சிம்மநடனம்
நாகூர் ஹனீஃபாவை எனக்கு அறிமுகம் செய்தவர் சுந்தர ராமசாமியின் தாய்மாமனாரான பரந்தாமன் என்பவர். வைதீகமானவர், என்.எஸ்.கிருஷ்ணன் முதல் துக்ளக் சோ வரை பலருக்கு அணுக்கமானவர், அவருடைய இயற்பெயர் வேறொன்று என நினைக்கிறேன். சுந்தர ராமசாமியின் தன்வரலாற்றுக்கு அணுக்கமான நாவலான ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’இல் அவர் லச்சம் என்னும் கதாபாத்திரமாக உருமாறி வருகிறார். மர்மமான ஒருவர் என்று சுந்தர ராமசாமி அவரைப்பற்றிச் சொன்னார், எங்கே என்ன செய்கிறார் என்று சொல்லவே முடியாது.
நான் முக்கால்மலையாளச் சூழலில் வளர்ந்தவன், அன்றெல்லாம் தமிழ் சினிமாக்களுடன் அறிமுகமே குறைவு. கல்லூரியிலும் ஒரு மாதிரி மலையாளச்சூழல். மலையாள இலக்கியம், ஆங்கில இலக்கியம் என அலைந்து அப்படியே காஸர்கோட்டில் வேலைக்குச் சென்றேன். சுந்தர ராமசாமி அறிமுகமாகி, அவர் இல்லத்திற்கு காஸர்கோட்டில் இருந்து வந்துகொண்டிருந்தபோது ஒருமுறை புகழ்பெற்ற நூல்தொகுப்பாளரான எம்.சிவசுப்ரமணியம் அவர்களிடம் கோழிக்கோடு அப்துல் காதர் என்னும் பாடகர் பற்றி சொன்னேன். அருகே அமர்ந்திருந்த பரந்தாமன் “நம்ம நாகூர் ஹனீஃபா மாதிரியா?” என்றார்
எனக்கு நாகூர் ஹனீஃபாவை தெரிந்திருக்கவில்லை. அவர் ஆச்சரியத்துடன் “நாகூர் ஹனீஃபாவை தெரியாதா? நெஜம்மாவா?” என்றார்.
மறுநாள் அவரே எனக்கு இரண்டு ஒலிநாடாக்களை தந்தார். அவற்றுடன் நான் காஸர்கோடு சென்று என் நண்பரும், கிறிஸ்தவ ஊழியருமான எஸ்.எஸ்.ராஜனின் ஒலிப்பெட்டியில் ஓடவிட்டு கேட்டேன். “அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே” என்னும் பாடல் நான் முதலில் கேட்டது. எனக்கு எப்போதுமே கம்பீரமான குரல்கள்மேல் ஒரு மோகம் உண்டு. என் விடுதியறையை ஹனீஃபா நிறைத்தார்.
நான் நாகூர் ஹனீஃபாவை ஆற்றூர் ரவிவர்மாவுக்கு அறிமுகம் செய்தேன். ’நடனத்தில் லாஸ்யம், தாண்டவம் என்று இரண்டு உண்டு.முன்னது மென்மையானது, நளினமானது. பின்னது ஆண்மைகொண்டது, வீரியமானது. பாட்டிலும் அப்படிச் சொல்லலாம். இது பாட்டிலுள்ள தாண்டவம்” என்றார்.
அன்றுமுதல் இன்றுவரை நான் நாகூர் ஹனீபாவை கேட்டுக்கொண்டே இருக்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தமான பல பாடல்களுண்டு. உதாரணமாக ‘பாத்திமா வாழ்ந்தமுறை உனக்குத் தெரியுமா?” பாடல்களில் தனிமையையும், இனிய சோகத்தையும் உருவாக்கும் பாடல்கள் உண்டு. பல மலையாளப்பாடல்கள் அத்தகையவை. எனக்கு ஊக்கமூட்டும் இசை தேவை என்றால் நாடும் பாடகர்களில் ஒருவர் நாகூர் ஹனீஃபா.
என் நண்பர் எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கும் பிடித்தமான பாடகர் நாகூர் ஹனீஃபா. எங்கள் சந்திப்புகளின் இசைக்கூடுகைகளில் அவன் நாகூரார் பாடல்களைப் பாடுவதுண்டு. “இறைவனிடம் கையேந்துங்கள்’ போன்ற பாடல்கள். அவன் தீவிர இந்துஸ்தானி இசை ரசிகன். அதில் ஒரு நிபுணன் என்றே சொல்லலாம். ஆனால் இரண்டு பாடகர்களை அவன் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்வான். ஒருவர் நாகூர் ஹனீபா, இன்னொருவர் பித்துக்குளி முருகதாஸ். இசை என்பது அடிப்படையில் அதைப் பாடுபவரின் அந்தரங்கமான உணர்வுநிலையின் வெளிப்பாடே, வித்தை எல்லாம் இரண்டாம்பட்சம் என காட்டுபவர்கள் அவர்கள் என்பான்.
இந்தக் குறிப்பை எழுதும்போதுகூட நாகூர் ஹனீபாவின் ஒரு பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். “பாக்தாதில் வாழும் ஞானி மொய்யதீனே” அதன் வீறுகொண்ட தொடக்கம், பின்னர் விளையாடத்தொடங்கும் குரலின் தாளம். சார்த்தூலவிக்ரீடிதம் என ஒரு செய்யுள்நடை சம்ஸ்கிருதத்தில் உண்டு. சிம்மத்தின் நடனம். அவருடைய பாடலை ஒரு சிம்மம் நடனமிடுவதுபோன இசையனுபவம் என்று மட்டுமே சொல்லமுடியும்.
(சிராங்கூன் டைம்ஸ் நாகூர் ஹனீஃபா சிறப்பிதழ்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

