‘டம்மி வாசகன்’
அன்புள்ள ஜெ
ஓர் உரையாடலில் ‘டம்மி’ வாசகன் என்னும் சொல்லைப் பயன்படுத்தினீர்கள். அந்தச் சொல் என்னை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. நான் ஒரு டம்மி வாசகன் தானா? அப்படி ஆகாமலிருக்க என்ன செய்யவேண்டும்? இலக்கியம் வாசிப்பதே ஒரு தகுதி என நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் ஈடுபட்டு வாழ்க்கையைச் செலவழித்து ஒரு டம்மி ஆக மாறுவதென்பது பெரிய வீணடிப்பு. அதை விளக்கவேண்டும் என கோருகிறேன். வேடிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சரவணன் குமரேசன்
*
அன்புள்ள சரவணன்,
இத்தகைய சொற்களைப் பயன்படுத்துவது, சொல்லப்படுவது கூர்மையாக நினைவில் தங்கவேண்டும் என்பதற்காகவே. இது ஒன்றும் இலக்கியக் கலைச்சொல் அல்ல, இப்படி ஒரு கருதுகோளும் இல்லை. ஆனால் புகழ்பெற்ற பல கலைச்சொற்கள் இப்படி கேலியாகவோ, கண்டனமாகவோ உருவாக்கப்பட்டு, நீடிப்பவைதான்.
போலிவாசகன் என்று ஒருவன் உண்டு. அவன் பொதுவாக வாசிப்பதில்லை. வாசிப்பில் நுழைந்த காலத்தில் மிகக்குறைவாக வாசித்திருப்பான். ஒட்டுமொத்தமாக ஒரு சித்திரத்தை ஆங்காங்கே கேள்விப்பட்டும், இலக்கியப்பூசல்கள் வழியாக அறிந்தும் இருப்பான். ஒவ்வொரு ஆசிரியர் பற்றியும், நூல் பற்றியும் ஓரிரு வரி கருத்துக்களை உருவாக்கி வைத்திருப்பான்.
இந்தக் கருத்துக்கள் பொதுவாக ஒரு சூழலில் புழங்கும் எதிர்மறைக் கருத்துக்களாகவே இருக்கும். ஏனென்றால் ஒரு சூழலில் கூடுதல் உக்கிரமாகச் செயல்படுபவர்கள் எதிர்மறை மனநிலை கொண்டவர்கள். தளராமல் அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவதூறுகளை, முத்திரைகுத்தல்களைப் பரப்பிக்கொண்டே இருப்பார்கள். வெறுப்பும் காழ்ப்பும் அளிக்கும் ஆற்றல் அத்தகையது.
கூடவே அவர்கள் பெரும்பாலும் ஏதேனும் அரசியல் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆகவே கும்பலாகக் கூடிச் செயல்படுவார்கள். அமைப்பு அளிக்கும் வசதிகளும் உண்டு. ஆகவே அவர்கள் பெரிய பிரச்சார சக்திகள். போலிவாசகன் இந்த பிரச்சாரக் கருத்துக்களை அரைகுறையாகச் செவியில் வாங்கி, தானே வந்தடைந்த முடிவு போல தன்னம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டிருப்பான்.
இலக்கியம் என்பது எவ்வளவு நுணுக்கமானது, உள்ளோட்டங்கள் கொண்டது என்று இவனுக்குத் தெரியாதாகையால் போலிவாசகன் தன்னம்பிக்கையுடனும் அலட்சியத்துடனும் கருத்துக்களை உதிர்ப்பான்.
இவனைப் போன்றவர்கள் சமூகவலைத்தளச் சூழல் அமைந்தபின் பெருகிவிட்டனர். சமூக வலைத்தளச்சூழல், இணையத்தேடல் வசதி எவர் பற்றியும் எது பற்றியும் பொத்தாம் பொதுவானதும், அதிகம் பிரச்சாரம் செய்யப்படுவதுமான கருத்துக்களைக் கொண்டுவந்து தருகிறது.
டம்மி வாசகன் வேறுவகை. இவன் வாசிக்கக்கூடியவன். சிலசமயம் நிறையவே வாசிப்பான். ஆனால் எந்தப் படைப்புக்குள்ளும் நுழைய முடியாதவன். எந்தக் கருத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் அற்றவன். காற்றாலை ஓடுவதுபோல இவன் செயல்பட்டுக்கொண்டே இருப்பான். செயல்படச்செய்வது காற்றுதான், சூழல்தான். இவன் செயல் இவன் கையில் இல்லை.
இவனுடைய வாசிப்பு மண்புழு உணவுண்பதுபோல நடந்துகொண்டே இருக்கும். ஐந்து கிராம் எடையுள்ள ஒரு மண்புழு ஒரு நாளுக்கு சராசரியாக இரண்டு கிலோ மண்ணை உண்கிறது. அதற்குக் கிடைக்கும் சத்து அரை கிராமுக்கும் கீழேதான்.
இத்தகையோர் வாசிப்புச் சூழலில் அறியப்பட்டவர்களாக இருப்பார்கள். புதியதாக வரும் வாசகர்களுக்குத் திகைப்பை அளிப்பார்கள். ’எவ்வளவு வாசிக்கிறார்’ என்று மிரளச்செய்வார்கள். ஆனால் நாமே கொஞ்சம் தீவிரமாக வாசித்து, வாசித்ததை உள்வாங்க ஆரம்பிக்கும்போது இவர்களை வியப்புடனும் பரிதாபத்துடனும் பார்க்க ஆரம்பிப்போம்.
இவர்களின் இயல்புகளுக்குச் சில பொதுவான அடையாளங்களை மட்டும் சொல்கிறேன்.
1. படைப்புகளை பொத்தாம் பொதுவாக, மேலோட்டமாக ஒப்பிடுவார்கள். இவர்களின் இலக்கியப் புரிதல் என்பது நினைவுத்திறன் சார்ந்த இந்த தொகுப்பு மட்டும்தான். ’இந்த நாவலிலே அருவி வருது… க எழுதின அந்த நாவலிலேயும் அருவிதான். ரெண்டும் ஒண்ணு மாதிரி’ என்பார்கள். தனக்கு நினைவு வருவதே ஓர் இணைப்பு என்பார்கள். ‘சாப்பாடு பத்தி ச எழுதினதை வாசிச்சா சாப்பாடு பத்தி க எழுதினது மாதிரி இருக்கு’
இலக்கியத்தின் பேசுபொருட்கள் பெரும்பாலும் ஒன்றே. வெளிப்பாட்டின் அழகியலும், அதனூடாக அடையப்படும் தரிசனமும்தான் வேறுபாடு என்பது இவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது.
2. இலக்கியப் படைப்பில் ’கதைச் சுவாரசியம்’ தவிர எதுவுமே பிடிபடாது. எந்த நாவலையும் ‘நல்ல கதை’ என்பார்கள். இவர்களை அடையாளம் காண மிகச்சிறந்த வரி இவர்கள் சொல்வதுதான். ‘பாதி வாசிக்கிறப்பவே கதை முடிவு தெரிஞ்சிட்டுது…’
முடிவைக்கொண்டு திகைக்கவைப்பது இலக்கியத்தின் வழி அல்ல. முடிவு ஒரு கதையை மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான். வாழ்க்கையை அணுக்கமாக எழுதும் கதைகள் பொதுவாக திகைக்கச்செய்யும் முடிவுகளை முன்வைக்காது. ஏனென்றால் அக்கதைகள் கதைவிளையாட்டு அல்ல. வாழ்க்கையில் அந்த முடிவுகள் ஏற்கனவே ஏதோ ஒரு வடிவில் எப்போதும் இருப்பதனால் முற்றிலும் வாசகனுக்குத் தெரியாத ஒரு முடிவு நல்ல கதைகளில் அமையவும் முடியாது.
3. ஒரு படைப்பு உணர்த்தும் கருத்துக்குச் செல்லவே மாட்டார்கள். அப்படைப்பில் நேரடியாகப் பேசப்படும் எதுவோ ஒன்றுதான் அது சொல்ல வருவது என எடுத்துக்கொள்வார்கள். பலசமயம் வரிகளை அடிக்கோடிட்டு எடுத்துச் சொல்வார்கள்.
படைப்பில் பல கருத்துக்கள் நேரடியாகக் பேசப்படலாம், அவை படைப்பின் கருத்தாக அமையவேண்டும் என்பதில்லை. பேசப்படும் பல கருத்துக்களின் முரணியக்கமாக வாசகன் சென்றடையவேண்டிய ஒன்றுதான் அப்படைப்பின் தரப்பாக இருக்கும்.
4. ஓர் இலக்கியப் படைப்பை வாசித்து உள்வாங்க இவர்களால் முடியாது. அதை அந்த ஆசிரியனின் ஓரு ‘கருத்துரையாக’ எடுத்துக் கொள்வார்கள். இலக்கியப்படைப்பு என்பது பலவகையான குரல்கள், பலவகையான கதாபாத்திரங்கள் முரண்பட்டு இயங்கும் ஒரு தளம் என்பதே தெரிந்திருக்காது. அந்த ஆசிரியன் பேசும் கருத்து என்ன என்பதை பொதுவெளியில் அவனைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதில் இருந்து புரிந்து வைத்திருப்பார்கள். ஆசிரியனின் பேச்சும் அவன் எழுதும் புனைவும் ஒன்றே அல்ல என்ற எளிய விஷயமே பிடிகிடைத்திருக்காது. எந்தக் கதையையும் அதில் என்னதான் பேசப்பட்டிருந்தாலும் ஒரேமாதிரி தங்கள் அரைகுறைப் புரிதலை அதில் ஏற்றி விளங்கிக்கொள்வார்கள்.
உதாரணமாக, நூறு நாற்காலிகள் கதையை இப்படி வாசித்த ஒரு மண்புழு அது இந்துத்துவக் கருத்தையும் சாதிமேலாதிக்கப்பார்வையையும் ‘புகுத்தி’ எழுதப்பட்டது என புரிந்துகொண்டது. அது நேர் எதிரான குரலை உக்கிரமாக வெளிப்படுத்தும் படைப்பு என அதற்கு பிடிகிடைக்கவில்லை. அந்தப்படைப்பில் அது எங்கே இருக்கிறது? இருக்கத்தானே வேண்டும்? எழுதியவர் அப்படி என்றுதானே ’எல்லாரும்’ சொல்கிறார்கள்?
5. இலக்கியப் படைப்பில் அங்கதமாகவோ, ‘எதிர்மறைக்கு எதிர்மறை’ என்னும் வகையில் (வக்ரோக்தி)யாகவோ சொல்லப்பட்டிருக்கும் எதையும் டம்மியால் புரிந்துகொள்ள முடியாது. எல்லாமே நேரடிக் கருத்துத்தான் அதற்கு.
உதாரணமாக, பத்துலட்சம் காலடிகள் கதையில் அதன் கதைநாயகனாகிய ஔசேப்பச்சன் சொல்லும் ஒரு வரி. ‘அழகு என்பது (அதாவது அப்படி இங்கே உயர்சாதியினர் நினைப்பது) இனக்கலவையால் வந்தது. ஏனென்றால் உயர்சாதியினர்தான் பிறருடன் அதிகமாகக் கலந்து பழகியவர்கள். அந்த அழகு என்பது சாதிப்படிநிலைகளில் கீழே செல்லக் குறையும்’ என்கிறான்.
அது அவனுடைய கூர்மையான சாதிய விமர்சனம். உயர்சாதியினர் சொல்லிக்கொள்ளும் ரத்தத்தூய்மை என்பது எவ்வளவு கேலிக்குரியது என்று அவன் உத்தேசிக்கிறான். எல்லா கதைகளிலும் அவன் பார்வை சாதிமேட்டிமைக்கு எதிரான நையாண்டிதான்.
உண்மையில் அது ஒரு தலித் பார்வையிலான குரல். ஆனால் இங்குள்ள டம்மிகள் ‘சாதியில் கீழே உள்ளவர்கள் அழகற்றவர்கள் என்று ஜெயமோகன் சொல்கிறார். இது சாதிமேட்டிமைத்தனம்’ என்று கூவ ஆரம்பித்தனர். தமிழிலக்கிய வரலாற்றில் டம்மி வாசிப்புக்கு முதன்மையான உதார்ணநிகழ்வு இதுதான்.
6. ஒரு படைப்பில் ஒரு கதாபாத்திரம் சொல்லும் வரி, அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயம் மற்றும் அது என்ன வகையில் காட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே பொருள்கொள்ளப்படவேண்டும். டம்மிகளுக்கு அது எப்போதுமே ஆசிரியரின் கருத்துதான்.
விஷ்ணுபுரம் நாவலில் எல்லா கருத்தும் எங்காவது மறுக்கப்பட்டிருக்கும். ஆனால் டம்மிகள் அதில் ஒரு வரியை ஆசிரியரின் தரப்பாக எடுத்துக் கொள்வார்கள்.
7. இலக்கியப் படைப்பைப் பற்றி விமர்சனமாக அழகியல் சார்ந்தோ, அதன் தரிசனம் சாந்ந்தோ எதுவுமே சொல்லமுடியாதவர்கள் இவர்கள். ஆகவே இரண்டு எதிர்விமர்சனங்களையே முன்வைப்பார்கள். ஒன்று, சில தகவல்கள் சரியில்லை. இரண்டு அந்தப் பார்வையுடன் உடன்பாடில்லை. அந்த தகவல்களை நம்பமுடியவில்லை என்பது மூன்றாவது.
ஓர் இலக்கியப்படைப்பு வாசகனுக்கு ஓர் உலகை உருவாக்கிக் காட்ட மட்டுமே தகவல்களைப் பயன்படுத்துகிறது. அதன் புனைவுலகமே அதன் கொடை. அத்துடன் வாசகன் அனைத்துத் தகவல்களையும் அறிந்தவனாக இருக்கவேண்டியதில்லை. அவனுக்குத் தெரியாத எல்லாமே பிழை அல்ல. வாசகனின் சிற்றறிவில் ஏற்கனவே ஏற்கப்பட்டுள்ள கருத்தை ஒரு படைப்பு சொல்லவேண்டும் என்றில்லை. அப்படிச் சொல்வது அசட்டுப்படைப்புதான்.
8. தான் ஏற்கனவே வாசித்தவற்றை நோக்கி புதியதாக வாசிக்கும் ஒவ்வொன்றையும் இழுத்துச் செல்லுதல் டம்மி வாசகனின் இயல்பு. பாராட்டாகவும் அதைச் செய்வான். நிராகரிப்பாகவும் அதையே செய்வான். ‘என்ன இருந்தாலும் தி.ஜா மாதிரி வருமா?’ ‘தி.ஜா மாதிரியே இருக்கு’ இரண்டுமே அபத்தமானதுதான்
ஓர் ஆக்கம் ஏற்கனவே வாசகன் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பை உடைத்து, அவனை புதிய இடத்திற்குக் கொண்டுசென்றால் மட்டுமே அது இலக்கியப்படைப்பு. வணிக எழுத்து வாசகனின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்தபடியே செல்லும். அதுவே சுவாரசியமான எழுத்து. ஆனால் அது வாசகனை வளர்ப்பதில்லை. உதாரணம், கல்கி அல்லது சுஜாதாவின் எழுத்து.
இலக்கிய ஆக்கம் வாசகனின் எதிர்பார்ப்பை சிதறடிக்கும். ஆகவே பலசமயம் வாசகன் ஓர் இலக்கிய ஆக்கத்திற்குள் நுழையவே முடியாது. அவன் தன் எதிர்பார்ப்புகளை துறந்து புதிய உள்ளத்துடன் முயன்று உள்நுழைந்தாகவேண்டும். வாசித்துச் செல்லும்போதே பலசமயம் இலக்கிய ஆக்கம் வாசகனைக் கைவிட்டுவிடும். அவன் மேலே தொடரமுடியாது. வாசகன் முயன்று தன்னை மாற்றிக்கொண்டுதான் அதைத் தொடரவேண்டியிருக்கும். ஆனால் இந்த மாற்றங்கள் எல்லாமே உண்மையில் வாசகனின் அகவளர்ச்சிதான். அந்த வளர்ச்சியை அளிப்பதே இலக்கியத்தின் நோக்கம்.
9. டம்மி வாசகனால் ஒரு விவாதத்தின் ஒட்டுமொத்தத்தை உள்வாங்க முடியாது. உதிரிக் கருத்துக்களை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். அதை மேற்கோளாகக் காட்டிக்கொண்டிருப்பான். பொதுவாக சூழலிலுள்ள சராசரிக் கருத்தையே அவனும் பெற்றுக்கொண்டிருப்பான்.
இலக்கிய, தத்துவச் சூழலில் கருத்துக்களுக்கு மதிப்பில்லை. கருத்துக்களை ஒன்றோடொன்று இணைத்தும், எதிரெதிராகப் பின்னியும் உருவாக்கப்படும் தரிசனங்களுக்கு மட்டுமே மதிப்பு. அவை எப்போதும் அறுதியான கருத்துக்கள் அல்லது நிலைபாடுகள் அல்ல. அவை வாசகன் தன் நோக்கில் மேலும் விரிவாக்கப்படவேண்டிய கருக்கள்.
*
டம்மி வாசகனாக ’ஆக’ எவராலும் முடியாது. ஏனென்றால் டம்மி வாசகர்கள் அப்படியே பிறக்கிறார்கள். குறைவான அறிவுத்திறன், குறைவான கற்பனைத்திறனே அவர்களை உருவாக்குகிறது. அவர்களை நல்ல வாசகர்கள் ஆக்கமுடியாது. அதேபோல கூர்ந்து வாசிப்பவன் டம்மி வாசகன் ஆக மாறுவதுமில்லை.
நல்ல வாசிப்பு என்பது மூன்று அடிப்படைகள் கொண்டது.
அ. இலக்கியம் என்பது நிகர்வாழ்க்கை. அந்த வாழ்க்கையை இலக்கியப்படைப்பின் வழியாக கற்பனை செய்து கொள்வது வாசகனின் கடமை. தன் வாழ்க்கையை அந்த கற்பனைவாழ்க்கையுடன் இணைத்து விரிவாக்குவதே அவன் செய்யவேண்டிய வாசிப்பு.
ஆ. எப்போதுமே இலக்கியப்படைப்பை நோக்கி முன்னகர்ந்துகொண்டே இருக்கவேண்டும். இலக்கியப்படைப்பை தன் எளிய அறிவு நோக்கி, தன் நிலைபாடு நோக்கி இழுக்கக் கூடாது. இலக்கியவாதியை மதிப்பிடவும் திருத்தியமைப்பதற்கும் முயலும் அசட்டுத்தனம் வரக்கூடாது.
இ. இலக்கியத்தை தொடர்ச்சியாக அறிந்துகொண்டே இருக்கவேண்டும். எங்கும் நின்றுவிடக்கூடாது
உ. இலக்கியம் சார்ந்து எந்த மதிப்பீடும், கருத்தும் சொந்தமாக அடையப்பெற்றதாக இருக்கவேண்டும் என்ற உறுதி தேவை. சூழலில் இருந்து கிடைக்கும் பொதுவான கருத்து எதுவானாலும் அது மொக்கை அரசியலாளர்கள் உருவாக்கிச் சுழலவிடும் அவதூறும் திரிபுமே என்னும் புரிதல் வேண்டும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

