செம்மை, கடிதம்

செம்மை

அன்புள்ள ஜெ,

செம்மை கட்டுரையின் முதலில் இருக்கும் உங்கள் புகைப்படமே எனக்கு பிரமாதமான காட்சியாக கண்ணில் தேங்கி நின்று விட்டது. அந்த படத்தை குறைந்தது ஐந்து நிமிடமேனும் பார்த்து நின்ற பின்னரே படிக்கத் தொடங்கினேன். ஒரு வளைந்த மென்மையான மணல் குன்று. அதன் மேல் நீங்கள். பின்னால் எதுவுமற்ற நீண்ட வானப் பெருவெளி. அபாரமான படம். உயர்ந்து நிற்கும் ஒரே பொருள் நீங்கள் மட்டுமே. அந்த வண்ணங்களும், நிலப்பரப்பும் ஒரு விந்தையாக இருந்தது. வானின் மேலே அடர் நீலம். அது மங்கி மங்கி நிலத்தை அடையும் போது முற்றிலும் வெண்மை. கீழே நீலத்திற்கு நேர் எதிரான சிகப்பு. குளுமையும் வெம்மையும் ஒரு சேர படிந்து இணைத்து விட்டது போல் இருந்தது. மெரூன் நிற மேலாடையும், நீல நிற ஜீன்ஸும் கொண்ட உங்கள் உடை அந்த படத்தை இன்னும் இன்னும் அழகாக்கியது. அந்த படத்திற்குள் வண்ணங்களின் முரணும் அதே சமயம்  ஒருமையும் கலந்தே இருந்தது போல் இருந்தது. திடீரென அந்த மணல் குன்று ஒரு மாபெரும் ஒட்டகம் போல தெரிந்தது. ஒட்டகத்தின் திமில் மேல் ஏற்றி நிறுத்தப்பட்ட சிறு பொம்மை போல நீங்கள் தெரிந்தீர்கள்.

ஓராண்டுக்கு முன்பு நாங்கள் ஒரு நான்கு நண்பர்கள் பத்து நாட்கள் கொண்ட ஒரு மும்மாநில பயணம் சென்றோம். அப்போது நாங்கள் முதலில் சென்ற இடம் கந்திக்கோட்டா. இன்றும் என்னுடைய கனவுகளில், வெறுமனே இமைகள் மூடும் போது கூட நான் அங்கு பார்த்த காட்சி கண்ணுக்குள் வந்து நிற்கும். பலநேரங்களில் கண்ணை விழித்துக் கொண்டு இருக்கும் போதே அந்த காட்சி தோன்றும். விடியற்காலை, இருள் நீங்கும் முன்னரே தட்டுத்தடுமாறி அந்த பாறைகளுக்கு நடுவே சென்று அமர்ந்து விட்டோம். ஷார்ஜாவில் செம்மை நிலத்திற்குள் நின்று கொண்டு ஒளி மயங்க மயங்க அது இருளடைவதை பார்த்த அனுபவத்தை எழுதி இருந்தீர்கள். நாங்கள் இருளில் இருந்து, எதுவுமற்ற ஒன்றில் இருந்து ஒரு அபாரமான காட்சி துலங்கி வருவதை பார்த்தோம். அந்த கற்பாறைகள் கொண்ட மலையை அரித்து உருவாகப்பட்ட பள்ளத்தில் பெண்ணா ஆறின் மடியில் இருந்து ஒரு தணல் உதித்தெழுந்த தருணம் ஒரு மாபெரும் தரிசனம். அங்கு சூழ்ந்திருந்த பாறைகள், வானம், ஆறு எல்லாம் மெல்ல மெல்ல செம்மை படர்ந்து கொண்டு இருந்தது. அங்கு நின்று கொண்டிருக்கும் போதே அந்த மங்கலான ஒளி துலங்கி வரும் கணங்கள் பெரும் போதமுற்று கனவு நிலையில் இருப்பது போலத்தான் இருந்தன. ஒரு மாபெரும் நிசப்தம் மெதுவாக அழிந்து பறவைகளின் இசை மேலெழும்பி குதிக்கத் தொடங்கியது. மங்கை ஒருவளின் மார்குழியில் ஓடும் கூந்தல் போல அந்த ஆறு வழிந்தோடிக் கொண்டு இருந்தது.

இன்னொரு காட்சியும் கூடவே நினைவுக்கு வருகிறது. நாம் ஹொன்னவார் பயணத்தில் ஒரு மாலை சூரிய அஸ்த்தமனம் பார்க்க கும்டா கடற்கரைக்கு சென்று இருந்தோம். அங்கிருந்த பாறை அடுக்குகள் தன்னுள் ஒரு செந்தணலை  ஏந்தி உறைந்து நின்றிருந்தன. ஒவ்வொரு பாறைக்குள்ளும் ஒரு தணலின் வேட்கை. அந்த பாறை பெருக்கின் விளிம்பில் கடல். நீண்ட நீல கம்பளம். அதன் மேலே மீண்டும் வானில் ஒரு தீ பிழம்பு. அந்த தீ மெல்ல மெல்ல கடலுக்குள் அமிழ்வதை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம். ஒரு கணத்தில் கடலும் எரியத் தொடங்கியது. குளுமைக்கும் வெம்மைக்கும் இடையிலான ஒரு யுத்தக் களியாட்டு போல் உணர்ந்தேன்.

சிபி 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 04, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.