இங்கிருக்கும் இன்னொரு இலக்கிய உலகம்
நண்பர் கொள்ளு நதீம் வழியாகத்தான் அறிமுகமானார், சென்னை புத்தகக் கண்காட்சியில். அபிக்கு நாங்கள் விஷ்ணுபுரம் விருது அளித்தபோது அந்த விழாவுக்கு வந்திருந்தார். அபி எண்பது விழாவிலும் கலந்துகொண்டார். அவர் உருது அறிஞர் என அறிந்திருந்தேன். ஏதோ உருது கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் என்றும் எண்ணியிருந்தேன்.
கொள்ளு நதீம் எனக்கு ஓர் ஆலோசனைபோல சொன்னார், சையத் ஃபைஸ் காதரி அவர்களைக்கொண்டு ஓர் உருது இலக்கிய அறிமுக வகுப்பு நடத்தலாமே என்று. எனக்கு முதலில் அதன் முக்கியத்துவம் தெரியவில்லை. உருது இலக்கியத்தை மலையாளம், கன்னடம் போல ஓர் அயல்மொழிச் சூழல் என்றே எண்ணினேன். ஓர் இலக்கியவாசகன் அதை அறிந்துகொண்டாக வேண்டும்தான், ஏனென்றால் எல்லா இலக்கியச் சூழல்களையும் அவன் அறியவேண்டும். ஆனால் நாங்கள் ஒருங்கிணைப்பவை அறிமுக வகுப்புகள். தமிழிலக்கியத்தை அறிந்த பின்னர்தானே இன்னொரு இலக்கியத்தை அறியவேண்டும்.
ஆனாலும் ஒரு வகுப்பு நடக்கட்டுமே என எண்ணி அறிவித்தோம். எங்கள் பிற நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களில் சிலர் இதில் கலந்துகொண்டனர். என் நண்பர்கள் ஈரோடு கிருஷ்ணன், கடலூர் சீனு என ஒரு வட்டம். இருபத்தைந்துபேர் தேறியது ஒரு நல்ல விஷயம்தான். எல்லாருமே நுண்ணுணர்வு கொண்ட இலக்கியவாசகர்கள். எனக்கு உருது இலக்கியம் பற்றி பெரிய அறிமுகம் இல்லை, ஓரிரு எழுத்தாளர்களை மொழியாக்கத்தில் வாசித்ததுடன் சரி. ஆகவே நானும் கலந்துகொண்டேன்.
உண்மையில் இந்நிகழ்வின் முக்கியத்துவம் என்ன என்பதை ஃபைஸ் காதரி அவர்கள் தன் வகுப்பைத் தொடங்கியபோதே உணர்ந்தேன். உருது இந்தியாவின் மண்ணில் தோன்றிய ஒரு மொழி. மலையாளம், ஆங்கிலம் போல ஒரு நவீனகாலகட்டத்து மொழி. நவீன மொழிகள் பொதுவாக மொழிக்கலப்பால் உருவாகி வருபவை. ஆகவே அவற்றுக்கு மூன்று நல்ல அம்சங்கள் உண்டு.
அவை, ஏற்கனவே உள்ள மொழிகளின் சிறந்த சில அம்சங்களின் கலவையாக இருக்கும். எந்த அம்சம் அந்த மூலமொழிகளை மக்கள் செல்வாக்குள்ளதாகவும், தாக்குப்பிடிப்பதாகவும் ஆக்குகிறதோ அதை இந்த வழிமொழி எடுத்துக் கொண்டிருக்கும்.
அவை புதியதாக உருவாகி வரும் இலக்கணம் கொண்டிருக்கும். நீண்ட நெடிய இலக்கணமரபு இல்லாமலிருப்பது மொழிகளை மிகச்சுதந்திரமானதாக ஆக்குகிறது. அந்த இலக்கணம் நெகிழ்வானதாகவும், நடைமுறை சார்ந்ததாகவும் இருக்கும். அந்த மொழிகளின் வளர்ச்சிக்கு அவ்விலக்கணமே மிகப்பெரிய அடிப்படையை அளிக்கும்.
அவை தூய்மைவாதம் இல்லாதவையாக இருக்கும். ஆகவே சொற்களை எளிதாக எடுத்துக்கொண்டு தன்வயமாக்கிக்கொள்ளும். புதியன நோக்கி எளிதில் நகரும்.
உருது எப்படி அரபி, பாரசீகம், சம்ஸ்கிருதம் மற்றும் வடஇந்தியப் பேச்சுமொழிகளில் இருந்து உருவாகி திரண்டு வந்தது என்று காதரி அவர்கள் சுவாரசியமான வரலாற்றுச் சித்திரத்தை அளித்தார். அப்போதே ஒன்று எனக்கு தோன்றியது, உருது தோன்றி வலுப்பெற்ற வரலாற்றை தெளிவாக உணராத ஒருவரால் இந்திய வரலாறும், பண்பாடும் திரண்டுவந்ததை புரிந்துகொள்ளவே முடியாது. என் புரிதலில் இருந்த பல்வேறு இடைவெளிகளை அவர் அளித்த வரலாற்றுச் சித்திரம் நிரப்பிக்கொண்டே இருந்தது.
மானுடம் தன்னை தேக்கிக்கொள்ள விழைவதில்லை, நீர் போல தன்னைத்தானே கலக்கிக்கொண்டே இருக்கிறது அது, தன்னில் அனைத்தையும் கரைத்துக்கொண்டே இருக்கிறது. வண்ணங்கள் கலந்து கலந்து உருவாகும் புதிய வண்ணங்களின் பரிணாமத்தையே நாம் வரலாறென்கிறோம், பண்பாடென்கிறோம். காதரி அவர்கள் அளித்தது அந்த மகத்தான கலப்பின் சித்திரம். பாரசீகம் இங்கே தென்னிந்தியாவில், தமிழில், நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு உரையாடலிலும் கலந்திருக்கிறது. பாரசீகத்தின் இந்தியக்குழந்தை உருது. அதன் அன்னை சம்ஸ்கிருதம்.
உருது இலக்கியத்தின் தலைமகனாகிய அமீர் குஸ்ரு முதல் அதன் இறுதிப் பெருங்கவிஞரான ஃபைஸ் அகமது ஃபைஸ் வரை அதன் இலக்கிய வரலாற்றை கவிதைகளினூடாக விரித்துரைத்துக்கொண்டே சென்றார். காதரி அவர்கள்.ஒவ்வொருவருடனும் இந்தியவரலாற்றின் ஒரு காலகட்டம் பிணைந்துள்ளது. ஒவ்வொருவருடனும் ஓர் பிற இந்தியமொழி ஆளுமை ஒருவரை இணைத்துப் பார்க்கமுடிந்தது.
இலக்கிய அறிமுகம் என்பதற்கு அப்பால் இரண்டு வகையில் இந்த வகுப்பு எனக்கு மிகப்பெரிய தொடக்கமென அமைந்தது. இப்படி ஒரு சூழலில், இத்தனைத் தீவிரமான அமர்வுகளில் அன்றி அவற்றை இப்படி நுணுக்கமாகப் புரிந்துகொண்டிருக்க முடியாது.
ஒன்று, உருது இசைப்பாடல்களின் அறிமுகம். கஸல், கவாலி என்னும் இரண்டு வகை இசைமரபுகளின் பண்பாட்டுப் பின்புலம், அவற்றின் பரிணாமம், அவற்றின் செய்யுள் அமைப்பு, அவற்றின் உள்ளடக்கம் ஆகியவற்றை விரிவாக காதரி விளக்கினார். கஸல், கவாலி இரண்டு மரபுகளிலுமுள்ள பெரும் பாடகர்களை அறிமுகம் செய்தார். உஸ்தாத் நுஸ்ரத் படேகுலாம் அலிகான், மெஹ்தி ஹஸன் ஆகியோரின் பாடல்களை ஒலிக்கவிட்டு உதாரணம் காட்டி விளக்கினார்.
நான் நாற்பதாண்டுகளாக கஸல் கேட்பவன். ஆனால் கஸலின் அமைப்பு எனக்கு இந்த வகுப்புவரை உண்மையில் தெரியாது. அதை தென்னிந்தியக் கீர்த்தனைகளின் அதே அமைப்பு கொண்டது என்றே எண்ணியிருந்தேன். அதே அமைப்புதான், ஒருவேளை அங்கிருந்து நம் கீர்த்தனைகளுக்கு அந்த அமைப்பு வந்திருக்கலாம். ஏனென்றால் கர்நாடக சங்கீதம் உருவாவதற்கு முன்பு நமக்கிருந்தவை பண் பாடல் அமைப்பும் வரிப்பாடல்களின் அமைப்பும்தான்.
ஆனால் கஸல்களுக்கும் கீர்த்தனைகளுக்கும் மிக அடிப்படையான ஒரு வேறுபாடுள்ளது. கஸலின் ஈரடிகள் ஒன்றோடொன்று நேரடியான தொடர்பற்றவை. அவற்றின் நடுவே பாடகர் சொல்பவை அந்த பாடல்களின் வரிகள் அல்ல, அவருக்கு அந்த மேடையில் தோன்றும் இணையான வேறு கவிதைவரிகள். கஸல் என்னும் மகத்தான இந்திய இசைவடிவை முதல்முறையாக அணுகியறிய முடிந்தது என்று தோன்றியது.
அத்துடன் காதரி அவர்களே மிகச்சிறந்த பாடகர். அவரே உருது கஸல்களை நிறைய எழுதியிருக்கிறார். இந்திய அளவில் பயணம் செய்து முஷராக்களில் உருதுக் கவிதைகளை முன்வைத்திருக்கிறார். தன் ஆழ்ந்த குரலில், துல்லியமான ராகபாவத்துடன் அவர் கஸல் வரிகளைப் பாடியபோது வகுப்பு அடைந்த மோனநிலை மிக அரிதான ஒன்று.
இரண்டு, உருது இலக்கியம் என்பது தமிழ்நிலத்திலும் மிகத்தீவிரமாக இயங்கும் ஒரு மரபு என்னும் அறிதல். நான் தமிழிலக்கியத்தில் நாற்பதாண்டுகளாகச் செயல்படுபவன். தமிழ் இஸ்லாமிய இலக்கியம் பற்றியும் விரிவான அறிமுகம் உண்டு. ஆனால் உருது இலக்கியத்திற்கு இத்தனை தீவிரமான ஒரு செயற்தளம் தமிழகத்தில் உண்டு என தெரியாது. அதன் பேராளுமைகள் எவர் பெயரும் தெரியாது. மிக ஆழமான ஒரு வெட்கம் உருவான தருணம் அது.
நம்மருகே ஓடிக்கொண்டிருக்கும் பெருநதி அது. நாம் அப்பக்கம் திரும்பவே இல்லை. அதை அறியவே இல்லை. எனக்குத்தெரிந்து ஓரிரு இஸ்லாமிய எழுத்தாளர்களுக்கு மெல்லிய அறிமுகம் இருக்கலாம், தமிழ் இலக்கியச்சூழலுக்கு அந்தப் பெருக்கைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதே உண்மை. அதற்குக் காரணம் நம் முன்முடிவுகளும் உளக்குறுகலும்தான் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாட்டில் உருது இலக்கியத்திற்கான கவியரங்குகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பல்லாயிரம்பேர் பங்களிக்கும் உருது இலக்கிய விழாக்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பலர் தொடர்ந்து உருதுவில் இன்றும் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தமிழிலக்கியத்திற்கும் ஓர் உரையாடல் நிகழ்ந்தாகவேண்டும்.
காதரி அவர்களிடம் பேசும்போது ஒன்று சொன்னேன். ஒரே ஆண்டு இரு தமிழ்நாட்டுத் தமிழர்கள் உருது இலக்கியத்திற்காகவும் தமிழிலக்கியத்துக்காகவும் சாகித்ய அக்காதமி விருது பெறுவார்கள் என்றால் அன்றுதான் நாம் மெய்யாகவே வெல்கிறோம் என்று.
உருது இலக்கியத்தின் முற்போக்கு அலை, நவீனத்துவ அலை, பெண்ணிய அலை, இன்றைய இலக்கியம் வரை வந்து நிறைவுற்ற மூன்றுநாள் அமர்வு பங்கேற்ற அனைவருக்குமே ஓர் அரிய கற்றல் அனுபவம்.
கீழே வெயில் எரிந்துகொண்டிருந்தாலும் மலைக்குமேல் இதமான பருவநிலை நிலவியது. காலையில் முகில்களால் மலைகளும் முற்றமும் மூடப்பட்டிருந்தன. இரவில் மெல்லிய தூறலும் குளிரும் இருந்தது. பிரியத்திற்குரிய நண்பர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். வகுப்பு எடுப்பவனாக அன்றி வகுப்பில் அமர்பவனாக அங்கே செல்வது இன்னொரு இனிமை.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

