சுயம்வரமா நடந்துகொண்டிருக்கிறது?
பேருக்கும் புகழுக்குமா இப்படி…?
தனக்கு இல்லாவிட்டாலும்
தனது சாதிக்காரனுக்கு என்று,
மானுட இயல்புதானே இது என்று
காலம் காலமாய்
மக்கு மனிதர்களாகிக் கொண்டு
கொலை பாதகங்களைப்
புரிந்து கொண்டிருக்கிறார்கள்
இங்கிருந்துதான் அனைத்து தீமைகளும்
அழியாது விளைந்து கொண்டிருக்கின்றன
என்பதறியாமல்?
பசியும் பட்டினியும்
பயங்கரமாய்க் கொந்தளிக்கும்
பஞ்சம்.
ஒரு விநியோகத்தின் முன்னால்
கூட்டமாய் இடித்துக் கொண்டு
எனக்கு, எனக்கு, என் உறவினர்களுக்கு எனக்
கொதித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்,
கண் இமை நுனிகளிலேயே கொலைவாட்களை
ஒளித்து வைத்திருப்பவர்கள்
கருணை தரும் களிப்பின் இரகசியமறியாதவர்களாய்
குமைந்து கொண்டேயிருப்பவர்கள்
உலகம் ஒரு குடும்பம் என்பதை
ஒரு நாளும் கண்டறியாத அறிவிலிகள்!
சத்தியத்தைச் சிலுவையிலறைந்துவிட்ட பாவிகள்!
பிதாவே இவர்களை மன்னியுங்கள்
அச்சத்தினாலே
இவர்கள் தாங்கள் செய்வது
இன்னதென அறியாதிருக்கிறார்கள்!
Published on April 24, 2025 12:30