அன்றாடங்கள்
நான் இந்த இணையப்பக்கத்தைத் திரும்பப் படிக்கும்போது எனக்குச் சுவாரசியமாக இருப்பவை முன்பு நான் எழுதிய அன்றாடக்குறிப்புகள்தான். கருத்துக்களையும் படிப்பதுண்டு. ஆனால் அவை கொஞ்சம் பழையவையாக இருக்கும்- காலத்தால் பின்னகர்ந்து பொருளிழந்துவிட்டிருக்காது. ஏனென்றால் நான் அரசியல் கருத்துக்களைச் சொல்வதில்லை. நான் சொல்பவை பெரும்பாலும் இலக்கியம், மெய்யியல் சார்ந்த கருத்துக்கள் மட்டிலுமே. அவை அப்படி மாறுவதில்லை. நானறிந்து நான் சொல்லும் இலக்கிய- மெய்யியல் கருத்துக்கள் ஆயிரமாண்டுகளாக இருந்துகொண்டிருக்கின்றன.
அன்றாடக்குறிப்புகள் ஆர்வமூட்டுவதற்குக் காரணம் நுணுக்கமான மாற்றங்கள்தான். நான் வயதாகி மாறிவிட்டிருக்கிறேன். என் நடை தளரவில்லை, உள்ளம் ஊக்கம் குறையவில்லை, என் அன்றாடம்கூட பெரிதாக மாறவில்லை. ஆனால் ஏதோ ஒன்று மாறிவிட்டிருக்கிறது.என் குழந்தைகள் வளர்ந்து மாறிவிட்டிருக்கின்றனர். அஜிதன் திருமணமாகி, தனிக் குடும்பம் ஆகி, சென்னையில் இருக்கிறான். சைதன்யா பதிப்பாளர் ஆகி சென்னையில் தனி அலுவலகமும் வீடுமாக இருக்கிறாள், நல்ல பையன் அமைந்தால் தனிக் குடும்பம் ஆகிவிடுவாள்.
ஒவ்வொன்றும் பறந்து செல்கின்றது. பார்வதிபுரத்தின் சூழல் மாறியிருக்கிறது. நான் வழக்கமாக நடை சென்ற ஆளரவமில்லாத வேளிமலை அடிவாரங்கள் இப்போது முழுமையாகவே மாறிவிட்டிருக்கின்றன. அங்கே ஆம்பல் பூத்த ஏரிகளை நிரப்பி ஆறுவழிச்சாலை வருகிறது. ரயில்பாதை இரட்டையாகிறது. ஏராளமான புதிய ‘நகர்கள்’ உருவாகிக்கொண்டே இருக்கின்றன. நான் சாலையில் சந்திக்கும் முகங்கள் பல புதியவை. முன்பெல்லாம் கிராமிய முகங்களே மிகுதி. இப்போது எங்கு பார்த்தாலும் சிறுசிறு குடிக்குழுக்கள். மரநிழல்களில், ஓடைக்கரையில். பல கஞ்சாக்குழுக்கள். நேற்றுகூட போலீஸ்காரர்கள் ஒரு கும்பலை பிடித்து அடித்து மிரட்டிக்கொண்டிருந்தார்கள். முழுக்க வெளியிடத்தவர். தமிழகம் போதையில் மூழ்கிக்கிடக்கிறது என்றால் இன்றைக்கு பத்துப்பதினைந்து நவீன இலக்கியவாதிகள் பாய்ந்து கடிக்கவருவார்கள.
ஆனால் எங்கும் சிறு இடைவெளியை கண்டடைய முடியும். எப்போதும் நமக்காக சில பூக்கள் மலர்ந்திருக்கும். வேளிமலை அப்படியேதான் இருக்கிறது. பசுமையும் பாறையுமாக எழுந்த பேரலை. வான் தொட்டு மேலெழுந்த மௌனம். காற்றுதழுவும் அமைதி. நிரந்தரச் சாட்சியாக மலையுச்சியில் அமர்ந்திருக்கும் குட்டியானை. அங்கே துளிச்சொட்டு சாஸ்தா குகையில் நீர்த்துளிகள் என காலம் சொட்டிக்கொண்டே இருக்கிறது.
சென்ற அக்டோபரில் இருந்தே நான் ஊரில் தொடர்ச்சியாக ஒரு வாரம் இருக்கமுடியாதபடி ஆகியிருக்கிறது. ஆகவே ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்துகொண்டு, அன்றாடத்தின் சுழற்சியில் சிக்கி இருக்க ஏங்க ஆரம்பித்துவிட்டேன். இந்த பத்துநாளையும் பார்வதிபுரத்துக்காக ஒதுக்கியமையால் அன்றாடம் என்னும் இனிமை அமைந்தது.
எப்போதும் இரவு பன்னிரண்டுக்கு தூங்கி காலையில் ஏழு மணிக்கு எழுவது வழக்கம். மதியம் ஒருமணிநேரம் தூங்குவேன். அண்மையில் தூக்கம் ஏன் அவ்வப்போது கலைகிறது என அவதானித்து காபியோ என ஐயம் கொண்டு மதியத்துக்குமேல் காபி டீ எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டேன். அருண்மொழி காய்ச்சிய ஓர் எண்ணையை மாலையில் தலைக்கு வைத்து ஒருமணிநேரம் கழித்து குளிப்பேன். பத்துமணிக்கே சொக்கிக்கொண்டு வருவதனால் உடனே தூங்கி மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுகிறேன். ஒரு சின்ன நடை. கருப்பட்டிக்காப்பிகடையில் ஒரு -சீனி இல்லாதது. அதன்பின் எழுத்து.
அமெரிக்கா ஐரோப்பா என பயணம் செய்து, அங்கிருக்கும் அரையிருள் பகல்களுக்குப் பழகிவிட்டமையால், இங்கிருக்கும் சுடரும் வெயில் இன்னும் அழகாகத் தெரிகிறது. மொட்டைமாடியில் வேப்பமர நிழலில் அமர்ந்து வெயிலைப் பார்த்தபடி , டீ குடித்தபடி வாசிப்பு. நடுவே வெயிலில் நிழல்கள் வழியாகச் சென்று பார்வதிபுரம் சந்திப்பில் மீண்டும் ஒரு பால் இல்லாத டீ. அங்கே நிகழும் வம்பளப்புகளுக்குச் செவிகொடுத்தல். இப்போதுகூட என்னை எவருக்குமே தெரியாது இங்கே. பார்வதிபுரம் அரசியலே ஒரு மாதிரியானது. நாலைந்துபேர் சேர்ந்தமர்ந்து இந்துத்துவாவாகக் கொட்டிக்கொண்டிருப்பார்கள். ஒருவர் புதியதாக வருவார். கிறிஸ்தவராக இருப்பார். அப்படியே பேச்சு இரவுணவுக்கு பயறுக்கஞ்சி நல்லதா என திரும்பிவிடும். அலுங்காமல் நலுங்காமல்…
மதியம் சிவப்பரிசிச்சோறு, மீன்குழம்புடன் சாப்பாடு. அதன்பின் தூக்கம். பிறகு ஒரு மாலைநடை. இப்போது புதிய பாதைகளைக் கண்டடைந்துவிட்டேன். குமரிமாவட்டத்தில் மட்டும்தான் எந்த உச்சவேனிலிலும் பசுமைகொப்பளிக்கும் இடங்கள் உண்டு. கோடைக்குரிய பறவைகள், கோடைக்குரிய புல்கொத்துக்கள், கோடையை அழகாக்கும் செக்கச்சிவந்த அந்திவானம். புழுதியும் வானைச் சிவப்பாக்கும். ஆனால் நீராவி அளவுக்கு அல்ல. குமரிமாவட்டத்தில் கோடையில் எல்லா குளங்களும் கொதித்து ஆவி உமிழ்ந்து வானை நீராவியால் நிறைத்துவிட்டிருக்கும்.
பாறையடி பக்கமாக மாலைநடை சென்றேன். இப்பகுதியில் முன்பு மாலைநடை வந்துகொண்டிருந்தது கோவிட் காலகட்டத்தில். மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு நடைசெல்லவேண்டும் என்பதற்காகவே. அன்றெல்லாம் சைதன்யாவும் உடன்வருவாள். நாங்கள் ஓட்டப்பயிற்சி எடுத்துக்கொண்டோம். கோவிட் வந்தால் நுரையீரல் தாக்குப்பிடிக்கவேண்டும் என்பதற்காக. மாலையில் நடக்கும்போது ஏதேதோ கண்ணுக்குப் படுகிறது. ஒருவர் ஒரு நாய்க்குட்டியை குளிப்பாட்டுகிறார். அது கண்சொக்கி நின்றிருக்கிறது. அதன் இணைநாய்க்குட்டி கரையில் ஒரு சரடால் கட்டப்பட்டு என்னைப் பார்த்து ஆர்வத்துடன் வாலாட்டுகிறது. நாட்டுநாய்கள்தான். குட்டியில்தான் அவை மனிதர்களைப் பொருட்படுத்தும், அதன்பின் வெளியே ஓடி மந்தையாக ஆவதிலேயே குறியாக இருக்கும்.
தாமரைகள் மலர்ந்த ஏரி. தாமரையிலைத் தண்ணீர். ‘நளினீ தலகத ஜலம் அதி தரளம்’. தாமரையிலை நீர் நலுங்கிக்கொண்டிருக்கிறது.சங்கரரின் வரி. தரளம் என்றால் தமிழில் முத்து. நலுங்கும் முத்து. ஆனால் காற்றே இல்லை. ஆகவே நீர்த்துளி நலுங்காமல் நின்றிருக்கிறது. நல்ல பெரிய துளி. ஒரு குட்டி நீர்த்தேக்கம் என்றே சொல்லிவிடலாம். இப்போதைக்கு அசைவின்மையின் ஒளி கொண்டிருக்கிறது. இப்படியே சிலகாலம் நீடிக்குமென்று நினைக்கிறேன்.
கோடை பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம் கணியாகுளம்,பாறையடி… கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி பூவாப் பூ வண்ணங்களை மீட்டெடுத்தல் வேறொரு காலம் அந்தி எழுகை பசுஞ்சுடர்வு வீடு நமக்கு… செல்வது மீளாது காலைநடையில்… மானுடம் செவ்வல்லியின் நாள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

