ஒரு மரம், ஒரு பண்பாடு- கடிதம்
ஒரு 4 வயது குன்னத்துக்கல் பொன்னுமணியின் இளமையில் நிகழ்ந்த, ஒரே ஒரு அரிதான இனிமை நிகழ்வு அவனது மரணப் படுக்கையில் வாசகனை வந்தடைகிறது. அதன் ஆழம், நம்மை நெகிழத் செய்து, அந்த இனிமை அச் சிறுவனின் வாழ்வில் தொடர்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தைக் கொடுக்கிறது.
கட்டுவதற்கு ஒரு சிறிய கோமணம்கூட அவனுக்கு கிடைக்கவில்லை என்பதையெல்லாம் மறந்து, கூட்டு வண்டியில் பயணிக்கும் போது, இருளில், வண்டி போகும் தாளக் கதியில், கனவும், நனவும் கலந்த மோனநிலையில், தாயின் சிறிய கவனிப்பில் நெகிழும் அந்தச் சிறுவனுக்கு, அதுதான் அவனது குடும்பத்தினரின் கடைசி நாள் என்பது எவ்வளவு கொடூரமான ஊழ் அல்லது பிரபஞ்ச விதிகளின் ஏற்பாடு!
அந்த அனாதை சிறுவன், பின்னாட்களில் சூன்யத்திலிருந்து சாம்ராஜ்யம் நிறுவி, பொன்னு பெருவட்டராக, பெரிய செல்வந்தனாக, சமூக அந்தஸ்துடன், பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து, தனது மரணப்படுக்கையில் இருக்கிறார். அவரது சுய பரிசீலனையில், அவரது நினைவின் அடுக்குகளில் தேடிக் கிடைத்தவை நம்மை வந்தடைகின்றன. அவரைச் சுற்றியுள்ள மனிதர்கள், அவர்களின் நல்லியல்புகள், சல்லித்தனங்கள் என ஒரு பெரிய சித்திரம் கிடைக்கிறது.
பொன்னு பெருவட்டரின் மகன் செல்லையா பெருவட்டர், மருமகள் திரேஸ், பேரன்கள் பிரான்ஸிஸ், லிவி ஆகியோர், அவரது கடைசி நாட்களின் பிற பயணிகள்.
மருமகள் திரேஸ் விநோதமானவர். வாழ்வில் அவர் மட்டுமே முக்கியம், வேறு யாருக்கும் முக்கியத்துவம் இருக்கக்கூடாது என நினைப்பவர். போலித்தனங்களில் நிபுணத்துவம் கொண்டவர் என்றே கொள்ளலாம். தன் மீது அதீத அன்பு பொழியும் தந்தையுடனான உறவைக்கூட, தனக்குக் கிடைக்கும் லாபக் கணக்குகளால் மட்டுமே அமைத்துக் கொண்டவர். அவரது வாழ்வில் உண்மையான அன்பிற்கு இடமேயில்லை. பணக்காரர் என்ற ஒரே காரணத்திற்காக செல்லையா பெருவட்டரை மணந்தவர். எதிலும் நிறைவு இல்லாதவராய், பிறரின் அங்கீகாரத்தைத் நாடும் வலையில் மாட்டிக்கொண்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிக்கொண்டேயிருக்கிறார். கணவர் செல்லையா பெருவட்டரும், கடைசி மகன் லிவியும் போலித்தனங்களில் மூழ்கியிருப்பது இவருக்கு வசதியானது கூட.
மூத்த மகள்கள், திருமணமாகிப் போய்விட, மூத்தமகன் பிரான்ஸிஸ் இதிலிருந்து தப்ப முயலாமல், மூழ்கிக் கொண்டிருக்கிறான்
பிரான்ஸிஸும் ஒரு வகையில் சுயநலவாதியே. தனது குடும்பம் தரும் போலித்தனங்களை ஏற்கமுடியாதவன், குடும்பம் தரும் சௌகர்யங்களைப் பயன்படுத்திக்கொண்டு குடி, காமம் என்பவற்றை வடிகாலாகக் கொள்கிறான். தனது தாத்தாவின் வாழ்க்கைப் போராட்டங்களை அறிந்திருந்தும், அதனை ஒரு திறப்பாகக் கொண்டு, தனது வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள முயன்றும் அதில் நிலைக்க முடியாதவன்.
விளையாடும் குழந்தைகளைப் பார்க்கும் பிரான்ஸிஸ், தாயின் மார்பில் இருந்து எட்டிப் பார்க்கும் ஒரு குழந்தையைப் பார்த்து நெகிழ்ந்து, அதனை உணர்ந்து சட்டென்று மனதைத் திருப்பும் அவனில், இந்த உலகில் இருக்கும் இனிமைகளைப் விடுத்து அவனது குடும்பத்தார் மேல் இருக்கும் கசப்பில் மூழ்கிக்கிடக்கும் பிடிவாதமான அவனது மனம் தெரிகிறது.
ஸ்ரீதரனின் வீழ்ச்சியை விரிவாகப் பேசும் தன் தந்தை செல்லையா பெருவட்டரை அருவருக்கிறான் பிரான்ஸிஸ். தங்கத்தின் புறவாழ்வுக்குத் தேவையானவற்றைக் கொடுக்கும் கனவானாக அவனது தந்தை தன்னைப் பிறரிடம் காட்டிக்கொள்வதன் மூலம், தங்கத்தின் அகத்தை நிந்தித்துக் கொண்டே இருக்கிறார். தம்பி லிவி வேறுவகையில் நிந்திக்கிறான். தங்கம் வேறுபட்டவள் எனத் தெரிந்தும், அவளை அந்தச் சுழலுக்குள் சிக்குவதைத் தவிர்க்க, பிரான்ஸிஸ் எதுவும் செய்யாமல் இருந்துவிடுகிறான்.
அவனது செயலின்மைகளுக்கு காரணங்கள் ஆயிரம் இருந்தாலும், அவன் அதை மீறி எதுவும் செய்யவில்லை. மாறாக, அவனது தாத்தா, பொன்னு பெருவட்டார் செயல்படுவதற்கு ஆயிரம் தடைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி தன்னை நிறுவிக்கொண்டவர்!
தன் நடத்தையால் சுகேசினியிடம் குற்ற உணர்ச்சியடையும் அவன், இறுதியில், குடும்பத்தாரின் போலித்தனங்களை எதிர்த்து நிற்கும் போது, குற்ற உணர்ச்சி இல்லாதவனாய், முன்னே செல்ல தயாரானவனாகிறான்.
திரேஸுக்கு முற்றிலும் எதிர்மாறானவர், பொன்னு பெருவட்டரின் மனைவியான பெரிய பெருவட்டத்தி. பெருவட்டர் வாங்கி கொடுக்கும் நகைகளையெல்லாம், அதுவும் தனது உடுப்பின் ஒரு பகுதி எனச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு, அணிந்து மகிழ்பவர். வீட்டில் வேலை பார்ப்பவர்களையெல்லாம் அமர்த்தி உணவு பரிமாறி மகிழ்பவர். அடுத்தவர்க்கு அன்பைப் கொடுப்பதையே பிரதானமென வாழ்ந்தவர்!
தனது அந்நியோன்யமான மனைவியை இழந்து, உடல் வலுவையெல்லாமும் இழந்து படுத்திருக்கும் பொன்னு பெருவட்டருக்கு, அவர் அழைக்காமலேயே இளமைக்கால நினைவுகள் வந்து வந்து போகின்றன. ஒரு 4 வயதுக் குழந்தை, தனது தாய் தந்தையரை இழந்து நிற்கும் போது, பேச்சி அதற்கும் அன்னையாகி, தன் குழந்தைகளுடன் அழைத்துச் செல்கிறாள். பின்னர், தனது சொந்தக் குழந்தைகளுக்கு, நோயாளிக் கணவனுக்கு மற்றும் தனக்கே உணவுப் பஞ்சம் என்ற நிலையில் அந்தக் குழந்தையை வீட்டைவிட்டு துரத்தும் கொடுமைக்காரியாகும் நிலை பரிதாபமானது.
ஒரு மனித உயிருக்கு அத்தியாவசமாகிய உணவு, உறைவிடம், உடை போன்றவை அந்த குழந்தைக்கு அமையாமல் போனது துரதிர்ஷடமே. அதன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலால், பேச்சியில்லாத சமயம் அந்த வீட்டிற்கு வந்து அங்கிருக்கும் குழந்தைகள் எதையோ ஒளித்துக் கொள்ள முயலுவதைப் பார்க்கிறது, அதனுடைய கைவிடப்பட்ட நிலை கோபமாக மாறுகிறது. ஒரு சிறு சுட்ட கிழங்குத் துண்டை மறைக்க முயலும் குழந்தையுடனான சண்டையில், ஏற்கனவே நோஞ்சானாயிருக்கும் பேச்சியின் அந்தக் குழந்தை இறந்துவிடுகிறது.
இதை நம்ப முடியாமல், வீட்டிற்கு வெளியேயிருக்கும் ஒரு புதரில், கொட்டும் மழையில், எப்படியாவது அந்தக் குழந்தை எழுந்து நடந்து விடாதா என்று பயத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைப் பருவ பொன்னுமணியைப் பார்க்கும் போது, ஒரு துளிக் கண்ணீரும், வாழ்வு ஏன் இவ்வளவு கடினமாக இருக்க வேண்டும் என்ற கேள்வியும் தோன்றுகிறது.
அவனைப் பாதுகாக்க யாருமில்லாத, நல்லது கெட்டது எவையெனத் தெரியாத நிலையில் நிகழ்ந்த ஒரு மரணத்திற்காக தனது 84வயதில் மரணப்படுக்கையில் குற்றவுணர்வு கொண்டு தெய்வ மன்னிப்பு கேட்க விழையும் பொன்னையா பெருவட்டரின் உள்ளம் பெருங்கருணை கொண்டதல்லவா! அதையும் கிடைக்கவிடாமல் விதி சதி செய்கிறது.
இன்னொரு பூதம், அறைக்கல் அப்புக்குட்டனுடன் நடந்த கடைசி சந்திப்பை நினைவுபடுத்திக் கிளம்புகிறது. இந்தச் சந்திப்பில் பெருவட்டரின் அகத்தில் நடந்தவை நமக்குத் தெரியவரவில்லை.
பொன்னுமணியையும், கூடவந்த சுமையாட்களையும் காலையிலிருந்து மதியம் வரை காக்க வைத்தது, கீழ்ச்சாதிக்காரர்கள் என முத்திரை குத்தி தனிப்பாதையில் நடக்க வைத்தது, அவனிடம் நேரடியாகப் பேசாதது, அறைக்கல் குடும்பத்துக்கு அப்போது எந்த வகையிலும் உதவாத ஒரு காட்டு நிலத்தை உபயோகித்து அதற்கு குத்தகை கொடு என்று காரியஸ்தர் மூலம் கூறிய மேட்டிமைத்தனத்தின் மீதான கோபம் அவரை அப்புக்குட்டனை நிராகரிக்க வைத்ததோ?
அறைக்கல் அப்புக்குட்டனை நிராகரிக்கும் பெருவட்டர், ரப்பர் திருடிய குஞ்சிமுத்துவுக்கு இரங்கும் போது அவரது உள்ளம் கனிவை நோக்கித் திரும்புகிறது என நினைக்கிறேன்.
ஒருவேளை இந்த மாற்றம் தான், தனது மரணப் படுக்கையில், தன்னைக் காணவந்த அறைக்கல் பாஸ்கரன் நாயரில் அப்புக்குட்டனைக் கண்டு கண்ணீர் வடிக்கிறாரோ?
மனித மனம் எல்லாவற்றையும் சேகரித்துக் கொள்கிறது. பின்னர், வாழ்வின் வெவ்வேறு தருணங்களில், செயல்களின் மீதான மதிப்பீடுகள் மாறி, மனிதனது வெளிப்பாடுகளும் மாறும் விந்தைதான் என்ன!
அறைக்கல் பாஸ்கரன் நாயர், மனித மனதின் விந்தையான இயக்கங்களுக்கு இன்னொமொரு உதாரணம்.
பொன்னு பெருவட்டரின் கண்ணீரைக் கண்டு நெகிழ்வதும், தன்னுடைய மகனின் நிலையைக் கண்டு பரிதவிப்பதும் அறைக்கல் பாஸ்கரன் நாயரில் நிகழ்கிறது. ஒரு மின்னல் வந்து போனது போல ஒரு கணப் பொழுதில் அவை மறைகின்றன. உடனே, சுயநலமான, கணக்கீடுகள் கொண்ட ஒரு குரூர மனமாக மாறி செல்லையா பெருவட்டரின் பணத்தை ஏமாற்றுவதை சாமர்த்தியமாகச் செய்கிறார். ஒரு போலிப் பாவனைக்காரர் இன்னொரு போலிப் பாவனைக்காரரால் தோற்கடிக்கப் படுகிறார்!
விதி உருட்டி விட்ட இரண்டு பகடைக் காய்கள் வேலப்பனும், தங்கமும். தன்னைச் சுற்றி எரியும் வறுமையிலும், அம்புகளாகக் குத்தும் பரிதாபப் பார்வையிலிருந்தும் தப்பிக்க முயல்கிறார்கள். ஒரு பட்டாம் பூச்சி போல வாழ முயன்று, இவற்றினின்று விலக முயலும் தங்கத்திற்கு அறைக்கல் குளமே அடைக்கலமாகிறது. தன் மீது திணிக்கப்பட்ட அவலத்தால் உடலும், மனமும் மட்கிய வேலப்பன், எல்லாவற்றையும் உதறித் தள்ளி, புது உலகு நோக்கிப் போகிறான்.
கண்டன்காணியும் பொன்னு பெருவட்டரும் காட்டில் ஒன்று சேர்ந்து உழைத்து முன்னேறியவர்கள் என்றாலும், சில விஷயங்களில் எதிர்முனையில் உள்ளார்கள்
1. கண்டன்காணி இயற்கையுடன் ஒன்றியவராக அன்பையும், கனிவுமே பிரதானமாகக் கொண்ட வெள்ளந்தியான குழந்தைத்தனம் கொண்டவர். பெருவட்டரோ, காட்டை தனது செல்வ மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தி, தனது சமூகத்து மேல் போர்த்தப்பட்ட கீழ்மைகளைத் தவிர்க்க, சமூக அங்கீகாரத்துக்காக, பணம், செல்வாக்கு, சம்பாதித்து, அன்பிடமிருந்தும் தனது குடும்பத்தினரிடமிருந்தும் வெகுதூரம் சென்றுவிட்டவர்.
2. பிறப்பிலிருந்து இறப்புவரை மென்மையும் பெண்மையும் கொண்ட ஒரு வாழையைப் போல, எப்போதும் கனிந்து பிறருக்கு மகிழ்வைக் கொடுப்பவர் கண்டன்காணி. ஒரு ரப்பர் மரம் போல, தானும் காயப் பட்டு பிறரையும் காயப்படுத்தி, அந்த காயங்களின் வலி தாளாமல் தவிப்பவர் பெருவட்டர்.
வாழைத் தோப்புகளை பெண்மையையும் மென்மையும் கொண்டவையாகவும், தாய்மை ததும்பிய அந்த தோப்புகளின் மேல் ஆக்கிரமிப்பு செய்த மூர்க்கமான ஆண்மைத்தனத்தின் வெளிப்பாடே, அவற்றை அழித்து ரப்பர் தோட்டங்களாக மாற்றியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரப்பர் மரத்திலிருந்து பால் எடுத்து செல்வம் சம்பாதிப்பதை, அதன் ஆன்மாவைக் காயப்படுத்திச் செய்யும் செயலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்லையா பெருவட்டருக்கு 20 வயது ஆகும்போது, பொன்னு பெருவட்டர் அங்கிருக்கும் மற்றவர்களைப் போல, தானும் மாவட்ட கலெக்டரை, பிஷப்பை அழைத்து விருந்தளிக்க வேண்டும் அதற்கு தனது அப்போதைய வீடு சரிப்படாது என்பதற்காக, முதன் முறையாக செல்லையாவிடமும் பேசி, ஒரு புதிய பங்களா கட்டி, மதமாற்றமும் செய்து கொள்கிறார். இப்போது அவர்கள் சமூகம், அரசியல், அதிகார மையங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள். அவை அந்தக் குடும்பத்துக்கு மகிழ்வைக் கொண்டு வந்தது உண்மை. அதன் பின்னால் பொன்னு பெருவட்டரின் கடும் உழைப்பும், முயற்சியும் இருந்தது. சிக்கல் என்னவென்றால், அப்புக்குட்டனைக் கைவிட்டது, பாரம்பரிய விவசாயத்தைக் கைவிட்டு ரப்பருக்கு மாறியதெல்லாம், அவரின் இறுதிக் காலத்தில் கண்ணீர் மல்கச் செய்கிறது.
தந்தையிடம் பயந்த, தயக்கங்கள் நிறைந்த செல்லையா பெருவட்டரின் வாழ்வில் அந்த பங்களா, மலையடிவாரத்தில் தயங்கி நின்றவனை, யாரோ மலையுச்சியில் தூக்கி வைத்தது போல் ஆகிவிடுகிறது. அங்கிருந்து அவர் உலகைப் பார்க்கும் பார்வையே மாறிவிடுகிறது. அறைக்கல் அப்புக்குட்டனின் மேட்டிமைத்தனத்தைப் பார்த்திராத அவருக்கு, அது வந்து ஒட்டிக் கொண்டது ஊழ். சுகபோகங்கள் மேல் இருந்த தயக்கத்தை இல்லாமலாக்கி, எந்தக் கூட்டத்திலும் அவர் தாழ்வாக உணராதபிடி உள்ளூர கர்வம் நிரம்பியவராக்கியது அந்தப் பங்களா. ஆனால் அதை உருவாக்கிய பொன்னு பெருவட்டரும் அவரது மனைவியும் அதனால் எந்த பாதிப்பும் இல்லாதவர்களாகவே இருந்தனர்.
காட்டு நிலம் கொடுத்தமைக்காக அப்புக்குட்டன் நாயர், பின்னாட்களில் பொன்னு பெருவட்டரிடம் உதவி கேட்க, அது மறுக்கப் படுகிறது. பின்னர், அறைக்கல் குடும்பத்தின் ஒரு வாரிசான வேலப்பன் மூலம் செல்லையா பெருவட்டரிடமிருந்து மிரட்டி உதவி வாங்கப்படுகிறது. இப்படியாக ஒரு வட்டம் நிறைவு பெறுகிறது. ஆனால், இதற்காக கொடுக்கப்பட்ட பலிகள்தான் எத்தனை?
மாதவன் நாயர் என்னும் ஒரு தனிமனிதனின் வீரத்தாலும், விவேகத்தாலும் உருவாகிய அறைக்கல் பாரம்பரியம், சில நூற்றாண்டுகளில் பல்கிப் பெருகினாலும், பின்னர் வீழ்ச்சியடைந்தது. பொன்னு பெருவட்டர் ராஜ்யத்துக்கும் அதுவே நிகழ்கிறது. தன்னிடம் ஒன்றுமேயில்லாதபோது, மனிதன் உன்னதத்தின் மேல் விழைவு கொள்கிறான். அதை நோக்கி நகர்கிறான். எல்லாம் இருக்கும்போது, ஆணவம் தன்னை ஆக்கிரமிக்க அனுமதியளித்து அழிவில் வீழ்கிறான்! இவை எப்போதுமே கட்டாயம் இப்படித்தான் நடக்கும் என்றில்லை. ஆனால், பெரும்பாலான வரலாறுகளில், பல தனி மனித வாழ்க்கைகளிலும் பெரும்பாலும் இப்படி நிகழ்ந்திருக்கிறது என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

