திரள்வதன் நெறிகள்

[image error]

க.நா.சுவின் வழியில்…

க.நா.சுவின் வழியில் சிறிதேனும் செய்யமுடிந்த அமைப்பு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம். இன்று தமிழகத்தில் நவீன இலக்கியம் என்ற இயக்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அமைப்பு இதுவே. எங்கள் அமைப்பு மற்றும் கிளையமைப்புகள் சார்பாக ஒவ்வொரு நாளும் எங்கேனும் இலக்கிய, தத்துவ விவாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தமிழ்விக்கி போன்ற ஒரு கலைக்களஞ்சியம் நிகழ்கிறது. முழுமையறிவு போன்ற ஒரு கல்வியமைப்பு நிகழ்கிறது. தொடங்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செயற்தளமும் வீச்சும் விரிந்துகொண்டேதான் உள்ளது. இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிளைபரப்பியுள்ளது.

அரசியல்கட்சிகளின் துணை அமைப்பாக அன்றி இத்தனை விரிந்த அளவில் ஓர் இலக்கிய இயக்கம் நிகழமுடியும் என்பதே விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழியாகத்தான் இயன்றிருக்கிறது. க.நா.சு கண்ட கனவு இதுவே. இதற்கு முன்பு பிரமிள், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன் , சுந்தர ராமசாமி என பலர் தொடங்கிய முயற்சி இது. அவர்களுக்கு இயலாதது இப்போது நிகழ்ந்துள்ளது. நவீன இணைய ஊடகம் அதற்கு முதற்காரணம். தமிழில் இடைநிலை இதழ்களான சுபமங்களா, தமிழ்மணி, இந்தியா டுடே வழியாக உருவான புதிய வாசிப்புச்சூழல் இன்னொரு காரணம்.

அதற்கு அப்பால் எங்கள் கூட்டுமுயற்சியைச் சொல்லவேண்டும். இந்த நண்பர்குழுவை மையமென அமைந்து ஒருங்கிணைக்கிறேன் என்பதே என் பங்களிப்பு. இந்தத் தளத்தில் நான் எனக்கென உருவாக்கிக்கொண்ட சில செயல்தள விதிகள் உண்டு. அவற்றை இவ்வாறு தொகுத்துச் சொல்வேன். இவ்வாறான பிறசெயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இவை உதவக்கூடும்.

ஒரு மையக்கட்டுப்பாடு கொண்ட அமைப்பாக ஓர் அறிவியயக்கம் திகழமுடியாது. அந்த மையக்கட்டுப்பாடே அதை வளராமலாக்கிவிடும். அது பொதுவான உளநிலைகொண்ட இலக்கிய- பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களின் இயல்பான கூட்டமைப்பாகவே இருக்கமுடியும். ஆகவே அதற்கு உறுதியான அமைப்பு தேவையில்லை. பொதுவான புரிதல் இருந்தால்போதுமானது.ஓர் அமைப்பு உயிருள்ளது என்றால் நெகிழ்வானதாகவும், கிளைவிட்டு கிளைவிட்டுப் பிரிவதாகவும், தன்னிச்சையாக புதிய களங்களுக்குப் படர்ந்துகொண்டே இருப்பதாகவும்தான் இருக்கும்.அமைப்பை ஒருங்கிணைப்பவர்களே எல்லாவற்றையும் செய்யவேண்டியதில்லை. செய்யவும் முடியாது. எல்லாவற்றையும் தானே செய்ய நினைப்பவர், எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல்பவர் எந்த அமைப்பையும் நடத்தமுடியாது. முடிந்தவரை நண்பர்களை ஒருங்கிணைப்பது மட்டுமே நம் பணி. நான் என் இலக்கிய அமைப்புகளில் மிகமிகக் குறைவாகப் பங்கேற்பவன். என்னைவிட பலமடங்கு ஒருங்கிணைப்பாற்றலும் வேகமும் கொண்டவர்களே இவற்றை நடத்துகிறார்கள்.ஓர் அமைப்பில் பங்களிப்பாற்றும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான செயல்களமும், சாதனைநிறைவும் அமையவேண்டும். ஒவ்வொருவரும் அதனூடாக வளரவேண்டும்.எது நம் களமோ அதில் மட்டுமே நம் செயல்பாடு இருக்கவேண்டும். எங்கள் களம் இலக்கியம், பண்பாடு மட்டுமே. ஆகவே அரசியல் போன்றவற்றை நாங்கள் உள்ளே கொண்டுவருவதில்லை. பங்கேற்பாளர்களுக்கு தங்களுக்கான அரசியல் இருக்கலாம். அவர்கள் அதை வேறு களங்களில் செயல்படுத்தலாம். ஆனால் இந்தக் களத்தில் அரசியலே இருக்கலாகாது. கட்சி சார்ந்த அரசியல் பிளவுபடுத்துவதும் கசப்பை மட்டுமே உருவாக்குவதுமாகும்.எந்நிலையிலும் நேர்நிலை மனப்பான்மையும் நம்பிக்கையும் மட்டுமே கொண்டதாகச் செயல்பாடுகள் இருக்கவேண்டும். ஆகவே கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் தேவையில்லை. கற்றல், கற்பித்தல், அதன்பொருட்டு ஒருங்குகூடுதல் ஆகிய செயல்பாடுகளே போதும். எதிர்செயல்பாடுகள் கசப்பையே உருவாக்கும். கசப்புகொண்ட செயல்பாடுகள் நீடிப்பதில்லை. இனிய நட்பாடலாக நிறைவடையும் நிகழ்வுகளே நீடிக்கும். ஒரு நிகழ்வு மகிழ்வுடன், சிரிப்புடன் மட்டுமே முடியவேண்டும்.எச்செயல்பாடும் அன்றாடம் என நிகழவேண்டும். ஒவ்வொரு நாளும் சிறிதேனும் நிகழ்ந்து கொண்டிருக்கவேண்டும். விஷ்ணுபுரம் அமைப்பின் செயல்பாடுகள் எல்லா நாளிலும் ஏராளமான ஊர்களில், ஏராளமான மனிதர்கள் வழியாக நிகழ்பவைதான்.எச்செயலும் சரியாக திட்டமிடப்பட்டு, நீண்டகாலம் தொடர்ச்சியாக நிகழ்ந்தாகவேண்டும். செயல்பாடும் ஒரு தலைமுறைக்காலமாவது நீடித்தாலொழிய அதற்கு பெரிய விளைவு ஏதுமில்லை. தொடங்கி, நடத்தமுடியாமல் நிறுத்தி, புலம்பிக்கொண்டிருப்பது ஒரு பெருமை என்னும் சிற்றிதழ் மனநிலை இங்குள்ளது. அதைவிட தொடங்காமலிருப்பதே மேல். தோல்வியடைந்து புலம்புவோர் புதியதாக வருபவர்களின் நம்பிக்கையை சிதைத்துவிடுகிறார்கள்.எந்நிகழ்வும் சிறிதேனும் பணம் மிச்சமாகும்படியே நிகழவேண்டும். பொருளியல்சிக்கனமே பொருளியல் உறுதிப்பாட்டின் அடிப்படை.மிகையான பணம் இருக்கலாகாது. பணம் இல்லாமலும் இருக்கலாகாது. பண இழப்புடன் நடத்தப்படும் எந்த செயல்பாடும் நீடிக்காது. நீடிக்காத செயலால் பயனேதுமில்லை.ஒரு பண்பாட்டுச் செயலின் உடனடி விளைவை நாம் அனேகமாகக் கண்ணால் பார்க்கமுடியாது. ஏனென்றால் அவை உருவாகி வர நீண்டகாலமாகும். நாம் விதைகளையே வீசுகிறோம். ஆகவே செயலுக்கு அதற்கான பயன் உண்டு என்ற நம்பிக்கையே நம்மிடம் இருக்கவேண்டும். விளைவைக் கணக்கிடுவது உளச்சோர்வையே அளிக்கும்.எந்த ஒரு பெருஞ்செயலும் சாமானியரை எரிச்சலுக்குள்ளாக்குகிறது. ஏனென்றால் அது அவர்களைச் சாமானியர்கள் என்று முகத்திலடித்ததுபோலச் சொல்கிறது. சாமானியர் தங்கள் ஆற்றலின்மையால் சாமானியராக நீடிப்பவர்கள், உள்ளூர அதற்காக கூச்சம்கொண்டிருப்பவர்களும் கூட. அத்தகையோரே வம்புப்பேச்சு நிகழுமிடங்களில் எல்லாம் திரள்கிறார்கள். சாமானியர்களின் வசைகள், அவதூறுகள், சில்லறை எதிர்ப்புகள் இல்லாமல் எந்தப்பெருஞ்செயலும் இங்கே நிகழ்வதில்லை. அவர்களை பொருட்படுத்தவேண்டியதில்லை. நம் தரப்பை நாம் விளக்கலாம், ஆனால் அத்தகைய எதிர்நிலைகளுக்குப் பதில் சொல்லக்கூடாது. அது மேலும் கசப்பையும் காழ்ப்பையுமே உருவாக்கும்.எந்தச் செயல்பாடும் நீண்டகால நோக்கில் சாமானியர்களின் நலன்களை உத்தேசித்தே நிகழ்கிறது. ஆகவே சாமானியர்களின் நலனுக்காகச் செய்யப்படும் ஒரு செயலை அவர்களே புரிந்துகொள்வதில்லை என்னும் முரண்நகை வரலாறு முழுக்கவே உள்ளது. செயலாற்றுவோர் அவர்களை மன்னிக்கவே வேண்டும்.கூட்டான செயல்பாடுகளில் ‘அனைவருமே நமக்கு வேண்டும்’ என்னும் மனநிலை அவசியமானது. எவரையுமே நாம் இழக்கலாகாது. ஒவ்வொருவரும் அவரவர் ஆளுமையுடன் இருப்பது இயல்பு.மனிதர்களிடம் குறைகாண்பதும், அவர்களைத் திருத்தியமைக்க முயல்வதும் பங்களிப்பாளர்களை விலக்குவதிலேயே முடியும். நாம் எவரையும் திருத்தியமைக்கும் பொருட்டுச் செயலாற்றவில்லை, அனைவரையும் இணைத்து நம் இலக்கொன்றை நோக்கிச் செல்கிறோம். அப்பயணத்தில் இணைபவர்கள் இயல்பாக தங்களை வளர்த்துக்கொள்ளலாமே ஒழிய அந்த அமைப்பு அவர்களை எந்த வகையிலும் மாற்றமுடியாது.ஓர் அமைப்புக்குள் அதன் பங்கேற்பாளர்களுக்குள் சிறுசிறு பூசல்களும், உரசல்களும் இருந்துகொண்டே இருக்கும், ஏனென்றால் வெவ்வேறு இயல்புடைய மனிதர்கள் அங்கே கூடுகிறார்கள். புகார்கள் எழும், மனக்குறைகள் முன்வைக்கப்படும். ஓர் அமைப்பின் மையமென அமைபவர்கள் தொடர்ச்சியாக சமரசம் செய்துகொண்டேதான் இருக்கவேண்டும். அனைவருக்கும் நடுவே திகழும் சமரசமையமே பண்பாட்டியக்கங்களை முன்னகர்த்தமுடியும். ஏனென்றால் இங்கே மையஅதிகாரம் என ஒன்று இல்லை.அனைவரும் நமக்குத்தேவை என்னும் அணைத்துச்செல்லும் போக்கே இருக்கவேண்டும். ஆனாலும் கூட்டான செயல்பாடுகளில் இருந்து சிலர் தொடர்ச்சியாக உதிர்ந்துகொண்டே இருப்பார்கள். காரணங்கள் பல. சிலரால் அவர்களே நம்பும் இலட்சியவாதத்தில் நீடிக்கமுடியாது. சிலர் இலட்சியவாதத்தை கற்பனாவாதமாகப் பெருக்கிக்கொண்டு, நடைமுறையைப் புரிந்துகொள்ளாமலிருப்பார்கள். சிலரால் பிறருடன் இணைந்து செயல்படவே முடியாது. சிலருக்கு அவர்களின் ஆணவம் அதற்கு ஒப்புக்கொள்ளாது. சிலருக்கு தாழ்வுணர்ச்சி அதற்கு தடையாக இருக்கும். எங்கும் எப்போதும் தன் தனித்தன்மையை மட்டுமே வெளிப்படுத்த முயல்பவர்கள் கூட்டுச்செயல்பாடுகளில் இருந்து விலகிவிடுவார்கள். அந்த உதிர்வை தடுக்கவே முடியாது. புதியோர் வருவார்கள் என்றால் எவரும் எந்த இழப்பையும் உருவாக்கிவிடமுடியாது.துல்லியவாதிகளாலும் கூட்டுச்செயல்பாடுகளில் நீடிக்கமுடியாது. ‘தன்’ செயல்களில் துல்லியவாத நோக்கு கொண்டவர்களே உயர்கலைஞர்கள்.  அவர்களுக்கு ஒரு வகையான தனிப்போக்கு இருக்கலாம். ‘பிறர்’ செயலில் துல்லியவாதநோக்கு கொண்டவர்கள் எதையும் செய்து முடிக்கமுடியாத வெறும் பொதுத்தொந்தரவுகள் மட்டுமே.   அவர்களில் ஒருசாரார் பொய்யாக அப்படி நடிப்பவர்கள், தங்களுக்கு ஒரு பிம்பம் உருவாகவேண்டும் என்பதற்காக. சில துல்லியவாதிகள் ஓர் உளப்பீடிப்பாக அதைக் கொண்டவர்கள். அவர்களை தவிர்த்தே முன்செல்லமுடியும்.

உயர்ந்த கருத்துக்களையும் இலக்குகளையும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யாமலிருப்பவர்கள் உண்மையில் வீணானவர்கள். செயலுக்கு எதிரான சக்திகள், பலசமயம் உளச்சோர்வையும் எரிச்சலையும் மட்டுமே அளிப்பவர்கள். எதையேனும் தொடர்ச்சியாகச் செய்பவர்கள், குறைவாகவேனும் செய்து முடிப்பவர்கள் மட்டுமே பயனுள்ளவர்கள். செயல் தொடர்ச்சியாக நிகழ்வதே முக்கியமானது. அதுவே நம்மால் செய்யக்கூடியது.

நாம் செயலுக்கே பொறுப்பானவர்கள், விளைவுகளைக் கணக்கிடும் உரிமை நமக்கில்லை. செயல் நமக்களிக்கும் விடுதலையும் நிறைவுமே நமக்கான பயன்கள். விளைவுகளை ஒருவேளை நாம் அறியவே முடியாமல் போகலாம். அதை காலத்திற்கு விட்டுவிடுவதே உகந்தது.

செயலே விடுதலை. செயலே நிறைவு. செயலில் இருத்தலே மெய்யான வாழ்க்கை.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.