நெ.து.சுவும் அங்கதமும் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் விழைகிறேன்.
கடந்த மாதம் பெங்களூரில் “Of Men, Women and Witches” புத்தகம் பற்றிய கலந்துரையாடலுக்கு முன் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது
“தமிழ் நாட்டுல கல்வி வளர்ச்சிக்கு முக்கியமானவர் நெ.து.சுந்தரவடிவேலு அவர பத்தி பெரும்பாலான பேர்களுக்கு தெரியாது” என்று நீங்கள் சொல்லும்போது உண்மையில் அவரை நான் அறிந்திருக்கவில்லை பின்னர் இணையத்தில் தேடியப்பொழுது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புகைப்படத்திற்கு கீழே தமிழ் விக்கி பதிவு இருந்தது
நெ.து சுந்தர வடிவேலுவை பற்றிய புகைப்படங்களுடன் விரிவான விளக்கங்கள் இருந்தது. தொடர்ந்து அரசியல் வாதிகளால் முன்வைக்கப்படும் கருத்துகளை மட்டுமே அறிந்திருந்தேன்.இன்று எதேட்சயாக மனதில் “அங்கதம்” என்ற சொல் தோன்றியது இதற்கு முன் அந்த சொல்லை எங்கோ கேட்டிருக்கிறேன்.
ஒரு நூல் விமர்சனத்தில் “அங்கதமாக எழுதியிருக்கிறார்” என்று ஒரு எழுத்தாளர் கூறியது நினைவிற்கு வந்தது. அந்த சொல் இன்று பூத்த ஒரு மலரைப் போல எனக்கு மகிழ்வளித்தது மீண்டும் மீண்டும் அந்த சொல்லை சொல்லிப்பார்த்தேன். அங்கதம்..அங்கதம்…அங்…கதம்
பின்னர் தமிழ் விக்கியில் அந்த சொல்லுக்கான பதிவு இருந்தது .அதில் அதன் வகைகள் அதற்கான எடுத்துக்காட்டுகளுடன் இருந்தது. அங்கதம்
கலைச் சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறுவீர்கள் அதற்கேற்ப அந்தச் சொல் உணர்த்தும் பொருளும் மிக நுணுக்கமானது அதனால் ஒரு பொற்கொல்லரின் கவனத்துடன் அச்சொல்லை அணுக அப்பதிவு உதவியது.
நமது கண்முன்னே மெல்ல மெல்ல தமிழ் விக்கி வளர்ந்து வருகிறது.இதற்கு பின் பல நபர்களின் உழைப்பு உள்ளது என்பதை அறிவேன்.அவர்களது முயற்சிகள் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
தமிழ்குமரன் துரை,
பெங்களூர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 837 followers
