மனசாட்சியின் குரல்
பின் தொடரும் நிழலின் குரல். நம் நிழலை நம் மனதின் குரலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
ரஷ்யாவில் நடந்த புரட்சியின் மூலம் கம்யூனிசம் சாதித்தது என்ன? ஓர் இயக்கத்தின் கொள்கையிலும், அதன் பாதையிலும் தவறு இருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவது எப்படி துரோகம் ஆகும்? ஒரு இயக்கத்தின் ஆன்மாவை தூய்மையாக காட்ட வேண்டும் என்பதற்காக தூய்மையான மனிதர்களை ஒழித்துக்கட்டுவது எவ்வகை நியாயம்? ரஷ்யப்புரட்சியில் ஜார் மன்னனின் குடும்பத்தைக் கொன்றதும், உழைப்பு என்ற பெயரில் குழந்தைகளை வதைத்ததும், அரசுக்கு இணங்காத விவசாயிகளை கொன்றொழித்ததும் எப்படி பொன்னுலகம் படைக்கும் சித்தாந்தம் ஆகும்? இப்படி நாவலெங்கும் நிறைய கேள்விகளை அடுக்கியுள்ளார் ஜெயமோகன்
நமக்குப் பர்சனலாக கம்யூனிசம் மீது பெருங்காதல் உண்டு. அதனால் ஜெயமோகனின் எள்ளல் மீதும், மொத்தப் பழியையும் கம்யூனிச சிந்தாத்தின் மீது போடுவதிலும் உடன்பாடில்லை. அதேநேரம் அவர் மிகத்திறமையாக இந்த நாவலை அரங்கேற்றியிருப்பதை வியக்காமலும் இருக்க முடியவில்லை.
ஒரு இயக்கத்தின் அயோக்கியத்தனத்தை வெளிக்கொண்டு வந்த ஒருவனை மனப்பிறழ்விற்கு ஆளாக்கி அவன் மனைவியை முப்பாதாண்டுகள் வதை முகாமில் வைத்திருந்த செய்தியை நாவலின் நாயகன் அருணாச்சலம் அறிகிறான்.
யார் இந்த அருணாச்சலம்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ரப்பர் தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் ஒரு முக்கிய அங்கம். அவனுக்கு முன்னவர் கே.கே எம். தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மலைகள் ஏறி இறங்கியவர். மூத்திரச்சந்தில் நின்று அடி வாங்கிய மூத்த தோழர். அவரின் தலைவர் பதவியைப் பிடுங்கி கட்சி அருணாச்சலத்திற்கு வழங்குகிறது. அருணாச்சலத்திற்கு குற்றவுணர்ச்சி இருந்தாலும், பதவியைத் தூர எறியமுடியவில்லை. அந்த நேரத்தில் அருணாச்சலம் வீரபத்திரபிள்ளை என்ற ஒருவரைப் பற்றி அறிகிறார். அவர் யார் என்றால், கட்சியால் திருடன் துரோகன் என அடையாளப்படுத்தப் பட்டு, அடிமட்டம் வரை அழிக்கப்பட்ட ஒருவர். அவர் ஏன் அழிக்கப்பட்டார்?
1919 அக்டோபரில் ரஷ்யப்புரட்சி நடக்கிறது. ஸ்டாலின் புகாரின் ட்ராஸ்கி மூவரும் முன் நிற்கிறார்கள். புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த ஸ்டாலின் இயக்க ஒழுங்கு, லட்சியவாதம் என்ற பெயரில் விவசாயிகளை அழித்தொழிக்கும் வேலையைச் செய்கிறார். புகாரினுக்கு அது நியாயமாகப் படவில்லை..அதனால் அவர் ஸ்டாலினுக்கு எதிராக கொந்தளிக்கிறார்.
“ஒரு இயக்கம் என்பதும், தத்துவம் என்பதும், புரட்சி என்பதும் மக்களின் அமைதிக்கானதாகவும் ஆனந்தத்திற்காகவும் தான் இருக்கவேண்டும். அவர்களை வதைப்பதன் மூலம் நம் லட்சியத்தைத் தக்க வைப்பதில் எந்த நியாயமும் இல்லை” என்பது புகாரின் கேள்வியாக இருக்கிறது. ஸ்டாலினை எதிர்த்து புகாரின் கேள்விகளை எழுப்புகிறார். உடனே ஸ்டாலின் புகாரின் மீது கட்சிக்கு களங்கம் கற்பிக்கிறார் என்றும், வேறுபல துரோகங்களை செய்கிறார் என்றும் அவரைக் கைது செய்கிறார். மேலும் புகாரினின் இளம் மனைவியான அன்னாவை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி புகாரினுக்கு எதிராக புகாரினிடமே வாக்குமூலம் வாங்குகிறார். மனைவியின் அன்பிற்கும் கனிவுக்கும் கட்டுப்பட்ட புகாரின் மனைவியின் உயிர்நலம் கருதி வாக்குமூலம் கொடுத்துச் சிறைக்குச் சென்று சாகிறார். சாகும் தருவாயில் தன் மனைவியிடம் நடந்தவற்றைச் சொல்கிறார். “இதை உலகுக்குச் சொல்ல ஒருநாள் உனக்கு வாய்க்கும். அப்போதுச் சொல்” என்ற புகாரினின் வார்த்தைகளை 50 ஆண்டுகளாக மனதில் பதிய வைத்து சமயம் வரும்போது உலகுக்கு பந்தி வைக்கிறாள் அன்னா. சோவியத் வீழ்ந்து 1988-ஆம் ஆண்டு ரஷ்யாவில் கோர்பசேப் ஆட்சிக்கு வந்த பிறகு இறந்து போன புகாரின் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுகிறது.
இந்தக் கொடிய வரலாற்றை அறிந்த அதிதீவிர கம்யூனிஸ்ட் ஆன வீரபத்ரபிள்ளை புகாரினுக்கு ஆதரவாக எழுதுகிறார். இதைக் கண்டிக்கும் இயக்கம் புகாரினைப் போல வீரபத்ரபிள்ளைக்கும் துரோகப்பட்டம் கட்டுகிறது. மனப்பிறழ்விற்கு ஆளாகி இறக்கிறார் வீரபத்ரபிள்ளை.
இவற்றையெல்லாம் அறியும் அருணாச்சலத்திற்குள் இயக்கத்தை வழி நடத்தும் மூலவர்கள், தங்கள் இயக்கத்தின் தவறுகளை சுட்டுக்காட்டுவதை விரும்பவில்லை என்பதையும், இயக்கத்தை விமர்சனம் செய்பவனை வதைத்தே கொல்லும் மனோபாவத்தை ஒவ்வொரு எளிய தொண்டனுக்கும் இயக்கம் ஊட்டிவுள்ளது என்றும் அறிகிறான்.அதன் பின் அவர் வீரபத் ரபிள்ளையின் நிழலாகவும், புகாரினின் குரலாகவும் மாறுகிறான்.
அறத்தைத் தேடும் அவனது பயணத்தின் ஊடே நடக்கும் அத்தனை உளச்சிக்கலையும், எதார்த்த அரசியலையும் புட்டுபுட்டு வைத்து எழுதியுள்ளார் ஜெமோ கம்யூனிசத்தில் கொஞ்சகாலம் அவர் இருந்துள்ளார். தன் அகண்ட வாசிப்பு வழியே அவர் கம்யூனிசத்தை நிறைய அறிந்துமுள்ளார். நம்மிள் ஆசை ஒன்று உண்டு. ஜெயமோகன் ஆர்.எஸ் எஸ் இயக்கத்திலும் இருந்துள்ளார். அதன் தீவரத்தில் முகிழ்ந்துள்ளார். ஆர் எஸ் எஸ் அமைப்பு குறித்தும் ஒரு தன்னிகரற்ற நாவலை அவர் எழுத வேண்டும். ஏற்கெனவே எழுதியிருந்தால் யாரேனும் அடியேனுக்குப் பரிந்துரையுங்கள்.
கம்யூனிசம் மட்டுமல்ல, உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் இயக்கங்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவை தான். ஏன் புகாரின் மீது கூட நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அதைப் பேசுவதற்கு யாருக்கும் உரிமையுண்டு. அந்த உரிமையில் பழிபோடும் பாவம் மட்டுமே தெரியக்கூடாது என்பது எமது வாதம்
மற்றபடி பேராசான் ஜெயமோகனின் எழுத்தின் வீரியமும், இந்த நாவலுக்குள் கதைகளையும், நாடகங்களையும், கட்டுரைகளையும், சுந்தர ராமசாமி போன்ற மனிதர்களையும் இணைத்து அவர் புனைந்துள்ள திறம் வியக்க வைக்கிறது. ஜெயமோகனும் நாவலில் ஒரு கேரக்டராக வருகிறார்.
949 பக்கங்கள் கொண்ட இந்த அகண்ட நாவலை வியந்து பேசவும், இகழ்ந்து ஏசவும் இரு சாராருக்கும் அவ்வளவு விசயங்கள் கொட்டிக்கிடக்கிறது.
நாவலுக்குள் சில கேரக்டர்கள் பேசும் வசனங்களில் தெறிக்கும் எதார்த்த தத்துவம் அவ்வளவு திறப்புகளைக் கொடுக்கும்
சாம்பிள்க்கு ரெண்டு,
“ஒரு மனிதனைச் சுற்றி ஆயிரம் இறந்தவர்கள் வாழ்கிறார்கள்“
“நீங்களும் செரி அவுகளும் செரி மெளனமா இருக்கது தான் உத்தமம்னு ஆயிரம் பக்கத்திற்கு புஸ்தகம் எழுதுவீக”
“தெளிவுப்படுத்திக்கணும்ல?
” பேசிப்பேசி ஒண்ணையும் தெளிவுப்படுத்திக்க முடியாது. தெளிவு இருக்க இடத்துல பேச்சு இருக்காது” அருணாச்சலத்தின் மனைவி நாகம்மை பேசுகிற இந்த இரண்டாம் வசனம் அருணாச்சலத்தை மட்டுமல்ல நம்மையும் உலுக்கிப் போடும்
பெண்களின் எளிமை முன்பு ஆண்களின் எந்தத் தத்துவமும் சிறிதாகிவிடும் போல
விமர்சனங்கள் உண்டு– ஆனாலும் வீரியமான நாவல்
ஜெகன் கவிராஜ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

