ஆழத்துச் சுழி
எர்ணாகுளம் நகர்தான் என்னுடைய இரவு நாவலின் கதைக்களம். நான் பலமுறை வந்து தங்கியிருக்கும் நகரம், ஆனால் அதெல்லாம் முப்பதாண்டுகளுக்கு முன்பு. அப்போது இது இரட்டைநகரம், எர்ணாகுளம், கொச்சி. சொல்லப்போனால் மூன்று ஊர். திருப்பணித்துறையை ஒரு உபக்கிராமம் என்று இணைத்துக்கொள்ளலாம். இன்று இவையெல்லாம் இணைந்து ஒற்றைப் பெருநகரமாக ஆகிவிட்டிருக்கின்றன. பழைய கொச்சி ஒரு கசகசவென்ற துறைமுகம். கரிமீன் பிடிப்பது ஒரு முக்கியமான தொழில்.
இந்நகரெங்கும் நரம்புவலைபோல சிற்றோடைகள் பரவியிருக்கும். அவற்றினூடாக சிறிய படகுகள் சென்றுகொண்டிருக்கும். 1970 வரைக்கும்கூட துறைமுகத்திற்கு வரும் சரக்குகளில் பெரும்பகுதி படகுகள் வழியாகவே வந்தன. வளைவான பனம்பாய்க் கூரையிடப்பட்ட மரப்படகுகளை நீளமான கழிகளால் உந்தி முன்தள்ளி கொண்டு வருவார்கள். ‘கழைக்காரன்‘ என்று படகோட்டியின் பெயர். ஆலப்புழை உட்பட்ட ஊர்களில் இருந்து ஒரு ரூபாய் கொடுத்தால் அப்படகிலேயே கொச்சி வரமுடியும். படகிலேயே மீன்சோறு சமைத்து தருவார்கள். தூங்கலாம், ஆனால் காற்று நின்றுவிட்டால் கொசு பிடுங்கும். இருபக்கமும் ஒழுகிச்செல்லும் நிலம் என்பது தென்னை மரக்கூட்டங்கள் மட்டுமே. நடுக்காயலில் படகில் இருந்து பார்த்தால் செறிந்த புல்பத்தை போலவே தோன்றும்.
இன்று எர்ணாகுளம் ஒரு நவீன ஐரோப்பிய நகரம் போலுள்ளது. எங்கு பார்த்தாலும் புத்தம்புது ஆடம்பர அடுக்குமாடிவீடுகள், பங்களாக்கள். சாலையில் செறிந்தோடும் வண்டிகள். கடைகள், உணவகங்கள், பல்வேறு வகையான சேவைப்பணிகளை அளிக்கும் நிறுவனங்கள். ஒவ்வொரு வீட்டிலும் நாலைந்து கார்கள் இருப்பதை நடைசெல்லும்போது பார்க்கிறேன். பெரும்பாலான இடங்களில் ஒருவகையான அமைதியான நுகர்வு வாழ்க்கை இருப்பது தெரிகிறது. இங்கே எந்தத் தொழிலும் வீச்சுடன் இல்லை. மலையாளிகள் சம்பாதிப்பதெல்லாம் கேரளத்துக்கு வெளியேதான், கேரளம் என்பது அவர்களின் மாபெரும் குடியிருப்புப் பகுதிதான்.
நான் முதல்முறையாக 1985ல் எர்ணாகுளம் வந்து இங்கே ஒரு சிறுவிடுதியில் தங்கி திருக்காக்கரை உள்ளிட்ட ஆலயங்களைப் பார்க்கும் காலகட்டத்தில், வந்த மறுநாளே இங்கே ஓர் அரசியல்கொலை நடந்து ஊரடங்கு போடப்பட்டது. ஊரடங்கு இரண்டு நாட்களுக்குப்பின் தளர்த்தப்பட்டது. அதற்கான பழிவாங்கும் கொலைக்காக நகரம் காத்திருந்தது. நான் ஊரைவிட்டுக் கிளம்பி காஸர்கோடு சென்ற பின்னரும் ஆர்வமாக நாளிதழ்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘ஃபாலோ அப்‘ செய்திக்காக. எட்டுநாட்களுக்குப்பின் செய்தி வந்தது, இரண்டுபேர். கணக்கில் ஒன்று கூடிவிட்டது. அப்படியென்றால் இவர்களின் மறு பழிவாங்கல் இருக்கும். கணக்கு கணக்காக இருக்கவேண்டுமே? அதற்காக காத்திருந்தேன், அது பன்னிரண்டு நாட்களுக்குப்பின். மீண்டும் இருவர். இப்போதும் கணக்கு மிஞ்சிவிட்டது. இனி மற்றவர்களின் தரப்பு…
அன்றெல்லாம் வடகேரளம் இதில் இந்தியாவுக்கே முன்மாதிரி. 1950 முதலே கொலையரசியல் கேரளத்தில் வேரூன்றிவிட்டிருந்தது. கேரளத்தின் இடதுசாரித்தலைவர்கள் அனைவர் மேலும் கொலைக்குற்றச்சாட்டு உண்டு, விதிவிலக்குகள் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடும் சி.அச்சுதமேனனும் மட்டுமே. கேரளக் கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுமுள்ளனர், பல கொலைகள் இன்றுவரை புதிர் நீங்காதவை. அடித்து நின்று வென்றவர்கள் கம்யூனிஸ்டுக்கட்சியினர். கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸுக்குமான சண்டை நீண்டநாட்கள் நடைபெற்றது. அதன்பின் கம்யூனிஸ்ட் – முஸ்லீம் லீக் சண்டை. அண்மைக்காலமாக கம்யூனிஸ்டு – ஆர்.எஸ்.எஸ். சண்டை. நடுவே எழுபதுகளில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் பூசலிட்டுக்கொண்டு, பல தலைகள் தொடர்ச்சியாக உருண்டன.
‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக‘ என்ற சினிமா ஶ்ரீனிவாசன் எழுதி குஞ்சாக்கோ போபன் நடிப்பில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வெளிவந்தது. உற்சாகமான படம். அதில் கதைநாயகன் பெயர் ஜெயகாந்தன். ஊரைவிட்டு ஓடிப்போன நரேந்திரனின் மகன் அவன், தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவன். அவன் அப்பா ஜெயகாந்தனின் பரமரசிகர். கதையில் இளம் ஜெயகாந்தனுக்குச் சமகால கேரளம் என்றால் என்னவென்றே தெரியாது. அப்பாவின் ஒரு துண்டு நிலம் ஊரில் உண்டு, அதை விற்றுக் காசாக்கி திரும்பும் பொருட்டு வருகிறான்.
வந்த முதல்நாளே கேரளம் என்றால் என்னவென்று புரிகிறது. வரும்போது ரயிலில் இருந்து தப்பாக இறங்கி இரவில் நடந்து வரும்போது ஒருவர் துணைக்கு வருகிறார். மிக அன்பாகப் பேசுகிறார். விடியும்போது தெரிகிறது, அவர் கையெறிக் குண்டு செய்து விற்கும் தொழில் செய்பவர். மூட்டையில் இருப்பவை குண்டுகள். ”இது கொஞ்சம் குண்டு….நான் செஞ்சு விக்கிறது…. என்னோட தொழில்” என இயல்பாக அறிமுகம் செய்கிறார்.
முதல்நாளே அடிதடி, குண்டுவீச்சு, அரசியல் கலவரம். அடித்துப்புரண்டு ஒரு நூலகத்திற்குள் நுழைந்தால் அங்கே பலர் நிம்மதியாக நாளிதழ் படிக்கிறார்கள். ‘கொலை! கலவரம்!’ என்று ஜெயகாந்தன் கதறினால் அதில் ஒருவர் “அரசியல் கலவரம்தானே? அது தினமும் நடப்பது. அதிலென்ன? என்னமோ ஏதோ என்று பதறுகிறாய்? உட்கார்” என்று சிரிக்கிறார்.
ஆனால் சினிமாவின் முடிவில் ஒரு வரி வரும். “நீ நினைப்பதுபோல இங்கே எல்லாரும் அயோக்கியர்களும் கொலைகாரர்களும் இல்லை. தங்கள் நம்பிக்கையிலுள்ள கண்மூடித்தனமான உறுதிதான் இவர்களைக் கொலைகாரர்களாக ஆக்குகிறது. அது ஒருவகையில் நேர்மையின் இன்னொரு வடிவம்தான்” அதுவும் உண்மை. கேரள அரசியலில் தொண்டர்கள் பெரும்பாலும் பயன் கருதாத நம்பிக்கை கொண்டவர்கள். ஒப்பு நோக்க அரசியலில் கீழ்மட்டம் வரை ஊழல் அரிது. ஆகவே அரசியல் வழியாகப் பெரிதாக ஏதும் சம்பாதித்துவிட முடியாது. சைக்கிளில் உலவும் பஞ்சாயத்துத் தலைவர் ஐந்தாண்டில் கோடீஸ்வரர் ஆவதெல்லாம் தமிழகத்தின் வளர்ச்சியின் அடையாளங்கள் என்று பேரா.ராஜன் குறையும் ஜெயரஞ்சனும் அறிவியல்பூர்வமாக நிறுவிய பின் நாம் என்ன சொல்ல? .
கேரளத்தில் அந்த ‘ஆத்மார்த்த அரசியலின்’ விளைவான கொலைகள் அண்மையில் மிகக்குறைந்து விட்டன. அதற்கு ஒரே காரணம்தான் என்கிறார்கள். ஒன்று, நீதிமன்றங்களின் கடுமையான நிலைபாடு. முன்பெல்லாம் அரசியல் கொலைகளுக்கு உண்மையான சாட்சிகளே வரமாட்டார்கள், எவர் தலையைக் கொண்டு தண்டவாளத்தில் வைக்கத் துணிவார்கள். எல்லா சாட்சிகளும் அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்பவைதான். அரசியல்கட்சிகள் வழக்குகளை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக எடுத்து நடத்துவதில்லை. கொலை செய்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் வழக்கு நீர்த்துபோகும், கொலைகாரர்கள் விடுதலை ஆகிவிடுவார்கள்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயகிருஷ்ணன் என்னும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மாணவர்களின் கண்முன் வகுப்பில் கொலைசெய்யப்பட்டபோது நீதிமன்றங்கள் சீற்றம் அடைந்தன. நீதிபதிகளின் மனசாட்சி விழித்துக்கொண்டு ஒரு கூட்டுப்புரிதல் உருவானது என்கிறார்கள். இன்று அரசியல் கொலைகளுக்கு பெரும்பாலும் ஆயுள்தண்டனைதான், தூக்கும் உண்டு. சாட்சிகள் பல்டியடித்தாலும், எல்லாமே ஏற்பாடு செய்யப்பட்ட சாட்சிகளாக இருந்தாலும், வழக்கில் என்னதான் வாதிட்டாலும் தண்டனை பெரும்பாலும் உறுதி. அது ஓர் அச்சத்தை உருவாக்கிவிட்டது. கட்சி பார்த்துக்கொள்ளும், சாட்சிகளை மிரட்டலாம் என்பதெல்லாம் இன்று செல்லுபடியாவதில்லை.
ஆகவே அரசியல்பூசல் டிவிக்கு இடம்பெயர்ந்துவிட்டது. அது இரண்டாவது காரணம். இன்று இந்தியாவிலேயே மிக அதிகமாக தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள் நிகழ்வது கேரளத்தில். அதில் எப்போதும் ரத்தக்களரி. பூனைகள் சண்டைபோட்டுக்கொள்ள நடுவே நாய்களும் புகுந்தது போல. மலையாளிகளின் அரசியல் வன்முறையை இந்த நாச்சுழற்றல் பெருமளவுக்கு திசைமாற்றி அமைதியை உருவாக்கிவிட்டது என்கிறார்கள். அந்த விவாதங்களில் ஏராளமான மம்மூட்டிகள், மோகன்லால்கள், சுரேஷ்கோபிகள். நக்கல், நையாண்டி, இடக்கு, ஆக்ரோஷமான வசைகள். மலையாளம் இளக்காரத்தை தெரிவிப்பதற்கென்றே உருவான மொழி என்று தோன்றிவிடும்.
எந்தப் பண்பாட்டுக்கும் அடியில் ஒரு பைத்தியக்காரத்தனம் உண்டு. மலையாளக்கலாச்சாரத்தின் உள்ளே இருப்பது அரசியல்வெறி. அதை அவர்களால் திரும்பிப் பார்த்துக் கொள்ளவே முடியாது. அந்தப் பைத்தியம் இங்கிருக்கும் மேலோட்டமான அமைதிக்கும், சொகுசுக்கும் அடியில் எங்கோ உள்ளது. ஆழம் சுழிக்கும் அந்த இடம் வரை செல்ல இங்கிருப்போரால் முடியாது, ஆனால் வெளியில் இருந்து வந்தவர்களால் உடனே அதை கண்டடையமுடியும்.
எர்ணாகுளத்தில் துளிவாழ்க்கைக் காலகட்டத்தில் காலைநடை செல்லும்போது இந்தக் கட்டிடத்தைப் பார்த்தேன். ஏதோ சட்டப்பிரச்சினையால் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட வீடு ஒன்றின் சுவரில் வெறிபிடித்ததுபோல எவரெவரோ என்னென்னவோ எழுதியிருக்கிறார்கள். ஒரு வீட்டுக்கு பைத்தியம் பிடித்தது போலத் தோன்றியது. ஆழத்தில் சுழிகளில் சிக்கிக்கொள்ளும் மூழ்கிய கப்பல்களின் மேல் கடலின் சிப்பிகள் வந்து படிந்து படிந்து அப்படியே சிப்பிக்குவையாக ஆக்கிவிடும் என்று கேட்டிருக்கிறேன். கேரளத்தின் மொத்தவெறியும் வந்து இந்த வீட்டை மூடியிருக்கிறது.
இரண்டுநாள் இந்த வழியாக காலைநடை சென்றேன். இந்த வீடு போடும் ஓலம் செவிகளைக் கூசச்செய்தது. வழி மாற்றிச்செல்ல ஆரம்பித்தேன்.
இரவு மின்னூல் வாங்க இரவு நாவல் வாங்க
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

