நீலஜாடி, கடிதம்

என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, 

வணக்கம்!

“நினைக்கவே இனிமையாகத் தான் இருக்கிறதல்லவா? நாம் சற்று பொறுமையாக இருந்தால் போதும் நம்மிடமிருந்ததெல்லாம் நிச்சயமாகத் திரும்பி வந்து சேர்ந்துவிடும்”.

இவ்வரியை வாசித்து முடிக்கையில் மனதில் ஒரு சிறு அதிர்வுடன் கூடிய நிறைவு. என்னை விட்டு பிரிந்த உறவுகள் என் தோள் தொட்டு கூறிய ஆறுதல். அடுத்த சிலநிமிடங்கள் நான் அந்த நிறைவுடன் சுழன்று கொண்டிருந்தேன்.

அந்த ஒன்பது நாட்கள் நீலம் சூழ அவள் வாழ்ந்திருந்த கணங்கள், அந்த நீலத்தை மீண்டும் மீண்டும் உள்ளத்தில் மீட்டியபடி இருக்கிறாள். தன் வாழ்நாள் முழுவதுமாய். இறுதியில் அந்த நீலம் மட்டுமே போதுமானதாய் இருந்திருக்கிறது. கதையை வாசித்து முடிக்கையில், எனக்கும் Titanic படக்காட்சிதான் நினைவில் தட்டியது.

தனக்கு நெருங்கிய உறவில் இருந்தவர் என்றாலும், தனது தந்தையே ஆயினும், அந்த தருணத்தில் தன்னைத் தனியே விட்டுச்சென்றுவிட்டதை நினைத்து அவள் திகைத்திருக்கக்கூடும். அந்த சந்தர்ப்பத்தில் மனம் அவரை விட்டு அந்நியப்பட்டிருக்கும். அப்போது அவள் அண்டத்தையே தனது சொந்தமாக்கி கொள்கிறாள். அந்த மாலுமியை கூட அவள் அவ்வண்டத்தின் ஓர் அங்கமாய் மட்டுமே பார்த்திருக்கலாம். அவளது தேடல் மனித இருப்பை தாண்டிய ஒன்றாக இருந்திருக்கலாம். இருப்பு (Being) என்பது மட்டுமாக இருந்திருக்கலாம். 

அவளுக்கு காலம் என்பது ஒட்டாத நேர்கோடுகள் அல்ல. நூலின் ஒரு நுனியை கொண்டு மறு நுனியுடன் வளைத்து இணைக்கிறாள். ஒரு நுனி அவள் வாழ்ந்த காலம்(Past), மறு நுனி அவள் எதிர்நோக்கும் காலம் (Future), இணைப்பு – அவள் அதை நோக்கி குவித்த செயல்பாடு (Present). ஆகையால்தான், அவளால் எளிதாய் காணமுடிகிறது, பூமி கோளின் மறுபுறம் அவளுக்கான பயணத்தை. 

சில நாட்களுக்கு முன்பு, என் நண்பருடன் உரையாடலில் இருந்தபோது, என் தந்தையின் இழப்பு பற்றிய பேச்சு வருகையில் நான் அவரிடம், “ சில நேரங்கள் எனக்குத் தோன்றும். பூமி கோளின் இந்த பக்கம் நானிருக்கிறேன், சற்று சுத்திச் சென்று மறுபக்கம் பார்த்தால் அவர் இருப்பார். ஆகையால், ஆசுவாசமாய் இருக்கிறேன் “ என்றேன்.  அப்போது எனக்கு ஐசக் டெனிசனையும் தெரியாது, ஹடெக்கரின் தத்துவமும் தெரியாது.

அங்கே பூமிக் கோளத்தின் மறுபுறம் ஒரு கப்பல் பயணம் செய்கிறது. அதனுடன் நான் இணைக்கப்பட்டிருக்கிறேன்”.

மூழ்குதல் என்பதே உங்களின் வார்த்தை . நான் உறுதியாகக் கூறுவேன் . கடலில் கீழ் , மேல் என்று எதுவும் கிடையாது . அந்த மையத்தில் நாங்கள் சந்தித்துக் கொள்வோம் ”.

சைதன்யாவின் கட்டுரைகள் வழி, அதற்கான தங்கள் எதிர்வினை பதிவை வந்தடைந்து அதிலிருந்து அருணா அக்காவின் (நீல ஜாடி) மொழிப்பெயர்ப்பில், ஐசக் டெனிசனை கண்டுக்கொண்டேன். ஒருவகையில், இவரும் எனது பிரதிபலிப்பே. இப்போது யோசிக்கையில், இச்சிந்தனையும் கச்சிதமாய் பொருந்துவதை உணருகிறேன்.

ஆழ்கடலில் பரஸ்பர பிரதிபலிப்பு போலத்தான் நாங்கள்.

அவளது தேடல் அவளை வந்தடைந்ததும், அவள் நிறைவுறுகிறாள். நம்மை அந்த நீலமாய் தொடர விரும்புகிறாள். இக்கட்டுரையை முடித்து கொள்ள எத்தனிக்கும்போது, மீண்டும் அவ்வரி என்னுள் எழுகிறது. மேலும் என்னை ஒரு அகவிரிவுக்கு இட்டுச்செல்கிறது.

நம்மிடமிருந்ததெல்லாம்நிச்சயமாகத் திரும்பி வந்து சேர்ந்துவிடும், என்கிறார். ‘நமக்குள்ளவை’ என்று எதிர்காலத்தை சொல்லவில்லை. நம்மிடம் இருந்தவை என்று நிகழ்ந்த காலத்தை சொல்கிறார். 

நித்திய மறுவாழ்வை (Eternal recurrence) நோக்கும் தைரியமும்,நம்பிக்கையும் அவள் வார்த்தையில் உள்ளது. வாழ்வதற்கான பெரு விழைவும், வீரியமும் கூடிய வார்த்தை. 

நன்றி

ரம்யா மனோகரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 11, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.