கம்பனை கால்தொடர்தல்…
கம்பராமாயணம், வாசிப்பு முடிவு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். சீனிவாசன், சுதா தம்பதிகளின் கம்பராமாயணம் வாசிப்பு பற்றிய கடிதம் வாசித்தேன். இவர்களைப்போன்றவர்களின் செயலும் ஆக்கமும்தான், அவர்கள் சென்ற பயணத்தின் பாதச்சுவடுகள்தான்,பின் வருபவர்களை வழி நடத்துகின்றன. ஊக்குவிக்கின்றன. அவர்களை பாராட்டி ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
எமர்சன் முகாமில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள், கம்பராமாயணத்திற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில், எடுத்துக்கொண்ட தலைப்பிற்கான பாடல்களை இசையுடன் பாடுகிறார்கள். முன்னேற்பாடாக, ராலே ராஜன், பாடும் நண்பர்களுக்கு அவர்கள் பாடிப் பயிற்சி பெறுவதற்கென, அந்தந்த பாடலுக்கான மெட்டுடன் பாடி ஒலிவடிவத்தை அனுப்புவார். ஒருங்கமைப்பாளனாக எனக்கு ஒரு பிரதி கிடைத்துவிடும். கடந்த மூன்று வருடங்களாக, அந்தப் பாடல்களை , காலையில் கேட்கிறேன். இந்த வருடம், ‘கடலோ மழையோ ” பாடலை ராஜன் இசையமைக்க சிக்கில் குருச்சரண், நாஞ்சில் நாடன், மற்றும் உங்கள் முன்னிலையில் வெளியிட்டோம். அதை வெளியிடும் முன்னர் நாங்கள் அழைக்கவிருந்த விருந்தாளிகளில் ஒருவராக நடிகர் சிவக்குமார் அவர்களும் இருந்தார். ஆறு வருடங்களுக்கு முன்னர் , அவர் ஈரோடில் , ஒரு கல்வி வளாகத்தில் நடத்திய கம்பராமாயண உரையை யூட்யூபில் இருக்கும் பதிவைக் கேட்டிருக்கிறேன். அவருடன் பேசும் பொழுது , 30 நிமிட உரையாடலில், 25 கம்பராமயாணப் பாடல்களை நினைவு கூர்ந்தார். “எப்படி சார் இப்படி? ” என நான் வியக்க , தனது 67 வயதுக்கு அப்புறம் எப்படி ஆர்வமுடன் கற்றுக்கொண்டார் என என்னிடம் பகிர்ந்துகொண்டார். “சும்மா வராது, சௌந்தர் ! மற்றவர்கள் உறங்கிக்கொண்டிருக்க, நான் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து, இன்னொரு அறைக்குச் சென்று எழுதிப்பார்த்து மனனம் செய்வேன்” என்றார்.
கம்பராமாயணத் தாகம், “கடலோ மழையோ‘ வெளியீட்டோடு, தீர்ந்தபாடில்லை. பாடகர்களும், இசை வாத்தியக் கலைஞர்களும் நிறைந்த ஒரு குழுவை வைத்துக்கொண்டு நாம் ஏன் ஒரு கம்பராமாயணக் கச்சேரி நடத்தக்கூடாது என்று ராஜனும் நானும் ஒரு நாள் பேசினோம். எப்படி இதை எடுத்துச் செல்லலாம் , எத்தனை பாடல்கள் பாடலாம் என ராஜன், நண்பர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் டாலஸ் மாநகரில் அமெரிக்காவில் முதன் முதலாக கம்பராமாயணக் கச்சேரி நடத்தவுள்ளோம். விரைவில் நண்பர்கள், அமெரிக்கத் தளத்திலும், தங்கள் தளத்திலும் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

