காவியம் – 16

யக்ஷன்,யக்ஷி- சாதவாகனர் காலம். பொயு1- பைதான் அருங்காட்சியகம்

புதிய ஊர், புதிய காமம். கடும் கோடையில் திடீரென்று வந்து குளிரவைக்கும் பெருமழை போன்றது என் சென்னை வாழ்க்கை. சென்னைக்கு வந்ததுமே ஒரு சிறிய விடுதியில் அறை எடுத்துக்கொண்டோம். நாங்கள் மருத்துவத்திற்கு வந்த தம்பதிகள் என அவர்களே புரிந்துகொண்டார்கள். பதினெட்டு நாட்கள் அங்கே அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். பனாரஸில் நினைத்தே பார்க்கமுடியாத நல்ல மருத்துவர், நல்ல மருத்துவமனை. விடுதியருகே நல்ல குஜராத்தி சைவ உணவகம்.

நான் மிக விரைவாகவே குணமடைந்தேன். ராதிகா வீடு பார்த்துக்கொண்டிருந்தாள். அவளே சென்று வீடுகளைப் பார்த்துவிட்டு வந்தாள். முகப்பேர் அருகே ஒரு அபார்ட்மெண்ட் கிடைத்தது. ஒரு படுக்கையறை, கூடம், சமையலறை கொண்டது. அங்கே தேவையான பொருட்களை அவளே நாலைந்து நாட்களிலாகக் கொண்டுசென்று சேர்த்தாள். பிளாஸ்டிக் நாற்காலிகள், டீபாய், சாப்பாட்டு மேஜை, மின்சார அடுப்பு, பாத்திரங்கள், கோப்பைகள், கட்டில், மெத்தை, போர்வைகள், தலையணைகள்…

”நீ வாங்கிக்கொண்டே இருக்கிறாய்… உன்னிடம் பணம் இருக்கிறதா?” என்று நான் கேட்டேன்.

“ஆறு லட்சம் வரை” என்று அவள் சொன்னாள். நான் திகைப்புடன் பார்க்க “இருபது சவரன் நகை இருக்கிறது. நகைகளை என்னிடமே வைத்திருந்தேன்.”

“இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தாயா?”

“இல்லை, ஆனால் என் நகை என்னிடம் இருக்கவேண்டும் என்று நினைத்தேன்… என் வங்கியிலும் இரண்டு லட்சம் இருந்தது….”

“ஒரு வருடம்கூட தாக்குப்பிடிக்கலாம்”

”பார்ப்போம். இங்கே இந்தி ஆசிரியராக எனக்கு வேலை கிடைக்கலாம்”

“ஆனால் வட இந்தியர்கள் என்றால் கண்டுபிடிக்க முடியும்”

“இங்கே எல்லா மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் இந்தி வகுப்புகள் இருக்கின்றன… நீயும் ஒரு பள்ளியில் சேர்ந்துகொள்ள முடியும். இங்கே உண்மையிலேயே வட இந்தியாவை விட சம்பளம் அதிகம்… விசாரித்துவிட்டேன்”

முதலில் அவள்தான் ஒரு தனியார் பெண்கள் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தாள். நான் அப்பார்ட்மெண்டில் ஓய்வெடுத்தேன். என் கை மிக விரைவாகக் குணமாகியது. ஆனால் முழங்கை முதல் தோள்வரை வரிசையாக பெரிய பூரான்களை ஒட்டவைத்ததுபோல தழும்பு. நான் முழுக்கைச் சட்டையை இனிமேல் கழற்றவே முடியாது. என் அடையாளம் இது. எங்கும் எளிதில் கவனிக்கப்படுவது.

இரண்டு மாதம் கழித்து நான் இன்னொரு தனியார் கல்லூரியில் இந்தி ஆசிரியராகச் சேர்ந்தேன். எனக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தந்தனர். ராதிகாவுக்கு பதினைந்தாயிரம். எங்கள் அப்பார்ட்மெண்ட் வாடகை மூவாயிரம்தான். எல்லா செலவுகளுக்கும் சேர்த்து பத்தாயிரம் ஆகவில்லை. எல்லாமே சரியாக அமைந்துவிட்டன.

நாங்கள் இந்திக்காரர்கள் புழங்கும் எந்த இடத்திற்கும் செல்லவில்லை. பொதுவாக மக்கள்திரள் இருக்கும் இடங்களையே தவிர்த்தோம். நான் தாடி வைத்துக்கொண்டு தலைமுடியையும் குட்டையாக வெட்டிக்கொண்டேன். ராதிகா தென்னிந்திய பாணியில் புடவை அணிந்துகொண்டு, வெற்றுக் கண்ணாடி போட்டுக்கொண்டாள். அந்த உருமாற்றம் முதலில் வேடிக்கையாக இருந்தது, ஆனால் அந்த உருவத்திற்குள் நாங்கள் ஒளிந்துகொண்டதாகவும் உணரச்செய்தது. கண்ணாடி பார்க்கப்பார்க்க அந்த உருவங்களே நாங்கள் என ஆயின. எங்கள் முந்தைய முகங்களை நாங்களே மறந்துவிட்டோம்.

முதல் பதினைந்து நாட்களுக்கு என் காயம் ஆறுவதற்காகக் காத்திருந்தோம். அதன்பின் திருநீர்மலைக்குச் சென்று திருமணம் செய்துகொண்டோம். கோயிலில் திருமணம் செய்துகொண்டு அதை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்துகொள்வதுதான் எளிது. சிறப்பு திருமணச் சட்டம் வழியாக பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்ய ஏராளமான சட்டச்சம்பிரதாயங்கள் உண்டு. சாட்சிகள் உட்பட எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து சட்டபூர்வமாகவே பதிவுசெய்து தர ஓர் ஏஜெண்ட் பத்தாயிரம் ரூபாய் கேட்டான். பணம் கொடுத்தபோது நான்குநாட்களில் திருமணமான ரசீதையே கையில் தந்துவிட்டான். நிரந்தரக் குடியிருப்பாக திருச்சி பக்கம் இரண்டு விலாசங்கள், அதற்கான சட்டபூர்வமான சான்றுகள். எங்கள் பெயர் தவிர எல்லாமே வேறுதகவல்கள். அதைக்கொண்டு எவரும் எங்களை நெருங்கி வரமுடியாது.

“நாம் வேலை பார்க்கும் இடங்கள்தான் நம்மைப் பிடிக்க வாய்ப்புள்ள சான்றுகள்” என்று ராதிகா சொன்னாள். “அங்கே நம் சான்றிதழைக் காட்டவேண்டியிருக்கிறது. ஆனால் இவை தனியார்பள்ளிகள். இங்கே வந்து தனியார்பள்ளிகள் தோறும் தேடினால்தான் நம்மைப்பற்றிய தகவல்கள் கிடைக்கும். அதற்கு வழியில்லை. அத்துடன் வட இந்தியாபோல அல்ல இந்த ஊர். இங்கே நடுத்தரவர்க்கம் வலுவாக இருக்கிறது. சட்டத்தை மீறி வெளிப்படையாக ஏதும் செய்துவிட முடியாது.”

நாங்கள் இருவரும் எவரையுமே தொடர்பு கொள்ளவில்லை. முற்றிலுமாக எங்களை விலக்கிக் கொண்டுவிட்டோம். ஒவ்வொன்றாகக் கவனித்து விலக்கிக்கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் இயல்பாகவே முழுமையாக விலகிவிட்டோம். விலக்கியதில் முதன்மைப் பங்கு இருவரும் புதியதாகக் கண்டடைந்த காமத்திற்கு இருந்தது. ஒன்றையொன்று வேட்டையாடி உண்ணும் இரு விலங்குகள் போலச் சிலசமயம்.  ததும்பி இன்னொன்றை நிறைத்து ஒன்றேயென்றாகும் இரு சுனைகள் போலச் சிலசமயம். திளைப்பு, அத்திளைப்பை மேலும் வீரியம் கொண்டதாக ஆக்கும்பொருட்டு சீண்டலும் ஊடலும், மேலும் திளைப்பு. துளிக்கண்ணீர் ஓர் உறவாடலை எத்தனை ஆவேசமானதாக ஆக்கிவிடுகிறது!

காமம், அதை காவியங்களில் எத்தனைமுறை எப்படியெல்லாம் படித்து ரசித்துக்கொண்டு இருந்திருக்கிறேன். சொல்லப்போனால் இலக்கியச்சுவை என்ற பேரில் நான் ரசித்துக் கொண்டிருந்ததெல்லாம் காமத்தைத்தான். காமம் இல்லாத ஓர் இயற்கை வர்ணனைகூட காவியங்களிலே இல்லை. அப்பட்டமான நேரடியான காமம் தீ போலப் பற்றிக்கொள்கிறது. கவிதையின் காமம் என்பது விளக்குத்திரியில் எரியும் தீ. பற்றி எரிந்து கொழுந்தாட முடியாமல் கட்டுப்படுத்தப்படுவது, துளியாக எரியும் தீ.  விளக்கின் சுடர் ஒரு மலரிதழ்போல. அதற்கு வெப்பமுண்டு என்று கூடச் சொல்லிவிடமுடியாது. தீயின் அழகு மட்டுமே கொண்ட தீ அது.

“காளிதாசனின் உவமை” என்று நான் சொன்னேன். “ரகுவம்சத்தில் வருகிறது. வானில் இருந்து இந்துமதியுடன் கீழே விழுந்த அஜன் எரிந்தபடியே எண்ணைத்துளி உதிர்வது போலிருந்தான். அந்த வரியை எண்ணிக்கொண்டிருந்தேன். சேர்ந்து எரிதல்… அது போல காமத்திற்குச் சரியான உவமை வேறில்லை”

“இப்போதும் காவியமா?” என்று அவள் புன்னகையுடன் கேட்டாள்.

அவள் உடலின் நிர்வாணம் மிகப்பழகியபின் புன்னகைதான் காமத்தை மிகத்தூண்டுவதாக இருந்தது. நிர்வாண உடல் நிலையானது, பொருள் மாறுபடாத ஒரு சொல்போல. புன்னகை ஒவ்வொரு முறையும் ஒன்று. கண்களின் அசைவும் ஒளியும், தலையின் சரிவு, கூந்தலிழையை ஒதுக்கும் அசைவு என பலவகையான இணைவுகளினூடாக ஒரு கலைநிகழ்வு. அப்புன்னகைமேல் முத்தமிடுவது காற்றில் நலுங்கும் இலையை பற்றுவதுபோல. புகைச்சுருளை மெல்ல விரல்நுனியால் வருடிவிட முடிவதுபோல.

“யட்சர்களுக்கும் நாகர்களுக்கும்தான் முழுமையான காம இன்பத்தை கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள்” என்று நான் அவளிடம் சொன்னேன். “ஏனென்றால் மானுடராக இருந்து அதை அடையமுடியாது. மானுடத்தன்மையை துறந்தபடியே சென்றுதான் அதை அணுகக்கூட முடியும். உடைகளை துறப்பது முதற்படி. அறிந்த உலகத்தை துறக்கவேண்டும். சொற்களை விலக்கிவி டவேண்டும். எண்ணங்களையும் உதிர்த்துவிட வேண்டும். எஞ்சுவதென்னவோ அதைக்கொண்டு மேலே செல்லவேண்டும்.”

நான் உளறிக்கொண்டே இருந்தேன். என்னுள் அதுவரை நான் எண்ணாத சிந்தனைகள் எல்லாம் தோன்றிக்கொண்டே இருந்தன. அவள் முன்பெப்போதும் நான் காணாத ஒருவகையான புன்னகையுடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். சிலசமயம் மாணவிபோல, சிலசமயம் மழலையின் பேச்சைக்கேட்கும் அன்னையைப்போல. அல்லது இரண்டுமே ஒரே சமயம் வெளிப்படுவதுபோல.

சிரிப்பு ததும்பிய அவள் உதடுகள்மேல் விரலைவைத்து நான் கேட்டேன். “என்ன சிரிப்பு?”

“ஒன்றுமில்லை”

“சொல்லு”

“இல்லை, இதையும்கூட சொற்களாக வரையறுத்தேதான் ஆகவேண்டுமா?”

“நீ சொல்வது முதல்பார்வைக்குச் சரி. சொல்லுக்கு அப்பாற்பட்டது காமம். இரு உடல்கள் வெறும் தசைகளாக நின்று ஒன்றை ஒன்று அறிகின்றன. இரண்டு உயிர்கள் ஒன்றையொன்று உணர்வதற்கு இங்கே இருக்கும் மிகச்சிறந்த வழி அதுபோலத்தான். ஆனால் எண்ணிப்பார், அதை நுணுக்கமாக அறிந்தவர்கள் எல்லாரும் அதைச் சொல்லாக ஆக்கிக்கொண்டவர்கள்தான். அவர்கள் உருவாக்கிய சொற்களைக் கொண்டுதான் இன்று எவரும் காதலிக்கவும் காமம் கொள்ளவும் முடிகிறது. மிகச்சாமானியர்களுக்குக் கூட சினிமாப் பாடல்களாவது தேவைப்படுகின்றன”

“ஏன்?”

“ஏனென்றால் சொல்லாக ஆக்கிக்கொண்டதும் அந்த அனுபவநிலையை கடந்து விடுகிறோம். இன்னும் இன்னும் என்று மேலே தாவுகிறோம். சொல்லாக ஆக்கிக்கொள்ளாதவர்கள் முதல் வட்டப்பாதையிலேயே சுழன்றுகொண்டிருப்பார்கள்” என்று நான் சொன்னேன்.

அவளுடைய சிரிப்பு சட்டென்று என்னைச் சீண்டியது. “அத்துடன் நான் இலக்கியவாதிதான். நான் என்றோ ஒருநாள் ஒரு காவியம் எழுதுவேன். ஆகவே என் எல்லா அனுபவங்களையும் மொழியாக ஆக்கிக்கொண்டேதான் இருப்பேன்… உன் தலையெழுத்து. நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்.”

“காவியமா? நாவலைச் சொல்கிறாயா?”

“இல்லை, நாவலுக்கு மிகப்பெரிய எல்லை என்பது அது யதார்த்தத்தை சார்ந்திருக்கவேண்டும் என்பது. மாய யதார்த்தவாதமோ, மிகுகற்பனையோ எதுவானாலும் அதன் சித்தரிப்பில் உள்ளே யதார்த்தம் இருந்தே தீரும். அந்த யதார்த்தத்தை சுமப்பதனாலேயே அது முழுமையாகக் கவிதைநோக்கிச் செல்லமுடியாது. அது கவித்துவத்தை அடையலாம், கவிதையாக ஆகவே முடியாது… கவிதையாக ஆகாத எதுவும் காலத்தால் பழையதாக ஆகும். கவிதை மட்டுமே நிலைநிற்கும்…”

“அப்படியென்றால் நீ கவிதைகள் எழுதலாமே?”

நான் உடலை அணைத்திருந்த என் கைகளை விலக்கிக்கொண்டு மல்லாந்து படுத்தேன். மேலே சுழன்ற மின்விசிறியைப் பார்த்தபடி “இல்லை, கவிதை உண்மையில் நாவலைவிடவும் குறைவான இலக்கியவடிவம். கவிதைக்கு ஒரு பின்புலம், ஒரு reference field தேவைப்படுகிறது. அதைவைத்துத்தான் கவிதையை பொருள்கொள்ள முடிகிறது. ஒரு கவிதையை அதன் வரிகளை மட்டும்கொண்டு எவரும் பொருள்கொள்ள முடியாது.ஒரு கவிதை என்பது ஒரு பெரிய நாடகத்தின் ஒரு வசனம்போல. ஒரு பெரிய கதையின் ஒரு தனி நிகழ்வு போல. ஒரு பெரிய காவியத்தின் ஒரு படிமம் போல. அந்த ஒட்டுமொத்தமான பின்புலம் என்பது பெரும்பாலும் சமகாலத்தின் ஒட்டுமொத்தக் கவிதையுலகம்தான். அதில் அறிமுகம் கொள்வதுதான் கவிதையைப் பொருள்கொள்ள தேவையான பயிற்சி என்பது” என்றேன்.

“ஒரு மொழிக்கு அதற்கான கவிச்சூழல் உண்டு. நவீனக் கவிதைக்கு என்று உலகளாவிய கவிச்சூழல் உண்டு. அதில் நின்றுகொண்டுதான் தனிக்கவிதைகளைப் பொருள்கொள்கிறோம். அதனால்தான் நான்குவரிக் கவிதை என்பது நமக்கு அனுபவமாக ஆகமுடிகிறது. கவிதை அத்தனை சுருக்கமாக அமையமுடிகிறது. அது எதையும் சித்தரிக்கவேண்டியதில்லை. ஆனால் அதுவே கவிதையின் பலவீனம். அதற்கு வெளியே இருந்து பொருள் வந்தமைய வேண்டியிருக்கிறது.  அதற்கு தனக்கான தனிப்பின்புலம் இல்லை.  ஆகவே கவிதை தனக்கேயான புதிய பொருள் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியாது. திரும்பத் திரும்பச் சொல்கிறேனா?”

“இல்லை” என்றாள்.

“நீயே பார். பழங்காலத்தில் காவியங்கள் அல்லாத தனிப்பாடல்களின் திரட்டுகள் எப்படி இருக்கின்றன? கதாசப்தசதியின் எல்லா பாடல்களும் ஒன்றுபோலிருக்கின்றன. பழங்காலத்தின் கவிதைத்திரட்டுகளைப் பார்த்தால் ஒருவரோ ஒரு சிறு குழுவோ சேர்ந்து விவாதித்து எழுதியவை போலத் தோன்றுகின்றன. ஏனென்றால் அவற்றின் reference field ஒன்றுதான். அது அவர்கள் அனைவரும் சேர்ந்து இயல்பாகவே உருவாக்கிக் கொண்டது. ஒரு கவிதை இன்னொரு கவிதைக்கு reference ஆகும்போது அது திரண்டு வருகிறது. அதுதான் அத்தனை கவிதைகளுக்கும் அர்த்தத்தை உருவாக்குகிறது.” என் குரலே என்னை மேலும் பேசச்செய்தது.

“அந்த பின்புலத்தை ஆராய்ந்து, வகுத்து மெல்ல இலக்கணமாக ஆக்குகிறார்கள். அந்த இலக்கணம் அதன்பின் கவிதைகளுக்கு அர்த்தம் அளிக்கும் மாறாத சட்டகமாக நீடிக்கிறது. கதாசப்தசதியின் இலக்கணத்திற்கு தமிழில் தொல்காப்பியத்தைத்தான் பார்க்கவேண்டும். கதாசப்தசதி அப்படியே தமிழிலுள்ள சங்கப்பாடல்களின் பின்புலத்தில்தான் அமைந்திருக்கிறது. சங்கப்பாடல்கள் அகம்புறம் என பிரிக்கப்பட்டுள்ளன. அந்த அக இலக்கணம்தான் கதாசப்தசதிக்கு… அதை திணை சார்ந்து அப்படியே பிரித்து வகைப்படுத்த முடியும்.”

“இன்றைய நவீனக்கவிதைகள் அடங்கிய anthologyக்களைப் பார். அவையும் ஒரே கவிஞரோ ஒரு சிறுகுழுவோ எழுதியவை போல இருக்கின்றன. ஒரே text ஆக தோன்றுகின்றன. உண்மையிலேயே அவை ஒற்றை text தான். அவற்றுக்கு அடியிலுள்ள அந்த reference field தான் உண்மையான ஒற்றை text. இந்த ஒவ்வொரு கவிதையும் அந்த ஒற்றைநூலின் உறுப்பாக நின்றுதான் பொருளை உருவாக்குகின்றன.” என்று பேசிக்கொண்டே சென்றேன்.

“எத்தனைபெரிய அடிமைத்தனம். தங்கநகையில் பதிக்கப்பட்ட வைரம் அழகும் பொருளும் பெறுகிறது என்பது உண்மைதான். ஆனால் அது கட்டுண்டிருக்கிறது என்பதும் உண்மை. கவிஞனுக்கு தன் அகத்தை உருவாக்கும் சுதந்திரமே இல்லை. ஏற்கனவே தன் சூழலில் திரண்டுள்ள அர்த்தத்தை எடுத்துக்கொண்டு அதை தனக்கென சிறிது உருமாற்றுவதை மட்டுமே அவன் செய்யமுடியும். நதியை அள்ளி நதியிலேயே விட்டு சந்தியா வந்தனம் செய்யும் அந்தணனைப் போன்றவன் அவன். அவனைப்போல தன் சமகாலத்திற்குக் கட்டுப்பட்ட இன்னொருவன் இல்லை.”

“அந்த ஒட்டுமொத்த reference field அதாவது அந்த text காலத்தை கடந்து செல்லும். ஏனென்றால் அது மிகப்பெரியது, பலநூறுபேர் சேர்ந்து பல நூறாண்டுகளாக உருவாக்குவது. ஒரு பெருநதி அதன்மேல் விழுந்த அனைத்தையும் கொண்டுசெல்வதுபோல அது தன் தனிக்கவிதைகளையும் காலத்தை கடத்திக் கொண்டுசென்று சேர்க்கலாம். அப்படித்தான் அகநாநூறிலோ கதாசப்தசதியிலோ உள்ள பாடல்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. ஆனால் அவனுடைய குரல் அல்ல அது. அது காட்டின் ஓசை. தனி இலைகளுக்கு அங்கே குரலே இல்லை…”

“தனிப்பாடல்களை எழுதும் கவிஞன் பரிதாபமானவன்,  அவன் காவியத்தை உருவாக்கவில்லை என்றால் அவனுடையதென ஒன்று இங்கே இல்லாமலேயே போய்விட்டது என்றுதான் பொருள்” என் பேச்சின் விசையிலேறி நான் சென்றுகொண்டே இருந்தேன். “ஆகவே காவிய ஆசிரியனே மெய்யான கவிஞன். அவ  மட்டுமே முழுமையான கவிஞன். அவனுடைய முழு உலகையும் அவனே உருவாக்கிக் கொள்கிறான். ரகுவம்சத்தின் ஒரு பாடல் மொத்த ரகுவம்ச மகாகாவியம் என்னும் reference field ஆல்தான் பொருள்கொள்கிறது. ரகுவம்சம்தான் அந்த proto text, வேறொன்று தேவையில்லை. காளிதாசனின் இன்னொரு காவியம்கூட ரகுவம்சத்தின் ஒரு பாடலின் பொருள் உருவாக்கத்திற்கு அவசியமில்லை…”

“அதாவது, காவியம் எழுத முடிவெடுத்தாயிற்று?”

அந்தக் குரலில் இருந்த சிரிப்பால் நான் சீண்டப்பட்டு சொற்களின் விசை அடங்கி எரிச்சல்கொண்டேன். “ஏன் முடியாது என்று நினைக்கிறாயா?”

“சேச்சே, சும்மா சொன்னேன்…”

“சரி நீ சொல், நான்  ஒரு காவியம் எழுத முடியுமா முடியாதா?”

“முடியும்…”

“எப்படிச் சொல்கிறாய்?”

அவள் “அப்படித் தோன்றுகிறது” என்றாள்.

“என் வேகத்தைக் கண்டு சொல்கிறாய்… நான் எழுதிய ஒரு கவிதையைக் கூட நீ இதுவரை வாசித்ததில்லை…”

“நீ காட்டவில்லை”

“ஏனென்றால் நான் இதுவரை ஒரு கவிதையைக் கூட எழுதவில்லை”

“உண்மையாகவா?”

“நான் வடிவத்துக்காக பயிற்சி எடுத்திருக்கிறேன். கவிதை எழுதியதில்லை”

“ஏன்?”

”எதை எழுதினாலும் ஏற்கனவே எழுதியதைப் போலத் தோன்றுகின்றது. நான் நிறைய வாசித்துவிட்டேன்” என்றேன். “நான் என்னை கவிஞன் என எண்ணியிருப்பதுகூட இந்த பூமியில் எவருக்கும் தெரியாது. எவருக்கும் தெரியக்கூடாது என்ற எச்சரிக்கையே எனக்கு உண்டு.”

“இப்போது ஏன் சொல்கிறாய்?”

”தெரியவில்லை. காமத்திற்குப் பின்புதான் ஆண்கள் இப்படி அந்தரங்கமானவற்றைப் பேசுவார்கள் போல… எனக்கு இதுவரை இதுபோல இன்னொரு மனிதப்பிறவி அணுக்கமாக வந்ததே இல்லை… என் அம்மா, அப்பா எவருமே… இன்னொருவரிடம் முதல்முறையாக இத்தனை நெருக்கத்தை உணர்கிறேன். எதையுமே ஒளிக்கவேண்டியதில்லை என்று தோன்றுகிறது.”

”காமத்திற்குப் பின்பு மட்டும்தான் இல்லையா?”

“ஆமாம், அதில் என்ன தவறு? இது தசைகளின் இணைப்பு அல்ல. இப்படி ஒரு அந்தரங்கம் இன்னொரு உயிருடன் உருவாகுமா என்ன?”

”போதும், அதை வர்ணித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து தலைமயிரை சுழற்றிக் கட்டினாள்.

முழு நிர்வாணமாக இருந்தாள், அதைப்பற்றிய உணர்வே இல்லாதவளாக, அந்தச் சுதந்திரத்தை அவளுடைய ஒவ்வொரு உறுப்பும் கொண்டாடுவதாக.

“ஒன்று சொல்லவா?”

“என்ன?” என்று திரும்பி நின்று புன்னகைத்தாள்.

அப்போதுகூட அந்த தாய்மைச் சிரிப்பு எப்படி வருகிறது?

”இரண்டே இரண்டு தருணங்களில்தான் பெண்கள் பேரழகிகளாகத் தெரிகிறார்கள். ஒன்று உறவுகொண்டு, உச்சமடைந்தபின், வெட்கத்துடன் கண்களைப் பாதி தாழ்த்தி அரைமயக்கத்தில் படுத்திருக்கையில். இன்னொன்று, ஒன்றுமே நிகழவில்லை என்ற பாவனையில் எழுந்து விலகிச்செல்லும்போது…”

“சரிதான், அறிவு வழிகிறது…” என்றபின் அவள் கழிப்பறைக்குச் சென்றாள்.

நான் மின்விசிறியைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். மெய்யாகவே பொழிந்து தள்ளிவிட்டேன். அவளிடம் காவிய இயலை நிறையவே பேசியிருக்கிறேன். நான் ஒரு பேரறிஞன் என்று அவள் நம்புவதும் எனக்குத் தெரியும். ஆனால் எனக்குள் நான் ஒரு காவியகர்த்தன் என்ற எண்ணம் இருப்பதை நானேகூட சொல்லிக்கொண்டதில்லை. இதோ இவள் தனியறைக்குள் இருக்கையில்கூட இப்படி நிர்வாணமாக இருந்திருக்க மாட்டாள். ஆனால் இப்போது அத்தனை சுதந்திரத்தை உணர்கிறாள்.

அவள் திரும்ப வந்தபோது நான் அவளுடைய உடலையே பார்த்துக் கொண்டிருந்தேன். பால்வெண்மைநிறம். ஆண்மைச்சாயல் கொண்ட திரண்ட தோள்கள். ஆனால் பெரிய மார்புகளும் திரண்ட பின்பக்கமும் முற்றிலும் பெண்மை கொண்டவை. மகாராஷ்டிரப்பெண்கள் செங்கல்லின் சிவப்பு நிறம் கொண்டவர்கள். சிறிய எலும்புக் கட்டமைப்பும், கூரிய முகமும் ,சற்று ஆழமான கண்குழிக்குள் சிறு விழிகளும் கொண்டவர்கள். ராதிகாவின் கண்களுக்கு சற்று நீலநிறம் இருந்தது. அவளுடைய உடலின் கட்டமைப்பே பெரியது. கழுத்திற்குக் கீழே தோள் எலும்புகள் வலுவானவை. கைகள் திரண்டு உருண்டவை.

”உன் முன்னோர்களில் யாரோ காந்தாரம் வழியாக யவனநாட்டில் இருந்து வந்திருக்கவேண்டும்” என்று நான் சொன்னேன்.

“அடுத்து என்ன மானுடவியல் ஆய்வா?” என்று சிரித்தபடி வந்து என் அருகே படுத்துக்கொண்டாள்.

நான் அவளை அணைத்து அவளுடைய வெண்ணிறமான மார்புகளை அள்ளிக்கொண்டேன். அவற்றில் முகம் புதைத்தேன். சட்டென்று ஏதோ தோன்ற எழுந்து புரண்டு பக்கவாட்டில் இருந்த டீபாயில் இருந்து என் பால்பாயிண்ட் பேனாவை எடுத்தேன். “என்ன செய்யப்போகிறாய்?” என்று திகைத்தவள் போலக் கேட்டாள்.

“வியாசன் பெண்ணின் உடலை ஃபூர்ஜ மரப்பட்டையின் வெண்மைக்கு ஒப்பிடுகிறான்… பழங்காலத்தில் அதில்தான் எழுதினார்கள். பெடூலா என்பதுண்டு அந்த மரத்தை. Himalayan birch… திபெத் மடாலயங்களிலுள்ள பல ஏடுகள் அதில்தான் உள்ளன.”

அவளுடைய இடது மார்பின்மேல் நான் பேனாவால் எழுதினேன். அவள் “அய்யோ” என்று கூசி விலகினாள்.

“சும்மா இரு” என்றேன். மிக மெதுவாக ஓர் ஓவியனைப்போல எழுதினேன். அவளுடைய மென்மையான சருமம் புல்லரித்து அவற்றில் நீலநிறமான மயிர்கள் புள்ளிகளாகி எழுந்தன. மார்பின் காம்புகளின் தவிட்டு நிற வட்டத்தின் மேல் புள்ளிகள் எழுந்தன. நான் எப்போதுமே வயலட் நிற மையைத்தான் பயன்படுத்துவேன். அந்த எழுத்துக்கள் அவளுடைய மெல்லிய ரத்தக்குழாய்களால் ஆனவை போலத் தோன்றின.

நான் எழுதி முடித்ததும் அவள் ஓடிப்போய் கண்ணாடி முன்னால் நின்று தன் மார்புகளைப் பார்த்தாள். அவை திரும்பியிருந்தமையால் படிக்கமுடியவில்லை. ஓடிச்சென்று தன் கைப்பையில் இருந்து சிறு கண்ணாடியை எடுத்து அதை சரித்து அப்பிம்பத்தை பிடித்து அதில் படித்துப் பார்த்தாள். அவள் கண்களின் அசைவை, கருவிழிகள் உருள்வதை, முகம் உணர்ச்சிகொண்டு மாறுவதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

கண்ணாடியை தாழ்த்திவிட்டு அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் சிவந்திருந்தன, ஓர் உறவின் உச்சத்தை அடைந்ததுபோல. பின்னர் பாய்ந்து வந்து படுக்கையில் விழுந்து என்னை இறுகப்பற்றி மூச்சித்திணற முத்தமிட்டாள். பெண்ணில் எழும் சர்ப்பத்தை முன்பும் கண்டிருந்தேன். அது பாதாளப் பெருநாகமென ஆகும் என்று, அதன் நஞ்சும் மணியும் வெளிப்படும் என்றும் அப்போது அறிந்தேன்.

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2025 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.