காவியம் – 3
(சாதவாகனர் காலம், பொயு1- பைத்தான் அருங்காட்சியகம். பைசாசம்)விளையாட்டின்போதுகூட பாட்டியின் அறையருகே செல்லக்கூடாது என்று குழந்தைகளை கடுமையாக விலக்கியிருந்தார்கள். அவள் சொல்லும் சொற்களை செவிகொடுத்துக் கேட்கக்கூடாது. அதை கைக்குழந்தையாக இருக்கையிலேயே ஒவ்வொருவருக்கும் சொல்லிச் சொல்லி நிறுவியிருந்தனர். அவற்றில் ஒரு சொல்கூடப் புரிவதில்லை, ஆனால் புரியாத மொழி என்பதே ஒரு நிழல் என்று என் அம்மாவிடம் அவள் அம்மா சொன்னாள். புரியாத மொழி என்பது அயலூரில் இருந்து வந்த பைத்தியக்காரன் போல. அவன் தன் வீடு என நினைத்து நம் வீட்டுக் கதவை மோதுகிறான். தட்டித்தட்டிக் கூச்சலிட்டு அலறுகிறான் நாம் மூடித்தாழிட்டால் அதன் மேல் தலையால் அறைகிறான். வீட்டைச்சுற்றி ஓடி ஓடி எல்லா கதவுகளையும் உடைக்க முயல்கிறான். அவனை திருப்பி அனுப்பவே முடியாது. நாம் சொல்லும் எதுவும் அவனுக்குப் புரிவதில்லை. நம்மிடமிருந்து எதுவும் அவனை நோக்கிச் செல்வதில்லை. அவன் முடிவில்லாது நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கிறான்.
எங்கோ ஒரு புள்ளியில் நம் மனம் நிலையழிகிறது. ஏன் என்பதை எவரும் அறியமுடியாது. அறியாதவற்றை நம்மால் தவிர்க்கவே முடியாது. நாம் என்ன எளிய விலங்குகள் கூட அறியாதவற்றை விட்டு விலகுவதில்லை. அறியவே முடியாதவையோ பலநூறு மடங்கு ஈர்ப்பு கொண்டவை. அவற்றை நம் கண்ணோ காதோ உள்ளமோ தொட்டுவிட்டால் அதன்பின் நாம் எவ்வளவு போராடினாலும் பயனில்லை. பணிந்து விழுந்து நம்மை அதற்கு ஒப்படைத்துக்கொண்டே ஆகவேண்டும். அறியாத பைத்தியக்காரன் ஒவ்வொரு குரலுக்கும், ஒவ்வொரு தட்டலுக்கும் மேலும் வளர்ந்தவனாக நம் கதவுகளை அறைகிறான். நாம் ஒரு சிறு கதவை சற்றே திறந்து அவனைப் பார்க்கமுயல்கிறோம். அவன் அக்கதவை உடைத்து திறந்து உள்ளே வந்துவிடுகிறான்.
என் அம்மாவின் வீட்டில் எல்லாருக்குள்ளும் அவள் பைத்தியக்கார மொழி சிறிதளவேனும் இருந்தது. குடித்துவிட்டு வந்து பூசலிடும்போது அவள் அப்பா திகைக்கச்செய்யும் ஒலிகொண்ட சொற்களைச் சொன்னார். அவர் கையிலிருந்து அடிவாங்கி அலறி அழும்போது ஆங்காரத்துடன் அடிவயிற்றில் அறைந்து அவள் அம்மா புதியமொழி பேசினாள். பெரியவர்கள் அறியாமல் பேசிக்கொள்கையில் குழந்தைகள் ரகசியமான சொற்களைப் பேசிக்கொண்டன. அந்த ஊரில் அந்த மொழியின் ஒரு சொல்லேனும் ஒருநாளில் எங்காவது ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. ஒரே ஒரு சொல் ஒரே ஒருமுறை ஒலித்தால்கூட எவர் செவியும் அதை தவறவிடவுமில்லை.
குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அந்த மொழியின் சொற்களில் ரகசிய ஆர்வமிருந்தது. அவை அச்சொற்களை தங்கள் விளையாட்டின் பொருட்களையும் நிகழ்வுகளையும் குறிக்க பயன்படுத்தின. அந்தச் சொற்கள் அந்த பொருளில் பெரியவர்களிடமும் சென்று சேர்ந்தன. அர்த்தம் கொண்டதுமே அவை பிசாசின் சொற்களாக அல்லாமலாயின. அவற்றை அவர்களின் பேசுமொழி ஏற்றுக்கொண்டது. காட்டுச்செந்நாய் வளர்ப்புநாய்களைப் புணர்வதுபோல அந்த மொழி அவர்களின் மொழிக்குள் நுழைந்து பெற்றுப்பெருகியது. அவர்கள் பேசிய மொழியில் இருந்த பிசாசின் சொற்கள் சொல்பவரும் கேட்பவரும் அறியாமல் புழங்கின. சொல்பவர் சொல்லாத கேட்பவர் அடையாத அர்த்தங்களை உண்டுபண்ணிக்கொண்டன.
என் அம்மாவின் தங்கை பிறந்து ஒருவயதாகி தன் முதல்சொல்லைப் பேசியபோது அது பைசாசிக மொழியின் சொல்லாக இருந்ததைக் கண்டு அவர்கள் திடுக்கிட்டனர். அவளை எங்கள் குலதெய்வம் சீதளையின் ஆலயத்திற்குக் கொண்டுசென்று கோழிபலி அளித்து வழிபட்டனர். ஒரு கையில் துடைப்பமும் மறுகையில் கலமுமாக நின்றிருந்த அன்னையின் கால்களில் கோழியின் குருதியை சொட்டி வழிபட்டனர். கோழிக்குருதியின் துளியை தங்கையின் நாவில் தடவினர். கோழிக்குருதி கலந்த சோற்றை ஏழுமுறை கோதாவரியில் வீசி அந்த நீர்ப்பரப்பில் மீன்களாக ஆழத்தில் வாழும் தெய்வங்களுக்கு ஊட்டினர்.
ஆனால் அவள் மீண்டும் மீண்டும் அச்சொல்லையே சொல்லிக்கொண்டிருந்தாள். மலர்ந்த கண்களுடன், இனிய சிரிப்புடன், சிறிய சுட்டுவிரலை தூக்கி அவள் ஒவ்வொருவரை நோக்கியும் அதைச் சொன்னாள். வெளியே சென்று பார்த்த ஒவ்வொன்றிடமும் சொன்னாள். அச்சொல் வழியாகவே அவள் உலகத்தையும், உறவுகளையும் அறிந்துகொண்டிருந்தாள். காகங்கள் அச்சொல்லை அவளிடமிருந்து கேட்டு திடுக்கிட்டு எழுந்து பறந்தன. எருமைகள் மிரண்டு கட்டுத்தறியைச் சுற்றிவந்தன.
இரவில், குரட்டைகள் ஒலிக்கும் இருளில், அச்சொல்லைக் கேட்டு அம்மா திகைத்து எழுந்து அமர்ந்து நெஞ்சை அழுத்தியபடி அமர்ந்து கவனித்தாள். எவரும் விழித்திருக்கவில்லை. இருட்டுக்குள் அச்சொல் நிகழ்ந்துகொண்டிருந்தது. எண்ணை விளக்கை ஏற்றி அவள் ஒவ்வொரு முகமாகப் பார்த்தாள். அவள் மகளின் உதடுகளில் இருந்துதான் அச்சொற்கள் வந்துகொண்டிருந்தன. அவள் முகம் எதையோ எண்ணி மகிழ்ந்து மலர்ந்திருந்தது. அம்மா மூச்சுப்பதற தன் கணவனை உலுக்கி எழுப்பினாள். அவர்கள் மங்கிய விளக்கொளியில் குழந்தையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.
அவளை எங்கேனும் கொண்டுசென்று விட்டுவிடலாம் என்று அவளுடைய தாய்மாமன்கள் சொன்னார்கள். கிராமத்தில் அனைவருக்கும் குழந்தைகள் இருக்கின்றன. அவளிடமிருந்து அச்சொற்கள் குழந்தைகளுக்குப் பரவிவிட்டால் எவர் பொறுப்பேற்பது? ஆனால் சிறுகுழந்தையை அவ்வாறு விட்டுவிட அவள் அன்னைக்கு மனமில்லை. குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு அதை விடவே மாட்டேன் என்று அவள் அலறினாள். அதை தொடவந்தவர்களை சீற்றம்கொண்ட பூனைபோல பற்களைக்காட்டி தாக்கவந்தாள்.
குழந்தையின் தாய்மாமன்கள் ஆற்றின் மறுகரையில் இருந்து பூசகர்களை கொண்டுவந்து மந்திரித்தார்கள். ஒவ்வொருவரும் அவர்களின் சாம்பல் பட்டதுமே குழந்தைக்குள் நுழைந்துவிட்ட நிழல் அகன்றுவிடும் என்றனர். ஆனால் அவள் அடுத்த சொல்லையும் அந்த விந்தையான அயல்மொழியில் இருந்தே சொன்னாள். இறுதியாக வந்த மந்திரவாதி “இது வந்தமைந்த நிழல் அல்ல. கருவிலேயே உள்ளே நுழைந்து உயிரென்றே ஆகிவிட்ட நிழல். அவள் உடலே அந்த நிழல் அணிந்த ஆடைதான்… என்னால் அல்ல எவராலும் ஒன்றும் செய்யமுடியாது” என்றான்.
தன் தங்கையிடம் என் அம்மா பெரும்பாசத்துடன் இருந்தாள். அவள் அம்மாவின் வயிறுநிறைந்து பெருக்கத் தொடங்கியபோதே அவள் அக்குழந்தையை விரும்ப ஆரம்பித்துவிட்டாள். கிராமத்தில் எப்போதும் சிலர் கர்ப்பமாக இருந்தனர். தன் அம்மாவோ தானோ கர்ப்பமாக வேண்டும் என்று சிறுமியாக இருந்த என் அம்மா ஆசைப்பட்டாள். தான் கர்ப்பமாவதற்காக சீதளை அன்னையிடம் ரகசியமாக வேண்டுதல் செய்துவந்தாள். தன் வயிற்றை தொட்டுத் தொட்டுப் பார்த்தாள். எருமைக்கடாவின் பெரிய விதைகளை தொட்டு கண்க்ளில் ஒற்றிக்கொண்டால் குழந்தை பிறக்கும் என்று தோழி சம்பா சொன்னதை நம்பி பலமுறை செய்துபார்த்தாள்.
தன் அம்மா கர்ப்பமானபோது சிறுமியாக இருந்த என் அம்மா அதை சீதளை அன்னையின் கனிவென்றே எடுத்துக்கொண்டாள். எப்போதும் தன் அம்மாவுடனேயே இருந்தாள். அம்மாவின் வயிற்றை தடவிக்கொண்டும், அதன்மேல் தன் கன்னத்தை மெல்ல அழுத்தி உள்ளே குமிழிகள் வெடிக்கும் ஒலியை கேட்டுகொண்டும் இருந்தாள். அவள் தொடுகையை உணர்ந்து உள்ளிருந்து பலமுறை அவள் தங்கை அவளை மெல்லத் தொட்டாள். நீருக்குள் இருந்து மீன் வந்து தொட்டுச் செல்வதுபோல.
பிறந்த குழந்தை ஒரு காராமணிப் பயறுபோல கருமையாக மின்னியது. முதல்நாளிலேயே அதன் கண்கள் தன்னை அடையாளம் கண்டுகொண்டன என்று என் அம்மா என்னிடம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் சொன்னாள். அக்குழந்தையின் கண்களில் அத்தனை ஒளி இருந்தது. கைக்குழந்தையின் கண்களிலுள்ள பால்படலம் அவற்றில் இல்லை. அவள் அதன் கைகளில் தன் கைகளை வைத்தபோதெல்லாம் அதன் மெல்லிய விரல்கள் அதை இறுகப்பற்றிக்கொண்டன.
அம்மா தன் தங்கையை விட்டு அகலவே இல்லை. அதனருகே முடிந்தவரை அமர்ந்திருந்தாள். அவளுடனேயே அது வளர்ந்தது. அதைத் தூக்கிக்கொண்டு அலைந்தாள். ஊருணியில் நீர் சேந்தச் செல்லும்போதும், வரட்டி தட்டும்போதும் எல்லாம் தன் இடையிலேயே அக்குழந்தையை வைத்திருந்தாள். ஒருநாள் அக்குழந்தை பேச ஆரம்பித்தபோது அவள்தான் மகிழ்ச்சிக் கூச்சலுடன் அதை தூக்கிக்கொண்டு வந்து அனைவருக்கும் காட்டி துள்ளிக்குதித்தாள். அக்குழந்தை பேசுவது பைசாசிக மொழி என்று அவர்கள் சொல்லி, அஞ்சி வெளிறியபோது திகைத்து குழந்தையை நெஞ்சோடணைத்துக்கொண்டு சுவருடன் ஒட்டிக்கொண்டு நின்றாள்.
அவள் குடும்பமே பதறி கலைந்துவிட்டது. அம்மா வெளியே ஓடி மாமரத்தடியில் நின்று நெஞ்சில் கைவைத்து ஏங்கினார். அப்பா முற்றத்தில் இறங்கிவிட்டார். சற்றுநேரத்திலேயே ஊருக்கு செய்தி தெரிந்துவிட்டது. வீடு முழுக்க பெண்கள் கூடிவிட்டனர். அம்மாவின் இடுப்பிலேயே அவள் தங்கை அமர்ந்திருந்தது. அவர்கள் அக்குழந்தையைப் பார்க்கும் பார்வையைக் கண்டு அம்மா நடுங்கினாள். குழந்தையுடன் அவள் வெளியே ஓடி கோதாவரியின் கரையில் அமர்ந்திருந்தாள். குழந்தை ஆற்றைச் சுட்டிக்காட்டி மலர்ந்த விழிகளுடன் அந்த பைசாசிக மொழிச்சொல்லைச் சொல்லி சிரித்தது. அவர்களை தேடி வந்த அவள் அம்மா தொலைவில் நின்று வசைச்சொல்லைக் கூவி வீட்டுக்கு அழைத்தாள்.
பதினைந்து நாட்களுக்குப் பின் அக்குழந்தையை அவள் அப்பா இரவில் அவளுடைய அணைப்பில் இருந்து மெல்ல பிரித்து எடுத்து ஓசையின்றி நடந்து வெளியே கொண்டுசென்று கோதாவரியில் வீசிவிட்டு வந்தார். அவள் காலையில் எழுந்தபோது அவளிடம் அக்குழந்தையைப் பற்றி இனிமேல் ஒரு சொல் பேசக்கூடாது என்று அவள் தந்தை சொன்னார். அவள் அம்மா சமையலறைக்கு வெளியே குப்பைமேட்டில் அமர்ந்து ஓசையில்லாமல் அழுதுகொண்டிருந்தாள். வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் தலைதாழ்த்தி, பிறர் கண்களைப் பார்க்காமல் விலகிச் சென்றனர். அம்மா அழவில்லை, எவரிடமும் எதுவும் கேட்கவுமில்லை. பிறகு ஒருபோதும் அவள் தன் தங்கையைப் பற்றிப் பேசவுமில்லை.
அம்மாவின் அப்பா அதன்பின் பெருங்குடிகாரனாக ஆனார். என் அம்மாவுக்கு திருமணமான பின் இரண்டு ஆண்டுகளே அவர் உயிருடன் இருந்தார். அவர்களின் அந்தக் கிராமமேகூட இரண்டு ஆண்டுகள்தான் இருந்தது. தீ பற்றவைப்பதில் சுவையறிந்துவிட்ட சோட்டு முடிந்தபோதெல்லாம் குடில்களுக்கு தீவைத்தான். அவன் தீவைப்பதைக் கண்டதுமே ஓடிவந்து அதை அணைத்தனர். நான்கு முறை முழுதும் எரிந்த குடிசைகளில் இருந்து தீ பரவாமல் ஊர்கூடி அணைத்தபின் அவனை அவர்கள் கைகால்களைக் கட்டி ஒரு தனிக்குடிலில் வைத்திருந்தார்கள். ஒருநாள் நள்ளிரவில் வெளிவந்த அவன் அவன் தப்பி வெளியே வந்து வைத்த தீயில் எல்லா குடில்களும் எரிந்து சாம்பலாயின. அதில் அவனும் பாய்ந்து எரிந்து எலும்புகளாக எஞ்சினான். ஓர் எருமையும் ஏழு ஆடுகளும் அந்த தீயில் எரிந்து இறந்தன. அவர்கள் அங்கிருந்து ஊரை விலக்கிக்கொண்டு எட்டு கிலோமீட்டர் அப்பாலிருந்த பாங்கு என்னும் ஊருக்கு வெளியே சதுப்பில் குடிசை கட்டிக்கொண்டனர். அது சோட்டாபாங்கு என்னும் ஊராக பின்னர் மாறியது.
தன் அப்பா அம்மாவிடம் பேசுவதை கேட்டதாக என் அம்மா என்னிடம் பின்னாளில் சொன்னார். அக்குழந்தையை அவர் எடுத்துச்செல்லும்போது அது சீராக மூச்சுவிட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. நாகாகட்டத்தின் அருகே சுடுகாட்டின் சரிவில், சாம்பல் கரைக்கும் சிறிய படித்துறையில், அவர் இறங்கிச் சென்று அக்குழந்தையை மெல்ல தூக்கியபோது அது இரு கண்களையும் விழித்து அவரை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அது உதடுகள் விரிய சிரித்துக் கொண்டிருந்தது. கைகள் நடுங்க அவர் அதை கீழே போட்டுவிடப்போனார். ஆனால் உடலில் ஒரு வலிப்புபோல வந்தது, இடதுகால் துள்ளித்துள்ளி விழுந்தது. என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அவர் கையில் இருந்து எவரோ அதைப் பிடுங்கி நீரில் வீசுவதுபோல் இருந்தது. குழந்தை சென்று நீர்ப்பரப்பில் விழுந்தது.
ஆற்றின் வாய் திறந்து அக்குழந்தையை விழுங்கியது. குமிழிகள் எழுந்து நீர்ப்பரப்பில் உடைந்து சிறுவட்டங்களாகப் பரவின. நீருக்குள் இருந்து வந்த ஒளியில் அவர் அந்தக் குமிழிகளை எல்லாம் விந்தையான கண்கள் போல தோன்றி தோன்றி மறைவதாகத் தெரிந்தது. பெரிய எருமைவிழிகள். கன்றுகளின் விழிகள். பின்னர் ஆற்றுப்பெருக்கு அமைதியாக சிறிய அலைகளுடன் விரிந்து கிடந்தது. ஒளியா இருளின் மினுமினுப்பு தானா என்று தெரியாத மெல்லிய நீரொளி. அவர் அக்குழந்தை நீரை விட்டு எழுந்து தலையை நீட்டும் என எண்ணினார். புன்னகைக்கும் என்றும் அச்சொல்லைச் சொல்லும் என்றும் எதிர்பார்த்தார். அதன்பின் அந்த எண்ணத்தையே அஞ்சியவராக திரும்பி ஓடினார்.
அம்மாவுக்குத் திருமணம் ஆகி, நான் பிறந்து, எனக்கு இரண்டு வயதானபோது அம்மா கதைசொல்லும் பிசாசிடம் தன் தங்கையைப் பற்றிக் கேட்டாள். துயரம் நிறைந்த கண்களுடன் அது அவள் தங்கையைப் பற்றி அவளிடம் சொன்னது. அவள் அதைப் பார்க்கவேண்டும் என்று சொன்னாள். கதைசொல்லும் பிசாசு தன் கதைகள் வழியாக அனைத்தையும் உருவாக்கும் ஆற்றல்கொண்டது. வானத்தின் மறு எல்லையில் இருந்து அவள் உடலுக்கு ஆடையென்றாகும் வரை பெருகியிருந்த இருட்டின் திரையில் அது அவள் தங்கையை உருவாக்கிக் காட்டியது. அவள் சிரிக்கும் குழந்தைக்கண்களுடன் அவள் முன் நின்றாள். கைநீட்டி அச்சொல்லைச் சொல்லி புன்னகைத்தாள். ஆனால் அப்போது என் அம்மாவுக்கும் அச்சொல் நன்கு தெரிந்த மொழியைச் சேர்ந்ததாக இருந்தது.
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

