இருளும் எரிசிதை ஒளியும் – கடலூர் சீனு
இன்னும் நிதானமாக எரிவேன்.
இன்னும் நிதானமாக
அழிவேன்.
_சோ.விஜயகுமார்_
மேற்கண்ட வரிகளை சமீபத்தில், குடித்தழியப் பிறப்பெடுத்த சருகு குப்பை ஒன்றின் வாயிலிருந்து உளறல் எனக் கேட்டேன். கண்ணீர் மல்க உளறிக் கொண்டிருந்தது அது. பாண்டிச்சேரி பகுதி பார்களில் அவ்வப்போது, எந்த வேலையும் செய்ய வக்கற்ற, (இளமையின் துடிப்பில் கற்ற இலக்கிய ஈடுபாடு சற்றே எஞ்சும்) 35+ வயது ஆசாமிகளை நிறைய காண முடியும். 25 வயது வரை படிப்பு அதற்கான வேலை என்று ஒரு ஓட்டம். இடையில் ஒரு வெட்டிக் கூட்டம் சேரும். படித்த கொஞ்சம் இலக்கியம். மட்டு மீறிய காமம், மட்டு மீறிய போதை, மட்டு மீறிய தன் முனைப்பு எல்லாம் சேர அவ்வளவுதான், ஒட்டுமொத்தமாக அதன் வாழ்க்கை அங்கேயே முடிந்தது. கல்யாணம் குடும்பம் பிள்ளை குட்டி எல்லா நிலவரமும் தடுமாற்றம், நிரந்தர வேலை இல்லை. இந்த இரண்டும் இல்லாது தொடர் போதை காமம் என்று அலைக்கழிந்து, நிறைவு கொண்ட இன்பம் என்பதையே அறியாது அப்படியே உதிர்ந்து மக்கி காணாது போகும் அந்த சருகு வாழ்வு.
எதையுமே செய்ய திராணி அற்ற அந்த வாழ்கையை வாழ அவர்கள் ஒரு நியாயம் சொல்வார்கள். எல்லா இலக்கியங்களும் வாசித்து விட்டேன். இலக்கியவாதி சொல்வது வேறு செய்வது வேறு. ஆகவே அவர்கள் போலிகள். லட்சியவாத களப் பணி என்பதெல்லாம் மற்றும் ஒரு அரசியல் ஏமாற்று. இப்படி துவங்கி நீளும் அந்த பட்டியல் வழியே சொந்த உறவு துவங்கி சமூக உறவு வரை அனைத்திலும் உள்ளார்ந்து இருக்கும் இந்த சுயநலம் சார்ந்த போலி தன்மையை இவர்கள் ‘ கண்டுபிடித்து ‘ விடுவார்கள். அதன் பிறகு ஒவ்வொரு கணமும் தங்களை சுற்றி நிகழும் எக்ஸ்ப்ளாய்டேஷனை இவர்களால் தாள முடியவில்லை என்றும், ஆனால் வேறு வழியே இன்றி இந்த வாழ்வை வாழ வேண்டி இருக்கிறது என்றும் ஆகவே தாங்கள் இவ்விதம் இருப்பதாகவும் கூறுவார்கள்.
அவர்களின் பாவனைகளை கழற்றி விட்டுப் பார்த்தால் அங்கே யதார்தமானதொரு சமூக சிக்கல் இருப்பதை அறியலாம். அந்த சிக்கல் 2000 துக்கு பிறகு உருவாகி இப்போது தீவிரம் கொண்டிருக்கிறது. 2000 பிறகு உலக பொருளாதார ஓடைகள் அதன் பல்வேறு முறைமைகளை இழந்து ஒற்றை வலதுசாரி பொருளாதாரம் என்று மாறி உலக நாடுகளின் பொருளாதார கட்டமைப்பு எல்லாம் அதை ஒட்டி வடுவமைக்கப்பட்டுவிட்டது. 2000 பிறகான பொருளாதார ஓட்டம் நுகர்வு வெறி கொண்ட இயந்திரமாக இயங்கும் ஒரு தனி மனிதனை அடிப்படை அலகாக கொண்டது. அதில் இறுதி கடை கோடி மனிதனும் சிக்கிய பிறகு, மனித அடிப்படை உணர்வான தோய்தல் இன்பம் எனும் நிலையை முற்றிலும் இழந்து விட்ட, நுகர்வு வெறி உணர்ச்சி மட்டுமே கொண்ட (கிட்டத்தட்ட ஜோம்பி) ஒரு பெரும்பான்மை கூட்டம் ஒன்று சமூகத்தின் அடித்தளத்தில் வலதுசாரி பொருளாதாரத்தின் அஸ்திவார அடிப்படையாக அதன் உபரி கசடாக சென்று படியும். (பத்து ரூபாய் ஜோம்பிக்கள் என்றே ஒரு கவிதை எழுதி இருக்கிறார் விஜய். ) மேற்கண்ட கவிதை வரிகளில் தோய்தல் எனும் மனித உணர்வை இழந்து விட்ட, நுகர்வு வெறி மட்டுமே கொண்டே அதை அறிந்த ஆனால் மீட்சி அற்ற ஒரு இயந்திரத்தின் சுய புலம்பலை கேட்க முடியும். அந்த வரிகளுக்கு மற்றும் ஒரு வாசிப்பும் உண்டு. ஒரு கவிதை எழுதப்பட்டுக்கொண்டு இருக்கும் அக்கணம் அது இனிது எனில் கவிஞன் பூ போல மெல்ல மெல்ல மலர்ந்துகொண்டு இருக்கிறான். துயரம் எனில் அக்கவிஞன் மெல்ல மெல்ல எரிந்து கொண்டு இருக்கிறான். இனிதோ துயரோ அக்விதை எழுதி முடிக்கப்பட்டதும் வாடிய பூ இனி மலராது என்பதை போல, சாம்பல் இனி தழலாகாது என்பதை போல கவிஞனுக்குள் முற்றிலுமாக ஒன்று முடிந்து போகிறது என்று டி எஸ் எலியட் சொல்கிறார். இந்த புள்ளியில் வைத்து மேற்கண்ட வரிகளை கவிஞன் கொண்ட படைப்பு தொழிலின் கணத்துடன் பொருத்தியும் பொருள் கொள்ள முடியும். அந்த வகையில் கடந்த கால் நூற்றாண்டு கால தமிழ் சமூக அடித்தளத்தில் படிந்த உபரி கசடுகளின் குரல் என்றும், எழுந்து வரும் புதிய கவிக் குரல் எனவும் சோ.விஜயகுமார் கவிதைகளை சொல்ல முடியும்.
_அந்தத் தெருவில்_
அந்தத் தெருவில்
நின்று கொண்டிருக்கிறேன் மழை பெய்கிறது.
ஒரு காதலைப் போல
ஒரு அழுகையைப் போல ஒரு முத்தத்தை போல
என்றெல்லாம் எழுதலாம்தான்
கவிதைக்கு ரொமான்டிசைஸ் ஆடம்பரம்.
அந்தத் தெருவில்
நின்று கொண்டிருக்கிறேன் மழை பெய்கிறது.
யாரோ ஒரு மூன்றாம் நபர் போல
நான் யாரோ ஒரு அன்னியன் என்பதைப் போல
முன்னாள் காதலைப் போல
மூர்க்கமான காமத்தை போல
என்றாலும் கவிதையில் யாருடைய சாயலும் வரக்கூடாது.
மழை பெய்கிறது மழையைப் போல என்றாலும்
உள்ளதைச் சொல்ல கவிதை எதற்கு
அந்தத் தெருவில் நின்று கொண்டிருக்கிறேன்
அதே பழைய மழை
அதே பழைய தெரு
புதிதாய் ஏதுமில்லை
என்றாலும் மழை பெய்கிறது சாலையெல்லாம் மூத்திர வாசம்.
__________
மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கும் கவி விஜயகுமாரின் முதல் தொகுப்பான ஒரு ஸ்க்ரோல் தூரம் தொகுப்பில் உள்ள கவிதை இது. (தலைப்பிலேயே காண்டம்பிரரி லைஃப் இல் நின்றாக வேண்டும் என்ற கவியின் தவிப்பு துலங்கி விடுகிறது.) வாசித்த முதல் பார்வையிலேயே தென்பட்டு விடும் இது சுந்தர ராமசாமி உலகை சேர்ந்த கவிதை என்பது. சு ரா கவிதைகளின் வடிவத்தை மிகப் பொதுவாக வரையறை செய்தால், அதில் ஒரு எதிரிடை, ஒரு மைய விஷயம், அந்த விஷயம் கொண்ட குணம், அந்த விஷயம் கிளர்தும் தாக்கம் இந்த நான்கும் இருக்கும். கூடவே விமர்சனமும். சுரா கவிதை ஒன்றில் வானம் தரைக்கு வரும். தரைக்கு வந்த மறு கணமே அது கழிப்பறையை தேடி ஓடும். இந்த வானம் பூமி போல அதே எதிரிடயை இந்த கவிதையிலும் காணலாம். கற்பனைக்கும் யதார்ததுக்கும் ஆன எதிரிடை.
மேற்கண்ட கவிதையிலேயே, எல்லாம் சொல்லபட்டுவிட்ட மழையை அதன் ஆடைகளை களைந்து அதே பழைய மழையாக மீட்டுறுவாக்கம் செய்யும் கவிஞரின் யத்தனமும் புலப்படுகிறது.
இப்படி இரு குரல்கள், நிழலை ஏந்தி நிற்கும் கண்கள்,யாரும் கேட்கப் போவது இல்லை, போன்ற கவிதைகளில் மனுஷ்ய புத்திரன் கவிதை உலகின் தொடர்ச்சியாகவும், டூ மினிட்ஸ் அக்கா, ஓம்மாள சித்தர் கவிதைகளில் இசை கவிதை உலகின் தொடர்ச்சியாகவும் விஜயகுமார் இயங்குகுரார். அதே சமயம் அக்கவிதைக்குள் தனக்கே உரிய மெல்லிய ஒரு விலகலையும் காட்டுகிறார். உதாரணம் ஒம்மாள சித்தர் கவிதை. அது இசை கவிதை உலகை தொடர்ந்து வந்தாலும், கவிஞர் இசைக்கு ஒரு ஜெண்டில் மேன். பாய்ஸ் ரசிகர்களை விட கேர்ள்ஸ் ரசிகர்கள் அவருக்கு அதிகம் என்பதால், ஒம்மாள சித்தர் கவிதையில் வரும் அளவு பேட் வேர்ட்ஸ் களை அவர் யூஸ் செய்ய மாட்டார். இப்படி சில பகுதிகளுக்கு சென்று பார்க்கும் விஜயகுமார், வாஸ்கோடகாமா, மாலுமி போன்ற கவிதைகளில் விசித்திர உலகங்களையும் உருவாக்கிப் பார்க்கிறார்
_தோலுரித்த கனவு_
நானென்பது
தனது பசிக்கு தன்னையே தருகிற
பாம்பின் வால்.
நீயேன்பது
ஈன்றபசிக்கு அழிந்து போகும்
அதிர்ஷ்டமில்லாத முட்டை.
வாலுமில்லை நீயுமில்லை
சிற்றெரும்புகளின் நூறு வாய்களாய்
சிதறிக்கிடக்கிறது
தோலுரித்த கனவு.
__________
மேற்கண்டது போல சில கவிதைகளில் ஹோண்டிங் ஆன படிம உருவாக்கங்களையும் நிகழ்த்திப் பார்க்கிறார்.
_இரு வேறு இலைகள்_
ஒரே மரத்தில் இரு வேறு இலைகள்
அப்படி துடித்து அசைகின்றன
ஆயுளுக்கும் அவை சந்திப்பதே இல்லை.
___________
மேற்கண்டது போன்ற கவிதைகளில் முயற்சிகள் அனைத்தையும் உதறி எளிய கூறுமுறைக்குள் சென்று பார்க்கிறார்.
எல்லாமே அப்பா சட்டையை குழந்தை போட்டு பார்க்கும் குதூகலம்தான். குழந்தை “புத்தம் புதிதாக” அந்த சட்டைக்குள் இருக்கிறது. இந்த தொகுப்பில் எதை எப்படி எழுதுவது என்று கவிஞர் கொண்ட தவிப்பு எல்லாம் 2000 பிறகு கவிதை எழுத வரும் எல்லா கவிஞரும் வந்து விழும் இடர்தான். எல்லாமே சொல்லப்பட்டு விட்டது இனி எதை சொல்வது என்றபடி ஒரு தயக்கம். தான் சொல்வதற்கு வாழ்க்கை தருணங்கள் இருக்கிறது, ஆனால் அந்த தருணங்கள் நிற்கும் சாரம்சமான வாழ்வு எது? அதன் மீதான குழப்பம்.
ஆதி பழங்குடி வாழ்வில் தனிமை கொண்ட மனம் என்று ஏதும் இல்லை. எல்லோரையும் கட்டி வைக்கும் சடங்கு கலைகள் கொண்டது அது. மிக மிக பின்னர் வந்த பக்தி இயக்கம் சமூகத்தின் கடைக்கோடி மனிதனையும் சென்று தொட்டது. இப்படி காங்கிரஸ் இயக்கம், தனி தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், கம்யுனிஸ்ட் இயக்கம், தலித் இயக்கம் என தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் சமூகத்தின் கடைக்கோடி மனிதனையும் குறி வைத்து இயங்கியது. 2000 பிறகு இத்தகு விஷயங்களின் தொடர்ச்சியில் இனி நிறவவே முடியாது எனும் படிக்கு ஒரு பெரிய அகழி விழுந்து, அந்த அகழிக்கு அந்தப் பக்கம் எவராலும் வந்து தொட முடியாது சிக்கிக் கொண்ட ஒரு சமூகம் உருவானது. இந்தத் தொகுப்பை எழுதிப் பார்த்து, அதன் வழியே அகழிக்கு அந்தப் பக்கம் இருக்கும், பசி காமம் சாவு தவிர வேறு எதுவும் சென்று தொடாத அந்த சமூகத்தின் குரலாக விஜயகுமார் தன்னைக் கண்டடைந்து கொண்டார் என்பதை இந்த தொகுப்பில் உள்ள சில கவிதைகள் வழியே அறியலாம் உதாரணமாக கீழ்கண்ட இந்த கவிதை.
_வானதைப் பார்ப்பது_
ஒட்டிய வயிறு உடையவர்கள்
நிலத்தில் நின்றபடி அண்ணாந்து பார்க்கிறார்கள்
சில சமயங்களில் நம்பிக்கை மேலிருந்து விழுவது.
அந்த விடுதியில் மூர்க்கமான புணர்ச்சிக்குப் பிறகு
மறக்க விரும்புகிற முகத்தை
நட்சத்திரங்களில் தேடி கொள்கிறாள் ஒருத்தி.
தூக்குக் கயிற்றை மாட்டியயவனின் கண்களும்
மேல் நோக்கியே இருந்தன வானத்தைப் பார்ப்பது ஒருபோதும்
வானத்துக்காக அல்ல.
__________
2000 வருட செழுமை திகழும் மொழியில் வந்த எல்லாமே சொல்லப்பட்டு விட்டது என்று மயக்கத்தை அது அளித்தாலும், அவற்றால் கவிதையை காலாவதியாக்கிவிட முடியாதபடிக்கு, கவிதைக் கலையை அவ்வாறே நீடிக்கச் செய்யும் அம்சம் எது? முதலாவது இந்த கணத்தில் நிகழும் வண்ணம் கவிதை கொண்ட உடனடி தன்மை. இரண்டாவது கல்ப காலம் கொண்டு உறைந்த அதே வைரம்தான் ஆனால் ஒவ்வொரு முறை அதை புரட்டும் போதும் அது சிதறடிக்கும் ஒளி புதியது என்பது போல, கவிதை வெளிப்படுத்தும் என்றும் உள்ள அகவய உணர்வின் புத்தம் புது வெளிப்பாடு,மூன்றாவது கவிதை என கிளர்ந்து எழும் உண்மையின் தீவிரம்.
இந்த மூன்றும் கூட, எப்படிச் சொல்வது எனும் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற கவிதைகள் நிறைந்த தொகுதி என்று விஜயகுமார் எழுதிய இரண்டாவது தொகுப்பான சிற்றெறும்பின் நிழலில் கவிதை தொகுப்பை சொல்லலாம்.
(அதில் சில கவிதைகளை ஈரோடு கிருஷ்ணன் பகிர்ந்து விட்டதால் அவர் பகிராத சில கவிதைகளை இங்கே பகிர்கிறேன்)
_என் கனவுகளைக் காகங்கள் அடைகாத்தன_
குப்பைத்தொட்டியிலிருந்து ஒரு காகம் என்னை எட்டிப் பார்த்தது.
காகங்கள் கவனிக்கப்படுவதில்லை.
குப்பை தொட்டியிலிருக்கும்
கைவிடைப்பட்ட கனவுகளை காகங்கள் உண்கின்றன .
தன் ஒற்றைக் கண்ணால் உன்னிப்பாக பார்த்தபடி
கூரிய அலகால் கொத்திக் கொத்தித் தின்றபடி
கையறு நிலையின் ஊன் ருசியை காகங்கள் நன்றாய் அறியும்
என் கனவுகளைக் காகங்கள் அடைகாத்தன.
_________
அடிப்படையில் காகங்கள் மிச்ச மீதி கழிவுகளை உண்டு வாழ்பவை.
அப்படிப்பட்ட மிச்ச மீதி கனவுகள் அது.
அந்த கனவுகளும் அடை காப்பது என்பதை அறியா காகங்கள் அடை காப்பது.
காகங்களை மூதாதை என்று கொண்டால் அது அறியும் கையறு நிலையில் ஊன் சுவை என்னும் சித்திரம்… பித்ரு ரூபதுக்கு பதிலாக அந்த காக்கை நுகர்வு வெறி ஊட்டும் காரணிகளுக்கு குறியீடாக மாறினால்?
_ஊளை_
நான் வேட்டை மிருகம் வேட்டை என் சுபாவம்.
எனது வனத்தின் நீண்ட இருள் என் சாசுவத துக்கத்தால் பாவப்பட்டது
என் பசி வயிற்றிலிருந்து உதிப்பதல்ல
என் வேட்டை பசிக்கானதுமல்ல
என் வேட்டைப்பொருள் நீ
நீ வேட்டையைப் பழகுவதற்காகவே ஊளையிட்டுத்திரியும் மிருகம் நான்.
_______
மனிதன் விலங்காகித் திரியும் யுகத்தில்
//என் பசி வயிற்றிலிருந்து உதிப்பதல்ல
என் வேட்டை பசிக்கானதுமல்ல//
எனும் வரிகள் கிளர்த்தும் கற்பனை சாத்தியங்கள் துனுக்குரச் செய்வது.
_அல்லால்_
ஒரு இரவில் மயானத்தில் தனியாக எரியும் பிணத்தருகே
ஒரு குவார்ட்டரை ராவாகக் குடி
பொசுங்கிய பூவிற்கு உன் காதலைச் சூடு
இழந்த எல்லா உறவுகளுக்கும் சேர்த்து மாரில் அடித்து அழு
நாயோடு சேர்ந்து தீனமாய் ஊளையிடு
செய்த எல்லாப் பாவங்களுக்கும்
துடித்து எழும்பும் காலைப் பிடித்து மன்னிப்பு கேள்
ஆசைகளை எரிசுள்ளியால் அடித்து அழி
உடைகளை சிதையில் எரித்துவிட்டு
அந்தப் பிணத்திற்கு உன் பெயரை வை
பாரம் இறங்கியதென நம்பினால்
அம்மணமாய் வீடு திரும்பு
அல்லால் சிதையில் ஏறி அமர்.
_________
இங்கே எழுவது கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் தனது துரோக உலகுக்குள் திரும்பும் சராசரியின் குரல் அல்ல, உறவுகள் எவரும் இன்றி தனித்து எரியும் அனாதை பிணம். அதனிடம் சொல்லி கழுவாய் தேடும் கவிஞனின் குரல். இந்த காலத்தின் கவி இந்த காலத்து வாழ்வை முன்னிட்டு தனக்குத் தானே நெஞ்சோடு புலத்தல் தான் இது.
_கண்ணாடி_
பிம்பத்தின் ஆழத்தை அறிய அதன் விளிம்பினை ஒற்றை விரலால் தடவிப்பார்க்க வேண்டும் எவ்வளவு ரத்தம் பீறிடுகிறோதோ அவ்வளவுதான் கூர்மை எவ்வளவு ஆழமாய் கீறுகிறதோ அவ்வளவுதான் அணுக்கம்
கண்ணாடி உக்கிர வெப்பத்தில் உருத்திரண்ட மணல் துகள்கள்
மனதோ அழிவதற்காகவே ஆக்கப்பட்ட சாபத் திரட்டு.
________
எப்படிச் சொல்வது எனும் கலையில் தேர்ந்த கவிதை மேற்சொன்னது.
_நைனா சிகரெட்_
ஊர் தவறாது திருவிழாவில் கடைபோடும் ஒண்டிக்கட்டை நைனாவிற்கு
சிகரெட் டீ கட்டிங் சாப்பாடென வாங்கித்தர ஏழெட்டு பிள்ளைகள்
ஒரு சிகரெட்டை தத்துகொடுத்து நானும் நைனாவைத் தத்தெடுத்தேன்
அவருக்கிருக்கும் ஏழெட்டு பிள்ளைகளில் நான் சிகரெட் பிள்ளை
அன்றாடம் வாங்கும் பத்து சிகரெட்களில் ஒரு சிகரெட் நைனா சிகரெட்.
________
நேரடியாக சொல்லப்பட்ட ஆனால் நுட்பம் பொதிந்த கவிதை. சிகரெட் என்பது என்ன? ஒரு விதமான சுய கொள்ளி தானே. விரும்பி ஈடுபடும் சிறிய அளவிலான சுய அழிவு. அப்படி சுய அழிவின் மெல்லிய சுகம் கண்டு, அதையே பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் அளித்துக் கொள்ளும் தந்தை மகன் உறவாக கண்டு இணையும் இருவர்.
விஜயகுமார் எழுதிய மூன்றாவது தொகுப்பு அம்மாவுக்கு ஒரு கண்ணில் பூ. அம்மா குறித்த ஹான்டிங் ஆன சித்திரங்கள் பலவற்றை வெய்யில் எழுதி இருக்கிறார். இந்த தொகுப்புக்கு முன்பாக அம்மாவை மலைப்பாம்பு பார்த்துக்கொண்டு இருந்தது எனும் தலைப்பில் கவிஞர் கதிர் பாரதி எழுதிய தொகுப்பு உண்டு. அவற்றிலிருந்து விஜயகுமாரின் தொகுப்பு எங்கே வேறுபட்டு தனித்துவம் கொள்கிறது? அது தலைப்பிலேயே துவங்கி விடுகிறது. கதிர் பாரதி தொகுப்பின் தலைப்பில் மலைப்பாம்பு வருகிறது. அணிகள் அலங்காரங்கள் என மரபு கவிதைகள் போலவே நவீன கவிதைகள் தன் மேல் போர்த்திக்கொண்ட பல்வேறு விஷயங்கள் உண்டு. அவற்றை உதறி எழுந்த கவிதைகள் அடங்கியது அம்மாவுக்கு ஒரு கண்ணில் பூ தொகுப்பு. தலைப்பிலேயே அதன் நேரடி தன்மை துவங்கி விடுகிறது.
எனது இடையீடு என ஏதும் இன்றி அந்த தொகுப்பின் கவிதைகள் சிலவற்றை கீழே தருகிறேன்.
***
பித்தவெடிப்பில்லாமல் அம்மாவின் கால்களைக் காணமுடியாது.
அவளால் மருதாணி வைத்துக்கொள்ள முடியாது.
மாதம் ஒருமுறைதான் தலைக்குக் குளிப்பாள் என்பதால் எண்ணெய்ச்சிக்கான கூந்தலை அவளால் சிலுப்பிவிட முடியாது. வசீகரத்திற்கான எந்த அலகுகளுக்குள்கும் அடங்காதவள் அம்மா.
அம்மா என்பதாலேயே வசீகரமாய் இருந்தாள்.
***
எந்த வாசனை திரவியத்திற்கும்
அடங்காத உடல் வாசனை அம்மாவுடையது
அவளின் வாசைனையை
அப்படியே தவிட்டுப்படியெடுத்துப் பிறந்தவன் நான்
நாங்களணிந்த ஆடைகள்
வண்ணம் பூசப்பட்ட தவிட்டுக் கோணிகள்
நாங்கள் தறிகெட்ட தவிட்டு மூட்டைகள்
***
ஒருமுறை பிடிவாதம் பிடித்ததற்காய் விறகைக்கொண்டு சூடு போட்டாள்
பின் அவளேதான் கண்ணீர் மல்க மருந்து போட்டாள்
நேசம்போன்று நோகடிக்கும் ஆயுதமில்லை
இந்த வரி அந்தத் தழும்பு பரிசளித்தது.
***
வீட்டின் சமையலறையில் பாதி டம்ளர்களால் நிறைந்தவை.
காபி பருக ஒரு டம்ளர்
நீரை சூப்பிக்குடிக்க ஒரு டம்ளர்
ஊதுபத்தியை சொருகுவதற்கென
அரிசி நிறம்பிய ஒரு டம்ளர்
பல்லியும் தேளும் குடித்தனம் நடத்த சில டம்ளர்
வலிப்பில் நெளிந்த வளையல்களை
ஒடுக்கெடுத்து மீண்டும் வட்டமாக்குவதற்கென டம்ளர்
வலிப்பின்போது
அவள் உதட்டை கிழிக்காதபடி
நீரைத் தர தோதான ஒரு டம்ளர்.
***
அடிக்கடி கண்களைக் சுருக்கிக் கையை சட்டென இழுத்துக்கொண்டு பற்களை நறநறவென கடிப்பதும் வேண்டாமென்பதற்குக் கைகளை வேகவேகமாக ஆட்டுவதும்
தண்ணீரைக் குடிக்கும்போது மடித்த கையின் முஷ்டியை நெஞ்சருகே வைத்துக்கொள்வதும் தும்மல் வரும்போதெல்லாம் இல்லாத இறைவனை பெயரிட்டு அழைப்பதும் அம்மாவின் அனிச்சைச் செயல்கள்
வலிப்பின்போது உதட்டில் வரும் ரத்தத்தை துப்பாமல் முழுங்குவதும்.
***
எங்களுக்கு பூர்வீக நிலம் கிடையாது
தோட்டத்துச் செடியிலிருந்து அள்ள
மண்ணும் கிடையாது
தொலைதூர ஊருக்கு
வேலைக்குச் செல்லும்போது
நான் காபித்தூளை எடுத்துச் சென்றேன்
அம்மாவின் நியாபகம் வரும்போதெல்லாம்
என் பர்சைத் திறந்து
நான் அந்தக் காபித்தூளை முகர்ந்துகொள்வேன்.
***
பிளக் பிடுங்கப்பட்ட ரோபோபோல வலிப்பு வரும்போதெல்லாம் நிலத்தில் வீழ்வாள் அம்மா
நான் கண்ட கனவில் அம்மா மெத்தையாலான நிலத்தில் வீழ்ந்தாள்
அப்படித்தான் முதன்முதலாக அவள் என் கனவிற்குள் வந்தாள்.
***
என் கவிதை என்பது வலிப்பின்போது என் அம்மா முனகும் அந்தப் புரியாத வார்த்தைகள்
என் அம்மாவிற்கு புரியும்படி சொல்லத் தெரியாமல் நான் தவிர்த்த வார்த்தைகள்
***
விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளில் நான் கண்ட பல பல்லவர் கால கொற்றவை சிலைகள், விவசாயம் உள்ளிட்டு எதன் பொருட்டோ பூமியை தோண்டும் போது அதன் அடியில் இருந்து எழுந்து வந்தவை. சென்னை (புரசைவாக்கம் என்று நினைக்கிறேன்) அங்கே பொன்னியம்மன் கோயில் உண்டு. கிணறு தோண்டுவதற்கான முயற்சியில் பாதாளத்திலிருந்து கிடைத்த தெய்வம் அவள். ஆகவே அவளுக்கு பாதாள பொன்னியம்மன் என்று பெயர் வைத்து விட்டார்கள். அப்படிப்பட்டவள்தான் விஜயகுமாரின் தொகுப்பில் வரும் இந்த அம்மாவும். தமிழ் பண்பாட்டை தோண்டி பார்த்தால் எல்லாவற்றுக்கும் கீழே இருக்கக்கூடிய தாய்வழி சமூகத்தின் அன்னைதான் அவள். பிரிட்டனின் பதினெட்டாம் நூற்றாண்டு கோதிக் இலக்கியத்தில், அந்த வகை மாதிரி கிறிஸ்துவ பண்பாட்டை தோண்டி பார்க்க, அதன் அடியிலிருந்து கிறிஸ்தவ பண்பாட்டால் புதைக்கப்பட்ட பாகனிய தெய்வங்கள் சாத்தானின் உருவம் கொண்டு வெளியே வந்தனர். அப்படி கண்ணில் பூ விழுந்து, சிக்கு மண்டயுடன், எத்து பற்களுடன், சூம்பிய கை கால்களுடன் உருமாறி வந்திருக்கும் பண்டைய தாய் வழி சமூகத்தின் இன்றைய அம்மா தான் அவள். அங்கே கையறு நிலையில் நிற்கும் மகனாக நின்று வாசகன் காணும் அம்மாவின் சித்திரம் எல்லாம் அந்த ஆதி தாய் கொண்ட இன்றும் எஞ்சும் அவளது கண்ணீர்தான் அந்தத் தொகுப்பில் எழுந்து வரும் துயரமும் கரிப்பும், இந்த சாராம்சமான ஆழம் கொண்ட பண்பாட்டு துயரிலிருந்து வெளியாவது தான்.
தீவிர இலக்கியத் தமிழ்க் கவிதை மரபில் எழுந்து வரும் சோ. விஜயகுமார் என்ற இந்த புதிய குரல், மனுஷ்யபுத்திரன் பட்டறையில் இரந்து வெளி வருவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழ் சமூக வரலாற்றில் பக்தி இயக்கம் துவங்கி பல்வேறு இயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தை கட்டமைக்க இயங்கிய நிலையில், அதே நோக்குடன் பாரதி வழியே துவங்கிய நவீன தமிழ் இலக்கிய இயக்கம் மெல்ல மெல்ல பொது சமூக களத்தை விமர்சித்து விமர்சித்து தன்னைத் திரட்டி, எழுத்து முதல் பல்வேறு சிற்றிதழ் இயக்கம் வழியே கிட்டத்தட்ட பொதுவில் இருந்து துண்டித்துக்கொண்டு தனித்ததொரு இயக்கமாக செயல்பட்டது. தமிழ் சமூகதின் கலை, அறிவு, விழுமியங்கள், அறங்களை வரையறை செய்யும் அடிப்படை மையமாக மாறியது. அப்படி உருவானவை அங்கிருந்து சென்று பொது தமிழ் சமூகத்தில் சென்று கலக்க, தீவிர தமிழ் இலக்கிய இயக்கம், பொது நீரோட்டத்தில் இருந்து தன்னை துண்டிந்துக் கொண்ட நிலையே பெரும் தடையாக அமைந்தது. இந்த தடையை கடக்கவே க நா சு இலக்கியத்துக்காக ஒரு இயக்கம் என்ற கனவு கண்டார். சுந்தர ராமசாமி அதற்கு முயன்றார். இந்த தடையை முதன் முதலாக மூர்க்கமாக மோதி உடைத்தவர் ஜெயகாந்தன். வெகு மக்கள் வழியே உரு திரளும் கலாச்சாரத்தில், சீரிய தமிழ் எழுத்தாளன் என்பவன் யார், சீரிய இலக்கியம் என்பது என்ன? அதன் விழுமியங்கள், அறம், லட்சியவாதம் என அனைத்தையும், பொதுக் களத்தில் அதற்கான இடத்தை தனது ஓங்கிய குரல் வழியே உறுதி செய்தார்.
ஒவ்வொரு கால் நூற்றாண்டுக்கும் நிகழும் செயல்பாடு இது. தீவிர இலக்கியம் கண்டடைந்தவற்றை எவரேனும் ஒரு இயக்கமாக செயல்பட்டு அதைக் கொண்டு வெகு மக்கள் வழியே திரளும் கலாச்சாரத்தின் சேர்ப்பார்கள். எழுத்தாளர் சுஜாதா செய்தது அதைத்தான். அவருக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் யார் என்று கேட்டால் சுந்தர ராமசாமி நீல பத்மநாபன் என்று தான் சொல்வார். தீவிர இலக்கியத்தில் இருந்து மனுஷ புத்திரனை வெகுமக்கள் களத்துக்கு அடையாளம் காட்டியவரும் அவர்தான். 2000 துவங்கி மனுஷ்ய புத்திரனின் இலக்கியக் களச் செயல்பாடு மிகத் தீவிரமானது. தீவிர இலக்கியதின் எல்லா கூறுகளையும் எல்லா முக்கிய கதை கவி ஆளுமைகளையும் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் வெகு மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார்.
ஒவ்வொரு கால் நூற்றாண்டிலும் அந்தந்த காலத்தின் தீவிர இலக்கியம் கண்டடைந்த கூறுகள் வெளியே பரவலாக்கம் கண்டு அது சகஜம் என்றானவுடன், உள்ளே புதிய நோக்குகள், வகை மாதிரிகள் இங்கு தீவிர இலக்கிய களத்தில் தோன்றும். உண்மையில் தீவிர இலக்கியத்தில் சிக்கல் வாய்ந்த இடம் இதுதான். சாமியார்களில் ஒரு சாமியார் முளைத்த இடத்தில் அவரை மறைத்து நூற்று பத்து போலி சாமியார்கள் முளைப்பதை போல, தீவிர தமிழ் இலக்கியத்திலும் இந்த இடைவெளியில் கணிசமான போலிகள் தோன்றும். விநோதமான மோஸ்தர்கள் எல்லாம் தோன்றும் பின் நவீனத்துவம் போல. துர் விதியாக அவற்றில் பல நிலைபெற்றும் விடும். உதாரணம் யவனிகா ஶ்ரீராம். இது ஒரு தொடர் செயல்பாடு. விட்டு விலகா தொடர் விதி. இந்த வருடம் வெளியான சசி இனியன் என்பவர் எழுதிய நீலி வனம் தொகுப்பு வரை (சமயற்கட்டில் குக்கரில் விசில் அடித்தால் கூட நீலி வன கவிஞருக்கு தத்துவத் தவிப்பு வந்துவிடுகிறது) , தொடர்வது தீவிர தமிழ் இலக்கியத்தை பிடித்த அதன் உயிர் மையத்தைக் காயடிக்க முனையும் இந்த சீர்கேடு.
இந்த சூழலில்தான் இளம் கவிஞர்களுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுகள் முக்கியத்துவம் கொள்கிறது. இதுவரை இந்த விருது பெற்ற கவிஞர்கள் எவரும் உள்ளடக்கத்தில் போலி இல்லை என்பதே இந்த விருதுகள் வழியே அடையாளம் காட்டப்படும் இவர்களின் முதல் தகுதி. இந்த விருது பெற்ற ஒவ்வொருவரின் கலை நோக்கும் இன்னும் கால் நூற்றாண்டு கழித்து வெகு மக்கள் பண்பாட்டில் கலக்கும் எனில், அது தீவிர இலக்கியம் தனது மையத்தில் என்றென்றும் கொண்டிருக்கும் உண்மையின் தீவிரதின் பதாகை என்றே அவை அமையும். அந்த வகையில் இவ்வாண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெறும், மனுஷ்ய புத்திரன் அவர்களின் இளவலும், இளம் கவிஞருமான, பிரியத்துக்குரிய நண்பர் (என்னைப்போலவே) என் தட்டுக்கெட்ட தவிட்டு மூட்டைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

