காணொளிகளின் தேவை என்ன?
அன்புள்ள ஜெ.
நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பின் அவசியத்தை முன்வைத்து வருபவர். வாசிப்புக்கு ஈடு சொல்ல ஏதுமில்லை என்பதையே சொல்லிவருகிறீர்கள். ஆனால் அண்மைக்காலத்தில் உங்கள் தளத்தில் பெரும்பகுதி காணொளிகளாக உள்ளது. காணொளிகளின் வழியாக அறிந்துகொள்வதை நீங்கள் ஊக்குவிக்கிறீர்களா என்ன?
கிருஷ்ணராஜ்
அன்புள்ள கிருஷ்ணராஜ்,
காணொளிகள் உங்களைப் போன்றவர்களுக்காகத்தான். ‘பெரும்பகுதி’ என்ற சொல்லை புத்தகவாசிப்பாளரான அறிவியக்கவாதி சாதாரணமாக பயன்படுத்த மாட்டார். அதன் பொருளை அறிந்திருப்பார்.
இந்த தளத்தில் ஏற்கனவே வெளிவந்துகொண்டிருக்கும் வாசிப்புக்குரிய விஷயங்கள் அப்படியே தொடர்ச்சியாக வெளிவருகின்றன. எதுவும் குறையவில்லை. தினமும் ஒரு கட்டுரை, நாவல் தொடர், கடிதங்கள், வேறு இதழ்களுக்கான இணைப்புகள். கடிதங்களே பலசமயம் தனிக்கட்டுரை அளவுக்குத் தீவிரமானவை. காணொளிகள் இரண்டு நாட்களுக்கு ஒன்றுதான் வெளியிடப்படுகின்றன.
அண்மையில் www.unified wisdom.guru, (தமிழ்) www.unifiedwisdom.today (ஆங்கிலம்) தளங்களும் இந்த தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொடுப்புகளும் தொடர்ச்சியாக அளிக்கப்படுகின்றன. அந்த தளங்களிலும் கடிதங்களும், கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. அவற்றையும் சேர்த்தால் வாசிப்புக்கானவை கூடியிருக்கின்றன. ஏற்கனவே உள்ளவற்றுடன் காணொளிகள் ‘கூடுதலாக’த்தான் இடம்பெறுகின்றன.
இவற்றை முழுக்க வாசிப்பவர்கள் குறைவு, ஆகவே வாசிப்பதற்கான விஷயங்களை குறைக்கவேண்டும் என்னும் ஆலோசனைகளும் எனக்கு வழங்கப்படுவதுண்டு. முன்பு கட்டுரைகளைச் சிறிதாக எழுதுங்கள் என்று என்னிடம் சொன்னவர்கள் அவர்கள். அன்று நான் சொன்ன அதே பதில்தான். சிறிய, எளிய கட்டுரைகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன, அங்கே செல்லுங்கள். இங்கே தீவிரமே எப்போதும் இருக்கும்.
உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு வந்த தமிழில் துயர இலக்கியம் என ஒன்று உண்டா? என்ற கட்டுரை. ஓர் ஆய்வுக்கட்டுரை அளவு விரிவானது. பல தொடுப்புகள் கொண்டது. விரிவான சித்திரத்தை அளிப்பது. இணையத்தில் மேலோட்டமாக உலவுபவர்கள் அதைப் படிக்க மாட்டார்கள். முதலிரு பத்திகளை அவர்கள் கடப்பதில்லை. அவர்களின் மூளையை வம்புகள்தான் சீண்டிச் சுறுசுறுப்பாக ஆக்கும். அந்தக் கட்டுரைக்கு வாசகர்கள் குறைவு என எனக்கும் தெரியும், ஆனால் அவை இங்கே வெளிவரும்.
என்னைப் பொறுத்தவரை அறிவார்ந்த தலைப்புகள் இங்கே பேசப்பட்டிருக்க வேண்டும். அதன் பதிவு இருக்கவேண்டும். அதற்காக மட்டுமே முயல்கிறேனே ஒழிய சென்றடைவது என் முதன்மை இலக்கு அல்ல. வாசிக்காவிட்டால் வாசிக்காதவரின் பிரச்சினை அது. தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் எதையும் வாசிப்பதில்லை. எழுத்தாளர்களே தினம் ஒரு வெட்டி சினிமா, மணிக்கணக்காக சீரியல், இரவு பகலாக முகநூலும் யுடியூப் ஷார்ட்ஸ்களும் என்றுதான் வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றி நான் எப்படி கவலைப்பட முடியும்? வாசிப்பவர்களுக்கு, தேடி வருபவர்களுக்கு ஒரு தலைப்பு கிடைக்கவில்லை என ஆகக்கூடாது. அதற்காகவே இத்தனை வாசிப்புப் பகுதிகள்.
நான் தொடர்ச்சியாக புதிய வாசகர்களை உள்ளே கொண்டுவந்துகொண்டே இருப்பவன். 1992 முதல் என் பணிகளில் ஒரு பகுதி அது. என் வழியாக உள்ளே வந்த இலக்கிய வாசகர்களின் இரண்டு தலைமுறைகளை நான் பார்த்துவிட்டேன். அதன் பொருட்டே இலக்கிய விழாக்கள், இலக்கியச் சந்திப்புகள், இலக்கிய அறிமுகங்கள். நான் நடத்தும் இலக்கிய விவாதங்களுக்குக் கூட இலக்கியத்தை அறிமுகம் செய்வது என்னும் நோக்கம் உண்டு. புதிய வாசகர் சந்திப்புகளும் அந்நோக்கம் கொண்டவை. அவை உருவாக்கிய புதியவாசகர்களின் அலை விஷ்ணுபுரம் அமைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றது. அவற்றில் பங்கேற்ற பலர் இன்று அறியப்பட்ட படைப்பாளிகள்.
அறிமுகத்திற்கு அப்பாலும் சில தேவைப்படுகின்றன என்ற உணர்வு முன்னரே இருந்தது. தத்துவத்தை கட்டுரைகள், நூல்கள் வழியாக பயிற்றுவிக்கவே முடியாது என நான் அறிந்திருந்தேன். அதற்கு வகுப்புகள்தான் தேவை. அதற்கென்றே அமைந்த முழுநேர வகுப்புகள், தொடர் வகுப்புகள். நேரடியாக ஆசிரியர் கற்பிக்கும் வகுப்புகள். நான் தத்துவத்தை வகுப்புகள் வழியாகவே கற்றுக்கொண்டேன். நூல்கள் வழியாக அதைக் கற்கவே முடியாது – கற்ற எவரையும் நான் கண்டதுமில்லை. மேலோட்டமான தகவல்களை, கற்றோம் என்னும் போலி நம்பிக்கையை மட்டுமே நூல்கள் அளிக்கும். ஒரு வகுப்பில், ஆசிரியரிடமிருந்து அடிப்படை கற்றல்முறையை கற்றபின் நூல்களைக் கற்பதே சரியான வழி.
அவற்றை நிகழ்த்தும் திட்டம் 2010 முதல் இருந்தது 2022ல்தான் வாய்ப்பு அமைந்தது. முழுமையறிவு அமைப்பும் வகுப்புகளும் தொடங்கின. தமிழில் தத்துவத்தை நவீனப்பார்வையில் தொடர்ச்சியாகக் கற்பிக்கும் அமைப்பே இல்லை. எந்தக் கல்விநிலையமும் அதில் ஈடுபடவில்லை. தமிழகத்திலேயே அதற்காக நடத்தப்படும் ஒரே அமைப்பு முழுமையறிவுதான். (ஐரோப்பாவில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் இதற்கென்றே வந்து பங்கெடுத்துச் செல்பவர்கள்கூட உண்டு). ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்ட வகுப்புகள் நடைபெறுகின்றன. 150 வகுப்புகள் கடந்துவிட்டன. இப்படி தொடர் வகுப்புகள் இன்று இந்தியாவில் எங்கும் நிகழவில்லை என்றுதான் என் நண்பர்கள் சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் நடத்தும்படி கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் மட்டுமல்ல, இமாச்சலப்பிரதேசத்தில் இருந்துகூட தொடர் கோரிக்கைகள் உள்ளன.
அப்போதுதான் ஒன்று தெரிந்தது, தமிழில் கலைகள் மற்றும் இலக்கியத்தின் அடிப்படைகள் கூட எங்கும் கற்பிக்கப்படவில்லை என. வாசகன், எழுத்தாளன் என்னும் இரு நிலைகளிலும் ஒரு நவீன அறிவுஜீவிக்கு அவசியமானவை அவை. ஆகவே எல்லா தளங்களிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்பின் மேலும் ஒன்று தெரிந்துகொண்டேன். ஏற்கனவே இங்கே எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பவர்களுக்கு எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லை. புதியதாக எதுவுமே அவர்களைக் கவர்வதில்லை. சமூக வலைத்தளங்களின் இடைவிடாத வம்புகளின் உலகில் அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். வம்புகள், தங்களை விதவிதமாகப் புனைந்து முன்வைப்பது ஆகியவற்றில் மட்டுமே அவர்களின் உள்ளம் செல்கிறது. அவர்கள் வாசிப்பதுகூட வம்பளப்பதற்காக மட்டுமே. அவர்களிடம் எதையும் கொண்டுசெல்ல முடியாது.
ஆனால் புதியவர்கள் தேடி வந்துகொண்டே இருந்தனர். ஆர்வமும் தீவிரமான வாசிப்பும் கொண்டவர்கள். ஒன்றும் தெரியாமல் வந்து ஆறே மாதங்களில் தீவிர வாசகர்களாக ஆனவர்கள் பலர். இன்று ஏறத்தாழ ஆயிரம் பேருக்குமேல் எங்கள் வகுப்புகளில் பங்குகொள்கிறார்கள். அவ்வெண்ணிக்கை வளர்கிறது. அவர்களே எதிர்காலம். எங்கள் வகுப்புகளை நோக்கி புதிய வாசகர்களை ஈர்க்கும் நோக்கத்துடன்தான் இக்காணொளிகள் வெளியிடப்படுகின்றன. அவற்றின் வழியாக பலநூறு புதிய வாசகர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். மிக இளைய வயதினர்கூட.
ஏன் காணொளி? இன்றைய சூழலில் பயணத்துக்கு ஏராளமான நேரம் செலவாகிறது. பலர் எதையேனும் கேட்பது, பார்ப்பது அப்போதுதான். சலிப்பை வெல்ல எதையாவது தேடிக் கேட்கிறார்கள், பார்க்கிறார்கள். ஆனால் அறிவும் நுண்ணுணர்வும் கொண்டவர்களுக்கு சீக்கிரமே அவற்றிலும் சலிப்பு வருகிறது. கொஞ்சம் மாறுபட்ட எதையாவது தேடுகிறார்கள். அவர்களே இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் உரியவர்கள். அவர்களிடம் சென்றடைபவை காணொளிகளே. பல சமயம் யூடியூபின் ‘லாகிர்தமே’ புதியவர்களை கண்டடைந்து எங்களை அறிமுகம் செய்கிறது.
இக்காணொளிகளில் இலக்கியம், தத்துவம் ஆகியவற்றின் அவசியமும், அவற்றின் அடிப்படைகளும் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றைப் பற்றி நம்முடைய அரசியலாளர்கள் உருவாக்கும் எதிர்மறை எண்ணங்கள் களையப்படுகின்றன. அறிவியக்கச் செயல்பாடு என்பதன் பெருமிதமும் நிறைவும் முன்வைக்கப்படுகிறது. இவை வாசிப்புக்கு மாற்று அல்ல, வாசிப்பை பிரச்சாரம் செய்பவை என்பது கேட்பவர்கள் எவருக்கும் தெரியும்.
தொடர்ச்சியாக இந்த தளத்தை வாசிப்பவர்களுக்குக் கூட இந்தக் காணொளிகள் முக்கியமானவை. புதிய நூல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இலக்கியம் தத்துவம் ஆகியவற்றின் அடிப்படைக் கருதுகோள்கள் விளக்கப்படுகின்றன.
அத்துடன் ஒன்று உண்டு. நல்ல வாசகன் தனக்கான இலக்கிய ஆசிரியனுடன் உரையாடிக்கொண்டேதான் இருப்பான். அந்த உரையாடலை தொடர்ச்சியாக நிகழ்த்த இக்காணொளிகளின் வழியாக வாய்ப்பு அமைகிறது. அது எத்தனை தீவிரமான உணர்வுநிலையை உருவாக்குகிறது என வாசகர்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்றாடத்தின் சலிப்பூட்டும் சுழற்சிக்கு வெளியே ஒரு தனிப்பட்ட உரையாடல் ஒன்று இவற்றின் வழியாக இலக்கியத்திலும் தத்துவத்திலும் நிகழ்கிறது. நாள் முழுக்க அந்த உரையாடல் அவர்களின் மனதின் ஆழத்தில் நீடிக்கிறது.
பொதுவாக, அறிவியக்கத்துடன் இருந்துகொண்டே இருக்க முயலும் வாசகர்களுக்குரியவை இந்தக் காணொளிகள். இன்றைய தொழிற்சூழல், அன்றாடச்சூழலில் அது பெரிய ஒரு போராட்டம். எளிய கேளிக்கைகளிலும் முகநூல் வம்புகளில் உழல்பவர்களுக்கு இவற்றின் தேவை இல்லை. அவற்றை உதறி தீவிரமான தளத்தில் கொஞ்சமேனும் நாளைச் செலவிட வேண்டும் என விழைபவர்களுக்கு மட்டும் உரியவை இவை.
இக்காணொளிகள் ’இணைய வகுப்புகள்’ அல்ல என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். இவை ‘வாசிப்புக்கு மாற்றாக’ கொள்ளத்தக்கவை அல்ல. எவையுமே ஒரு கட்டுரையின் பேச்சு வடிவங்கள் அல்ல. எல்லாமே ‘சிந்தனைச் சீண்டல்கள்’ மட்டும்தான். அதிகபட்சம் இருபது நிமிடம் ஓடுபவை. ஒரு கேள்வியை, யோசிக்கவேண்டிய ஒரு கோணத்தை, ஒரு புதிய கருத்தை மட்டும் முன்வைப்பவை. அவற்றை கேட்பவர்கள் மேலே செல்லமுடியும். கட்டுரைகள் வழியாக, நூல்களினூடாக…
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

