கமல்ஹாசன் – தேடலின் பேரழகு
இனிய ஜெயம்
சமீபத்தில் கண்ட கமல் ஹாசன் அவர்களின் இந்த புகைப்படம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவரது துறையில் அடுத்து வரவிருக்கும் புதிய விஷயங்கள் மீது நிகழும் கல்வி அறிமுக பயிற்சி பட்டறை அரங்கின் முன் நின்று அங்கே பயில சென்ற சூழலில் அவர் வெளியிட்ட புகைப்படம் இது.
தான் ஈடுபாடு கொண்ட துறையில் தொடர்ந்து கற்றபடியே இருப்பது, அந்த கல்வியைத் தேடி எந்த நொடியிலும் கிளம்பி செல்லும் மன நிலையிலேயே வாழ்வது கலை மீது ஈடுபாடு கொண்ட எவரிடமும் இருக்க வேண்டிய ஒரு உயர் தகுதி என்றே சொல்வேன்.
கடந்த உருது வகுப்பில் சிங்கப்பூரில் இருந்து இந்த வகுப்புக்காக மட்டுமே கிளம்பி வந்திருந்த ப்ரதீபா எனும் இளம் வாசகியை கண்ட போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
கமல் வயது என்ன இந்த பிள்ளையின் வயது என்ன? கற்றலுக்கு கல்வி அளிக்கும் மகிழ்ச்சியை அடைய கிளம்பி செல்வதற்கு வயது ஒரு பொருட்டே அல்ல. வயது போலவே காசு பணத்தின் இருப்பும் ஒரு பொருட்டு அல்ல. பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொல்கிறது நம் மரபு. கல்வி எனும் மகிழ்ச்சியை அடைய எதுவுமே ஒரு தடை இல்லை. அதற்கு இருக்க வேண்டியது கற்றல் எனும் பரவசம் மீது தளராத ப்பேஷன், வேலை, பொண்டாட்டி பிள்ளை, லீவு கிடைக்கவில்லை, முட்டுகால் வலி போன்ற (உதற விரும்பாத) மொண்ணை காரணங்களை உதறிவிட்டு எழும் நிலை என்ற இரண்டு மட்டுமே.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு,
நான் இருபதாண்டுகளாக அறிந்து, அணுக்கமாக நோக்கிவரும் ஆளுமை கமல். அவரிடம் நான் வியக்கும் முதன்மைக்குணம் என்பது அறிந்துகொள்வதற்கான அவருடைய தணியாத வேட்கைதான்.
அவருக்கு இப்போது அகவை எழுபதைக் கடந்துவிட்டது. திரைப்படத்துறையில் அவருடைய அனுபவம் அறுபதாண்டுகளுக்கும் மேல். தமிழ் சினிமாவுடன் வளர்ந்துவந்தவர், அவருடைய வாழ்க்கைவரலாறு கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் வரலாறுதான். சினிமாவில் உச்சநட்சத்திரம் என்னும் இடத்தை அடைந்துவிட்டார். நாற்பதாண்டுகளாக வெற்றிகரமான நாயகநடிகர், இன்று அவருடைய தொழிலின் உச்சகட்ட வெற்றியில் இருக்கிறார். வெற்றிகரமான இயக்குநராகவும் திரைக்கதையாசிரியராகவும் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஒரு நவீனத்தொன்மம் என்ற அளவில் தன்னை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறார். இன்று அவருடைய ஒரு நாளுக்கான ஊதியம் ஒருகோடி ரூபாய் அளவுக்கு. ஆனால் கிளம்பிச்சென்று புதிய ஒன்றைக் கற்பதற்காக மாணவராக, மாணவர்களுடன் அமர்ந்திருக்கிறார். மாணவன் என்பதை பெருமையுடன் அறிவித்துக்கொள்கிறார்.
நானறிந்து தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே கமல் அளவுக்கு புதியன கற்பதில் இத்தனை வெறிகொண்ட எவருமில்லை. அதன்பொருட்டு தன் வணிகத்தைக்கூட பொருட்டாக எண்ணாதவர்கள் இல்லை. தமிழ்சினிமாவின் எல்லா துறைகளையும் அறிந்தவர், எல்லா துறைகளிலும் புதுமைகளை கொண்டுவந்தவர், மீண்டும் அதே வேட்கையுடனிருப்பவர். இணையாக ஒன்றுண்டு, அவருடைய ஆர்வம் சினிமா மட்டும் அல்ல. சினிமா அவருடைய முதன்மைக்காதல், அவ்வளவுதான். அவருக்கு இலக்கிய ஆர்வம் உண்டு. தமிழ், மலையாளம், ஆங்கிலம் என எல்லா இலக்கியமரபுகளிலும் அடிப்படையான அறிவும், நுணுக்கமாகப் பேசும் அவதானிப்புகளும் உண்டு.
இந்திய இசை, மேலையிசை மேல் தொடர்ந்த தேடலுண்டு, ஆழமான பயிற்சியும் உண்டு. அவரால் பல வாத்தியங்களை வாசிக்கமுடியும். பாடகர், நினைத்தால் ஒரு படத்துக்கு இசையமைக்க முடியும். அவருக்கு இந்திய நடனம், ஐரோப்பிய நடனம் ஆகியவற்றில் பயிற்சி உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்தது, தொடர்ச்சியாக அக்கலைகளை கவனித்தும் பயின்றும் வருபவர். இதற்கெல்லாம் அப்பால் அவருக்கு என்னென்ன ஆர்வம் என்று நான் வியப்பது எப்போதும்தான். தட்டச்சு இயந்திரங்களின் பரிணாமம் பற்றியோ பட்டாம்பூச்சி சேகரிப்பது பற்றியோகூட அவரால் உடனடியாகப் பேசமுடியும்.
சாமானியர்களுக்கு கல்வி ஒரு சுமை. முடிந்தவரை கற்காமலிருக்கவே அவர்கள் முயல்வார்கள். அவர்களின் மூளை சிலந்திவலை போல, குறிப்பிட்ட அளவு எடையை மட்டுமே அது தாங்கும். அதற்குமேல் எடையுள்ள பூச்சி மாட்டினால் சிலந்தி வலையை அறுத்து அதை தப்பவிட்டுவிடும். (இன்றைய சமூக ஊடக அறிவிலிகளின் மூளை இலைகளைப்போல. அது எச்சங்களைத்தவிர அனைத்தையும் நழுவவிட்டுவிடும்) அறிஞர்களுக்குக் கல்வி என்பது பெரும் கொண்டாட்டம். அவர்கள் இவ்வாழ்க்கையில் அடையும் பேரின்பம் என்பது கற்றல்- கற்பித்தல் – படைத்தல் மூன்றும்தான். ஆகவே அவர்கள் ஒருபோதும் கல்வியை நிறுத்திக்கொள்வதில்லை. நாட்டாரியல் முன்னோடிகளில் ஒருவரான அ.கா.பெருமாள் நாட்டாரியலைக் கற்று முடித்துவிட்டாரா என்ன? நான் ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் என்ன செய்கிறீர்கள் என்பேன். என்ன கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றே பதில்சொல்வார்.
கற்றுக்கொண்டிருப்பவரை நோக்கி சாமானியர் சொல்லும் வியப்புச்சொல் ‘இன்னும் சின்ன வயசு மாதிரியே கெளம்பிப் போறார்’ என்பதுதான். அவர் கற்றுக்கொண்டே இருப்பதனால்தான் இளமையாக இருக்கிறார். கற்றல் நிற்கும்போது அகம் உறைந்துவிடுகிறது. தேடல் நின்று வாழ்க்கை சுழல ஆரம்பிக்கிறது. அதுவே முதுமை. நம்மில் பலர் 24 வயதில் வேலை அமைந்ததும் இனி புதியதாக எதையும் கற்கவேண்டியதில்லை என எண்ணிவிடுகிறார்கள். கொஞ்சம் மூளையைச் செலவழிக்கவேண்டியிருந்தால்கூட அதை உடனே தவிர்த்துவிடுகிறார்கள். அறிவம்சமே இல்லாத கேளிக்கைகள், வம்புகள் மட்டுமே அவர்களை ஈர்க்கின்றன. அவர்கள் அந்த வயதிலேயே முதுமையைத் தொடங்கிவிடுகிறார்கள்.
கற்றுக்கொள்பவர்கள் அறிவார்கள், கல்வி ஒருவரை தேடிவந்து மடியில் அமர்ந்துகொள்ளாது. அப்படி தேடிவருவது நமக்கான கல்வியும் அல்ல. அது உள்நோக்கம் கொண்டது. வணிக உள்நோக்கம், அரசியல் உள்நோக்கம். கல்வியை நாம்தான் தேடிச்செல்லவேண்டும். அது நிகழுமிடத்தில் சென்று அமரவேண்டும். அதற்கான சுற்றத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும். கல்விக்காக கையேந்துபவர்களுக்கு மட்டுமே கற்பிக்கவேண்டும் என்னும் நெறி பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே இருந்தது. இன்றும்கூட அந்த மனநிலை கற்பிப்பவர்களிடம் உள்ளது, உலகமெங்கும். கற்றலுக்கு நீங்கள் என்ன விலை அளிக்கிறீர்கள் என்பதே அக்கல்வியின் மதிப்பை உருவாக்குகிறது. கட்டணம் மட்டும் அல்ல. பொழுது, பயணம், கவனம் எல்லாமே விலைதான். கமல் அடையும் இக்கல்வியின் மதிப்பு பலகோடி ரூபாய் அல்லவா?
கல்விக்கு எதிரான மனநிலை என்பது தேக்கநிலைதான். தேக்கம் மூளையில் உள்ளது. புதியவற்றைக் கற்பதென்பது இருக்குமிடத்தில் இருந்து முன்னகர்வது. அது நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் சிலவற்றை கைவிடுவது. நம் சொகுசான அமர்வில் இருந்து அகல்வது. அதை சோம்பல்கொண்ட மூளைகள் விரும்புவதில்லை. ‘என்ன அவசியம்? இப்போதே எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது?’ என்று அது நம்மிடம் சொல்கிறது. அதை நாம் நமக்கேற்ற வகையில் விளக்கிக்கொள்கிறோம். ‘ஆர்வமிருக்கு, நேரமில்லை’ என்கிறோம். ‘அவ்ளவுதூரமா?’ என்கிறோம். ‘இந்த வேலையெல்லாம் கொஞ்சம் ஒழிஞ்சுதுன்னா ஆரம்பிக்கலாம்’ என்கிறோம். ‘நமக்குத் தெரிஞ்சதுக்கே இங்க மதிப்பில்லை’ என்கிறோம். ‘அப்டி என்ன புதிசா?’ என்கிறோம். அதற்கெல்லாம் முடிவே இல்லை.
கற்பதன் பொருட்டு உலகின் எல்லைவரை கிளம்பிச் செல்பவர்கள் அழியாத இளமை கொண்டவர்கள். அணுவளவும் வீணாகாத வாழ்க்கை கொண்டவர்கள். உண்மையான மகிழ்ச்சியை வாழ்வில் அடைபவர்கள். அவர்கள் இங்கே மிகச்சிறுபான்மையினர். ஆனால் அவர்களால்தான் இவ்வுலகம் உருவாக்கப்படுகிறது. மற்றவர்கள் அதில் குடியிருப்பவர்கள் மட்டுமே.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

