லண்டன் பயணம்
இன்று அதிகாலை (23 மே 2025) நானும் அருண்மொழியும் லண்டன் கிளம்பிச் செல்கிறோம். பத்துநாட்கள். அங்கே நண்பர் முத்துக்கிருஷ்ணன் (அல்லது லண்டன் முத்து அல்லது காட்ஜெட் முத்து அல்லது இப்படியே பல…) என் பயணத்தை ஒருங்கிணைக்கிறார். அவருடைய திட்டம்தான் இந்தப் பயணமே. அடுத்தமாதம், ஜூலையில் ஐரொப்பா செல்லவேண்டும். அதற்கான விஸா பணிகளை ஜூன்மாதம் தான் செய்ய வேண்டும். அதற்கு நடுவே இந்த பயணம் சட்டென்று அமைந்தது.
இது இலக்கியப் பயணம் அல்ல. தனிப்பட்ட பயணம் மட்டுமே. பெரும்பாலான நேரத்தை வேர்ட்ஸ்வெர்த் பிறந்த ஊரில் செலவிடப் போகிறோம். சில அருங்காட்சியகங்கள். முன்னரே திட்டமிட்டிருந்தபடி சில நெருக்கமான நண்பர்களை மட்டுமே சந்திக்கிறேன். இலக்கியச் சந்திப்புகள், இலக்கிய உரையாடல்கள் ஏதுமில்லை. ஒருவேளை என் நூல் அமெரிக்காவில் வெளிவந்தபின் டிசம்பர் வாக்கில் லண்டன் வரக்கூடும். அப்போது இலக்கியச் சந்திப்புகளை அமைக்கலாம்.
இந்தப் பயணம் திட்டமிடும்போது நான் காவியம் நாவலை எழுத எண்ணவில்லை. திட்டமிட்டிருக்கக்கூட இல்லை. உண்மையில் அந்நாவலை 1996 வாக்கிலேயே எழுத தொடங்கி பலவகையாக எழுதிப்பார்த்து கைவிட்டிருந்தேன். இப்போது அது வந்துகொண்டிருக்கும் விதம் எனக்கே விசித்திரமானது, எங்கே கொண்டுசெல்கிறது என்றே தெரியாமல் நாவலில் ஏறிக்கொள்வதைத்தான் எப்போதும் செய்து வருகிறேன். இப்போதும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்.
இந்நாவல் வழக்கத்தைவிடவும் என்னை அலைக்கழிக்கிறது. அண்மைக்காலத்தில் உணர்ந்த ஏதேதோ ஆழங்கள்தான் இந்நாவலை உருவாக்குகின்றன. நான் உணரும் இந்திய வரலாற்றின், பண்பாட்டின் ஆழம். நாவலை வாசித்த லண்டன் முத்து சொன்னார். நடராஜ குரு இந்திய தத்துவத்தில் உருவாக்கிய முரணியக்க பார்வையின் பண்பாட்டு விரிவாக்கம் என்று. அது சரியான புரிதல்தான் என்று நினைக்கிறேன். எங்கே இது என்னைக் கொண்டுசென்று சேர்க்கும் என தெரியவில்லை.
தூக்கமின்மையும் இனம்புரியாத பதற்றமும் கலந்த நாட்கள். தூக்கத்திற்காகச் செய்யமுடியும் எல்லாவற்றையும் செய்கிறேன், ஆனால் உள்ளத்தின் கொந்தளிப்பு துரத்திக்கொண்டே இருக்கிறது. அதுதான் எழுத்தாகிறது, ஆனால் அதனுடன் தொடர்பற்று இந்தக் கொந்தளிப்பு தனியாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் தோன்றுகிறது.
நாவல் 22 அத்தியாயங்கள் முன்னாலிருக்கிறது, அதாவது ஜூன் 15 வரை அத்தியாயங்கள் கையில் இருக்கின்றன. இன்னும் சில அத்தியாயங்களில் முடியவும்கூடும். வேண்டுமென்றால் இந்த ஓய்வு நாட்களில் முழுமையாக நாவலை மறந்து இருக்கலாம். ஆனால் இந்தப் பயணத்திலும் நாவலை கொஞ்சமேனும் எழுதிக்கொண்டுதான் இருக்கவேண்டும். நாவலின் தீவிரத்தில் இருந்து விலகிவிட்டால் மீண்டும் அதற்குள் புகுந்துகொள்ள எனக்கு நீண்டநாட்கள் தேவைப்படும். முடியாமலேயேகூட ஆகலாம். அப்படிச் சில நாவல்களை கைவிட்டதுண்டு.
ஆகவே இதை எழுதவும் வேண்டும், ஓய்வும் வேண்டும். எப்போதுமே பயணம் எனக்கு உதவியிருக்கிறது. வெண்முரசு நாட்களில் இருந்த இதே மனநிலையை நண்பர் இசையமைப்பாளர் ராலே ராஜனின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்று, வைட்மௌண்டைன் பகுதிகளில் நீண்ட பயணம் செய்தபோது கடக்க முடிந்தது. இப்போது அந்தப் பயணமும் காட்சிகளும் இனியவையாக நினைவில் நீடிக்கின்றன.
இந்த பயணமும் அவ்வாறே நீடிக்குமென நினைக்கிறேன். எப்போதுமே இனிய நண்பர்கள் என்னை ஆற்றுவிக்கிறார்கள். நண்பர் முத்து உற்சாகமான சிரிப்புடன் மட்டுமே என் நினைவில் எப்போதும் தோன்றுபவர். லண்டன் பசுமைமாறாத நிலம். கனவுநிறைந்த வேர்ட்ஸ்வெர்த்தின் கவிதைகளின் சாயல் கொண்டது.
அருண்மொழியை நம்பித்தான் கிளம்புகிறேன், வழக்கம்போல. ”இதோ பார், நானே உன்னை கூட்டிக்கொண்டு போவேன். வழியில் நொய் நொய் என்று நச்சரிக்கக்கூடாது. விமானம் எத்தனை மணிக்கு என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. பாஸ்போர்ட் பத்திரம் என்று சொல்லக்கூடாது. பேசாமல் வரவேண்டும். உயிரை எடுத்தாயென்றால் துபாய் விமான நிலையத்தில் உன்னை தூங்கவிட்டுவிட்டு நான் பாட்டுக்கு கிளம்பிப் போய்விடுவேன்” என்று பயமுறுத்தினாள். அப்படியெல்லாம் பத்தினிப் பெண்கள் இதுவரை செய்ததில்லை என்னும் நம்பிக்கையில் வாழ்க்கை.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

