க.நா.சுவின் வழியில்…

க.நா.சு தமிழ் விக்கி

க.நா.சு . இந்த பெயரை நான் அதிகம் படித்தது. கேட்டது எனது ஆசிரியர் ஜெயமோகன் மற்றும் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் இவர்களின் எழுத்துக்களில் உரைகளில். அதன் மூலம் சென்றடைந்தது  இக்கட்டுரைகள் (சக்கரவர்த்தி உலா.   மற்றும்    க.நா.சுவின் தட்டச்சுப்பொறி     

அவரின் ஒரு நூலையாவது முதலில் படிக்கவேண்டும் என முடிவு செய்து வாங்கியது ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்‘. இந்த நூலை தேர்ந்தெடுக்க இன்னொரு காரணம் பெங்களூர் இலக்கிய விழாவில் ஆசிரியரை பேட்டி கண்ட எழுத்தாளர் பொழிபெயர்ப்பாளர் சுசித்ரா இந்நூலை மேற்கோள்காட்டி பேசினார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு அறம் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கக் கொடுத்தேன். இன்னொரு நண்பருக்கு அவரின் மகன் ஆங்கிலத்தில் படிக்கும்வண்ணம் ‘Stories Of the true’ வாங்கிக் கொடுத்தேன் . இருவருமே சொன்ன ஒன்றுண்டு . ‘ இது என்ன இவ்வளவு raw வா இருக்கு ‘, ‘கெட்ட வார்த்தை எல்லாம் பயன்படுத்தியிருக்கிறார். இதை படிக்கும் ஒருவர் எப்படி கடைத்தேறுவார்?’ இப்படி பல கேள்விகள். அப்போது நான் சொன்னது ..பகடிக்காக ஆனால் அவர்களுக்கு உண்மையாக தோன்றும்படி ‘ஆமாம் உண்மைதான் . இந்த கருத்துக்களை ஜெயமோகன் அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள். இது போன்ற ஆக்கப்பூர்வமான எதிர்வினைகளுக்காக என்றும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பவர் அவர் என்று சொல்லி மின்னஞ்சல் முகவரியும் கொடுத்தேன் . அவர்களுக்கு அந்த நூல் வாங்கிய பணத்துக்கு வெங்காயம் வாங்கி இருக்கலாமே என்ற ஆதங்கம்தானே ஒழிய மின்னஞ்சல் அனுப்பவெல்லாம் நேரமில்லை .

இதில் உள்ளுறைந்திருக்கும் மனப்பான்மை என்பது ‘நான் எனக்கென்று ஒரு அளவுகோல் வைத்திருப்பேன் அதற்குள் நான் அறிந்த விஷயத்தையே மனம் லயிக்கும்படி சொல்லவேண்டும்‘ அதை மீறக்கூடாது.அப்படி என்றால் எந்த புதிய கருத்தும் சிந்தனையும் நம்முள் செல்லாது என்பதை பற்றி  பிரக்ஞையற்ற நிலை தான் இது.

இப்போது இந்த நூலைப் பற்றி.இதிலுள்ள கட்டுரைகள் அறுபதுகளில் க.நா.சுவால் நடத்தப்பட்ட இலக்கியவட்ட இதழில் எழுதப்பட்டவை. 1985 ல் நூலாக வெளிவந்துள்ளது.

விமர்சனம் என்பது இலக்கியத்துறைகளில் ஒன்று அதன் தேவை இடம் என்ன என்பதே இதன் அடிநாதம் . ஆனால் அதன்மூலம் இது தொட்டு சென்றிருக்கும் இடங்கள் பல. விமர்சனத்தின் தேவை , பத்திரிக்கை / பேராசிரிய , பல்கலைக்கழக எழுத்து,  இலக்கிய எழுத்து இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், ஒரு வாசகராக ஒருவர் எப்படி ஒரு நூலை படிக்க வேண்டும். அதிலும் பயிற்சி எடுத்துக்கொள்ள என்ன என்ன செய்யவேண்டும். நல்ல நூல் என்று இனம்காண வாசிப்பின் வழி மட்டுமே சென்றடையமுடியும், உலக இலக்கியம் பற்றிய புரிதல் , மொழிபெயர்ப்பின் பயன் என்ன அது எப்படி இருக்கவேண்டும், தமிழ் தூய்மைவாதம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் , விமர்சகனுக்கு இருக்கவேண்டிய நிமிர்வு , பாரதியாரை குறளை நாம் எப்படி அணுகவேண்டும் ஆனால் எப்படி அணுகிக் கொண்டிருக்கிறோம் , டி கே சி யைப் பற்றிய உண்மையான வரிகள் எஸ்.வி.வி என்ற எழுத்தாளரைப் பற்றிய அறிமுகம் . கம்பனை ஷேக்ஸ்பியரைப் பற்றிய விரிவான விமர்சனங்கள் , அன்று தமிழில் எழுதிக்கொண்டிருந்தவர்களை சிலரைக் குறிப்பிட்டு இவர்களே எனக்கு முக்கியமான,  இலக்கியத்தரமுள்ளவர்களாய் தெரிகிறது என சொல்லியிருப்பது சிறுகதை நாடகங்கள் நாவல்கள் கவிதைகள், விமர்சனம், சோதனைகள் என இவற்றைப்பற்றிய விரிவான புரிதல்களை அளிக்கும் இந்நூல் .

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில எழுத்தாளர்கள் பெயர்கள் இன்று அதிகம் கேட்பதில்லை என்றாலும் அவர் சொல்லும்படி அது அவரின் பார்வை மட்டுமே . உதாரணம் சிதம்பர சுப்ரமணியம் .அதோடு அவர் எதையும் இந்நூலில் நிறுவவில்லை. இதையெல்லாம் நான் இன்ன இன்ன காரணங்களினால் சொல்கிறேன். இதை இந்த முறைமைகளின் படி மறுப்பவர்கள் அவர்கள் கண் கொண்டு மறுக்கலாம் என சொல்கிறார். இது இலக்கியத்துக்கு மட்டுமல்ல நமது அன்றாட வழக்கு சழக்குகளுக்கும் பயன்படுத்திப்பார்க்கலாம் . இலக்கியத்தின் பயன்தானே அதுவும் .

இலக்கியத்தில் கருத்தும் உருவமும் ஒரு சம்பாஷணை என்ற உரையாடல் வடிவக் கட்டுரையில் . மிக ஆழ்ந்த கவனத்தைக்கோரும் விவாதங்கள் இடம் பெறுகிறது. ஒரு படைப்பிற்கு முக்கியம் கருத்தா வடிவமா . ஒரு வடிவத்தை படைப்பாளி எப்படி தேர்ந்தெடுக்கிறார். அந்த வடிவத்தில் இல்லாது வேறுவடிவத்தில் எழுதியிருந்தால் அது எப்படி இருந்திருக்கும் என விரிவான உரையாடல்.

உலகப் படைப்பாளிகள் பலரது ஆக்கங்கள் விவாதிக்கப் பட்டுள்ளது அதில் சிலரது பெயர்கள் நான் முதல்தடவையாக வாசிக்கிறேன். உதாரணம் டாண்டே .

சரி அப்படி ஆரம்ப நிலை வாசகன் இந்த மாதிரி அழுத்தமிக்க நூலை வாசிக்கவேண்டுமா என்றால் . நிச்சயமாக ஆம் என்பதே என் பதில். அதற்கு துணை செய்யும் நூலில் உள்ள பொன்வரிகள் . உதாரணங்கள் சில கீழே .

இலக்கியாசிரியன் வாசகனைத் தேடுவதில்லை. நல்ல வாசகன்தான் இலக்கியாசிரியனைத் தேடுகிறான்நல்ல இலக்கியாசிரியர்கள் எங்கே எங்கே என்று தேடுகிற கூட்டம் இன்று தமிழ்நாட்டில் அதிகம் இல்லை. ஏற்படவேண்டும்இலக்கியாசிரியன் எந்தக் குறிப்பிட்ட வாசகனையும் கூட்டத்தையும் மனதில் கொண்டு எழுதுவதில்லை . எழுதவேண்டிய அவசியம் , அரிப்பு  , அர்ஜ் ஏற்படுகிறது – எழுதுகிறான் தாங்கள் படித்ததற்கு அப்பாலும் ரசிக்கத் தகுந்தது இருக்கலாம் என்கிற சிந்தனை முறையாகப் படித்தவர்களுக்கு இருப்பதில்லைபழசைப் பற்றியே எழுதித் தங்கள் பொழுதையும் நம் பொழுதையும் புதுசாக எதுவும் சொல்லாமல் போக்கிக் கொண்டிருப்பவர்களை , சமுகத்திலும் அறிவுலகத்திலும் இருந்து பகிஷ்கரிக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்  தமிழ் தமிழ் என்று பாராட்டிச் சுயநலத்துக்காகப் பெருமை பேசுகிறவர்கள் உலக இலக்கியத்தில் தமிழ் தன் ஸ்தானத்தை ஏற்பதற்கு ஒன்றும் செய்யாதவர்கள் , செய்ய இயலாதவர்கள் என்று காண்கிறோம்எத்தனையை தெரிந்துகொள்வது , அதற்கு மேலும் தெரிந்து கொள்ளவேண்டியது இருந்துகொண்டேதானே இருக்கும் என்று கேட்கலாம். உண்மைதான். தெரிந்துகொள்வதைத் தெரிந்துகொண்டு , இன்னும் இருக்கிறது என்கிற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டு விட்டால் இலக்கியம் வளரும்தமிழில் எல்லாமே இருக்கிறது குறளில் எல்லாமே இருக்கிறது வேறு ஒன்றும் நமக்குத் தேவையில்லை என்று ஆரம்பத்தில் பண்டிதப் பேராசிரியர்களும் , அரசியல்வாதிகளும் பின்னர் வந்த தமிழ் மட்டும் பற்றி வெறி கொண்டவர்களும் சூழ்நிலையை வீணாக்கிவிட்டார்கள்.உலகில் உள்ளதில் சிறந்ததை அங்கீகரித்துப் படித்துத் தெரிந்து கொள்வதற்கு ஊர் ஆர்வம் வேண்டும் .முதலில் அந்த ஆர்வத்தை வளர்ப்பதற்கு ஒரு சூழ்நிலை உருவாகவேண்டும்.சிந்திக்கவே மறுப்பதற்குப் பதில் , சிந்தித்து முடிவு காண முடியாவிட்டாலும் பாதகமில்லை – சிந்திப்பது என்பதுதான் முக்கியம்

சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய விஷயங்கள் இன்றும் பெரிதாக மாறவில்லை என்பதே இன்றும் இந்த நூலுக்கான தேவையை உறுதிப்படுத்துகிறது .

இந்த நூலின் தலைப்பு மற்றும் முதல் கட்டுரையின் தலைப்பு ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்‘ . அதில் எவை எவையெல்லாம் வேண்டும் என சொல்லப்பட்டிருந்ததோ அவைகளில் பெரும்பாலானவை முழுமையறிவு , தமிழ் விக்கி , , விஷ்ணுபுரம் விருது , குமரகுருபரன் விருது, பெரியசாமி தூரன் விருது , உலகத் தரம் வாய்ந்த மொழிபெயர்ப்புகள் , அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் மாநாடு என ஆசிரியர் ஜெயமோகனின் முன்னெடுப்பில் சொல்லெடுப்பில் செயல்வடிவம் பெறுவதை காணும்போது அவர் தன்னை க.நா.சு மரபினன் என்று சொல்லிக்கொள்வது வெறும் வார்த்தைகளல்ல என்று உணர முடிகிறது.

தற்போதைய வாசகன் என்னும் நிலையில் என்னாலும் ஒருதுளி  அளவிலாவது சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது ‘ நான் ஆசான் ஜெயமோகனின் க.நா.சுவின் மரபினன்‘ என்று !

https://kmrvignes.blogspot.com/2025/03/blog-post_29.html

அன்புடன்

கே.எம்.ஆர்.விக்னேஸ்.

அன்புள்ள விக்னேஷ்

அன்புள்ள விக்னேஸ்,

நான் க.நா.சுவின் இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் நூலை  1986 ல் வாசித்தேன். அப்போது எனக்கு 24 வயது. அவ்வாண்டுதான் நவீனத்தமிழிலக்கியத்திற்கு சுந்தர ராமசாமி வழியாக அறிமுகமாகிக்கொண்டிருந்தேன். சுந்தர ராமசாமி வீட்டுக்கு வந்த ராஜமார்த்தாண்டன் அதை எனக்கு வாசிக்கக்கொடுத்தார். அவருடன் வந்திருந்த கட்டைக்காடு ராஜகோபாலன் (கொல்லிப்பாவை சிற்றிதழ் ஆசிரியர்) அந்நூலைப் பற்றிப் பேசினார். புத்தகம் அவருடையதுதான்.

அது க.நா.சுவை வெளிப்படுத்தும் நூல் அல்ல, அவருடைய நாவல்களே அவர் என்றார் ராஜகோபாலன். “சும்மா அவரோட எண்ணங்களை எழுதியிருக்கார். கிடைச்ச கட்டுரைகளை திரட்டி புக்கு போட்டிருக்காங்க. கிரிட்டிசிசம்னா நீங்க சி.சு.செல்லப்பாவைத்தான் வாசிக்கணும்” என்றார்.

“செல்லப்பா அலசல் விமர்சனம் பண்ணுவார். நீளமாட்டு இருக்கும் இதெல்லாம் எளிமையான கட்டுரைகள். இந்த புக்கு இவரைமாதிரி தொடங்குறவங்களுக்கு நல்லது. இலக்கியம்னா என்னான்னு காட்டும்” என்றார் ராஜமார்த்தாண்டன்.

சுந்தர ராமசாமி “அவர் ஏற்கனவே டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், பி.கே.பாலகிருஷ்ணன், குட்டிக்கிருஷ்ண மாரார்னு பெரிய கிரிட்டிக்கை எல்லாம் வாசிச்சாச்சு…. இது இலக்கிய அறிமுகம், அவ்ளவுதான். க.நா.சு கிரிட்டிசிசம் எழுதலை. அவர் எழுதினதெல்லாம் இலக்கியச் சிபாரிசுகள்தான்… ஆனா அவருக்கு மிகப்பெரிய ரோல் இருக்கு. அவர் ஒரு பெரிய சகாப்தம்” என்றார்.

அப்போது க.நா.சு உயிருடன் இருந்தார். எனக்கு அவர் பெயர்தான் அப்போது தெரியும், நான் மலையாள- ஆங்கில இலக்கியத்தில் ஊறிக்கிடந்த நாட்கள் அவை. காஸர்கோட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். க.நா.சுவின் கட்டுரைகளை அப்போது குங்குமம், தினமணி முதலிய இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தார். அந்த நூலுக்கு அவ்வாண்டே சாகித்ய அக்காதமி விருது கிடைக்கவிருந்தது. அதைவிட க.நா.சுவை நான் அதற்குச் சில மாதங்களுக்குப் பின் சென்னையில் சுவாமிநாதன் என்னும் நண்பாரல ஒருங்கிணைக்கப்பட்ட விஜில் என்னும் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் சந்திக்கவும் நேர்ந்தது.

அந்நூலை நான் அன்றே வாசித்து முடித்தேன். எனக்கு பெரும் உள எழுச்சியை உருவாக்கிய நூல் அது. அதிலுள்ள கனவுதான் என்னை முதலில் கவர்ந்தது. இலக்கியக் கொள்கைகள், இலக்கிய ஆய்வுகள் அதில் இல்லை. க.நா.சு ஓர் அறிவியக்கத்தை உருவாக்க முயன்றுகொண்டே இருந்தார், வாழ்நாள் முழுக்க. சிற்றிதழ்கள் நடத்தினார். கட்டுரைகள் எழுதினார். ஆங்கிலத்தில் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்தார். தமிழ்ச்சூழலில் அணைந்துவிட்டிருந்த அனலை ஊதி ஊதி பற்றவைக்க முயன்றபடியே இருந்தார். அதன்பொருட்டு வசைபாடப்பட்டார், இன்றும் அவரை வசைபாடுபவர்கள் மிகுதி.

அவருடைய நடைமுறை முயற்சிகள் எல்லாமே தோல்விதான். ஏனென்றால் அவர் ஒரு ‘விட்டேத்தியான’ மனநிலை கொண்டிருந்தார். (சுந்தர ராமசாமியின் சொல்) எதையும் பொறுப்பாகச் செய்யவில்லை. ஆனால் அவருடைய இலட்சியத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அதை சுந்தர ராமசாமி போன்ற சில மாணவர்களிடம் பற்றவைத்துச் செல்ல அவரால் இயன்றது.

நான் க.நா.சுவிடமிருந்து அந்தக் கனவை பெற்றுக்கொண்டேன். இளமைக்குரிய திமிருடன் சுந்தர ராமசாமியிடம் சொன்னேன். “ஒரு இயக்கம் தேவைசார். அதை உருவாக்கணும்னு நினைக்கிறேன்”

சுந்தர ராமசாமிக்கும் அக்கனவு இருந்தது. அவர் காகங்கள் போன்ற அமைப்பை உருவாக்கி சிலகாலம் நடத்தி வந்தது அதனால்தான். நாங்கள் உத்வேகத்துடன் ஓர் இலக்கிய அமைப்பைப் பற்றி அந்த மாதங்களில் பேசிக்கொண்டோம். நான் காசர்கோட்டில் இருந்து அனேகமாக தினமும் அவரிடம் உரையாடினேன். மாதம் ஒருமுறை நாகர்கோயிலுக்கு வந்து அவர் இல்லத்தில் தங்கினேன். திரும்பத் திரும்ப வேறு வேறு கோணங்களில் பேசினோம். காகங்கள் அமைப்பை திரும்ப ஆரம்பிப்பது முதல் திட்டம். அதை சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் விரிவாக்குவது அடுத்த கனவு.

க.நா.சு 1986 ல் சாகித்ய அக்காதமி விருது பெற்றார். அவரைச் சந்தித்தது என்னை அவரை வழிபடும் மனநிலைக்குக் கொண்டுசென்றது. அவரைப் பார்த்து “நான் உங்க கனவை எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிடவேண்டும் என்று கனவுகண்டேன். சுந்தர ராமசாமி வீட்டுக்கு க.நா.சு வந்தார். அப்போது அவரிடம் போனில் ஓரிரு சொற்கள் பேசினேன். மொத்தக்குரலும் எனக்குள்ளே ஒலிக்க நான் “உங்களைப் பாக்கணும் சார்” என்று மட்டும் சொன்னேன்.

க.நா.சு வந்துபோன சில வாரங்கள் கழித்து சுந்தர ராமசாமி காகங்கள் என்னும் இதழை ஆரம்பிப்பது பற்றிச் சொன்னார். நான் உற்சாகத்துடன் கிளம்பி வந்தேன். அதற்கு மொழியாக்கங்கள் செய்வது, பிளாக்குகள் வாங்கி வருவது போன்றவற்றைச் செய்தேன். இதழின் பெயர் காலச்சுவடு என மாறியது.  சுந்தர ராமசாமி அவருடைய ஆசிரியர் அவருக்களித்த கனவை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார். அவரால் அதை தொடரமுடியவில்லை. அவருடைய மகன் அக்கனவை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். தொடக்க காலத்தில் காலச்சுவடு இலக்கியவிழாக்களை அமைப்பது உட்பட பல பணிகளை முன்னெடுத்தது. இன்று பதிப்பகம் மட்டுமாகச் சுருங்கியுள்ளது. ஆயினும் காலச்சுவடு ஓர் இயக்கம்.

எனக்கு காலச்சுவடு மேல் பெரும் ஈடுபாடு இருந்தது. அது ஒன்றரை ஆண்டில் நின்றுவிட்டமை சோர்வளித்தது. நான் அக்காலகட்டத்தில் சுப்ரபாரதி மணியனுடன் இணைந்து கனவு இதழுக்காக அசோகமித்திரன், சுந்தர ராமசாமி மலர்களை தயாரித்தேன். நானே ஒரு சிற்றிதழ் தொடங்கும் கனவுடன் இருந்தேன். சுபமங்களா தொடங்கப்பட்டபோது அதில் தீவிரமாக ஈடுபட்டேன். அனேகமாக எல்லா இதழ்களிலும் எழுதினேன்.

மீண்டும் காலச்சுவடு தொடங்கப்பட்டபோது அதில் முதன்மைப் பங்களிப்பாற்றினேன். ஆனால் என் திட்டங்களை நோக்கி அவர்களைக் கொண்டுசெல்ல முயன்று , முரண்பாடு உருவாகி விலகிக்கொண்டேன். இரண்டாம் கட்ட காலச்சுவடு இதழில் உருவான மனுஷ்யபுத்திரன் விலகிக்கொண்டு உயிர்மை இதழை தொடங்கினார். தொடக்க காலத்தில் நான் உட்பட பலர் பங்களிப்புடன் பல முனையில் செயல்பட்டது உயிர்மை. இன்று மனுஷ்யபுத்திரன் கட்சிசார்பு கொண்டவராகி அவ்விதழும் கட்சியிதழாகச் சுருங்கிவிட்டாலும் உயிர்மையும் ஓர் இலக்கிய இயக்கமே. இவை அனைத்துக்கும் தொடக்கம் இந்நூலில் உள்ள க.நா.சுவின் கனவே.

நான் 1992ல் நித்ய சைதன்ய யதியைச் சந்தித்தேன். அது என் வாழ்க்கையில் பெரிய மறுதொடக்கம். நான் நித்யாவைச் சந்திக்கவில்லை என்றால் க.நா.சு, சுந்தர ராமசாமி முதல் இன்றுவரை நீடிக்கும் சிற்றிதழ் மனநிலையை வளர்த்துக் கொண்டிருப்பேன். எனக்கும் நவீனத்துவ தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையேயான வேறுபாடு நித்யா வழியாக உருவானதே. அவர் எனக்கு செவ்வியலின் உச்சங்களை அறிமுகம் செய்தார். மேற்கு ஏற்கனவே நவீனத்துவத்தை கடந்துவிட்டதை அறிவித்தார். என்னை நான் கண்டடையச் செய்தார்.

க.நா.சுவில் தொடங்கி ரமிள், ஜி.நாகராஜன் வரை அனைவருமே ஏதேனும் இலக்கிய இயக்கத்தை உருவாக்க முயன்றவர்களே. அவர்களின் முயற்சிகள் மேலெழவில்லை. பெருங்கனவுகள் இருந்தாலும் கூடவே அவநம்பிக்கையையும் சோர்வையும் வளர்த்துக்கொள்பவர்கள் நவீனத்துவப் படைப்பாளிகள். தனித்து மட்டுமே செயல்படக்கூடியவர்கள். அமைப்புகளை உருவாக்கி முன்னெடுக்கும் வழிகாட்டித்தன்மையும் தொலைநோக்கும் அற்றவர்கள். அதாவது எதையும் பொறுப்பேற்றுக்கொள்ளாத, பிறர் என்பதே மனதில் இல்லாத போக்கு கொண்டவர்கள். அவர்கள் உருவாக்கிய அமைப்புகளின் தேக்கமும், எல்லைகளும் அதன் விளைவே.

அந்த மனநிலை உண்மையில் ‘நவீனத்துவ’ எழுத்தாளர்களில் உலகம் முழுக்க இருந்து வந்த ஒன்று. அவர்களிடம் இருக்கும் கசப்பும், எதிர்மறை மனநிலையும் அவர்களை தனியர்களாக ஆக்கிவிடும். ஆனால் உலகமெங்கும் பேரிலக்கியவாதிகளுக்கு இவ்வியல்பு இருந்ததில்லை. பேரிலக்கியவாதிகளே உலகமெங்கும் மிகப்பெரிய இலக்கிய- பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கியவர்கள். இயக்கங்களை தொடங்கியவர்கள். இந்தியாவிலேயே தாகூர், வள்ளத்தோள் நாராயணமேனன், சிவராம காரந்த் என ஏராளமான உதாரணங்களைச் சொல்லமுடியும்.

நித்ய சைதன்ய யதியைச் சந்தித்த பின் நான் என் செயல்பாடுகளை அவருடைய வழிகளில் அமைத்துக்கொண்டேன். அவருக்கும் தமிழில் ஓர் அறிவியக்கத்தை முன்னெடுக்கும் கனவு இருந்தது. அதற்கு அவர் சிற்பி, பிரம்மராஜன் போன்ற பலர் வழியாக முயற்சிகள் செய்து அவை ஈடேறாத நிலையில் இருந்தபோதுதான் அவரை நான் சந்தித்தேன். க.நா.சு வழியாக நான் பெற்றுக்கொண்ட கனவே நித்யா எனக்களித்த ஆணையாகவும் இருந்தது.

1992 முதல் என் பணி ஓர் அறிவியக்கத்தை கட்டமைப்பதாகவே இருந்தது. 1992ல் தொடங்கிய குரு நித்யா காவிய அரங்குகளில் இருந்து இன்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ள விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வரை பல துணைஅமைப்புகளாக அந்தச் செயல்பாடு விரிந்துகொண்டே உள்ளது. க.நா.சு எழுதியதுபோல ஊர் தோறும் இன்று ஏதேனும் ஓர் அமைப்பு எங்களிடமிருந்து தொடங்கி நடைபெறுகிறது. அனேகமாக எல்லா நாளிலும் ஆண்டு முழுக்க இலக்கிய- பண்பாட்டு நிகழ்வுகள் உள்ளன. தமிழ்விக்கி ஓர் இயக்கம். இன்று முழுமையறிவு இன்னொரு இயக்கம். இவற்றின் விளைவுகள் என்ன என்பதை இன்று கண்கூடாகவே பார்க்கலாம். எவர் எங்கே எந்த இலக்கியக்கூட்டம், பண்பாட்டு ஆய்வுக்கூட்டம் நடத்தினாலும் அதில் பங்கெடுப்பவர்களில் பாதிப்பேர் இங்கிருந்து சென்றவர்களாகவே இருப்பார்கள்.

நான் இதை நிகழ்த்தினேன் என பெருமிதம் கொள்ளவில்லை- அதை எனக்கேயான ஆணையாகச் சொல்லிக்கொள்கிறேன். க.நா.சுவிடமிருந்து கனவை, நித்யாவிடமிருந்து செயலைக் கற்றுக்கொண்டேன். அந்த கனவை தொடர்ச்சியாகப் பகிர்ந்துகொண்டே இருக்கிறேன். அவர்களின் தொடர்ச்சியே நான். செயல்களுக்கு நான் பெருமிதம் கொண்டேன் என்றால் என் செயல்பாடு நின்றுவிடும். இன்னொன்று, இதை நான் நிகழ்த்தவுமில்லை. இப்படி ஒரு கனவை முன்வைத்து உரிய நண்பர்களை திரட்டியது மட்டுமே என் பணி. உண்மையில் களத்தில் நான் எதையுமே செய்யவில்லை. எல்லா சாதனைகளும் என் நண்பர்களுடையவை மட்டுமே.

ஜெ

 

க.நா.சுவின் கதைகள் க.நா.சுவின் படித்திருக்கிறீர்களா? விபுலானந்தரும் க.நா.சுவும்- கடிதங்கள் க.நா.சு- வாசகன், விமர்சகன்,எழுத்தாளன் சர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம் க.நா.சுவும் வெங்கட்சாமிநாதனும் பாரதி விவாதம்-7 – கநாசு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.