போதையின் படிநிலைகள்
எர்ணாகுளத்தில் நான் கண்ட ஆச்சரியமான விஷயங்களில் ஒன்று பாலங்களுக்கு அடியில், வெவ்வேறு மறைவிடங்களில் தூங்குபவர்கள். வேலைக்களைப்பால் அப்படி சென்னையில் கோயம்பேடு சந்தை, பேருந்து நிலையங்களில் தூங்குபவர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் அப்படி அல்ல. இவர்கள் தூங்குவதைப் பார்த்தாலே தெரியும். கைகால்களைப் பரப்பி, மேலிருந்து விழுந்தவர்களைப்போல கிடக்கிறார்கள். அதிலும் ஒதுங்க இடமிருந்தும்கூட மழையில் நனைந்தபடி கிடக்கிறார்கள். செருப்புகளும் உடைமைகளும் அங்கே சிதறிக்கிடக்கின்றன.
நின்று பார்க்கும் என்னிடம் ஒருவர் “போதை சார்” என்றார்
“குடியா?”
“குடி இப்படி விழவைக்காது. இது மற்றது”
“கஞ்சாவா?”
“சாருக்கு ஒண்ணுமே தெரியலை போல. கஞ்சா இப்டி தூக்கி வீசாது சார். இது கெமிக்கல்….இது எர்ணாகுளம். கொச்சி துறைமுகம் வழியாத்தான் மொத்த கேரளத்துக்குமே கெமிக்கல் வருது”
அன்றே நடக்கும்போது ஒரு தெருவின் முகப்பில் அந்த அறிவிப்பைப் பார்த்தேன். அந்த தெருவின் குடியிருப்போர் சங்கம் வைத்திருக்கும் பலகை. “இது ஒரு குடியிருப்புப் பகுதி. இங்கே போதைப்பொருட்கள் அனுமதி இல்லை. போதைப்பொருட்ளை பயன்படுத்திவிட்டு எவர் உள்ளே வந்தாலும் நடவடிக்கை எடுப்போம்” என்று அதற்கென்றே ஒரு குழு உருவாக்கி அறிவித்திருக்கிறார்கள்.
எர்ணாகுளம் போதை மையம் என நான் ஒரு கட்டுரையில் சொன்னேன். (மஞ்சும்மல் பாய்ஸ்) அதற்கு பயங்கர எதிர்ப்பு— தமிழ்நாட்டில் இருந்து. ஆனால் அங்கே அமைசரே அதைச் சொன்னார். அந்த மொழியின் இயக்குநர்களும் நடிகர்களும் தொடர்ச்சியாக போதைப்பொருள் பயன்படுத்தியமைக்கும், விற்றதற்கும் கைதுசெய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இன்றைக்கு நாகர்கோயிலிலேயே போதை நடமாட்டம் அதிகம் என்கிறார்கள். இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல. சமூகப்பிரச்சினை.
சென்ற இரண்டு தலைமுறைக்காலமாக குடி கட்டற்றுப் பெருகுகிறது கேரளத்திலும் தமிழ்நாட்டிலும். தமிழகக் கிராமங்களில் சாயங்காலம் ஆறு ஏழுமணிக்கு மேல் போதை இல்லாத ஒருவரை பொதுவெளியில் காண்பதே அரிது. ஒருமுறை வழிதவறி, வழி விசாரித்துச்செல்ல முயன்று, கிட்டத்தட்ட எட்டு பேரிடம் பேசினோம். எட்டுபேருமே போதை.
குடிபோதையின் அடுத்த படிநிலை கஞ்சா. அங்கிருந்து மாத்திரைகள். அந்த இயல்பான பரிணாமத்தை போலீஸோ அரசோ கட்டுப்படுத்திவிட முடியாது. முதலில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. பின்னர் அரசே மதுவை விற்க ஆரம்பித்தது. இன்று அரசு மது விற்பனைக்கு இலக்கு வைத்து அதிகாரிகளைக் கொண்டு உச்சகட்ட பிரச்சாரம் செய்கிறது. சாதனை விற்பனை என மார்த்தட்டிக் கொள்கிறது. மதுவுக்கு எதிராக எவரேனும் பேசினால் அரசு நடவடிக்கை வரும். அரசாங்கத்தின் அல்லக்கைகளான அறிவுஜீவிகளின் தாக்குதலும் தொடரும்.
போதைப்பொருட்களை சட்டநடவடிக்கை வழியாக கட்டுப்படுத்தலாம், ஒழிக்கமுடியாது. அதற்குச் சமூகக் கண்காணிப்பே அவசியமானது. கேரளம் அதை நழுவவிட்டுவிட்டு இப்போது அரசை நம்பி பயனில்லை என ஆங்காங்கே சமூகக் கண்காணிப்புக் குழுக்களை உருவாக்கி கட்டுப்படுத்த முயல்கிறது. அங்கே பேசியபோது அத்தனை நடுத்தரவர்க்கக் குடும்பங்களிலும் தங்கள் குழந்தைகள் பற்றிய பீதி நிலவுவதை காணமுடிகிறது. தந்தை வெளிநாட்டில் இருக்கும் குடும்பங்களிலேயே குழந்தைகளிடம் போதைப்பழக்கங்கள் தொடங்கினவாம். தாயால் பையன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே இப்போது இப்படிப்பட்ட குழுக்களை ஆரம்பித்துள்ளனர். இவை ஒரு தெருவை, ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன. இவற்றை அஞ்சித்தான் ஆகவேண்டும். இந்த முயற்சி வெல்கிறதா என்று போகப்போகத்தான் தெரியும்.
எர்ணாகுளம் இரவு ஒன்பது மணிக்கே கிட்டத்தட்ட கடையை மூடிவிடுகிறது, காரணம் மிகப்பெரும்பாலான நாட்களில் இருக்கும் மழைதான். அதன்பின் போதையின் உலகம் தொடங்கிவிடுகிறது. எம்புரான் படம் பார்க்கச் சென்றிருந்தேன். வெளியே வந்தபோது தெரிந்தது, என்னுடன் வந்த பல இளைஞர்கள் போதைநிலையில் இருந்தனர். மதுப்போதை அல்ல, மதுப்போதையில் தள்ளாட்டம் இருக்கும். இதில் தள்ளாட்டம் இல்லை. ஆனால் ஒரு வகையான கட்டற்ற நிலை இருந்தது. உதாரணமாக ஒருவன் ஒரு கைப்பிடியை பிடித்து வெறிகொண்டு அசைத்தபடியே சிரித்துக்கொண்டிருந்தான்.
போதைக்கு இணையாகவே கேரளத்து இளைஞர்களை போர்ன் ஆள்கிறது என்கிறார்கள். போதை – போர்ன் என்னும் இரண்டு சாத்தான்களால் ஆட்டிப்படைக்கப்படும் இளமை. திருவனந்தபுரமே இரவில் பாதுகாப்பானது அல்ல, சங்குமுகம் கடற்கரையில் போலீஸே இரவு எட்டு மணிக்கு அனைவரையும் வீட்டுக்குப் போகச் சொல்லிவிடுவார்கள். எர்ணாகுளம் அதன் வளர்ச்சி நிலை. மது தமிழகத்தையும் ஆட்கொண்டுவிட்டிருக்கிறது. நாம் செல்லவிருக்கும் திசை இதுதானா?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

