அ. மார்க்ஸ், ஒரு கடிதம்.
அன்புள்ள ஜெ,
அ.மார்க்ஸ் பற்றிய உங்கள் கட்டுரையைப் பற்றி நண்பர்கள் நடுவே வாட்ஸப் குழும உரையாடல் நடைபெற்றது. ’தீவிர’ நண்பர் ஒருவர் ‘ஜெயமோகன் விலைபோய்விட்டார். மாற்றிப்பேசுகிறார் ’ என்று ஆரம்பித்தார். ‘இப்போது ஜெயமோகன் எதற்கோ அடிபோடுகிறார்’ என்றெல்லாம் சொன்னார்.
‘அந்தக் கட்டுரையின் கீழேயே கடந்த பல ஆண்டுகளில் அவர் அ.மார்ஸ் பற்றி சொன்ன கட்டுரைகள் தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிலும் இதே மரியாதையான பார்வைதானே உள்ளது’ என்றேன். ஆனாலும் அதே பேச்சுதான்.
ஒரு மணிநேரம் கழித்து இன்னொரு வாட்ஸப் பேச்சு. அதில் ‘அ.மார்க்ஸ் விலைபோய்விட்டார்’ என ஒருவர் ஆரம்பித்தார். அடச்சை என்று விலகிவிட்டேன்.
இந்த வகையான சூழலில் கருத்துச்செயல்பாடுகளுக்கு என்னதான் மதிப்பு இருக்கமுடியும்? அ.மார்க்ஸின் முகநூலிலேயே அவருக்கு ஆலோசனை சொல்லவும், அவரை அடக்கவும்தான் பலரும் முயல்கிறார்கள். ஓர் அறிஞர் என்ற பார்வையெல்லாம் எவரிடமும் இல்லை. அவரை வாசிப்பவர்கள்கூட அங்கே தென்படவில்லை.
சா.கிருஷ்ணசாமி
அன்புள்ள கிருஷ்ணசாமி,
பொதுவாக இங்கே உள்ளவர்கள் அரசியல் அற்ற நடுத்தவர்க்க அப்பாவிகள். மதத்திற்குள், சாதிக்குள், குடும்பத்திற்குள் வாழ்பவர்கள். அரசுக்கு அடங்கி, போலீஸுக்குப் பயந்து, மனைவிக்கு பணிந்து, மாமியாருக்கு அஞ்சி வாழும் எளிய மக்கள். முகநூல் அவர்கள் டைனோஸர் வடிவம் கொண்டு உலாவும் ஒரு புனைவு வெளி. அங்கே அவர்கள் ஊனுண்ணிகள், அதில் அறிஞர் என்ன சாமானியர் என்ன? கொன்று உண்ணவேண்டியதுதான். பாவம், அதுவாவது அவர்களுக்கு மிஞ்சட்டுமே.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

