ஒரு பழைய பிறழ்வெழுத்து
அவன் புணரத்தொடங்கியதும் அவள் ‘நிறுத்தாதே, நம்மிடையே ஓரங்குல இடைவெளியும் விடாதே. இன்னும் செய். இறுகப்பிடி. என்னை நிரப்பு’ என்றெல்லாம் அவள் வெளியிட்ட சத்தம் அந்த மாளிகை முழுவதிலும் எதிரொலித்தது. அவன் அழுத்த அவளும் தன் உறுப்பை இறுக்கி எதிர்ச்செயல் புரியத்தொடங்கினாள்
இந்த வரிகள் ஒரு நவீன ‘டிரான்கிரேசிவ்’ எழுத்திலுள்ளவை அல்ல. ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் எழுதப்பட்ட ஒரு தெலுங்கு நூலில் இடம்பெற்றவை. எழுதியவர் ஒரு பெண். முத்துப்பழனி என்று பெயர். நூலின் பெயர் ராதிகா சாந்த்வனமு. மேலே சொன்ன வரிகளைச் சொல்பவள் ராதை. அவளுடன் கூடுபவன் கிருஷ்ணன்.
முத்துப்பழனி தஞ்சையில் 1739- 1790 ல் வாழ்ந்தவர். தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய அரசர் பிரதாபசிம்மரின் ஆதரவில் இருந்தார். இந்நூல் 1887ல் முதல்முதலாக அச்சிடப்பட்டது, இதிலிருந்த காமவெளிப்பாட்டுப் பகுதிகள் வெட்டப்பட்டிருந்தன. 1910ல் பெங்களூர் நாகரத்தினம்மாள் முன்னுரையுடன், முழுமையாக இது வெளியாகியது. பெரும் விவாதம் வெடித்தது.
ஆந்திர இலக்கிய முன்னோடி கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு ‘ஒரு வேசியால் எழுதப்பட்டு இன்னொரு வேசியால் வெளியிடப்பட்ட நூல் என்று’ விமர்சனம் செய்தார். அரசு இந்நூலை 1912ல் தடைசெய்தது. நூலை அச்சிட்ட அச்சகம் சூறையாடப்பட்டது. பின்னர் 1946ல் டி.பிரகாசம் அவர்களால் தடை நீக்கம் செய்யப்பட்டது.
ராதிகா சாந்த்வனம் உட்பட காமத்தைப் பேசும் சிற்றிலக்கியங்கள் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நிறைய உருவாயின. அது இந்திய அளவிலேயே ஒரு நலிவுக்காலகட்டம். இலக்கியம் அறம், வீடுபேறு முதலிய பெரும் பேசுபொருட்களை விட்டு விலகியது. பக்தி அலை அடங்கியது. ஆகவே பேரிலக்கியங்களின் காலம் முடிவுக்கு வந்தது. இலக்கியம் என்பது சிறு ஆட்சியாளர்களின் அவையின் கேளிக்கையாக மாறியது.
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அத்தகைய நூல்கள் பெருகின. கூளப்பநாயக்கன் காதல், விறலிவிடு தூது முதலிய படைப்புகளின் காலம். தெலுங்கில் அந்தக் காலகட்டத்தில் அத்தகைய ஏராளமான நூல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
இந்நூலை வாசிக்கையில் இன்று தோன்றுவது இதுதான். கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுக்குமேல் தொன்மை கொண்ட இந்திய இலக்கியத்தில் மிகப்பெரும்பாலானவை காமம் சார்ந்தவை. அவை அனைத்துமே ஆண்களின் காமவெளிப்பாடுகள்தான். பெண்கள் ஆண்களுக்காக ஏங்குகிறார்கள். ஆண்களுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆண்களுடன் ஊடுகிறார்கள், கூடுகிறார்கள். பெண்களின் உறுப்புகள் ஆண்களின் ரசனைக்குரிய வகையில் வர்ணிக்கப்படுகின்றன.
மொத்தச் சங்க இலக்கியமும் ஆண் இலக்கியம்தான். பெண்களின் சில கவிதைகள் உள்ளன, ஆனால் அவற்றில் காமம் இல்லை. மிகச்சில பாடல்களில் மிகமிக உள்ளடங்கிய தாபம் வெளிப்பட்டுள்ளது. அந்த வகையான மறைமுகத் தாபத்தை பின்னர் வந்த காரைக்காலம்மையார், ஆண்டாள் பாடல்களில் காணலாம். ஆனால் அதுவே பெரும் மீறல், மிக அரிது. அந்த வகையான மென்மையான தாபம் மீரா பாடல்களில் வெளிப்படுகிறது. அதை ஜயதேவ அஷ்டபதியின் காமவிழைவுடன் ஒப்பிட்டால் வேறுபாடு புரியும்.
ஆனால், தமிழிலக்கியப் பரப்பில் இன்னொரு சுவாரசியம் உள்ளது. பெண்கள் தங்கள் உடலை உருக்கி உதறிக்கொண்டு, பெண் என்னும் அடையாளத்தையே துறந்து, கவிஞர் என்னும் விடுதலையை அடையமுடிகிறது. ஔவை கிழவியானாள். காரைக்காலம்மையார் பேயானார். பேய்மகள் இளவெயினிகூட அவ்வாறுதானோ என்னவோ. மணிமேகலையும்கூட பெண் என்னும் அடையாளம் இழந்தே சுதந்திரம் அடைய முடிந்தது.
அப்படிப் பார்த்தால் ராதிகா சாந்த்வனமும் ஒரு விந்தையான நூல். இன்னொன்று அதைப்போல இந்திய இலக்கியத்திலேயே இல்லை. இருந்திருக்கலாம். இது வெள்ளையர் கண்பட்டு, அச்சிடப்பட்டதனால் நீடிக்கின்றது. எஞ்சிய எத்தனையோ நூல்கள் அழிந்திருக்கலாம். தனிப்பட்ட ரசனைக்காக எழுதப்பட்டவை. அவற்றை பேணவேண்டும் என்ற எண்ணமே முற்றிலும் ஆண்களின் உலகமான இந்திய இலக்கியம் என்னும் களத்திற்கு இல்லாமல் இருந்திருக்கலாம். யார் கண்டது, பெண்களே எழுதி, பெண்களே ரசித்து, அப்படியே மறைந்துபோன நூல்களும் இருந்திருக்கலாம்.
ராதிகா சாந்த்வனமு ஆண்களின் காம உலகை ஒட்டி, அவர்களுக்காக எழுதப்பட்டது போன்ற பாவனைகொண்ட தந்திரமான நூல். இது ராதைக்கும் கண்ணனுக்குமான காதல், காமத்தைச் சித்தரிக்கிறது. கண்ணன் ராதை உட்பட பல பெண்களுடன் திளைப்பதுதான் இதன் பேசுபொருள். அது வேறுபல நூல்களில் உள்ளதுதான். ஆனால் இதில் பெண்களின் ரகசியக் காமவிழைவுகள் எல்லாமே வெளிப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களின் பிறர்காமம் நோக்கும் விழைவு (Voyeurism) பிற பெண்ணிடமிருந்து ஆணை பறிக்கும் விழைவு, தன்னைவிட வயது குறைந்த இளைஞர்களுடன் உறவுக்கான விழைவு, ஆணை வலிந்து கைப்பற்றும் விழைவு, ஆணை தன் காலடியில் விழச்செய்யும் விழைவு அனைத்துமே.
இந்நூலின் ராதை மணமானவள், கிருஷ்ணனை வளர்த்தவள். (பல மூலநூல்களிலும் அப்படித்தான்). ஆனால் இதில் அவள் சற்று வயது முதிர்ந்தவள். கிருஷ்ணனுக்கு இளாவை அவளே மணம் புரிந்து வைக்கிறாள். அவர்களின் முதலிரவில் புகுந்து கிருஷ்ணனிடம் உறவு கொள்கிறாள். இப்படியே செல்கிறது இதன் சித்தரிப்பு.
பெண்கள் தங்கள் வேட்கையை எழுதத் தொடங்கியது இந்திய – தமிழ் நவீன இலக்கியத்திலேயே 1990 வாக்கில்தான் தொடங்கியது. ஆனால் ராதிகா சாந்த்வனம் அதில் பலபடிகள் முன்னே நிற்கிறது. அதனாலேயே இதற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு என நினைக்கிறேன்.
அகநி வெளியீடாக வந்துள்ள இந்நூல் விரிவான ஆவணக்குறிப்புகள் இணைக்கப்பட்டது. அ. வெண்ணிலா அந்தக்கால அரசு ஆவணங்கள், இதழ்விவாதங்கள் ஆகியவற்றை தேடி எடுத்து ஆய்வுப்பதிப்பாக வெளியிட்டிருக்கிறார்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

