காவியம் – 32

புன்னகைக்கும் முகம். சாதவாகனர் காலம். சுடுமண். பொயு 1 மதுரா அருங்காட்சியகம்

“அந்த வார்த்தைதான்… அதுதான்” என்று நான் சொன்னேன். எழுந்து கானபூதியை நோக்கிச் சென்று அதன் மின்னும் கண்களை அருகே சென்று நோக்கி உரக்கச் சொன்னேன். “அதே வார்த்தைதான்… என் காவியம் ஒன்று அந்த வார்த்தையில்தான் தொடங்கியது…”

“நீ இன்னும்  அக்காவியத்தை எழுதவில்லை” என்று கானபூதி சொன்னது.

“ஆம்” என்று நான் தளர்ந்து அமர்ந்தேன். “நான் தொடங்கவே இல்லை” தலையை ஆட்டிக்கொண்டு, எடைகொண்டு அழுத்திய துயரத்தால் தொய்ந்து வளைந்த உடலுடன் முனகினேன். “நான் ஒரு சொல்லைக்கூட எழுதவில்லை…”

கானபூதி என் தோளைத் தொட்டு “எதை எழுதியிருப்பாய்?” என்றது.

நான் அக்கணம் வரை அதை யோசித்திருக்கவே இல்லை. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். என் உதடுகள் சொல் அமையாமல் வெறுமே அசைந்தன.

“நீ எதை எழுதியிருப்பாய்?” என்று கானபூதி மீண்டும் சொன்னது. “உனக்கு ஒரு பெருங்காவியத்தை எழுதவேண்டும் என்னும் ஆசை இருந்தது. அதைப்பற்றி மிக இளமையிலேயே கனவுகண்டாய். ஆனால் எதை எழுதியிருப்பாய்?”

நான் “வாழ்க்கையை” என முணுமுணுத்தேன். அது எத்தனை அபத்தமாக ஒலித்தது என்றும் அப்போது அறிந்திருந்தேன்.

“எவருடைய வாழ்க்கையை? உன் வாழ்க்கையை, உன் தந்தையின் தாத்தாவின் வாழ்க்கையை. உன் அம்மாவின் பாட்டியின் வாழ்க்கையை… அவ்வளவுதானே?”

“ஏன்? என் மக்களின் வாழ்க்கையை…” என்று வீம்புடன் நான் உரக்கச் சொன்னேன்.

“உன் சாதியின் வாழ்க்கையை… உன் வாழ்க்கையில் இருந்து உன் அப்பாவின் வாழ்க்கை எந்த அளவில் வேறுபடுகிறது? அவர் வாழ்க்கையில் இருந்து அவருடைய தாத்தாவின் வாழ்க்கையில் எது கூடுதலாக நடந்தது? ஒரே வாழ்க்கை, ஒரே கதை. அதை திரும்பத் திரும்ப எழுதுவாயா என்ன?”

நான் ஒன்றும் சொல்லமுடியாமல் வெறுமே பார்த்தேன்.

“நீங்கள் எழுதும் தன் வரலாறுகள் எவற்றுக்கும் எந்த மதிப்பும் இல்லை. அவை ஒன்று போலவே இன்னொன்றும் நிகழும் ஒரு சிறு வாழ்க்கையை ஒவ்வொருவரின் கோணத்தில் திரும்பச் சொல்பவை. துயரங்களை முறையிடுபவை. ஆங்காரத்துடன் நீதி கேட்பவை. நெஞ்சிலறைந்து அறைகூவுபவை… ஒற்றைச் செய்யுளுக்கு மட்டுமே அவை போதுமானவை.” இகழ்ச்சியுடன் கானபூதி சொன்னது. “சீவிடுப் பூச்சிகளின் ரீங்காரம் போல. ஒற்றைப்பூச்சியின் ரீங்காரம் காதால் கேட்கமுடியாத அளவுக்கு சிறியது. கூட்டமாக அவை ஒரு முழக்கமாக ஆகின்றன… அப்படி ஒரு ரீங்காரம் இங்கே உள்ளது. நீ அதில் இணையவா முயல்கிறாய்?”

நான் “இல்லை” என முனகினேன்.

“காவியம் என்பது மதயானை போல. அது எப்போதுமே தன்னந்தனியானது. அது பாதைகளில் நடமாடுவதில்லை, அது செல்லும்போது பாதை உருவாகிறது. அதன் வழியாக அனைத்து உயிர்களும் செல்கின்றன.”

“ஆம்” என்று நான் சொன்னேன். பெருமூச்சுடன் தளர்ந்து தலைகுனிந்தேன். அதையெல்லாம் நானே அறிந்திருந்தேன்.

“யானையின் மேலேயே மண் உண்டு. அதில் விதைகள் உண்டு. அதன் வயிற்றுக்குள்ளும் மண்தான். விதைகளும் நிறைந்திருக்கும். யானை காட்டில் வாழவில்லை, அதுவே காடுதான். யானையை ‘ஹனஸ்சியாம விஸ்வரூபம். பஞ்சஹஸ்தம். சாக்ஷாத் பிருத்வி ஸ்வரூபம், பிரத்யக்ஷம் தேவம்’ என்று நூல்கள் சொல்கின்றன.” என்றது கானபூதி. “பெருங்காவியங்களுக்கான அடையாளம் ஒன்றே, அவை செல்லுமிடமெல்லாம் மேலும் காவியங்கள் தோன்றும்.”

“என்னால் முடியாது… தெரிகிறது, என்னால் முடியாது” என்று நான் உடைந்த குரலில் சொன்னேன். “ஆனால் இந்த காலகட்டத்தில் வாழும் எவராலும் ஒரு காவியத்தை எழுதிவிடமுடியாது. ஏனென்றால் செய்யுளின் காலம் முடிந்துவிட்டது. எண்ணங்களை எவரும் இப்போது பாடலாக ஆக்குவதில்லை. கவிதைகள் வெறும் வசனங்களாக மாறிவிட்டன. பாடல்களே வெறும் சொற்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. எண்ணங்களை அப்படியே பதிவுசெய்யும் உரைநடையே இன்றைய இலக்கியத்தின் அடிப்படை.”

“காவியம் என்பது அதன் அமைப்பாலும் பேசுபொருளாலும்தான் அந்த தகுதியைப் பெறுகிறது” என்று கானபூதி சொன்னது. “செய்யுள் வடிவில் காவியங்கள் அமைந்தது காவியங்களின் மூன்றாவது கட்டத்தில்தான். தொன்மையான காவியங்கள் சம்பு எனப்படும் தொடர்ச்சியாக ஒழுகும் உரைநடைகள்தான். அடுத்த காலகட்டத்துக் காவியங்கள் நீண்ட பாடல்களும் உரைநடையும் கலந்தவை… ஏட்டுச்சுவடியில் எழுதும் காலம் வந்த பிறகே காவியங்கள் செய்யுள்களும் பாடல்களும் ஆயின. எல்லா செய்யுள் வடிவங்களும் ஏட்டின் அமைப்பை ஆதாரமாகக் கொண்டு உருவானவைதான்… அத்துடன் மாறாத நிலையான தாளமும் செய்யுளின் இலக்கணமாக அமைந்தது. செய்யவும், ஒப்பிக்கவும் அந்த ஓசை ஒழுங்கு உதவுகிறது என்று பின்னர் கண்டுகொண்டார்கள். செய்யுள் என்பது சுவடியுடன் சேர்ந்து உருவான ஒன்று. சுவடி மறைந்தபோது அதுவும் மறைந்தது இயல்பானதே.”

“ஆம்” என்று நான் சொன்னேன். “காகிதமும் அச்சும் உரைநடையை உருவாக்கிவிட்டன…  உரைநடை புதிய இலக்கிய வடிவங்களை உருவாக்கிவிட்டது.”

“உரைநடை புதிய இலக்கிய வடிவங்களை உருவாக்கியது என்பது ஓர் அசட்டு நம்பிக்கை. அந்தவகையான நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் எளிமையான கல்லூரிப் பேராசிரியர்கள் கற்பிக்கட்டும்” என்று கானபூதி சிரித்தது. அச்சிரிப்பின் அழகில் நான் அதுவரையிலான இறுக்கத்தை இழந்து புன்னகைத்தேன். “நல்லவேளையாக நீ கல்லூரி ஆசிரியராக ஆகாமல் தப்பித்தாய்.”என்று அது சொன்னது

“ஆமாம்” என்றேன். “கீழே மண்ணை சங்கிலி கட்டி அளந்து எல்லைக் கல் போடும் நில அளவையாளர்களை மேலே பறக்கும் பருந்து எப்படிப் பார்க்குமோ அப்படித்தான் நல்ல இலக்கிய வாசகன் கல்லூரி ஆசிரியர்களைப் பார்க்கிறான்…” சிரித்து “இதைச் சொன்னவர் ஶ்ரீகர் மிஸ்ரா” என்றேன்.

கானபூதியும் உரக்கச் சிரித்து “நான் எத்தனை தலைமுறையாக இவர்களைப் போன்றவர்களைப் பார்க்கிறேன். மீமாம்சகர்கள், வையாகரணர்கள், சைத்தாந்திகள், பாஷ்யகாரர்கள், உபாத்யாயர்கள்… அனைவரும் ஒன்றே.”

“உரைநடையால் புதிய இலக்கியங்கள் உருவாகவில்லை என்றால் எதனால்?” என்றேன்.

“இலக்கியத்தின் பேசுபொருளாக ’நேற்று’தான் எப்போதும் இருந்து வந்தது. வாழ்ந்த வாழ்க்கையுடன் நிகழ்ந்த வாழ்க்கையை இணைப்பதுதான் இலக்கியத்தின் நோக்கமாகத் திகழ்ந்தது. ’இன்று’ இலக்கியத்தில் முதன்மைப்பட்டபோதுதான் நீ சொல்லும் நவீன இலக்கியம் உருவாகியது. புதிய இலக்கிய வடிவங்கள் பிறந்தன…” என்றது கானபூதி. “காலம் ஒவ்வொன்றையும் சுருங்கச் செய்கிறது. முக்கியமானவற்றை மட்டும் எஞ்ச வைக்கிறது. ஒரு காலகட்டத்திற்கு மட்டும் உரியவை அக்காலகட்டம் மறைந்ததும் தாங்களும் மறக்கப்படுகின்றன. காலம் கடந்தவற்றை உணர்த்துபவை மட்டும் நினைவில் நீடிக்கின்றன.

“அவ்வாறு எஞ்சுபவை பெருமரம் நுண்ணிய விதையாக மிஞ்சுவதுபோல வாழும் தலைமுறைக்குக் கிடைக்கின்றன. அந்த விதைகளை கற்பனையின் நீரூற்றி மீண்டும் மரமாக ஆக்குவதே இலக்கியத்தின் பணியாக இருந்தது” என்ற கானபூதி தொடர்ந்தது. “ஆனால் நிகழ்வனவற்றை நிகழும் காலத்திலேயே பேசவேண்டும் என நாநூறாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர் முடிவெடுத்தனர். அந்தக் காலகட்டத்தை நீ ஒட்டுமொத்தமாகப் பார்க்கவேண்டும். ஐரோப்பாவில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் உருவானது, மதச்சார்பற்ற தத்துவம் பிறந்தது, நவீன அறிவியல் உருவாகி வந்தது, கடற்பயணங்கள் வழியாக உலகம் கண்டடையப்பட்டது ஆகிய அனைத்தும் சேர்ந்து உருவாக்கிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்தான் நிகழ்காலமே முக்கியமானது என்னும் எண்ணம் உருவாவதற்கான பின்னணி…”

கானபூதி சொன்னது. நாநூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பா அதற்கு முந்தைய ஐரோப்பாவை இருண்டது, கொடியது என்று கருதியது. உருவாகி வரும் புதிய காலகட்டம் சிறந்தது என்று பெருமிதம் கொண்டது. மகத்தான இலட்சியங்களும், விழுமியங்களும் எல்லாம் நிகழ்காலத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்று நம்பியது. நேற்றைத் திரும்பிப் பார்த்தால் நோயும் போரும் அழிவும்தான். குரூரமும் கண்ணீரும் மட்டும்தான். கற்றுக்கொள்ளவோ பேணிக்கொள்ளவோ ஒன்றுமில்லை என எண்ணியது. நாளையை நோக்கி முன்னகர்வதே இன்று செய்யவேண்டியது என அறைகூவியது. எண்ணிப்பார்; சிலுவைப்போர்கள், மதவிசாரணைகள், தொற்றுநோய்கள், நிலஅடிமைத்தனம், சித்திரவதைகள்… கோதிக் காலகட்டத்தை மறக்கும் பொருட்டுதான் ஐரோப்பாவில் நவீன இலக்கியம் உருவாகியது. கோதிக் காலகட்டத்தை வெவ்வேறு வகையில் திரித்தும் வேடிக்கையாக்கியும் எழுதிக்கொண்டு அது கோதிக் காலகட்டத்தை கடந்து சென்றது.

நவீன எழுத்தாளர்கள் நிகழ்காலத்தை எழுதத் தொடங்கினர். நிகழ்காலத்தின் பிரச்சினைகளையும், போராட்டங்களையும், எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் எழுதினர். நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் விரித்தனர். நாளைய கனவுகளை முன்வைத்தனர். அவ்வாறாக இலக்கியம் இரண்டாகப் பிரிந்தது. நேற்றை நோக்கி அதன் தொடர்ச்சியை இன்றில் நிகழ்த்திய காலகட்டத்தின் இலக்கியம் பழையது. நாளையை நோக்கி கனவுகண்டு இன்றை எழுதியது நவீன இலக்கியம்… அந்த புதிய பார்வைதான் புதிய இலக்கிய வடிவங்களை உருவாக்கியது… எண்ணிப்பார். சிறுகதை, நாவல், நவீன கவிதை அனைத்திலும் பேசுபொருள் சமகாலம்தான். ஹோமரோ, வான்மீகியோ, ஷேக்ஸ்பியரோ, கதேயோ, காளிதாசனோ தங்கள் சமகாலத்தை எழுதினார்களா என்ன?

நான் திகைத்துப்போனவனாக அமர்ந்திருந்தேன். அது அனைத்துமறிந்த ஓர் ஆசிரியன் என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

”அனைத்தும் அறிந்தவன்தான், ஏனென்றால் நான் முடிவிலாக் கதைசொல்லி” என்றது கானபூதி. ”சமகாலத்தை எழுதுவதனால்தான் நவீன இலக்கியத்தில் காவியம் வழக்கொழிந்தது.”

“ஒரு காலகட்டம் தன் சமகாலத்தை சிறந்ததாக எண்ணுவதில் என்ன பிழை? ஏன் அது உயர்ந்தவற்றுக்காக எதிர்காலத்தை நோக்கக் கூடாது?”

”நோக்கலாம். அவ்வாறு நோக்கியதன் விளைவாக உருவான நவீனப் பேரிலக்கியங்களை நான் குறைசொல்லவுமில்லை. நிகழ்காலத்தைப் பற்றி அறியவிரும்பி வாசிப்பவர்கள் அவற்றை வாசிப்பதிலும் பிழையில்லை. எக்காலத்திற்கும் உரியது என்ன என்று தேடுபவர்களுக்கு மட்டுமே உரியது காவியம். ஆகவே அதை சாமானியர் வாசிக்கமாட்டார்கள். அது உருவாக்கும் காலப் பெருந்தோற்றத்தையும் ஞானத்தின் அடுக்குகளையும், தரிசனத்தின் முடிவின்மையையும் வாசிக்க ஆழ்ந்த அறிவும் சலிக்காத உழைப்பும் தேவை. அத்தகையோர் அரிதினும் அரிதானவர்கள்”

கானபூதி சொன்னது, ”காவியம் நூலக அடுக்குகளில் தூசி படிந்து அமர்ந்திருக்கும். வாசகனுக்காகத் தவம் கிடக்கும். வெட்டி பிரித்து ஆராயும் முட்டாள்களால் அவமதிக்கப்படும். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் பெருந்தவிப்புடன் அதைத் தேடி எவனோ ஒரு வாசகன் வருவான். எல்லாக் காவியங்களும் கதைசொல்லும் பிசாசுக்கள்தான். அவை அழைத்துக்கொண்டே இருக்கின்றன. கனவுகளுக்குள் வந்து சொற்களை விதைத்துக்கொண்டே இருக்கின்றன. தேடிவந்தவனை கவ்விக்கொண்டு, அள்ளி கொண்டுசென்று வைத்துக்கொள்கின்றன. முழுமையாக ஆட்கொள்கின்றன”

”நிகழ்காலத்தைப் பேசும் நவீன இலக்கியம் வாசிக்கப்படும், மறக்கவும்படும். காவியம் வாசிக்கப்படுவது அரிந்து, ஆனால் அழியவே  அழியாது.” என்று கானபூதி தொடர்ந்தது. ”ஏனென்றால் காவியம் என்பது மொத்த வரலாற்றையும் பேசுவது. மொத்தக் கலாச்சாரத்தையும் பேசுவது. காலத்தின் பேருருவை முன்வைப்பது. நிகழ்காலத்தைப் பேசும் படைப்பில் எது காலம்? எதிர்காலம் என்பது காலமே அல்ல, அது வெறும் கற்பனை”

“நான் ஏன் இறந்தகாலத்தைப் பேசவேண்டும்?” என்று சட்டென்று எழுந்த சீற்றத்துடன் நான் கத்தினேன். “எனக்கு இறந்தகாலத்தில் என்னதான் உள்ளது அப்படி? நீ சொன்னாயே, ஒரே கதை திரும்பத் திரும்ப அனைவருக்கும் நிகழ்வதாக. அதுதானே நேற்றும். திரும்பத் திரும்ப எங்கள் கதை ஒன்றேதானே?”

“இல்லை” என்றது கானபூதி. “இல்லை என்பதற்கான சான்று நான்… கதைகளால் ஆன என் உள்ளம்”

நான் அந்த உறுதியான குரலில் அமைதியடைந்தேன்.

“நீ சிறியவன்… என் பார்வையில் மிகமிக இளையவன்…” என்று கானபூதி சொன்னது. “ஒன்று தெரிந்துகொள். இங்கே ஒவ்வொன்றுக்கும் மிகப்பிரம்மாண்டமான கதை உள்ளது. ஒரு நாய், ஒரு காகம் தன் வரலாற்றைச் சொன்னால்கூட அது மானுடனின் ஒட்டுமொத்தக் கதையை விடப்பெரியதாகவே இருக்கும். உன் கதையை மட்டும், உன் ஒருவனின் நேற்றைய வரலாற்றை மட்டும் நான் சொன்னாலே அது முடிவிலாது பெருகும். அடுக்கடுக்காக காவியங்களை நிறுத்தி காலத்தில் சென்றுகொண்டே இருப்பது போலிருக்கும்…”

“நான் இங்கு இருப்பது என் கதைகளைச் சொல்லத்தான்” என்று கானபூதி சொன்னது. “நான் அரக்கர்களின் கதைசொல்லியான சூலசிரஸிடமிருந்து கேட்ட கதைகள் என்னுள் பெருகிப் பெருகிப் பலமடங்காக ஆகிவிட்டிருக்கின்றன. அவற்றை நான் எவருக்கேனும் சொல்லிவிட்டால் இங்கிருந்து உதிர்வேன். காலம் பெருகிச் சென்றுகொண்டிருக்க, ஒவ்வொன்றும் மாறிக்கொண்டிருக்கும் இந்த மண்ணுலகில் அழிவில்லாமல் வாழ்வது என்பது பெரும் வதை…”

“ஆம், அந்தக் கதையை கேட்டேன்” என்றேன்.

“அது கதைதான். சூலசிரஸ் என்பதும் மானுடர் எவரோ சொன்ன கதையிலுள்ள பெயர்தான். கதைக்கு அப்பாலுள்ளது நீ அறியதக்கது அல்ல. ஆகவே நீ கதைகளாகவே அறிவதுதான் ஒரே வழி” என்றது கானபூதி.

“நான் வாழ்ந்த உலகத்தில் காலம் இல்லை. ஏனென்றால் எதுவும் மாறுவதில்லை. அங்கிருந்து காலம் திகழும் இந்த உலகுக்கு நாங்கள் வந்து செல்வது எங்களுக்கு ஒரே ஒரு கணம்தான். ஆகவே நாங்கள் காலத்தை அறிவதுமில்லை” என்று கானபூதி தொடர்ந்தது. “நான் காலம் என்பதை அறிந்தது சூலசிரஸிடமிருந்தே. அவன் சொன்ன கதைகளில் நெளிந்து நெளிந்து பின்னிப் பின்னி கணங்களாகவும், நாட்களாகவும், ஆண்டுகளாகவும், யுகங்களாகவும், மன்வந்தரங்களாகவும், கல்பங்களாகவும் ஓடிக்கொண்டிருந்த காலத்தை கண்டு நான் வியந்தேன். அவனுடன் பேசுவது ஆபத்து என்று என் அகம் என்னை எச்சரித்துக் கொண்டிருந்தாலும் என்னால் அவனை விடவே முடியவில்லை. அவன் எனக்காக கதைகளாலான ஒரு வலையை விரித்துக் கொண்டிருந்தான். நான் அதில் சிக்கிக் கொண்டேன். தப்ப முயலுந்தோறும் மேலும் மேலும் சிக்கிக்கொண்டேன்.”

என்னை சாபமிட்டு மண்ணுக்கு வீழ்த்தியபோது உண்மையில் நான் மகிழ்ச்சிதான் அடைந்தேன். இங்கே கதைகளில் வாழலாமே என்று எண்ணினேன். இங்கு கதைகளுடன் வந்து அமைந்தேன். என்னைத்தேடி கதைகள் வந்துகொண்டே இருந்தன. கதைகள் பெருகப்பெருக நான் அமைதியிழந்தேன். இந்தக் கதைகள் அனைத்தையும் சொல்லிவிட்டு நான் எப்போது திரும்ப முடியும்? கதைகளில் இருந்து எனக்கு மீட்பே இல்லையா?

காலம் எனக்கு சலிப்பூட்டத் தொடங்கியது. ஏனென்றால் அதற்கு எந்த உள்ளர்த்தமும் இல்லை. மிகத்தீவிரமாக, ஓய்வே இன்றி நிகழும் ஒன்று முற்றிலும் பொருளற்றது என்று உணர்ந்தபின் அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அது நம் சித்தத்தை வெறிபிடிக்கச் செய்கிறது. நீண்டகாலம் முன்பு எனக்கு சித்தம் கலங்கியது. எனக்குள் இருந்த மொழி முழுமையாகவே சிதைந்து வெறும் ஒலிகளாக ஆகியது. நான் இங்கே ஓர் அருவிபோல ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தேன்.

கதைகளில் உள்ளவற்றையே நான் சொல்லமுடியும். நான் இப்படி இங்கே இருக்கும் நிலையை முனிவனாகிய வரருசி சென்று என் தமையனிடம் சொன்னார். என் தமையன் சென்று குபேரனிடம் என் நிலையைச் சொல்லி மன்றாடினார். எனக்கு சாபவிமோசனம் கேட்டார். அதன்படி நான் ஒரே ஒரு கதைச்சரடை மட்டும் நினைவு கூர்ந்தால் போதும் என்று குபேரன் சொன்னார். அதை நான் எவரிடமேனும் முழுமையாகச் சொல்லி முடித்துவிட்டால் இங்கிருந்து கிளம்பலாம் என்றார்.

என் உள்ளம் அதன்பிறகே தெளிந்தது. இன்று என்னிடமிருப்பது ஒரே ஒரு கதை. ஆனால் அது ஒரு மிகநீண்ட மணிமாலைபோல. கதைகளிலிருந்து கதைகளுக்குச் சென்றுகொண்டே இருப்பது அது. ஒரு பெருங்காவியம். அதை நான் உனக்குச் சொல்கிறேன். உன் புறவுலக வாசல்கள் முழுமையாக மூடிக்கொண்டது இதற்காகத்தான். இல்லையேல் உன் உள்ளம் முழுமையாக இப்படி எனக்கு அளிக்கப்பட்டிருக்காது. என் மொழிக்குள் நீ வந்திருக்க மாட்டாய்.”

நான் இடைமறித்து “நான் உன் மொழிக்குள் இருக்கிறேனா?” என்றேன்

“நான் இப்போது உன்னிடம் என் மொழியில் பேசிக்கொண்டிருக்கிறேன்”

“நான் ஒரே ஒரு சொல்லைத்தானே கற்றுக்கொண்டேன்”

“ஒரு மொழி என்பது ஒரு சொல்தான்” என்றது கானபூதி.

“இது எந்த மொழி?” என்றேன். “இதன் பெயர் என்ன?”

“மொழிக்கு எப்போதுமே அதை அறியாதவர்கள்தான் பெயரிடுகிறார்கள். அறிந்தவர்களுக்கு அது மொழி மட்டும்தான்” என்றது கானபூதி “இந்த மொழியை முன்பு பைசாசமொழி என்றனர்.”

“நான் அதற்குள் நுழைந்துவிட்டேனா? உண்மையாகவா?” என்றேன்

“உன் குடும்பத்தில் தலைமுறைகளாக வந்துகொண்டிருந்த மொழி… உன் சாதியின் பேச்சில் கரைந்துவிட்டிருக்கும் மொழி” என்றது கானபூதி. “உனக்கு அந்த மொழியின் சொல்தான் முதலில் அறிமுகமாகியது. உன் அம்மாவிடமிருந்து. அம்மா என்ற சொல்லையே அதன்பிறகுதான் நீ அறிந்தாய். த்வி என்ற சொல்லைத்தான் நீ சொல்லிக்கொண்டே இருந்தாய்…”

நான் அதிர்ந்துகொண்டிருந்தேன். “இந்த மொழிக்குள் நுழையவேண்டும் என்று  எப்போதும் தவித்துக் கொண்டிருந்தேன்”

“இந்த மொழியில்தான் என் கதைகளை நான் சொல்லமுடியும்” என்றபின் கானபூதி தன் கையை விரித்தது. “மண்ணில் இருந்து ஒரு கூழாங்கல்லை எடு… அதனுடன் அப்போது இயல்பாக இணையும் ஓர் எண்ணத்தைச் சொல். அதுவே தொடக்கமாக அமையட்டும்”

நான் கிளர்ச்சியுடன் மண்ணிலிருந்து ஒரு கூழாங்கல்லை எடுத்தேன். அக்கணம் என் அகம் பொங்கி எழுந்தது. “ராதிகா… என் ராதிகா” என்று வெடித்தெழுந்த குரலில் வீறிட்டேன். “அவள் சாவுக்கு நீ பழிவாங்குவதாகச் சொன்னாய்… நீ பழிவாங்கியாக வேண்டும். அவளுடைய சாவு அப்படி விடப்படக்கூடாது…. அதை அப்படியே விட்டுவிடக்கூடாது.”

கானபூதி கையை நீட்டியபடி என்னை நிலைத்த கண்களுடன் பார்த்தது. “என்ன சொல்கிறாய்?”

“எனக்குள் எழுந்த எண்ணம் அந்த முதற் சொல்லை நான் அவள் மார்பில் எழுதிய காட்சிதான்… என் உள்ளத்தில் தீ எரியத் தொடங்கிவிட்டது…”

“நீ நான் உனக்காகத் திறந்த இந்த மிக அரிய வாசலை மூடச்சொல்கிறாய்”

“இல்லை. எனக்கு அது வேண்டும்… ஆனால் நீ இதன் தொடக்கப்புள்ளி யார் என்று சொன்னாய். ஊர்வசி தேஷ்பாண்டே. நீ அவளை பழிவாங்கியே ஆகவேண்டும்… அவளை அழித்தாகவேண்டும். இங்கே சிந்தப்படும் கண்ணீரோ ரத்தமோ அப்படியே மறக்கப்படக்கூடாது…”

“ஆம், அதையே நானும் சொல்வேன்” என்றபடி சக்ரவாகி என் அருகே எழுந்தது. “நான் சிந்திய கண்ணீரும் ரத்தமும் அங்கே காம்பில்ய மண்ணில் மிகமிக ஆழத்தில் அப்படியே இருக்கின்றன. அங்கே என் எலும்புக்கூடு மட்கிக்கொண்டிருக்கிறது. பதைக்கும் முகத்துடன் என் மண்டையோடு காத்திருக்கிறது…”

சூக்ஷ்மதரு உரக்க “ஆம், கண்ணீரும் ரத்தமும் கைவிடப்படுமென்றால், அநீதி மறக்கப்படும் என்றால் அதன்பிறகு என்ன அறம்? என் உடல் கடலுக்குள் சென்றது. அங்கே என் எலும்புகள் சிதறி மறைந்தன. நான் அலைகளைப் பார்த்தபடி இருண்ட ஆழத்தில் மல்லாந்திருக்கிறேன்” என்றது. ஆங்காரத்துடன் தன் நெஞ்சில் அறைந்து “நீதி பழிகளின் வழியாகவே வாழ்கிறது” என்று கூவியது.

ஆபிசாரன் சிரித்துக்கொண்டு “மனிதர்களை நம்பாதே… ஏனென்றால் நாமும் மனிதர்களாக இருந்தவர்கள்தான்… அவர்கள் நீதி என்பார்கள், அறம் என்பார்கள், சீறுவார்கள், கொந்தளிப்பார்கள். நீதியா உன் வாழ்வா என்று கேள். நீதி என்பார்கள், நீதியுள்ள வாழ்வு என்பார்கள், வாழ்வு மீண்டும் வராது என்பார்கள், நீதிக்காக கண்ணீர்விட்டபடி வாழ்வைத் தேர்வுசெய்வார்கள்… இந்த மண்ணில் புதைக்கப்பட்ட நீதிகள் கோடிகோடி…” என்றது. “மனிதர்களின் மாய்மாலங்களுக்கு அளவே இல்லை”

“எனக்குத் தெரியாது… என்னால் அவளை விட்டு விலக முடியவில்லை. என் நெஞ்சின் தீயை மட்டும்தான் நான் சொல்கிறேன். நீதியும் அறமும் ஒன்றும் எனக்கு முக்கியமில்லை. அவள் இல்லை, நான் இருக்கிறேன். என் உயிரே ஒரு தீராக் கடன். என்னால் அதை மீறவே முடியாது” என்றேன்.

“சரி, இந்தக் கூழாங்கல்லைப் பொத்துகிறேன்” என்றது கானபூதி. “இதுவும் கேள்வியிலேயே முடியும். அதற்கு நீ பதில் சொல்லவில்லை என்றால் முடிவில்லாத இருள்…. முடிவில்லாத காலம்… மீளவே முடியாது. ஏற்கிறாயா?”

”என்னால் வேறொன்றை எண்ண முடியவில்லை” என்றேன்.

“முதற்பலி அவள்” என்று கானபூதி சொன்னது.

“ஆம், அவள்! அவள்தான்!” என்றன நிழல்கள். என் அருகே இரண்டு நிழல்கள் கண்கள் பெற்றன. சிரிப்புகள் தோன்றின.

“என் பெயர் சியாமன், இவள் கிருதி” என்றது ஒரு நிழல்.

“நாங்கள் தொல்நூல்களில் பெயரிடப்பட்டவர்கள். கதைகள் அளிக்கப்பட்டவர்கள்” என்றது இன்னொரு நிழல்.

“அவளை எனக்குத் தெரியாது… அவள்மேல் எனக்கு எந்த வஞ்சமும் என்னிடம் இல்லை. ஆனால் நான் உன்னை தடுக்கமுடியாது. அவள் யார்? ஏன் இப்பெரும்பழி அவள் மேல் சென்றுபடிகிறது? அவள் அப்படி செய்ததுதான் என்ன?” என்றேன்.

“எல்லாச் செயல்களும் சொற்களின் விளைவுகளே. எல்லாச்சொற்களும் எண்ணங்களிலிருந்து முளைக்கின்றன. எல்லா எண்ணங்களும் ரத்தத்தில் எப்போதும் இருந்துகொண்டிருப்பவை” என்று கானபூதி கூறியது. “நான் செயல்களை பார்க்கிறேன். எண்ணங்களை அறிகிறேன். ஆனால் ரத்தத்தை தொட்டு உணர்கிறேன். அதில் கலந்திருக்கும் ஒவ்வொன்றையுமே என்னால் இந்த ஐந்துவிரல்களால் பிரித்து எடுக்க முடியும்”

“அப்படியானால் சொல். எங்கிருந்தது, அந்தத் தொடக்கம்…?” என்று நான் கேட்டேன்.

”அதன் தொடக்கம் காலத்தில் பின்நகர்ந்து பின்நகர்ந்து செல்லும். ரத்தம் என்பது மிக மிகத் தொன்மையான ஒன்று. இந்த பூமியிலுள்ள எல்லா ஊற்றுகளும் தொன்மையானவை தான். எல்லா ஆறுகளும் தொன்மையானவை இந்தபூமியில் நிலத்திற்கு அடியில் தேங்கியிருக்கும் நீர் மிக மிகத் தொன்மையானது. எதற்கும் ஊற்று முகம் தேடிச் செல்லக்கூடாது” என்று கானபூதி கூறியது.

”நான் அறிந்தாகவேண்டும். அந்த ஊற்றுமுகம் என்ன இன்று இப்போதே தெரிந்தாகவேண்டும்” என்று சொன்னேன்.

கானபூதி நெஞ்சில் கைகளைக் கட்டிக்கொண்டு என்னைப் பார்த்து புன்னகைத்தது. அதன் கனிந்த கண்களில்  அந்தத் துயரம் அதிகரித்தது.

நான் அதைப் பார்த்தேன். ”உன் துயரம் எதன் விளைவு என்று எனக்குப் புரியவில்லை. இங்கு எளிய மனிதர்கள் இவ்வாறு வாழ்ந்து மடிவதிலுள்ள மாபெரும் பொருளின்மை உன்னை துயரத்தில் ஆழ்த்துகிறது என்று எண்ணுகிறேன்” என்றேன்.

”அல்ல, இங்கு மனிதர்கள் உருவாக்கிக் கொண்டே இருக்கும் அர்த்தங்களின் எல்லைதான் என்னை துயருறுத்துகிறது. எல்லையற்ற அர்த்தங்களை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாழ்க்கைக்கே உங்கள் நூல்கள் ’ச-அர்த்த’ என்றுதான் பொருள் அளிக்கின்றன. ’அர்த்தம் கொண்டது’ வாழ்க்கை. அந்த அர்த்தம் நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டியது. ஆனால் ஒவ்வொருவரும் உங்களால் இயன்ற எல்லைக்கு மிக முன்னரே நின்றுவிடுகிறீர்கள். ஏனெனில் அச்சமும் ஐயமுமே உங்களை ஆள்கிறதே ஒழிய ஆசையும் தேவையும் அல்ல” என்று கானபூதி சொன்னது.

”ஆசையும் தேவையும் மனிதர்களை ஆண்டிருந்தால் அவர்கள் சென்றிருக்கும் தொலைவே மிகப்பெரிது. மனிதன் பேராசை கொண்டவன் என்று திரும்பத்திரும்ப உங்கள் நூல்கள் சொல்கின்றன. அது அறிவின்மையின் பிழை. ஆசையை அச்சம் வெல்வதன் விளைவே உங்கள் வாழ்க்கை. எந்நிலையிலும் எங்கும் மனிதர்கள் பேராசை கொண்டதே இல்லை. பேராசை கொண்டிருந்தால் எழுந்து உயரவும் தொட்டு வளைக்கவும் இங்கு அவர்களுக்கு முடிவில்லாத பெருவெளி அளிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்த்திக் கொள்ள ஒவ்வொரு கணமும் அற்புதங்கள் சூழ்ந்திருக்கின்றன. வாய்ப்புகள் கணந்தோறும் பெருகுகின்றன” கானபூதி தொடர்ந்தது.

”நீங்கள் உங்கள் தந்தையை அஞ்சுகிறீர்கள். பிள்ளைகளை அஞ்சுகிறீர்கள். உங்கள் எதிர்காலத்தை அஞ்சுகிறீர்கள். அதைவிட இறந்த காலத்தை அஞ்சுகிறீர்கள். உங்கள் கைகளை அஞ்சுகிறீர்கள். கண்களை அஞ்சுகிறீர்கள். அவற்றைவிட உங்கள் உள்ளத்தை அஞ்சுகிறீர்கள். அஞ்சும் விலங்கு தன் வாழ்வு வட்டத்தை சுருக்கிக்கொண்டே வரும். அதனூடாக அஞ்சுவதற்கான பரப்பு குறைகிறது என்று அது என்ணும். மிகக்குறுகிய இடத்தில் உடல் பதுக்கி அமர்ந்திருக்கும் சிற்றுயிர்கள் அச்சத்தினாலேயே தங்கள் உடலை உருவாக்கிக் கொண்டவை. எலிகள், கீரிகள், பாம்புகள்… உடல்கள் அல்ல, உடற்சுருள்கள் அவை. உடலசைவுகள் அனைத்துமே அச்சம் அச்சம் என்று வெளிப்படுபவை. இப்புவியில் அஞ்சும் உயிரினங்களிலேயே தலையாயது மனிதன்தான். அச்சமே அவன் உடல், அச்சமே அவன் அசைவுகள், அச்சமே அவன் பார்வை, அச்சத்தாலானது அவன் குரல்.” கானபூதி தலைதாழ்த்தியபடி துயரம் கொண்ட குரலில் சொல்லிக்கொண்டே சென்றது.

”என் துயரம் மனிதர்களை நோக்கித்தான். ஏனெனில் மனிதர் உலகுக்குள் வாழவேண்டும் என்பது என் சாபம். மனிதர்களுடன் எப்போதும் என்னை உணர்கிறேன். மனிதனின் அறியாமையை காண்பதே இதில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பெரும்தண்டனை”  கானபூதியின் குரல் தழுதழுத்து தணிந்து கேட்கமுடியாததாக ஆகியது. ”என் துயரமே நான். துயரத்தால் இருண்டிருக்கிறேன்…”

”இக்கதையை சொல். எங்கிருந்து முளைத்தது இந்தப் பாவத்தின் வேர்?” என்று நான் கேட்டேன்.

”அது நீண்ட காலம் முன்பு…” என்று கானபூதி சொல்லத் தொடங்கியது.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 22, 2025 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.