு கிராமங்களிலிருந்து பெரிய நகரங்கள் வரை அந்தந்த பகுதிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் இன்னொரு அதிகாரம். இந்த இரண்டு அதிகாரங்களில் இரண்டாவது அதிகாரம்தான் உண்மையானது நேரடியானது, வலுவானது. ஏனென்றால் அது தன்னிச்சையாக உருவாகி வந்திருக்கிறது. அந்த அதிகாரத்துடன் அரச அதிகாரம் முரண்படும்போது தான் பிரச்னைகள் வருகின்றன. ”
சிரித்தபடி மீசையை நீவிக்கொண்டு அவர் சொன்னார். “தெற்கே உள்ள மாநிலங்களில் உள்ளூர் பணக்காரர்களுக்கும், நகரங்களில் மாஃபியாக்களுக்கும் அரசாங்கத்திடம் மோதல் உருவாவதை அடிக்கடிக் கேள்விப்படுகிறோம். அது உண்மையில் இரண்டு வகையான அரசாங்கங்களுக்கு இடையேயான மோதல். ஆனால் பிகாரில் இந்த இரண்டு அரசாங்கங்களும் முழுமையாக ஒன்றை ஒன்று ஒத்துக்கொண்டு, ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. இரண்டாவது அதிகாரத்தை சேர்ந்தவர்கள்தான் தேர்தலில் நின்று வென்று முதல் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இத்தனை முழுமையான ஒத்திசைவு இருக்கும்போது இங்கே முழுமையான அமைதி இருக்கிறது. முழுமையான அமைதி முழுமையான அடக்குமுறையில்தான் சாத்தியமாகும் என்று புரிந்துகொண்டால் பிகாரை நன்கு தெரிந்துகொண்டதாகும்.”
”இந்த அமைப்பு பிகாரில் நாமறிந்து இருநூறாண்டுகளாக இருக்கிறது. இங்கே முகலாய அரசு உருவான காலம் முதலே சிறு அதிகாரங்கள்தான் மொத்த நாட்டையும் கட்டுக்குள் வைத்திருந்தன. இன்றைக்கு ஒரு பஞ்சாயத்து என்று சொல்லக்கூடிய அளவுக்குத்தான் பழைய ஜமீன்தார்களின் நிலம் இருந்திருக்கிறது. அவர்கள் அந்த வட்டத்தில் எல்லாவகையிலும் அரசர்கள். அவர்களுக்குமேல் சிற்றரசர்கள். அச்சிற்றரசர்களுக்கு அப்பால் எங்கோ டெல்லியில் ஒரு பேரரசு. அவர்களுக்கிடையே முழுமையான ஒத்திசைவு இருந்ததனால் இங்கே எப்போதும் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை.” தம்பி ராஜ்குமார் தொடர்ந்தார்.
“அவர்களிடமிருந்து ஆட்சியைப் பெற்றுக்கொண்டபோது பிரிட்டிஷார் அந்த அமைப்பை எந்த வகையிலும் கலைக்கவில்லை. அந்த அமைப்பு வேறொருவகையில் இப்போதும் அப்படியே நீடிக்கிறது என்று புரிந்து கொண்டால்போதும். இனி நீண்டநாட்கள் இப்படியே இது நீடிக்கும். நாளை என்றாவது இது கலைய நேரிட்டால்தான் இதனுடைய உறுப்புகள் ஒன்றோடொன்று உரசி அராஜகம் உருவாகும், அழிவும் உருவாகும்.”
“அவ்வப்போது இந்த அமைப்புகளை கலைப்பதற்கான முயற்சிகள் இங்கு நடந்ததுண்டு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுபதில் உருவாக்கிய முழுப்புரட்சியும் சரி, அதற்கு முன்னால் வினோத் மிஸ்ரா போன்றவர்களால் உருவாக்கப்பட்ட நக்சலைட் புரட்சியும் சரி, அதற்கான சில முயற்சிகள்தான். அவை அசட்டுத்தனமானவையும்கூட. ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம் முழுமையாக தோற்கடிக்கப்பட்ட பிறகு இனி ஒன்று இங்கே சாத்தியமாகுமா என்றே தெரியவில்லை. அந்த இயக்கத்தில் இருந்தவர்களே இன்று இரண்டாவது அதிகாரத்தில் தலைவர்கள் ஆகிவிட்டனர். இந்த அமைதி நம்மைப் போன்றவர்களுக்கு மிக வசதியானது. நாம் இதை மாற்றப்போவதில்லை. நாம் புரட்சியாளர்கள் அல்ல. நாம் இதை நடத்துபவர்கள்தான். நாம் நடத்துவதற்கு ஒன்றுமில்லை, இது தானாகவே நடக்கும். ஆகவே உனக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய் மகிழ்ச்சியாக இரு. நீ அதிருஷ்டக்காரன் என்று நினைத்துக்கொள்” என்று தம்பி ராஜ்குமார் சிரித்தார்.
அஸ்வத் தன் ஆட்சி நிகழ்ந்த பகுதிகளில் அலுவலகப்பணியை மதியத்திற்கு மேல் ஒருபோதும் செய்ததில்லை. எப்போதுமே அவன் அந்த உள்ளூர் செல்வந்தர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றை மட்டுமே செய்தான். அவர்கள் முறைப்படி அவனுக்கு சேரவேண்டிய பங்கை தவறாமல் அளித்து வந்தார்கள். அதற்கான எல்லா வழிமுறைகளும் தெளிவாக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தன. அவன் அந்தப்பணத்தை கொண்டு வந்து ஹரீந்திரநாத்துக்கு கொடுக்கவேண்டியதில்லை. ஆகவே ஒவ்வொரு இடத்திலும் பணத்தை அள்ளி இறைத்து வாழ்ந்தான். அவனுக்கு கிளர்ச்சி ஏற்படுத்தும் பெண்கள் நிறைந்த ஊரிலேயே எப்போதும் இருந்தான்.
முதலில் வன்முறையும் கீழ்மை நிறைந்த பெண்களில் ஈடுபட்ட அவன் மனம் பிறகு பெண்கள் மீது வன்முறையை செலுத்தி மகிழ்வதாக மாறியது. பெண்களை துன்புறுத்தி அவர்கள் அலறும்போது மட்டுமே அவனால் காமக்கிளர்ச்சி கொள்ள முடியும் என்ற நிலை உருவாகியது. அந்த மனநிலையுடன் அவன் ஊர்வசியை மணந்து கொண்டபோது முன்பு அவனே கற்பனை செய்துகொண்டிருந்ததுபோல அந்த திருமணநாளுக்குப்பின் அவன் முழுமையாக பிறிதொருவனாக ஆகிவிடமுடியவில்லை. முதலிரவில் ஊர்வசியுடன் ஒரு பெரிய குற்ற ஒப்புதலை அளித்து ,அவளிடமிருந்து பாவ மன்னிப்பைப் பெற்று, கண்ணீர் விட்டு அழுது, அவளால் தேற்றப்பட்டு, புதிய வெளிச்சத்தை பார்த்தபடி காலையில் எழவேண்டும் என்னும் கனவு அசட்டுத்தனமானது என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எப்போதுமே உண்மை பிறிதொன்றாக இருக்கும் என்று பகல்கனவு காணும் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆகவே பகல்கனவுக்கும் உண்மைக்கும் தொடர்பே இல்லாமல் இருப்பதை அறியும்போது எவரும் ஏமாற்றமோ சலிப்போ அடைவதில்லை.
முதல் இரவில் ஊர்வசி அவனிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தலைகுனிந்து உடலை இறுக்கிக்கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள். அவன் தொட்டபோதும், வெவ்வேறு கேள்விகள் கேட்டபோதும் எல்லாம் ஓரிரு வார்த்தைகளை முணுமுணுப்பாகச் சொல்லி தலையசைத்து, குனிந்த தலை நிமிராமலேயே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவன் அவளில் சலிப்படைந்து, காமத்தை நோக்கி செல்லத் தொடங்கியபோது அவள் இன்னும் தன் உடலை இறுக்கிக்கொண்டாள். அவன் அவளுடன் உறவு கொள்ளத் தொடங்கியபோது திகிலுடன் ஒன்றைத் தெரிந்துகொண்டான், அவன் உடல் எந்த வகையிலும் கிளர்ச்சி அடையவில்லை. அவனால் அதைச் செயல்படுத்தவே முடியவில்லை. அந்தத் தன்னுணர்வு அவன் மேல் குளிர்நீரை ஊற்றி முழுமையாகவே நனைந்த துணிபோல ஆக்கியது.
இருட்டில் நிர்வாணமாக உடல் பிணைத்து காமத்திற்கு முயன்றபோது ஊர்வசி இயல்பாக கையை எடுப்பது போல் எடுத்து அவனுடைய ஆணுறுப்பை தொட்டுச் சென்றபோது அவனுக்கு ஒன்று தெரிந்தது, அவளுக்கு காமம் பற்றி முன்னரே நேரடியாகவே தெரிந்திருந்தது. அவனுக்கு காமஉணர்ச்சி எழவில்லை என்பதை அவள் புரிந்துகொண்டுவிட்டாள். அந்த அறிதல் அவனுக்கு அப்போது நிம்மதியை அளித்து, அவனை விடுதலை செய்தது. அதன்பின் அவளை கிழித்து உண்ணும் புலி போலக் கையிலெடுத்தான். அவள் வலியால் அலறத் தொடங்கியபோது அவனுக்கு வழக்கமான கிளர்ச்சியும், உடல் இறுக்கமும் ஏற்பட்டன. எப்போதும் தன்னிடம் அகப்படும் ஒரு பெண்ணை அவன் எப்படி வதைத்து அனுபவிப்பானோ அதைப்போல அவளிடம் நடந்துகொண்டான்.
பின்னர் எழுந்து சென்று புகை பிடித்தபடி பால்கனியில் நின்றபடி கீழே ஓடும் வண்டிகளை பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச்சாலையில் நள்ளிரவில் கூட அவ்வப்போது ஓரிரு இருசக்கர வண்டிகள் ஓடுவதுண்டு. ஒவ்வொரு வெளிச்சமும் வளைந்து சுழன்று அவன் மேல் பட்டு போகும்போது ஒரு புதிய எண்ணம் தோன்றி மறைவது போலிருந்தது. அப்போது அவன் ஓர் எண்ணத்தை அடைந்தான். அவளுக்கு ஆணுடன் காமம் புதியதல்ல என்பதில் ஐயமில்லை. ஆனால் யார்? அவள் அவனை அவளுடைய முந்தைய ஆணுடன் ஒப்பிட்டுக்கொள்கிறாளா? அவனுக்கு ஏமாற்றப்பட்ட உணர்ச்சி ஏற்படவில்லை, அவன் அவளுடைய முந்தைய ஆணைவிட மேலானவனா என்னும் எண்ணம் மட்டுமே நீடித்தது.
ஆனால் அந்த எண்ணத்துடன் அவன் மூர்க்கமாக போராடினான். அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. அவள் வளர்ந்த சூழல் ,குடும்பப் பின்னணி ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் அவள் இன்னொரு ஆணை கண்களைப் பார்த்து பேசியிருக்கவே வாய்ப்பில்லை. உடன்பிறந்தவர்களின் முன்னால் கூட தன் முக்காட்டை இழுத்துவிடாமல் சென்று நின்றிருக்க முடியாது. அந்த எண்ணத்தை போராடிப் போராடி அவன் அழித்துக்கொண்டான். அதற்கு அடுத்த நாட்களில் அவ்வப்போது அந்த எண்ணம் அவனுக்கு எழுந்தபோது மீண்டும் மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் அவளிடம் அதைப்பற்றி கேட்டான். ஆனால் அவள் சலித்தவள் போலவோ, ஆழ்ந்து துயருற்றவள் போலவோ, தன்னுடைய எல்லா வாசல்களையும் மூடிக்கொண்டு உள்ளே பதுங்கி இருந்தாள். அவளிடமிருந்து ஒரு புன்னகையையோ, முழுமையான ஒரு சொற்றொடரையோ அவனால் பெற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அவளுடனான காமம் அதே போன்ற வன்முறையுடன் மட்டுமே நிகழ முடிந்தது. அவள் தன்னை இன்னொருவனுடன் ஒப்பிடக்கூடாது என்னும் உணர்வே அந்த வன்முறையை பெருக்கியது. சில நாட்களுக்குப்பின் அவன் ஒன்றைத் தெரிந்துகொண்டான். அவ்வாறன்றி வேறெவ்வகையிலும் அவளைப்போன்ற பெண்களுடன் ஓர் ஆண் காமம் கொள்ள முடியாது. அவர்களால் ஆணுடன் சரசமாட முடியவில்லை. சிரிக்கவோ புன்னகைக்கவோ கூட முடியவில்லை. சிறு கொஞ்சல் கூட அவளிடமிருந்து வரவில்லை. அத்தனை இறுக்கமாக உடலை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மூடிய வாசல்களை உடைத்து திறந்து உள்ளே நுழைவது தவிர வேறெவ்வகையிலும் அடைய முடியாது. ஆயிரம் ஆண்டுகளாக அவளைப்போன்ற பெண்கள் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அவர்களின் கணவர்கள் அப்படித்தான் அவர்களை அடைந்திருக்கவும் வேண்டும்.
அவன் அவளை அவ்வாறு மிக இயல்பாக கையாளத் தொடங்கியபோதுதான் அவளுக்கு சிபிலிஸ் நோய் இருப்பதை மருத்துவர் சொன்னார். அதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. திருமணத்திற்கு ஆறுமாதம் முன்னரே அவனுக்கு அந்நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டு, தொடர்ந்து அவன் ரகசியமாக சிகிச்சை எடுத்துவந்தான். ஊசி போடுவதன் சுற்று முடிந்து மாத்திரைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அவன் டாக்டரிடம் தனக்கு அந்த நோய் வந்து கட்டுக்குள் இருப்பதாக முந்தைய டாக்டர் சொன்னதாகச் சொன்னான். கட்டுக்குள் இருந்தாலும் நோய் தொற்ற முடியும், முழுமையாக உங்களுடம் அந்தத் தொற்று விலகியிருக்காது அது ஓர் உறைந்த நிலையில் இருந்திருக்கலாம் என்று டாக்டர் சொன்னார்.
முதல் முறையாக அந்தக் குற்ற உணர்வால் அவன் ஊர்வசியிடம் கனிவையும் நெருக்கத்தையும் அடைந்தான். அவளை ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினான். ஒருமுறை அவளிடம் காரில் செல்லும்போது தணிந்த குரலில் தனக்கு அந்த நோய் இருந்தது என்றும், தன்னிடமிருந்து அவளுக்கு அது வந்திருக்க முடியும் என்றும் சொல்லி அவள் தன்னை மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அவள் கை நீட்டி தன்னை தொடுவாள் என்றும், ஆறுதலாக ஏதேனும் சொல்வாள் என்றும் எதிர்பார்த்தான். அல்லது அழுவாள் என்றும் சீற்றத்துடன் ஏதாவது சொல்வாள் என்றுகூட எண்ணினான். அவள் மேலும் முக்காட்டை முகத்தின் மேல் இழுத்துவிட்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.அவள் அழுகிறாளா என்று காரை ஓட்டியபடி அவன் ஓரக்கண்ணால் திரும்பித் திரும்பி பார்த்தான். அவள் இறுகிய உடலுடன் தலைகுனிந்து அசையாது அமர்ந்திருந்தாள். எரிச்சலுடன் அவன் வழக்கம் போல் காருக்குள்ளேயே காலடியில் துப்பியபடி அதை ஓட்டினான்.
ஆனால் ஓரிரு வாரங்களுக்குப்பிறகு அவள் அந்த நோய் பற்றிய எந்தத் தகவலையுமே வீட்டில் எவரிடமும் சொல்லவில்லை என்று தெரிந்துகொண்டபோது அவள் மேல் மெல்லிய அன்பை மீண்டும் அடைந்தான். வாழ்நாள் முழுக்க அவளுடன் அந்த ஊசலாட்டத்திலேயே இருந்தான். அவள் கருவுற்றபோது முதல் சிலமாதங்கள் அவன் அவளிடம் கனிவும் நெருக்கமும் அடைந்தான். ஆனால் கரு வளர வளர தனிமையும் கண்ணீருமாக அவள் மேலும் அவனிடமிருந்து விலகிச் சென்றாள். குழந்தை பிறந்த போது முதற்சில மாதங்கள் குழந்தை மீதும் அவள் மீதும் ஒரு நெருக்கத்தையும் அன்பையும் அடைந்தான். ஆனால் குழந்தை சற்று வளர்ந்தபோது அவள் அதைத் தவிர வேறு எதையுமே யோசிக்க முடியாதவளாக ஓர் உலகத்தை உருவாக்கிக்கொண்டாள். அதன் பின் மகன் தங்கிப்படிக்கும் பள்ளிக்கு சென்றுவிட்டபோது அவன் அவளிடமிருந்து முற்றாக அகன்று தனக்கான உலகத்தில் சுழலத் தொடங்கினான்.
ஆனால் எங்கோ ஓரிடத்தில் அவள் தன்னை மதிக்கவில்லை என்ற எண்ணம் என்ற சந்தேகமும் இருந்துகொண்டிருந்தது. தன் உலகம் எவ்வளவு கீழ்மையானது என்று அவளுக்கு தெரிவித்தால் அவள் சீண்டப்படுவாள் என்று தோன்றி அவளுடைய அறிதலுக்குள் தன் காமமும் வன்முறையும் நிறைந்த உலகத்தைப் பற்றி ஒரு அறிமுகத்தைக் கொடுக்க முயன்றான். அவள் தன்னை வசைபாடினால்கூட அது அக்கறைதான் என்று எண்ணிக்கொண்டான். அவள் அதைத் தெரிந்துகொள்ள மறுத்துவிட்டாள். ஒன்றைத் தெரிந்துகொள்ள மறுப்பவரிடம் அதை தெரியவைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவன் உணர்ந்துகொண்டான். அவள் எல்லா வாசல்களையுமே தனக்காக மூடி வைத்திருக்கிறாள், தன்னை எப்போதுமே அவள் கவனிப்பதில்லை என்று புரிந்துகொண்டபிறகு அவன் முழுமையாகவே அவளிடமிருந்து விலகிச் சென்றான்.
ஆனால் அவனுக்குள் ஒரு கை அவளை நோக்கி நீண்டு தவித்துக்கொண்டே இருந்தது என்று அவன் அறியும் தருணங்கள் இருந்தன. அவன் அவளால் சீண்டப்பட்டு, அவள் எரிச்சலோ சீற்றமோ அடைய வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குப் பிறகு அதை உணர்வான். அப்போதெல்லாம் இரவு முழுக்க சிகரெட் பிடித்துக்கொண்டும் துப்பிக்கொண்டும் இருட்டைப் பார்த்து நின்றிருப்பான்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
