மானின் நிழல்
நாவல்கள் எழுதும்போது முற்றிலும் அந்த மனநிலையிலேயே இருந்துகொண்டிருப்பேன். வெண்முரசின் இறுதிக்கட்ட நாவல்களில் போரிலும் பேரழிவிலும் வாழ்ந்துகொண்டிருந்தேன். உச்சகட்ட கொந்தளிப்பின் நாட்கள் அவை. இப்போது எழுதிக்கொண்டிருப்பது காவியம், தொன்மமும் சமகால வரலாறும் ஒன்றையொன்று ஊடுருவும் படைப்பு.
அதில் நிழல்களைப் பற்றி வந்துகொண்டே இருக்கிறது. நிழல்கள் எப்படி நம்மை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன, ஆட்கொள்கின்றன என்னும் சித்தரிப்பு. முதல் அத்தியாயமே நிழல்களைப் பற்றிய அச்சமூட்டும் சித்தரிப்பு வழியாகத்தான். நான் சொல்லும் நிழல்களை fantoms என்று சொல்லலாம். உள்ளுருவகங்கள். கற்பனைகள், கனவுகள், பேய்கள் – எவையோ சில. நாவல் நிழல்கள் ஆட்கொள்ளும் உள்ளத்தினூடாக முன்னகர்கிறது.
அந்த மனநிலையில், உள்ளூர நாவலின் தொடர்ச்சி ஓடிக்கொண்டிருக்க எதையோ செய்துகொண்டிருந்தபோது இந்நிழலைப் பார்த்தேன். கொம்பில்லாத மான் ஒன்று காதுகளை பின்னால் மடித்து மேய்ந்துகொண்டிருந்தது. ஒரு கணம் திடுக்கிட்டு பின்னகர்ந்துவிட்டேன். சற்று நடுக்கம் விலகியபிறகுதான் முழுத்தோற்றத்தையும் கவனித்தேன். தண்ணீர்க்குழாய். நான் பல்தேய்த்துக் கொண்டிருந்தேன்.
இளமையிலேயே எனக்கு நிழல்களைப் பார்க்கும் வழக்கம் உண்டு. சிறுவனாக இருக்கையில் வீட்டு திண்ணையில் நின்றுகொண்டு, வாயில் விரலை வைத்துச் சப்பிக்கொண்டு வெளியே பார்த்துக்கொண்டு முழுப்பகலும் நின்றிருப்பேன் என்று என் அம்மா சொல்வாள். நான் என்ன பார்க்கிறேன் என்றே கண்டுபிடிக்க முடியாது. வெறும் தோட்டத்தையும் பாதையையும் பார்த்துக்கொண்டிருப்பேன்.
நான் என்ன பார்த்தேன் என்று என்னால் இன்று சொல்லிவிட முடியும். ஏனென்றால் என் நினைவில் நிறைந்திருப்பவை இரண்டு வயதுக்குள் நான் பார்த்த நிழல்கள். மரங்களின், விலங்குகளின், பறவைகளின் நிழல்கள். அவை இணைந்தும் பிரிந்தும், வெவ்வேறு ஒளிக்கோணங்களிலும் உருவாகும் நிழலுருவங்கள். அவற்றில் நான் பார்த்த அரக்கர்கள், தேவதைகள், பறக்கும் குதிரைகள், தரையில் இழையும் முதலைகள், எங்கும் நெளிந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் நாகங்கள்.
நிழல்கள் என் படைப்புகளில் நிறைந்திருப்பதை என் வாசகர்கள் அறியமுடியும். என்னால் ஏன் ஒரு பொருளை நாம் அதன் நிழலை தவிர்த்துவிட்டுப் பார்க்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளவே முடிந்ததில்லை. திரும்பத் திரும்ப ஒவ்வொன்றையும் அதன் நிழலையும் இணைத்தே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழில் என் இந்த மனநிலையைப் பகிரும் ஒரே எழுத்தாளர் புதுமைப்பித்தன்தான். செல்லம்மாள் கதையின் உச்சமே அவள் நெஞ்சைப் பிடுங்குவதுபோல வந்து நின்றிருக்கும் பிரமநாயகம் பிள்ளையின் கையின் நிழல்தான்.
தொடக்க காலக் கதைகளில் ஒன்றில் வெளியே செல்லும் அசைவுகள் நிழலாக தலைகீழாக அறைக்குள் அசைவும் ஒரு சித்திரம் உண்டு. அது நானேதான். இருண்ட அறையை மூடி, சிறு துளை வழியாக சுவரில் விழும் நிழல்களைப் பார்த்தபடி காசர்கோடு நகரில் முழுநாளும் நான் அமர்ந்திருப்பதுண்டு.
நிழலாட்டம் என்றே ஒரு கதை எழுதியிருக்கிறேன். நிழலையே மையமாக்கி எழுதப்பட்ட கதை டார்க்தீனியம். பிறகும் எண்ணிப்பார்க்கையில் எத்தனை நிழல்கள். ஒரு கதையில் பல விளக்குகளில் நிழல்கள் பெருகும் ஓர் உருவத்தை எழுதியிருக்கிறேன். அசையும் விளக்கொளியில் நிழல்கள் சுழன்றுவரும் காட்சி.
என் இளமையில் மண்ணெண்ணை விளக்குகள்தான். என் வீட்டில்கூட மின்விளக்கு வரவில்லை. மண்ணெண்ணை விளக்கு நிழல்களை உருவாக்குவது. என் வீடெங்கும் நிழல்கள் நடமிட்டுக்கொண்டிருக்கும். அம்மா கையில் சிறிய மண்ணெண்ணை விளக்குடன் நடமாடுவாள். அம்மாவின் நிழல் பெருகி அவள் தலைக்குமேல் படமெடுத்து உடன் சென்றுகொண்டிருக்கும். சுவர்களில் மடிந்து அவளை நோக்கி குனிந்து வரும்.
காட்சிகளை நிழல்கள் முழுமையாக்குகின்றன. அத்துடன் நிழல்கள் தங்களுக்கே உரிய ஓர் உலகைக் கொண்டிருக்கின்றன. இப்படி எண்ணிப்பாருங்கள், இங்கே ஒருவரால் உருவங்களைப் பார்க்கமுடியாது, நிழல்களை மட்டுமே பார்க்கமுடியும் என்றால் அவர் அடையும் உலகம் எத்தகையதாக இருக்கும்? நிழல்கள் அப்போது அவற்றின் மூல உருவங்களால் வரையறை செய்யப்படாது. அவை சுதந்திரமடைந்துவிட்டிருக்கும். முற்றிலும் புதிய அர்த்தங்களை உருவாக்கியிருக்கும்.
ஒரு தண்ணீர்க்குழாய் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மான் ஆகிறது. அது நம் காட்சியின் அமைப்பு. அந்த தர்க்கம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் நாம் அறிந்ததுதான் இப்பிரபஞ்சமா என்ன? ஒரு தண்ணீர்க்குழாய் மான் என்று தன்னை நமக்கு காட்டுவதில் நாமறியாத ஏதேனும் விளையாட்டு இருக்குமா?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

