நெருக்கடிகளின்போது தீவிரமாக வாசித்தல்…

https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக விஷ்ணுபுரம் வாங்க

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

அன்புள்ள ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

நலமா? 

கடந்த 2020 இல் தங்களின் விஷ்ணுபுரம் நூல் வாங்கினேன். படிக்க ஆரம்பித்தால் 10 பக்கங்களை கூட தாண்ட முடியவில்லை.

தற்போது கடந்த ஒரு மாதமாக கடும் மனசோர்வு என்னவென்றே தெரியாத ஒரு மனப்பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. ராமநவமி அன்று விஷ்ணுபுரம் வாசிக்கலாம் என்று தோன்றி படிக்க ஆரம்பித்தேன். பக்கங்கள் புரள ஆரம்பித்தன. ஆழ்ந்து படிக்க ஆரம்பித்து விட்டேன். சொற்களை குறிப்புகள் எடுத்து அர்த்தம் விளங்கி கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன். தொடர்ந்து  வாசித்து வருகிறேன். தேங்கிய வினாக்களுக்கு விடை கிடைப்பது போல மூழ்கி இருக்கிறேன்.       

குரங்கு சேக்கப்சர் கட்டுரை போல நானும் நிறைய விளம்பரப் போர்டுகளின் பெயர்களை கவனிப்பேன். நடந்து முடிந்த எங்கள் ஊர் புத்தக விழாவில் தெரிந்த புத்தகக் கடை உரிமையாளர் இந்த முறை ஜெயமோகனின் தங்கப்புத்தகம், அறம்  புத்தகங்கள் நிறைய விற்றன என்றார். 

நன்றி. 

அன்புடன் 

சிவநேசன்

அன்புள்ள சிவநேசன்,

நான் கவனித்த ஒன்று நீங்கள் எழுதியிருப்பது. கொற்றவை, விஷ்ணுபுரம் போன்ற நூல்களை படிப்பவர்கள் பலர் ‘சாமானிய நிலையில்’ அவற்றுக்குள் செல்ல முடியவில்லை என்று சொல்வதுண்டு. பல்வேறு உலகக்கவலைகள், நுகர்வுவேகம், வாழ்வின் அலைவுகள், கவனச்சிதறல்கள் நடுவே கூர்ந்து படிக்கவும் உள்வாங்கவும் முடிவதில்லை.

(வெண்முரசு வேறு ரகம். அதை எவரும் தொடங்கி படிக்கலாம். இறுதிவரை ஒரே வேகத்துடன் படித்து முடிக்கவும் முடியும். ஏனென்றால் மகாபாரதக் கதை ஏதோ வடிவில் அனைவருக்குள்ளும் உள்ளது. அது மிக ஆழமான ஒரு பண்பாட்டுத் தொடர்பு. அத்துடன் வெண்முரசு வலுவான கதைத்தொடர்ச்சியும் கதாபாத்திரப்பரிணாமமும் கொண்டது)

சாதாரணமாக நாம் வாசிக்கும் நாவல்கள் நம் அன்றாடத்துடன் உரையாடுபவை. அவற்றிலுள்ள ஒரு கதையோ, கருத்தோ, கதாபாத்திரமோ, அதன் சிக்கலோ நம் அன்றாடத்துடன் தொடர்புகொண்டு விடுகின்றன. அதைப் பிடித்துக்கொண்டு நாம் உள்ளே செல்லமுடியும். பெரும்பாலானவர்கள் இலக்கியம் வாசிக்கையில்கூட அன்றாடத்தையே வாசிக்கிறார்கள். அதாவது உண்மையில் அது ஒருவகை ஓர் உயர்நிலை வம்புதான்.

ஊர்வம்பை நாம் ஏன் ரசிக்கிறோம்? ஏனென்றால் நாமும் அந்த ஊரின் பகுதி. அந்த வம்பிலும் நாம் ஒரு பகுதிதான். அந்தத் தொடர்பு இருக்கிறது நமக்கு. ‘ஓ, இன்னாரா?’ என்பதுதான் ஊர்வம்பின் மிகச் சுவாரசியமான பகுதி. அதையே இலக்கியத்திலும் சற்று நுட்பமாக அடைகிறோம். தமிழில் நாம் கொண்டாடிய பல படைப்புகள் உண்மையில் பாலியல் வம்புகளின் அழகியல் வடிவங்கள் என்று சொன்னால் ஒருவகையில் உண்மைதான்.

அன்றாடத்தைப் பேசும் யதார்த்தவாதப் படைப்புகளில் நாம் கற்பனை செய்ய குறைவாகவே உள்ளது. நாம் அறிந்த இடம், அறிந்த காலம், அறிந்த பண்பாட்டுச் சூழல். மனிதர்களும் நாம் அறிந்தவர்களே. அதன் பிரச்சினைகளும் நமக்கு இருக்கலாம். அது சமகால அரசியல் சிக்கலைப் பேசுவது என்றால் நாம் எளிதில் இணைந்துகொள்கிறோம். பாலியல் சிக்கல் என்றால் மேலும் தீவிரமாக இணைந்து கொள்கிறோம். நம் சமகாலத்தில் பலராலும் விரும்பப்பட்ட படைப்புகளைப் பாருங்கள், அந்த சமகாலத்தன்மையால்தான் அவை வாசிக்கப்பட்டிருக்கும். இலக்கியம் சமகாலத்தை ‘பிரதிபலிக்க’ வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு.

விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவை முற்றிலும் வேறுபட்டவை. அவற்றில் நாமறிந்த அன்றாடமே இல்லை. அவை நிகழும் களம் நமக்கு முற்றிலும் புதியது, ஏனென்றால் அது ஆசிரியரின் கற்பனை. நாம் முதலில் அந்தக் களத்தைக் கற்பனை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதில் சென்று வாழவேண்டியிருக்கிறது. அது பேசும் பிரச்சினைகள் அன்றாடத்தன்மை கொண்டவை அல்ல. அதன் கதைமாந்தர்களும் நாமறிந்தவர்கள் அல்ல.

அவற்றை வாசிக்க நாம் இரண்டு வகை பயிற்சியை அடையவேண்டியிருக்கிறது.

ஒன்று, அடிப்படையான மானுடப்பிரச்சினைகளை நாம் உணர்ந்து அவற்றை விவாதிக்கப் பழகியிருக்கவேண்டும். எளிய சமகாலச் சிக்கல்கள் மற்றும் தனிப்பட்ட பிரச்ச்னைகளுக்கு மேலாகவே தத்துவச்சிக்கல்களை, வரலாற்று முடிச்சுகளை, ஆன்மிகவினாக்களை கருத்தில்கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, ஒரு புனைவின் கதைமாந்தர் நாம் அன்றாடத்தில் சந்திக்கும் மனிதர்களின் நகல்கள் அல்ல என்றும், அவர்கள் ஏதோ ஒருவகையில் உருவகங்கள் என்றும், அவர்கள் கருத்துநிலைகளையோ உணர்வுநிலைகளையோ பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்றும் உணரவேண்டும்.

கொற்றவை அல்லது விஷ்ணுபுரம் படிப்பவர்களில் பலர் அன்றாடத்தில் இருந்து சற்று ஒதுங்கிக்கொண்டவர்கள். ஓய்வான, அலைச்சல் அற்ற வாழ்க்கை கொண்டவர்கள். கவனக்குவிப்புக்கு உகந்த அன்றாட ஒழுங்கும் இருக்கும். அறிவார்ந்த பயிற்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆகவே சீராக வாசித்து முடிப்பார்கள்.

ஆனால் இன்னொரு சாரார் கடுமையான உளநெருக்கடிகளில் அவற்றை வாசிக்க ஆரம்பித்து மூழ்கிப்போகிறார்கள். உளநெருக்கடி ஒருபக்கம் இழுக்க, மறு எல்லையில் இந்நாவல்களை எடுப்பவர்கள் எதிர்வினையாக அசாதாரணமான  தீவிர மனநிலை ஒன்றை அடைகிறார்கள். ஒரு பாம்பு துரத்தும்போது நாம் வேகமாக ஒடுகிறோம். அந்த ஓட்டத்தில் நாம் அந்தப்பாதையை, அச்சூழலை மிகமிகக் கவனமாக பார்த்து நினைவில் வைத்திருக்கிறோம் இல்லையா, அதுபோல. வழக்கமாக அவ்வழியாகச் செல்லும்போது நாம் எதையும் கவனிப்பதே இல்லை.

சாமானிய வாழ்க்கைநிலையில் உள்ள கவனம் தளர்ந்த நிலையே விஷ்ணுபுரத்தை வாசிப்பதற்கான தடை. எதிர்நிலையாக உருவானாலும் அந்த தீவிரநிலை வாசிப்பை ஒருங்குகுவியச் செய்கிறது. என் நல்ல வாசகர்கள் பலர் கடுமையான அக -புற நெருக்கடிகளின்போது விஷ்ணுபுரம், கொற்றவை ஆகியவற்றை வாசித்தவர்கள்தான்.

அத்துடன், உளச்சோர்வு போன்றவற்றில் இருந்து விஷ்ணுபுரம் போன்றவை உருவாக்கும் கனவுநிகர்த்த மாற்றுலகம் நம்மை விடுவிக்கிறது. இன்னொரு உலகில் மூழ்கியிருக்க முடிகிறது. அத்துடன் நம் சோர்வுகள், கவலைகள் காலப்பெருக்கின் முன் எத்தனை எளியவை என அவ்வாசிப்பு உணரச்செய்கிறது.  

தொடர்க.

ஜெ

விஷ்ணுபுரம் – கடிதம் விஷ்ணுபுரம்- கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.