நாம், நமது குழந்தைகள்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நலமே விளைக என்று பிராத்திக்கின்றேன்.
காருக்குள் கருவுற்ற ஒரு கவிதை தருணம் என மனதில் பதிந்த அந்த சில நிமிடங்களை நினைத்து பார்க்கையில் பூரிப்பாய் இருந்தது. காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் அன்றைய தினம் நிகழ்ச்சிகள் முடிந்து மாலை வேலாயுதம், வேணு, ராம், நான் நால்வரும் வேணுவை அவர் தங்கியிருக்கும் இடத்தில் விட்டுவிட்டு காரைக்குடி போவதாக கிளம்பினோம்.
2017 ஆம் ஆண்டு ஊட்டி காவிய முகாமில் வேணுவின் ’கவிதையில் படிமம்’ என்பதற்கு மரப்பிசினால் முடிப்போன எறும்பு பற்றிய விளக்கமும், பாரியின் ரெனே ஹீகுயுதா துள்ளலான சாகச விளையாட்டை பார்க்கையில் நமக்கு பற்றிக்கொள்ளும் அந்த அனுபவத்தை, கவிதையும் அப்படியான அனுபவத்தை தரக்கூடியது என்று சொன்னது மிக பெரிய அறிதலாக இருந்தது. உரைநடை வாசிப்பில் இருக்கும் சௌகரியங்களை கடந்து கவிதையை வாசிக்க உணர ஆவல் கொண்டு அன்றில் இருந்து கவிதைகளை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஏதாவது ஒரு கவிதை நல்ல அனுபவத்தை உணரச்செய்தால் நன்றியோடு வேணுவையும் பாரியையும் நினைத்துக்கொள்வேன்.
அன்று வேணுவிடம் ராம் எனக்கு ஒரு கவிதை தோனுது என்று சொல்ல எனக்கு பகீர் என்று இருந்தது. காரில் திண்டுக்கல் வரை சென்ற போது, அவரது கப்பல் பணி பற்றிய அனுபவங்களை தொடங்கி அப்படியே கவிதை பக்கம் பேச்சு மாறிய கனத்தில் நடந்த விபரீதம். அப்படியா எங்க சொல்லு என்றார் வேணு
அன்று மாலை தங்குமிடம் சுற்றி பறவைகள் பார்த்த போது தவிட்டுக்குருவிகளில் ஒன்றை அவன் அசையாமல் பின்னால் கைகட்டி கவனித்தபடியே நின்றிருந்தான். அவன் அத்தனை அருகில் இருந்தும் பறக்காமல் நிதானமாக இருந்தது பறவை, நானும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன் பின் அதை படம் எடுக்க முயற்சித்த நேரம் அவன் இன்னும் சற்று முன் நகர பறவை அங்கிருந்து பறந்து அருகில் இருந்து கிளையில் அமர்ந்தது. இந்த நிகழ்வை அவன் வேணுவிடம் சொல்லி ‘அந்த பறவை ஏன் பறந்தது? அப்போது அந்த பூ என்ன நினைத்திருக்கும்?’ என்று முடித்து வைத்தான். அதற்கு வேணு அவரின் வசீகர குரலில் கடைசி வரி நல்லாயிருக்கே ராம் இன்னொரு முறை சொல்லு என்றார்.
நான் நினைத்துக்கொண்டேன் நமக்கும் கவிதைக்கும் இன்னும் தூரம் என்று, சற்று பின் நகர்ந்து அமைதியாகிவிட்டேன். வேணு தங்கியிருந்த இடத்திற்கு வந்துவிட்டோம் இருந்த போதும் ஓரமாக வண்டியை நிறுத்தி பேச்சு தொடர்ந்தது, மீண்டும் சொல்லிப் பார்ப்போம் ராம் என்று சில சொற்கள் மாற்றி பின் வாக்கியத்தை நேர்த்தி செய்து பார்த்தார்கள். அங்கே கவித்துவமாய் ஏதோ நடந்து கொண்டிருந்தது. நேரம் ஆனதால் அவர் தொடர்பு எண்களை வாங்கிக்கொண்டு ராமிடம் ஊக்கப்படுத்தி தொடர்ந்து எழுது எனக்கு அனுப்பு பேசுவோம் என்று சொல்லிவிட்டு காரில் இருந்து இறங்கி கொண்டார்.
இரவு நேரத்தில் கார் ஓட்டுவது எதிர் வெளிச்சத்தில் எனக்கு சிரமமாக இருந்ததால் நண்பர் வேலாயுதம் தான் காரை ஓட்டினார். நடுசாம நேரத்தில் திருப்பத்தூர் வந்தோம் வேல் இறங்கிக் கொண்டார். மெதுவாக காரை உருட்டிக்கொண்டு வந்தேன் நான் தூங்காமல் இருக்க ராம் பேசிக்கொண்டு வந்தான். நாங்கள் காரைக்குடி வந்து சேருவதற்குள் வேணுவின் செய்தி வந்தது ’நான் அந்த பறவையை நோக்கி போனேன்..’ ராம் சிதம்பரம் என்று பெயருடன். ராம் படு துள்ளலுடன் வீட்டிற்குள் சென்றான்.
அடுத்த அடுத்த வாரங்களில் மாலை நேர வகுப்புகளுக்கு போய் வரும் வழியில் இருக்கும் குளத்தில் பார்த்த தாழைக்கோழியின் செயல்களை பற்றி தான் வேணுவிடம் சொல்லி எழுதினான். இது ஒரு புறம் என்றால், அங்கு பார்த்ததை இணையத்தில் பதிந்து அதை விஷ்ணுபுர பறவைகள் வட்டத்திற்கு பகிர்ந்து அதில் பிரிடிங் கோடு (Breeding code) போன்ற கூடுதல் தகவல்களை சேர்த்து விஜயை பீதி அடைய செய்தான், பின் விஜய் ராமிடம் பேசி அவனின் ஆர்வத்திற்கு மடை போட்டார்.
தமிழக அரசு முன்னெடுத்த ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட இளம் வயது ஆர்வலர் என்று ராமை சிவகங்கை திருப்பத்தூர் சரக வனத்துறை அன்பளிப்பு அளித்து ஊக்கப்படுத்தியது. அதனை தொடர்ந்து அவனுக்கு வாழ்த்துகள் அனுப்பியது தொடங்கி கப்பல்காரன் ஷாகுல் அவர்களுடனும் கடல் பறவைகள் பற்றி தினமும் ஒரு உரையாடல் நடக்கிறது, நேரம் கிடைக்கும் போது ஷாகுல் வாட்ஸ்ஆப்பில் அழைத்துப் பேசுகிறார். கடல் பறவைகள் தொடங்கி, கடல் பருவ நிலையில் பயணம், கடல் கொந்தளிப்பு என்று பேசி பின் கடல் கொள்ளையர்கள் பற்றிய கேட்டுக்கொண்டிருக்கிறான். அவர்களின் கப்பல்காரன் பதிவை இரவில் வாசித்துக் காட்டுகிறேன்.
முதன் முதலில் நண்பர் வெங்கடேஷ் அவர்களின் கடிதமும் விஜயின் உரையாடலுடன் தான் பறவைகள் குறித்து நான் அவனிடம் சொன்னது பிறகு அருகில் இருக்கும் சிறிய சரணாலயத்திற்கு சென்று வந்தது அவ்வளவே. பறவை பார்ப்பதும் அதன் உலகமும் ராமிற்கு இத்தனை விருப்பமானது என்று நித்தயவனம் வகுப்பும், ஆசிரியர்கள் விஜயும் ஈஸ்வரமூர்த்தியும் அவர்கள் வழிகாட்டலும் ஒருங்கிணைப்பும் அமைந்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. விஷ்ணுபுரம் பறவைகள் வட்டம் மற்றும் தமிழக பறவை ஆர்வலர்கள் இந்த இரண்டு குழுவிலும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வரை செலவிடுகிறான். நேரம் இருக்கையில் என்ன செய்யலாம் என்ற கேள்விக்கே இடமில்லாமல் எதன் மீதாவது ஒரு ஆர்வம் அவர்கள் நேரத்தை முழுமையாக்கி கொண்டே செல்கிறது.
இந்த விடுமுறை நாட்களில் அவன் வைத்திருக்கும் திட்டங்களில் பாதி பறவைகள் சார்ந்தது, இதில் குறிப்பாக அவனது ஆசிரியர்கள் இருவரையும் அவர்கள் ஊரில் சென்று சந்தித்து அவர்களுடன் சென்று பறவை பார்க்க வேண்டும் மற்றும் ஈரோடு எலத்தூர் குளத்தில் பறவைகள் பார்ப்பது; இந்த இடம் காந்திய நடைபயணம் சென்ற போது அனு சொன்னது.
பள்ளிக்கு சென்று வந்த பிறகு கிடைக்கும் மற்ற நேரங்களில் விளையாட்டு பொழுதுபோக்கு என்று சில வகுப்புகளில் நுழைந்து அதில் பாதியை உதரி மீதியில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் அவர்களுக்கு தேவையானதை எப்படியோ பழகிக் கொள்கிறார்கள் அவர்களுக்கு சில அறிதலுக்கு வழிவகுத்துக் கொடுத்தால் அதுவே ஆரோக்கியமான பழக்கமாக இருக்கும். பனிமனிதன், உடையாள், யானை டாக்டர், நேஷனல் ஜியாகிரபி இதழ் என்று சூழல் சார்ந்த வாசிப்பில் இருந்தும் பறவைகள் வகுப்பு வழியாகவும் தனக்கான விருப்பமாக உயிர் சூழலியிலை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறான்.
தங்களுக்கான தேர்வுகளை தாங்களே செய்கிற போது அதனூடாகவே அதற்கான பொறுப்புகளையும் உணர்ந்து செயல்படுகிறார்கள். பொறுப்புகளை உணர்வது வழியாக தான் கற்றுக்கொள்ள முடியும் என்பது என் எண்ணம். நாளை எப்படியான சூழல் இருந்தாலும் அங்கே தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கு வழி இருக்கிறது, சவால்கள் நிறைந்திருந்தாலும் அவற்றை சமாளிப்பது அவரவர் திறமை! அதை விருப்பத்தோடு செய்கையில் ஒருபோதும் கஷ்டமாக தெரிவதில்லை!
நான் நம்பும் சில தாத்பரியங்களில் ‘மாதா பிதா குரு தெய்வம்’ ஒன்று, தாய் தந்தையை அடையாளம் காட்டுகிறார், தந்தை குருவை அடையாளம் காட்டுகிறார் குருவே பரம்பொருள் ஆன்மீக விடுதலைக்கு வழி காட்டுகிறார்.
இன்றைய சூழலில் குல குரு முறையும் குல தொழில் முறையும் அருகிவிட்ட அமைப்பு என்ற போதிலும் மிக பெரிய வெளி இருக்கிறது அதில் நமக்கான தேர்வும் செயலும் எது என்று கண்டடைய முறையான அறிதல் அவசியமாக இருக்கிறது. திருவிழாவில் குழந்தைகளை தோளில் ஏற்றி வைத்துக்கொண்டு சுற்றத்தை வேடிக்கை காட்டுவது போல வாழ்க்கைக்கும் தேவையான பல தடையங்களை அறிதல்களுக்கான வழிகளை காட்டவேண்டும். விஷ்ணுபுரம் நண்பர்களின் அரவணைப்பு என்பது குழந்தைகளுக்கு அறிதலின் அச்சாரம்.
இறுகிப்போன பண்பாட்டில் ஒழுங்கு என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்ளாமல் அதனையே ஊக்க சக்தியாக கொண்டு ஒழுங்கற்ற ஒழுங்கிற்கு விடுபடவேண்டும். எதை செய்தாலும் நன்றாக செய்ய வேண்டும் என்பது எனக்கு அளிக்கப்பட்ட கல்வி அங்கிருந்து விருப்பமானதை செய்கையில் இயல்பாகவே நன்றாக அமைந்துவிடும் என்ற நகர்வுக்கு முயற்சிக்கிறேன்.
முன்னோர்கள், பெற்றவர்கள், குரு, பெரியவர்கள் ஆசீர்வாதங்கள் நம்மை காக்கும் நமக்கு வழிகாட்டும். அப்படி அமைவது பெரிய பேறு.
நன்றி
நாராயணன் மெய்யப்பன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

