வ.வே.சு.ஐயர் கடிதங்கள்- கிருஷ்ணன் சங்கரன்

வ.வே.சுப்ரமணிய ஐயர்- தமிழ்விக்கி

அன்புள்ள ஜெ.,

வ வே சு ஐயர் லண்டனிலிருந்து இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதிய கடிதங்கள் ‘லண்டன் கடிதம்‘ என்ற பெயரில் பிரசுரமானது. பெ.சு.மணி தொகுத்த ‘வ வே சு ஐயர் கடிதங்கள்‘ புத்தகத்தில் மேற்படிக் கடிதங்களும் வேறு சில நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும்படிக்கக் கிடைத்தது. பலகடிதங்களையும் அளித்து உதவியவர் பெ.சு.மணியின் நண்பரான வ வே சு ஐயரின் புதல்வர் டாக்டர் வ.வே.சு.கிருஷ்ணமூர்த்தி (1912-2001).புதுச்சேரியிலிருந்து பாரதியின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ‘இந்தியா‘ பத்திரிகைக்கு ஒரு

வெளிநாட்டு நிருபராக இருந்து பலசெய்திகளை கடிதம் மூலம் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்திருக்கிறார் வ வே சு ஐயர். அங்கிருக்கும் புரட்சிக்குழுக்களின் செயல்பாடுகள்,மக்களுடைய வாழ்க்கைமுறை, ஆங்கிலேய அரசாங்கத்தின் செயல்பாடுகள், ஐரோப்பாவின்ஏனைய நாடுகளின் அரசியல் போக்கு என்று கடிதம்தோறும் புதுப்புது செய்திகள்.

‘என் அன்புள்ள ரிஷி‘ என்று சாவர்க்கரால் அழைக்கப்பெற்று, அபிநவ பாரத சபையின் ஐரோப்பியக்கிளையை நிறுவி, டென்மார்க்கில் இன்டர்நேஷனல் சோசியலிஸ்ட் காங்கிரஸ் மாநாட்டில் மேடம் காமாவுடன் கலந்துகொண்டு, பாரிசில் ‘பாரிஸ் குழு‘ என்னும் புரட்சிக்குழுவில் பணியாற்றி, பின்னர் ரோம், துருக்கி, எகிப்து, மும்பை, கொழும்பு, கடலூர் வழியாக பிரிட்டிஷ் ஒற்றர்களை ஏமாற்றி சாகசப் பயணம் செய்து புதுச்சேரியை அடைந்து, ஆஷ் துறையைக் கொல்ல வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும்வரை ‘புரட்சி வீரர்‘ ஆக இருந்த வ.வே.சு அய்யர் ‘கம்ப நிலையம்‘ என்ற பதிப்பகத்தை நிறுவி நூல்களை வெளியிட்டு இலக்கியத்தின் பக்கம் நகர்ந்து வர, பாரதியார், மண்டயம் ஸ்ரீனிவாசாச்சார்,அரவிந்தர் போன்றோரின் நட்பு முக்கியமான காரணம். 

கர்சன்வாலியைக் கொன்ற மதன்லால் திங்க்ரா லண்டனில் தூக்கிலிடப்பட்டபின் அவரது உடலை எரியூட்ட விண்ணப்பிக்கப்பட்டபோது ஆங்கிலேயர் ஏற்க மறுத்தனர். அப்போது ‘க்ளாஸ்கோ‘ என்னுமிடத்தில் ஒரு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டுலட்சம் பெருமான சரக்கு எரிந்து சாம்பலானது. இதுகுறித்து இந்தியாவிற்கு எழுதிய கடிதத்தில் ஐயர் தனக்கான புனிதப்பொருள் கிடைக்கப்பெறாத அக்னி பகவான் வெகுண்டெழுந்து தன்  எதிர்ப்பைத் தெரிவித்ததாக எழுதியிருந்தார். ஆசிரியரான பாரதி ஆட்சேபம் தெரிவித்தாலும் பத்திராதிபர் வ.வே.சு ஐயர் பக்கம் இருந்ததால் கடிதம் பிரசுரமானது. ஆனாலும் அடுத்த இதழில் தலையங்கத்திலேயே தனிநபர் பயங்கரவாதத்தைக் கண்டித்து சென்ற இதழில் நமது  நிருபர் இவ்வாறு எழுதியது சரியல்ல என்று எழுதினார் பாரதி. பாரதிக்கு ஆஷ் கொலையிலும் உடன்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.      

பாரதியாவது ‘கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோ போல்‘ என்கிறார். ஐயருக்கு கம்பனைத் தவிர யாரும் தெரிவதில்லை. மேற்படிப்புக்காகச் சென்றபோது 1908 ல் லண்டன் ‘ஹைகேட் யூனிடேரியன் சர்ச்’ ல் கம்பராமாயணம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்துகிறார்.அது லண்டனில் பிபின் சந்திரபாலர் நடத்திய  ‘ஸ்வராஜ்‘ பத்திரிகையில் வெளியிடப்படுகிறது. சொந்தச்செலவில் கம்பராமாயணத்தின் பாலகாண்டத்தின் தேர்ந்டுத்த பாடல்களை சந்தி பிரித்து, 1917 ல், புத்தகமாகப் பதிப்பிக்கும் அளவிற்கு போகிறார். ஆனால்

இந்தப் பதிப்பிற்கு நிறைய கண்டனங்களே இருந்தன. அப்பிடி பொங்கியெழுந்த ஒரு கண்டனக்கடிதத்திற்கான பதிலில் இவ்வாறு கூறுகிறார் “பதங்களெல்லாம் ஒன்றோடொன்று கோர்த்துக்கொண்டிருப்பதால் சாமான்யக் கல்வியினர் இந்தச் செய்யுள்களின் பொருளைக் கண்டுபிடிக்க எவ்வளவு பிரயாசைப்பட வேண்டியிருக்கிறது? உரையெழுதிய ஆசிரியர் ஒருவரும் தவறான உரையெழுத ஏதுவாக இருந்திருக்கிறது. இது காரணம் பற்றியே ஆங்கிலம் படித்த பலரும் கம்பராமாயணத்தைத் தொடுகிறர்களில்லை. அதைப்படித்து அனுபவித்து அதன்

யோக்கியதையை வெளிப்படுத்தக்கூடிய மேதாவிகள் அதைப் படிக்காமலிருப்பது தீங்கா? புத்தகத்தைச் சுருக்கி பதம்பிரித்து அச்சிடுவது தீங்கா?என்று யோசிக்கவேண்டும். சுவை கண்டவர்கள் முழுநூலைத் தேடி வருவார்களல்லவா? பேரிலக்கியங்களின் மீது ஜனங்களுக்குள்ள மலைப்பு போகவேண்டுமானால் இது போன்ற பதிப்புகள் அவசியம்” 

இத்தனைக்கும் முன்னுரையில் எங்கெங்கே சந்தியைப் பிரித்தால் பொருளில் சந்தேகம் வருமோ அல்லது தெளிவு குறையுமோ அங்கெல்லாம் சந்தி பிரிக்கவில்லை என்று கூறுகிறார். இலியட், ஹெரிவார்ட் தி வேக், டலிஸ்மான், ஐவான்ஹோ, வால்மீகி ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் என்று சுருக்கப்பட்ட நூல்களின் வரிசை பெரிது என்கிறார். முதலில் சுருங்கிய பதிப்பும், பின்னர் மொத்த நூலையுமே அதேபோல சந்திபிரித்து விரிந்த பதிப்பும்செய்ய திட்டம் வைத்திருந்தார் ஐயர். இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இதுகுறித்து தமிழறிஞர் காரைக்குடி சொ முருகப்பா தன்னுடைய ‘கம்பர் காவியம்‘ நூலில் “யாராவது உள்ளம்குழைந்து அரும்பாடுபட்டு உயிரைக்கொடுத்து நூல் வெளியிட முற்பட்டால் அவனை

மறுபடி அந்தப்பாதையில் விடுவார்களா நம் தமிழர்கள்“; என்று அங்கலாய்க்கிறார். ஆனால் 1958 ல் மர்ரே ராஜம் கம்பராமாயணத்தை சந்திபிரித்துப் பதிப்பிக்க ஒரு தூண்டுகோலாக அமைந்தது இந்தப் பதிப்பு. “சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி மாத்திரமில்லை சங்கநூல்கள் யாவும் இதேபோல பதிப்பித்து வெளியிடவேண்டும் என்ற சுவப்னமும் இருந்துவருகிறது” என்கிறார் ஒரு கடிதத்தில். அது சுவப்னமாகவே முடிந்தது.

ராஜதுரோகக் குற்றத்திற்காக பெல்லாரியில் சிறையிலிருந்தபோது, மேற்படிக் கண்டனக்கடிதத்தை எழுதிய காசியைச் சேர்ந்த ஆதிமூர்த்தி என்பவரிடமிருந்து திலகரின் ‘கீதா ரகசியம்‘ ,Griffith’s translation of Valmiki Ramayan and Tulasidas முதலிய நூல்களைப்பெற்று கம்பராமாயணத்தின் பத்துகதாபாத்திரங்களின் குணவிசேஷங்களை ஆராய்ந்து Kambaramayana – A Study என்ற அரிய திறனாய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதுகிறார் ஐயர். இதில் சீதையின் பாத்திரம் பின்னர் சேர்க்கப்பட்டு வேறொருவரால் முடிக்கப்பட்டு டெல்லி தமிழ்ச் சங்கத்தால் 1950 ல் வெளியிடப்பட்டது.

வ.வே.சு ஐயருக்கு கடித இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. மாவீரன் நெப்போலியனின் பிரெஞ்சு மொழிக்கடிதங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1915 ல் ‘ஹிந்துஸ்தான் ரெவ்யூ‘; இதழில் The Commentaries of Napoleon I என்னும் கட்டுரையில் நெப்போலியனின் எழுத்தாற்றலை விவரித்துக் கூறியுள்ளார். மேலும் ‘நப்போலியன்‘; என்னும் நூலை புதுச்சேரி கம்ப நிலையம் மூலம் வெளியிட்டார். “இது குமரக்கடவுளின் அவதாரமோ என்று பிரமிக்கத்தகுந்த மகாவீரன் முதல் நப்போலியன் சரித்திரம்“; என்று இந்தப் புத்தகத்திற்கு விளம்பரம் செய்தார். இருநூற்று ஐம்பது பக்கங்கள் கொண்ட இந்நூலை ஆங்கிலேயர்கள் பறிமுதல் செய்தனர். மிகுந்த சிரமத்திற்கிடையே திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்து ஐயரின் ஏழு நூல்களைக் கம்ப நிலையம் வெளியிட்டது. இன்னொரு முயற்சியாக

வங்கமொழியின் ‘ப்ரவாசி‘; மற்றும் ஆங்கிலத்தின் ‘மாடர்ன் ரெவ்யூ‘ போல தமிழிலும் ஒரு இலக்கியப்பத்திரிகை தொடங்க மூவாயிரம் ரூபாய் தேவைப்படுவதால் தலா நூறுரூபாய் முதலீட்டில் முப்பது பேரைச் சேர்க்க முயற்சி செய்தார் வ.வே.சு.ஐயர். முன்வந்தவர்கள் நாலே பேர்தான்.

ராஜகோபாலன் என்ற கற்பனை நண்பர் இவருக்கு எழுதிய கடிதங்களுக்கு பதில் கூறுமுகமாக இவர் எழுதிய கடிதங்கள் தமிழில் கடித இலக்கியத்தின் ஆரம்பப்புள்ளி. அதில் கிங்ஸ்லியின் ‘போ,மேற்கு நோக்கி‘ (Westward Ho) என்னும் நூல் அவருள் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், அதுபோலவே தமிழில் பாரி, நன்னன், கபிலர் முதல் நம்மாழ்வார், ராமானுஜர், தேசிகர் வரையிலான கதை நாயகர்களைக் கொண்டு தான் செய்யவிருக்கிற ‘காமிக்‘ வரிசைகளைப்பற்றி விரிவாகக் கூறுகிறார். ‘இந்த நோக்கத்திற்காகவே மங்கையர்க்கரசியின் காதல், லைலா மஜ்னு, அனார்கலி போன்ற கதைகளை கைப்பழக்கத்திற்காக எழுதிவருகிறேன்‘; என்கிறார். ‘அவர் எழுதிய ராஜகோபாலன் கடிதங்களில் அபூர்வமான கதைகள் உண்டு‘ என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் புதுமைப்பித்தன். 

சேரன்மாதேவி பரத்வாஜ ஆசிரமத்தில் நடைபெற்ற சர்ச்சை குறித்து நண்பர் ஆதிமூர்த்திக்கு  1925 ல் எழுதிய கடிதத்தில் “மகாத்மா இருதலைக்கொள்ளி எறும்பு போல அவஸ்தைப்படுவதைக் கண்டேன். நானும் வைதீகர்களுக்கும் அவர்களது எதிரிகளுக்கும் நடுவில் இருப்பதால் இரண்டுபேருக்கும் நம்மிடத்தில் அபிமானமில்லை. ஆனால் வழி இவ்விருவகுப்பினருக்கும் இடையில்தான் உள்ளது. ஜாதீய ஒற்றுமையை உண்டாக்குவது மிகமிகக் கடினம். ஆனால் சிதைப்பது மிக எளிது. அந்த வேலை ஸ்ரீநாயுடுவால் துவங்கப்பட்டிருக்கிறது. சன்யாசியைப் போல வாழ்ந்துவரும் என் மேலேயே ஸ்ரீநாயுடுபோன்றோருக்கு இவ்வளவு ஷாத்திரம் என்றால் மற்றவர்கள் மேல் எவ்வளவு இராது? எல்லாவற்றையும் இயக்கிக்கொண்டிருக்கிற பராசக்திக்கு எல்லாம் தெரியும்” என்கிறார்.அந்தக் கடிதத்திலேயே எஞ்சியகாலத்தை அத்தியாத்ம வளர்ச்சியிலும், இலக்கியத்திலும் ஈடுபடப்போவதாகக் கூறுகிறார். ஆனால் காலம் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. 1925 ஜூன் 3 ம்

தேதி குருகுல மாணவர்களோடு சுற்றுலா சென்றபோது பாபநாசம் அருவிச் சுழலில் சிக்கிய மகளைக் காப்பாற்றச் சென்று மகளோடு தானும் உயிர்நீத்தார் வ.வே.சு.ஐயர்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.