காவியம் – 27
யட்சன் யட்சி, மென்கல்செதுக்கு, சாதவாகனர் காலம் பொமு2ச்கானபூதி என்னும் கதை சொல்லும் பிசாசு என்னிடம் சொன்னது. “நண்பனே, கதைகளை மூன்றுவகை மனிதர்களிடம் சொல்லக்கூடாது. கதைகளை வெறும் பொழுதுபோக்காக எடுத்துக் கொள்பவர்கள். கதைகளின் மேல் எளிய தர்க்கத்தைப் போட்டுப்பார்ப்பவர்கள். மூன்றாவதாக கதைகள் வெறும் கதைகளே என எண்ணுபவர்கள்.”
“ஆம், நான் காவிய மாணவன், எனக்குத் தெரியும்” என்று நான் சொன்னேன்.
“இது வெறும் கதைசொல்லுதல் அல்ல. இங்கே நாம் கதைகளைச் சொல்லும்போது மானுட வாழ்க்கைகளை கட்டமைக்கிறோம், திருத்தியமைக்கிறோம், சிதறடிக்கவும் திரட்டவும் செய்கிறோம். வரலாற்றை உருவாக்கியும் மாற்றியும் முன்செல்கிறோம். துயரங்களையும், அச்சங்களையும், பதற்றங்களையும் நம்மால் உண்டுபண்ண முடியும். இன்பத்திளைப்பையும் பரவசத்தின் அமைதியையும் உருவாக்க முடியும்.” கானபூதி தொடர்ந்து சொன்னது.
“இது ஒரு சூதாட்டம் என்று கொள். சூதாட்டம் என்பது விளையாட்டுபோலத் தோன்றும். ஆனால் அது மானுடவாழ்விலுள்ள புரிந்துகொள்ளவே முடியாத ஒன்றையே உண்மையில் கையாள்கிறது. அடுத்த கணம் என்ன நிகழ்கிறது என்று நம்மால் அறியமுடியாது, அது ஒட்டுமொத்தப் பிரபஞ்ச நிகழ்வுடன் தொடர்புகொண்டுள்ளது என்ற விந்தைதான் அது. கதைகளும் அவ்வாறே. இவை விளையாட்டு எனத் தோன்றும். ஆனால் மானுட உள்ளம் என்னும் முடிவிலா சாத்தியக்கூறும் மானுட உறவுகள் என்னும் முடிவிலா சாத்தியக்கூறும் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளிகள் வழியாகவே வாழ்க்கை நிகழ்கிறது. ஆனால் மெய்யான வாழ்க்கையில் நிகழ்காலம் என்னும் மாயையால் அந்த பயமுறுத்தும் பேருருவம் நமக்குத் தெரியாமல் ஆகிவிடுகிறது. கதைகள் முக்காலத்திலும் நிகழ்கின்றன, காலமில்லாதவையாக நீடிக்கின்றன. ஆகவே அவை அந்த அடியில்லா ஆழத்தை அவை முன்வைக்கின்றன”
கானபூதியின் சொற்கள் சொல்லிச் சொல்லித் தேர்ந்த கதைசொல்லிக்குரிய துல்லியம் கொண்டிருந்தன.
”என் நண்பனே, எந்தக்கதையிலும் இயல்பாகத் திரண்டு வரும் ஒரு கேள்வி உண்டு. அதுவே அதன் மையம். கதையில் அதற்குப் பதில் இருக்க முடியாது. கதைகேட்பவனே அதற்குப் பதிலைச் சொல்ல முடியும். ஆனால் அந்தப்பதிலை கதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்” என்றது கானபூதி. “என் கதையின் கேள்விக்கு நீ பதில் சொன்னாய், அதை கதை ஒப்புக்கொண்டது. ஆகவே என்னிடம் ஒரு கேள்வியை கேட்கும் உரிமையை நீ பெற்றாய். உன் கேள்விக்கு நான் கதையாகவே பதில் சொல்ல முடியும்”
கதைசொல்லியான பிசாசு சொன்னது “கேள், கதை எப்போதும் நிகழ்காலத்தில் நடக்கிறது. ஆனால் அது இறந்த காலத்திலோ எதிர்காலத்திலோ உண்மையென்று நிகழ்வதும் கூட. இறந்தகாலத்தில் நிகழ்வது நிகழ்காலத்தில் நினைவு கூரப்படுகிறது. எதிர்காலத்தில் நிகழ்வதோ நிகழ்காலத்தில் முன்னுரைக்கப்படுகிறது. என் சொற்கள் ஒவ்வொன்றும் முற்றிலும் உண்மை என்பதனால் இங்கு நான் சொல்லும் ஒரு கதை அது நேற்று நிகழ்ந்தது, அல்லது நாளை அவ்வண்ணமே நிகழும். இருவகையிலும் அது முடிந்துவிட்ட நிகழ்வுதான்”
“கதையின் வழியாக என்னால் எதையும் நிகழச்செய்ய முடியும் என்று நீ அறிந்திருக்கிறாய். உன் கேள்வியினூடாக உன்னுடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறாய். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. இந்தக் கதையாடலில் உன்னை நான் சிக்க வைத்திருப்பது போலவே என்னையும் நீ சிக்கவைத்து விட்டாய். நல்லது, இணையான ஆற்றல் கொண்ட ஒருவருடன் ஆடுவதே இனிய விளையாட்டாக இருக்கமுடியும். இந்த ஆட்டத்தினூடாக நான் விடுதலை பெற முடியும் என்ற எண்ணமும் எனக்கு உருவாகியிருக்கிறது. அது நிகழட்டும்” கானபூதி சொன்னது.
“இந்தக் கதைகளினூடாக நான் செல்லும் இடமென்ன என்றெனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஒரு கட்டவிழ்வதை உணர்கிறேன். ஒவ்வொரு கதையும் என்னிடமிருந்து எடையுடன் நழுவி அகல்வதை அறிகிறேன். அதன் பொருட்டு உன்னை மகிழ்வுடன் தழுவிக்கொள்கிறேன். நீ என் இனிய மாணவனும் கூட உனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அமைக” என்ற பின் கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு கதைசொல்லத் தொடங்கியது.
இளம் நண்பனே, நான் இப்போது பாட்னாவில் தேஷ்பாண்டே குடும்பத்தினரின் மாளிகையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாட்னாவில் ஜௌகஞ்ச் என்னும் இந்தப் பகுதி உயர்குடிகள் வாழ்வது. தக்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் என்னும் குருத்வாராவின் அருகே இருக்கும் பாரே கி கலி என்னும் அகலமான தெருவில் தேஷ்பாண்டே குடும்பத்தினர் வாழும் இல்லம் நூறு ஆண்டுகளுக்கு முன் பெரிய தேஷ்பாண்டே எனப்படும் ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே கட்டியது. பாட்னாவில் அன்று அவர் புகழ்பெற்ற வட்டித்தொழில் செய்பவராக இருந்தார்.
ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே பாட்னாவுக்கு வருவதற்கு முன்பு வங்காளத்தில் வாடியா ராஜ் என்னும் ஜமீந்தாரி பகுதியின் ஆட்சியாளராக இருந்த திக்பிஜய்சந்த் மஹ்தாப் என்பவரின் அவையில் ஜோதிடராகவும் அவைப்புலவராகவும் இருந்தார். அவருக்கு அப்போது அங்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். அவருடைய முன்னோர் ஏழு தலைமுறைக் காலத்திற்கும் மேலாக அங்கேயே அரசரின் ஆதரவில் வாழ்ந்தவர்கள். அதற்கு முன்பு அவர்கள் காசியில் இருந்து வந்தவர்கள் என்று ஒரு பேச்சு உண்டு. வங்காளத்தின் எல்லா பிராமணர்களும் காசியில் இருந்து வந்ததாகச் சொல்லிக்கொள்வார்கள்.
வாடியா ராஜ் ஜமீன்தார் ஒவ்வொரு நாளும் நோயிலும் தனிமையிலும் துயருற்று வந்தார். அவருடைய நிலம் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே இருந்தது. முடிவுகளை அனைத்தையும் அவர்களே எடுத்தனர். மகாராஜாதிராஜா பகதூர் என்னும் பட்டம் இருந்தாலும், மக்களால் அரசர் என அழைக்கப்பட்டாலும் அவருக்கு ஆட்சியில் எந்த உரிமையும் இருக்கவில்லை. எந்தச் சிறு முடிவையும் அவர்கள் எடுக்க முடியவில்லை, திவானையோ, பேஷ்காரையோ நியமிப்பதும் நீக்குவதும் தண்டிப்பதும்கூட பிரிட்டிஷ் அதிகாரிகளால்தான் முடிவெடுக்கமுடியும்.
ஆனால் ஆட்சி செய்கிறோம் என்ற தோற்றத்தை மட்டும் அவர்கள் மக்களுக்கு அளித்தாகவேண்டும். மக்கள் தங்களை ஆள்பவர்கள் அவர்கள்தான் என்ற எண்ணத்தை அடைந்தாகவேண்டும். அதபொருட்டே அவர்கள் அமரச் செய்யப் பட்டிருந்தனர் ’பாவைக்கூத்தில் கிரீடத்துடன் வந்து நின்றிருக்கும் பாவைஅரசன் நான்’ என்று அரசர் திக்பிஜய்சந்த் மஹ்தாப் சொல்வதுண்டு. ’என் மேல் கட்டப்பட்ட சரடுகளில் அசைக்கும் விரல்களே இங்கு அனைத்தும் நிகழ்த்துகின்றன. எனக்கு வேடமிடவும் தோற்றமளிக்கவுமே உரிமை உள்ளது. பாவை என்றேனும் தன்னை அரசன் என்று எண்ணிக்கொண்டால் விரல்களின் அசைவுக்கு அப்பால் எதையேனும் செய்ய நினைத்தால் அக்கணமே அது முறிய நேரிடும்.’
இளமையிலேயே அதை உணர்ந்த பின்னர்தான் அவர் பட்டத்துக்கு வந்தாரென்றாலும், ஒவ்வொரு நாளும் அதைத் திரும்பத் திரும்ப தனக்கே சொல்லிக்கொண்டாலும், மாதத்திற்கு இருமுறையேனும் அவர் அவமதிப்பை அடைந்தார். துயருற்று தனிமையில் சரிந்து கண்ணீர் விட்டார். ஏனெனில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒருவருக்கு அவருடைய இடத்தை மிகச்சரியாக அடையாளம் காட்டுபவை அவமதிப்புகளே என்று எண்ணினார்கள். அதன் வழியாகவே ஒருபோதும் அவர் தனக்களிக்கப்பட்ட எல்லையை மீறலாகாது என்ற ஆணையை அளிக்கமுடியும் என்று ஓர் ஆட்சியாளர் இன்னொரு ஆட்சியாளருக்குச் சொல்லிவிட்டு சென்றனர். அவமதிப்பைப் பற்றிய அச்சத்தால்தான் அவர்கள் அரசர்களை கைகால்களை கட்டி தங்கள் காலடியில் போட்டிருந்தனர். ‘இந்த மாபெரும் தேசத்தை நாம் ஆயுதங்களால் ஆளவில்லை, அச்சத்தால் ஆள்கிறோம்’ என்பது ஒவ்வொரு கவர்னரும் கலெக்டரும் தன் வாரிசுக்குச் சொல்லும் வரி. அவமதிப்பு பற்றிய அச்சமே அச்சங்களில் தலையாயது.
ஆகவே துல்லியமான அவமதிப்புகளை அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் அவர்கள் அளித்தபடியே இருந்தனர். மிகச்சிறிய அவமதிப்புகள். பூமுள் போல மலருக்குள்தான் எப்போதும் அவை இருந்தன. அவை மலரை நோக்கி புன்னகையுடன் கைநீட்டும்போது மட்டுமே குத்துபவை என்பதனால் மிக ஆழ்ந்த வலியை அளிப்பவை. குத்துப்பட்டவர் தவிர எவருக்குமே அந்த வலி தெரியாது. மிக அந்தரங்கமாக வைத்திருக்க வேண்டும் என்பதனாலேயே அவை தொடர்ந்து வளர்ந்து பெருகுபவை. மருந்தோ மறுசெயலோ அவற்றுக்கில்லை என்பதனாலேயே மிகக் கொடியவை.
பிரித்தானியரான ஒரு ராணுவ காப்டன் அரசருக்கு விரல் சுட்டி ஆணையிடமுடியும். உடனே தன்னை அவர் ஒரு ராணுவ காப்டனுக்கு ஒரு படி கீழானவர், அதுதான் தன் இடம் என்று நினைத்துக்கொண்டால் அடுத்த முறை ஒரு லெப்டினெண்ட் அவருக்கு ஆணையிடுவான். அடுத்ததாக ஒரு செகண்ட் லெப்டினென்ட் கூட ஆணையிட முடியும். எந்த ஆணையை மீறலாம், எவரைவிட ஓர் இந்திய அரசர் மேலானவர் என்பது அதிகார அடுக்கில் வரையறை செய்யப்படவே இல்லை.
மனமுடைந்திருந்த மகாராஜா திக்பிஜய்சந்த் மஹ்தாப்புக்கு ஆறுதலையும் சிறிதளவேனும் மகிழ்ச்சியையும் அளித்துக்கொண்டிருந்தவை சோதிட அவைகளும் கவிஞர் அவைகளும்தான். சோதிட அவைகள் திரும்பத் திரும்ப அவருக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை அளித்துக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு நாளும் எவ்வாறு வருங்காலம் நன்கு விடியப்போகிறதென்று சோதிடர்கள் கணித்துக்கூறினர். ஒரே கனவை திரும்பத் திரும்ப நுண்ணிய மாறுதல்களுடன் முன்வைத்தனர். இன்னும் சில காலம், இன்னும் சில பருவங்கள், இன்னும் ஓரிரு சிறு துயரங்கள்; அதன் பின் விடியும், புதிய ஒளி கிளம்பி வரும். கவிஞர்கள் அவரது இறந்த காலத்தை அவ்வாறே ஒவ்வொரு புனைந்து அவருக்கு அளித்தனர் அவருடைய தலைமுறைகளின் வெற்றி, அவர்கள் அடைந்த புகழ். அவர்கள் செய்த அறங்கள் நுகர்ந்த சோகங்கள். அவர்கள் நின்றிருக்கும் வரலாற்றுக்களங்கள். அவர்களுக்கு அருளிய தெய்வங்கள்.
ஒவ்வொன்றும் புனைவென்று ஒவ்வொருவரும் அறிந்திருந்த போதிலும் கூட புனைவுகள் தங்களைத் தாங்களே நிறுவிக்கொள்ளும் தன்மை உடையவை என்பதனால் அவை உண்மையாயின. உண்மைக்கு தேவைப்படும் நிரூபணங்கள் எதுவுமே புனைவுக்கு தேவைப்படுவதில்லை. புனைவின் தர்க்கம் முற்றிலும் வேறுபட்டதனால் தகவல்களைக் கொண்டு புனைவை மறுக்க முடிவதில்லை. அந்த ஒரு வசதியினாலேயே புனைவு என்பது உண்மைகளைக் கடந்து வேறொரு உண்மையாக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. ஏனெனில் புனைவின் வேர் கற்பனையில் உள்ளது. அதற்கு உண்மை ஒரு பொருட்டல்ல. ஆனால் அதன் அடிமரமும் கிளைகளும் இலைத்தழைப்பும் புறவயமான உண்மை திகழும் அதே களத்திலேயே தாங்களும் நின்றிருக்கின்றன. உண்மையின் அதே வடிவையே அவையும் கொண்டிருக்கின்றன. உண்மையை விட அதிகமாக பூத்து குலுங்குகின்றன. கனிந்து பரவுகின்றன.
அரசரின் ஒரே மகன் ரண்பீர்சந்த் மஹ்தாப் லண்டனுக்கு அனுப்பி படிக்க வைக்கப்பட்டார். தன் மகன் தன்னைப் போல எழுதப்படிக்கத் தெரியாதவராக இருக்கக் கூடாது என்றும், அவன் உலகை அறிந்திருக்க வேண்டும் என்றும், தன் சிறு ஆட்சிப்பரப்பின் அன்றாடச் சடங்குகளின் வட்டங்களிலிருந்து அவன் விடுபடவேண்டும் என்றும் அரசர் எண்ணினார். அவனை பாட்னாவிலும் அதன்பின் காசி வித்யாபீடத்திலும் படிக்க வைத்தபிறகு அங்கிருந்து லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு அனுப்பினார். அங்கிருந்து Inner Temple சட்டக்கல்லூரியில் பாரிஸ்டர் படிப்புக்குச் சேர்ந்தார். காந்தி பயின்ற அதே பள்ளி.
காசி வித்யாபீடம் வரை ரண்பீர்சந்த் ஓர் அரசகுமாரனாக இருந்தார். அங்கே ஒவ்வொருவரும் அவரை இளவரசரென அறிந்திருந்தனர். அதற்கான மரியாதைகளை அளித்தனர். உபசாரச் சொற்களை ஒவ்வொருமுறையும் கூறினர். இளமையிலிருந்தே அவர் அந்த மதிப்பிலும் உபசரிப்பிலும் வாழ்ந்தமையால் அவை தனக்களிக்கப்படும் சிறப்புகள் என்று எண்ணவில்லை, அவையே இயல்பானவை என்று எண்ணினார். அந்த மரியாதைகளுக்கும் உபசரிப்புகளுக்கும் இணையாகவே அவரிடம் கொடையும் பெருந்தன்மையும் ஆசாரங்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு ஒழுகும் தன்மையும் எதிர்பார்க்கப்பட்டது. அவையும் அவரிடம் இயல்பாகவே இருந்தன. ஆகவே விரும்பப்பட்ட இளவரசராகவும் அவர் திகழ்ந்தார்.
அங்கிருந்து லண்டன் சென்றபோது முதல் முறையாக அவர் தன் அடையாளங்கள் அனைத்தையும் களைந்து நிர்வாணமாகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். அவருடைய ஆடைகள் மாறின. அவர் அதுவரை அணிந்திருந்த மதிப்புமிக்க வைர நகைகளை அணிய முடியாமலாயிற்று. அவரிடம் எவரும் பணியவில்லை. உபசாரச் சொற்களைக் கூறவும் இல்லை. எங்கும் அவருக்கு தனி இடம் அளிக்கப்படவுமில்லை. வெள்ளையர்களுடன் மட்டுமே அவர் நிகராகப் பழக முயன்றார். அங்கே ஒவ்வொரு இடத்திலும் அவர் சிறுமையை உணர்ந்தார். குருத்தெலும்பில் விழும் அடிகள் போல ஒவ்வொன்றும் பெருவலியை அளித்தன.
அவர் அதற்கு எதிராகத் தன்னை கெட்டிப்படுத்திக்கொண்டார். கட்டுப்பாடில்லாமல் குடிக்கத் தொடங்கினார். குடித்துவிட்டால் வெள்ளையர்களும் தங்கள் தோரணைகளை இழந்துவிடுவதைக் கண்டார், அப்போது ஒரு அரசுச் செயலாளரின் தோளைத் தட்டி, அவருடைய சுருக்கப்பெயரைச் சொல்லி அழைத்துப் பேச அவரால் முடிந்தது. அவர் பணத்தை அள்ளி வீசி ஒவ்வொருவரையும் திகைக்க வைத்தார். லண்டனில் சட்ட மாணவர்கள் நடத்திய விருந்தொன்றில் நூறு பவுன் நோட்டு ஒன்றை எடுத்து மெழுகுவர்த்திச் சுடரில் பற்ற வைத்து அந்தத் தீயைக்கொண்டு அவர் சுருட்டு பற்ற வைத்துக்கொண்டது லண்டன் முழுக்க கேலியாகவும் திகைப்பாகவும் பேசப்பட்டது. இரண்டு அரிய வைரங்களை தனது தோல் செருப்பின் முகப்பில் பதித்துக்கொண்டது மேலும் கதையாக மாறியது.
ரண்பீர்சந்த் நடனம் கற்றுக்கொண்டார். வெள்ளைத்தோல் பெண்களை ஒவ்வொரு நாளும் புணர்ந்தார். அவர்களுக்கு பணத்தை அள்ளி இறைத்தார். அதற்காக லண்டனின் கீழ்த்தட்டு மக்களை அவர் பயன்படுத்திக் கொண்டார். ஒரு லண்டன் விதவையை மணக்க விரும்பி அதற்காக கிறிஸ்தவ மதத்திற்கும் மாறி, அவளால் ஏமாற்றப்பட்டு, பெரும் பணத்தையும் இழந்து, தன் காதலனுடன் இருந்த அவளைச் சுடுவதற்கு முயன்று, பிடிபட்டு ,இளவரசர் என்பதனால் வழக்குப் பதிவுசெய்யப்படாமல் தப்பினார். மேலும் குடிகாரராக ஆனார்.
நான்காண்டுகளுக்குப் பின் பாரிஸ்டர் பட்டத்துடன் அவர் திரும்பி வந்தபோது முகம் கருத்து, உதடுகள் வெந்து, கண்களுக்குக் கீழே மெல்லிய பைகள் தொங்க, தாடை இறங்கி, மோவாயில் ஆழ்ந்த கோடுகள் விழுந்து பல ஆண்டு முதியவராக இருந்தார். இளம் கூனல். மது அருந்தியதன் விளைவான தொந்தி. எங்கும் பார்வை நிலைக்காத சிவந்து கலங்கிய கண்கள். எதற்கும் பொறுமையின்றி இடைமறித்து அலட்சியமாகவும் எரிச்சலுடனும் சொல்லப்படும் ஒற்றைச் சொற்றொடர் பதில்கள்.
தந்தை மறைந்த ஓர் ஆண்டிலேயே ரண்பீர்சந்த் மகாதாப் தன் ஜமீன்தாரியைக் பெரும் கடனுக்குள் சிக்க வைத்தார். வரிகளை கட்டமுடியாமலானார். திவானும் பேஷ்காரும் அவரைத் தொடர்ந்து எச்சரித்தனர். ஆனால் அவரை விலக்கி இன்னொருவரைக் கொண்டுவர வேண்டும் என்றால் அவருடைய தந்தைக்கு வேறு மகன்கள் இருந்திருக்கவேண்டும். சமஸ்தானத்தின் முடியுரிமைப்படி அவர் அன்றி வேறெவரும் அந்த அரியணையில் அமர முடியாது. ஆகவே அவரை மேலும் மேலும் செயலிழக்கச்செய்து அதே பதவியில் நீடிக்க வைக்கவே பிரிட்டிஷார் முயன்றனர். அதன்பொருட்டு சர்க்கஸில் புலியைப் பழக்குவதுபோல அவருக்கு சிறுபரிசுகளையும் பெரும் தண்டனைகளையும் அளித்துக்கொண்டே இருந்தனர்.
பணத்தை அள்ளி இறைப்பதை மட்டுமே பழகி லண்டனிலிருந்து திரும்பி வந்த ரண்பீர்சந்த் ஒரு சிறுதொகைக்குக் கூட தன்னுடைய திவானிடமும் பேஷ்காரிடமும் கெஞ்சிக் கூத்தாடி, மன்றாடி, பலவிதமான நாடகங்களைப் போட்டு, சட்டப்படி எல்லா காகிதங்களிலும் கையெழுத்திட்டுப் பெறவேண்டும் என்ற நிலைமைக்கு வந்தார். அவருக்கு பணத்தை அளிக்குமிடத்துக்கு திவான் வந்தபோது திவானே ஆட்சியாளராக ஆனார். தன் முன் சம்பிரதாயமான பணிவையும் ஒடுக்கத்தையும் காட்டி நின்றிருக்கும் திவான் தன்னை ஒரு அசட்டுப் பொம்மையாக எண்ணுகிறார் என்று அவருக்கும் தெரிந்திருந்தது. அது அவையினர் அனைவருக்கும் தெரியும் என்பதும் ரண்பீர்சந்த் அறிந்திருந்தார்.
ஆகவே ஒவ்வொரு நாள் அவைக்கு திவானை சந்தித்த பின்னரும் அவர் சீற்றம் கொண்டு தன் அறைக்குள் கொந்தளித்துச் சுற்றி வந்தார். தன் ஏவலர்களை அறைந்தார். பணிப்பெண்கள் முகத்தில் உமிழ்ந்தார். அவரால் செய்யக்கூடுவது அரண்மனையில் அவர் கைக்குச் சிக்கிய அத்தனை பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவது தான். வயது பேதமின்றி உறவு முறையின்றி அவர் அப்பெண்களைப் புணர்ந்தார். தான் புணரும் ஒரு பெண்ணை முழுமையாக வெல்வதாகவும் புழுவைப்போல் தன் காலில் போட்டு சிதைப்பதாகவும் எண்ணிக்கொண்டார். அந்த வெற்றி ஒன்றே அவருக்கு உறுதியை அளிப்பதாக இருந்தது. அதிகாரமுள்ளவர் அல்ல எனினும் ஆணென்றாவது எஞ்ச முடிந்தது என நினைத்தார்.
ஆனால் மிகச்சில ஆண்டுகளிலேயே அவருடைய வெட்டை நோய் மருத்துவத்துக்கு கட்டுப்படாமல் ஆயிற்று. அவருடைய உதடுகளும் கண்களும் செவி மடல்களும் சிவந்து தடிக்கலாயின. அரண்மனையில் அவர் புணர்ந்த பெண்கள் அனைவரும் நோயுற்றவர்களானார்கள். தொடர்ந்து பழைய பெண்களை விலக்கி புதிய பெண்களை ஏவலர்கள் நியமித்த போதும் கூட அவரால் பெண்களைப் புணர முடியாமல் ஆயிற்று. புணர்வதென்பதே பெரும் வலியை அளிப்பதாகவும் ,அப்பெண்கள் சலிப்புற்று பெருமூச்சுவிடச் செய்வதுமாக மாறியது. அவரால் இயலாதென்று அறியாத பெண்களே எங்கும் இருக்கவில்லை.
ஒரு முறை அரண்மனையின் முதிய சேடி ஒருத்தியை அவர் அறைந்து கூந்தலைப் பிடித்து இழுத்துச்சென்று படுக்கையில் தள்ளி புணர முற்பட்டபோது அவரது உடல் ஒத்துழைக்க மறுத்து அசைவிழந்தது. அந்த சேடி எழுந்து ஆடையை அணிந்துகொண்டு அவரிடம் புன்னகைத்தபடி ”முடியாதெனில் இனி இதற்கெல்லாம் முயலாமல் இருக்கலாமல்லவா?” என்றாள்.
முதல் முறையாக ஒரு பெண் அவர் இயலாமையை அவரிடமே சொல்லக்கேட்டு தளர்ந்து படுக்கையில் அமர்ந்திருந்தார். அப்போதுதான் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவரானார்.
“இந்த அரண்மனையில் எல்லா நபும்சகங்களும் இதைச் செய்கின்றன. அவர்கள் பெண்களிடம் மூர்க்கமாக நடந்துகொள்கிறார்கள். ஆனால் அவர்களால் பெண்களை அடையவும் முடிவதில்லை. அதனால் இன்னும் மூர்க்கம் அடைகிறார்கள். நபும்சங்கங்களை அரசர் கண்டிக்க வேண்டும்” என்று அந்தப்பெண்மணி மீண்டும் சொன்னார்.
“வெளியே போ” என்று அரசர் கத்தினார்.
”நாங்கள் தங்களிடமன்றி எங்கு முறையிடமுடியும் இங்கே நபும்சகங்கள்…” என்று அவள் மேலும் சொன்னாள்.
”வெளியே போ! வெளியே போ!” என்று கத்தி அவளை நோக்கி கையை ஓங்கி சென்ற வேகத்தில் கம்பளம் காலைத்தடுக்க அவர் குப்புற கீழே விழுந்தார்.
அத்தருணத்தில் அந்த முதிய பெண் ஒன்று செய்தாள். தன் காலைத்தூக்கி அவர் தலையை ஓங்கி மிதித்தாள். “ச்சீ , நபும்சகனே, முடியாதெனில் செத்துபோ” என்று சொல்லி அவர் தலைமேல் காறி உமிழ்ந்துவிட்டு வெளியே சென்றாள்.
அவரால் எழமுடியாதென்றும் கூவ முடியாதென்றும் அவள் அறிந்திருந்தாள். அங்கே நிகழ்ந்ததை அவர் அப்படியே வெளியே சொல்லவே முடியாது. அவளுக்கான குற்றத்தை அவர் கற்பனைசெய்ய பொழுது தேவைப்பட்டது. வெளியே சென்ற அவள் அன்றிரவே கிளம்பி எங்கோ சென்றுவிட்டாள்.
மயங்கி விழுந்த அரசர் ஏவலர்களால் கண்டடையப்பட்டு. மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஆங்கில மருத்துவரால் தூங்க வைக்கப்பட்டு, மறுநாள் விழித்தெழுந்து அனைத்தையும் நினைவுகூர்ந்து கூச்சலிட்டு கத்தினார். நெஞ்சில் அறைந்துகொண்டு கூவினார். ”அவளைப் பிடியுங்கள் அவளைப்பிடியுங்கள்” என்றார். ”எனது அரிய நகையொன்றை அவள் திருடிவிட்டாள். எனது மணிமாலையை அவள் பிடுங்கிச்சென்றாள். அவள் இங்கே கொண்டுவரப்படவேண்டும்” என்று ஆணையிட்டாள்.
ஆனால் அவள் கிளம்பி பாட்னாவுக்குச் சென்றுவிட்டதாக ஏவலர் சொன்னார்கள். ”பாட்னாவுக்குச் சென்று பிடியுங்கள்” என்று அவர் சொன்னார்.
”அது பிரிட்டிஷ் அரசின் பகுதி நாம் அங்கு சென்றால் நாம் தான் குற்றவாளிகளாவோம். அவள் திருடியதற்கு சான்றுகள் இருந்தால் நாம் முறையான கடிதம் வழியாக பாட்னாவின் கவர்னரிடம் முறையிடலாம்” என்றார் திவான்.
”என்ன சொல்கிறாய்? முறையிடுவதா?” என்று சொல்லி படுக்கையில் எழுந்து கையை ஓங்கியபடி அரசர் கூவினார்.
”முறையிட மட்டும் தான் முடியும் என்றபின் இங்கும் நாம் முறையிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றார் திவான்.
உடல் நடுங்க உதடுகள் துடிக்க கண்ணீர் வழிய படுக்கையில் படுத்திருந்த அரசர் அப்படியே மல்லாந்து படுத்து கண்களை மூடிக்கொண்டு உதடுகளை இறுக்கி ஒரு மெல்லிய வலிப்புக்கு ஆளானார். அவருடைய பற்கள் கிட்டித்து உதட்டோரம் எச்சில் கோழை வழிந்தது.
அதற்கும் மறுநாள் மாலைதான் ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே சிறுமைப்படுத்தப்பட்டு வாடியா ராஜ் ஜமீந்தாரியில் இருந்து தப்பி ஓடினார். அது அவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக ஆகியது.
புதிய அரசர் ஆட்சிக்கு வந்த பிறகு வாரம் தோறும் வெள்ளியன்று காலைமுதல் மாலை வரை நிகழும் கவியரங்கும், செவ்வாயன்று காலைமுதல் மாலை வரை நிகழும் சோதிட அரங்கும் நின்றுவிட்டன. ஆனால் சோதிடர்களும் புலவர்களும் அங்கேயே அரசுப் பணியில்தான் இருந்தனர். அவர்களுக்கு இல்லங்களும் ஆண்டுதோறும் செலவுக்கான மானியங்களும் அளிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் அரண்மனையிலிருந்து வீட்டுத்தேவைக்கு உரிய பொருட்களையும் சிறு பரிசுகளையும் அவர்கள் பெற்று வந்தனர். அரசு அதிகாரிகளும் திவானும் அரசனை அணுகுவதற்கான வழியாக திகழ்ந்தமையால், கோரிக்கைகளை அரசர் முன் எடுத்துச்செல்லும் அணுக்கம் அவர்களுக்கு இருந்தமையால், குடிமக்கள் அவர்களுக்கு தானியங்கள் காய்கறிகள் என்று கொடையளித்தும் வந்தனர். ஆகவே அவர்கள் சமஸ்தானத்தில் வறுமையில்லாமல் வாழ்ந்தனர். சிறு சேமிப்புகளும் கொண்டிருந்தனர். செல்வந்தர்களாகவும் திகழ்ந்தனர்.
புதிய அரசர் ரண்பீர்சந்த் மகாதாப் வந்தபிறகு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறையோ மட்டுமே அந்த அவைகள் கூடலாயின. புதிய அரசர் சம்ஸ்கிருதத்திலோ இந்துஸ்தானியிலோ உருதுவிலோ அடிப்படைப் பரிச்சயம் மட்டுமே கொண்டவராக இருந்தார். இலக்கியத்தில் அவருக்கு எந்த வகையிலும் ஆர்வம் இருக்கவில்லை. ஒருவரின் உள்ளம் கற்பனையை இழந்துவிட்டதென்றால் அது தரவுகளையே உண்மையெனக் கொள்ளலாகிறது. தரவுகள் வளர்ந்து கற்பனைக்கு எதிராக நிலைகொள்ளுகையில் இலக்கியத்தை அவை முற்றாக மறுக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு அவையிலும் தன் மூதாதையர் புகழ் பாடப்படும்போது ஏளனச்சிரிப்புடன் தரவுகளை எடுத்துவைத்து ’இவை முற்றிலும் பொய். இங்கே என்னை புகழும்பொருட்டு உளறுகிறீர்கள்’ என்று அரசர் எள்ளி நகையாடினார். சோதிட ஊகங்கள் சொல்லப்படும்போது முந்தைய ஊகங்கள் என்ன ஆயின என்று கேட்டு அச்சோதிடர்களை இழிவுபடுத்தினார்.
மெல்ல பல மாதங்களுக்கு ஒருமுறையே அந்த அவை கூடுவதாயிற்று. அரசரின் பிறந்த நாளை ஒட்டியும் முந்தைய அரசரின் நினைவு நாளை ஒட்டியும் மட்டுமே அவை கூடுவது அதன்பின் வழக்கமாயிற்று. அவ்வாறு மறைந்த அரசரின் நினைவு நாளை ஒட்டி நிகழ்ந்த சோதிட அரங்கில் தேஷ்பாண்டே அன்று தான் கணித்துக் கொண்டு வந்திருந்த புதிய அரசருக்குரிய பலன்களை சம்ஸ்கிருதத்தில் அனுஷ்டுப்பு சந்தத்தில் பதினெட்டு செய்யுள்களாக எழுதி அவையில் வாசிக்கக் கொண்டுவந்திருந்தார். அவை உண்மையில் அவருடைய தந்தை எழுதி அதே அவையில் வாசித்த செய்யுட்களை அவர் பழைய ஏட்டுச்சுவடியில் இருந்து பார்த்து நகல் எடுத்தவைதான். அவரால் எப்போதுமே செய்யுள் எழுத முடிந்ததில்லை.
அரசர் மிகத்தாமதமாகத்தான் அறைக்கு வந்தார். அவருடைய ஆடைகள் உடலில் தளர்வாக தொய்ந்து தொங்கின. கண்கள் கலங்கி ஒரு கண்ணிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. சிறு வெண்ணிற கைக்குட்டையால் அதை ஒற்றிக்கொண்டிருந்தார். அவ்வப்போது கோணலாக தடித்து ஒருபக்கமாக தொங்கிய உதடுகளிலிருந்து எச்சில் வழிந்தது அதையும் துடைத்துக்கொண்டார். நன்கு கூன் விழுந்து, கழுத்து சதைகள் கன்றுக்குட்டியின் கழுத்துபோல இழுபட்டு தொங்கி, கைகால்கள் சுள்ளி போல் மெலிந்து ஒரு பேயுருவாக அரியணையில் அமர்ந்திருந்தார். அவர் முற்றிலும் நிலைகுலைந்து இருப்பதை அனைவரும் உணர்ந்தாலும் வாசிப்பதன் பதற்றத்தில் இருந்த ஃபணீந்திரநாத் மட்டும் அதை அறியவில்லை.
அவர் தாள்களைப் புரட்டும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அவர் வாசிக்க ஒப்புதல் கேட்டு அரசர் முன் நின்றிருந்தார். அரசர் பித்தளை தாலத்தில் காறித்துப்பிக் கொண்டே இருந்தார். காகிதத்தை புரட்டி ஓசையை எழுப்பிக்கொண்டே இருந்த தேஷ்பாண்டே ’நான் செய்யுளை வாசிக்கலாமா அரசே?’ என்று பணிந்து கேட்டார்.
வாசிக்கலாம் என்று அரசர் கையை அசைத்தார். ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே அச்செய்யுளைப் படிக்கும்போது அரசர் கண்ணையும் வாயையும் துடைத்தபடி மேலும் மேலும் குனிந்து முன்னால் விழுந்துவிடுபவர் போல தளர்ந்து கொண்டிருந்தார். அரசர் தன்னை கவனிக்கவில்லை என்ற எண்ணத்தில் பணீந்திரநாத் மேலும் சற்று உரக்க அச்செய்யுளை படித்தார். எங்கோ ஓரிடத்தில் அவர் முற்றிலும் கவனிக்கவில்லை என்ற எண்ணம் அவருக்கு சீண்டலாக அமையவே ,தன்னியல்பாக உருவான எரிச்சலில் ஒரு செய்யுளை மிக உரத்த குரலில் படித்தார்.
சட்டென்று எவரோ தன்னை நோக்கி அதட்டுவது போல் உணர்ந்த அரசர் திகைத்து ”யார்?” என்றார். அவை திடுக்கிட்டு அமர்ந்திருந்தது. தன் முன் நின்றிருந்த தேஷ்பாண்டேயைக் கண்டு அவர் தன்னை ஏதோ சொல்லிவிட்டார் என்று எண்ணிய அரசர் ”வாடா இங்கே” என்றார்.
அந்தணரை அவ்வாறு அவமதிப்பாக அழைத்ததில் அவையே திகைத்தது.
“டேய் வாடா! இங்கே டேய் அருகே வாடா” என்று அரசர் கூவினார்.
இருகைகளையும் கூப்பி உடலை நன்கு வளைத்து கண்ணீர் வழிய மன்றாடியபடியே தேஷ்பாண்டே அரசரை நோக்கி சென்றார். “மன்னிக்கவேண்டும். மன்னிக்க வேண்டும். தெரியாமல் நிகழ்ந்த பிழை… மன்னிக்கவேண்டும் அரசே. என் தலையை தங்கள் பாதங்களில் வைக்கிறேன். தெய்வமாக நின்று மன்னிக்கவேண்டும்” என்று சொல்லி நடுங்கிக்கொண்டே அருகே சென்றார்.
“அருகே வா! அருகே வா நாயே! கேடுகெட்ட நாயே அருகே வா!” என்று அரசர் கூவிக்கொண்டே இருந்தார். ஃபணீந்திரநாத் அருகே சென்றதும் இருகைகளையும் அரியணையின் கைப்பிடியில் ஊன்றி தள்ளாடி எழுந்து வாயில் தேங்கியிருந்த கோழையை அவர் முகத்தில் உமிழ்ந்து ”தூ கேடு கெட்ட நாயே! அதட்டுகிறாயா? வெளியே போடா! இனி இந்த அவையில் உன் முகத்தை பார்த்தால் வெட்டி நாய்களுக்குப்போடுவேன். வெளியே போ! வெளியே போடா!” என்றார்.
“வெளியே போகிறேன் அது தங்கள் ஆணை. ஆனால் நாளை திரும்ப வர ஒப்புதல் அளிக்கவேண்டும். எனக்கு குழந்தைகளும் குடும்பமும் இருக்கின்றன” என்று ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே மன்றாடினார்.
“போ வெளியே. இனி எப்போது நீ என் கண் முன் நீ வருகிறாயோ அபோது இன்னொரு பிரமாணனைக் கொண்டு உன்னை வெட்டி வீழ்த்துவேன்” என்று அரசர் கூவினார்.
அப்படியே பின்னகர்ந்து சுவரில் முட்டிக்கொண்டு நின்று, நடுங்கி விசும்பி அழுதபடியே ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே வெளியே சென்றார். தன் இல்லத்தை அடைந்தபோது அவர் நடக்க முடியாதபடி உடல் தளர்ந்திருந்தார். வெவ்வேறு இடங்களில் நின்றும், சுவர்களையும் தூண்களையும் பிடித்துக்கொண்டும்தான் அவர் இல்லத்தை வந்தடைந்தார்.
“இனி இந்த நகரில் நான் இருக்க முடியாது, இங்கு என்னால் வாழ முடியாது” என்று அவர் தன் மனைவியிடம் சொன்னார். அவர் மனைவி ஓசையின்றி அழுதுகொண்டிருந்தாள். அவருடைய இரு குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன. மூத்தவனுக்கு ஏழுவயது. பெண்ணுக்கு ஐந்து வயது. அவர்களைப் பார்த்தபடி அவர் மனைவி கண்ணீர்விட்டாள்.
அன்று மாலை வரை அழுதுகொண்டிருந்த ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே நள்ளிரவில் தன் இல்லத்தில் ஒரு பானையிலிட்டு புதைத்து வைத்திருந்த தங்கநாணயங்களையும் வெள்ளி நாணயங்களையும் பழந்துணியில் கட்டி அதை ஒரு மஞ்சள் துணியில் பொதிந்து தலையில் வைத்துக்கொண்டு வாடியா ராஜ் ஜமீந்தாரியை விட்டு வெளியேறினார்.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

