அன்புள்ள ஜெ
அண்மையில் ரம்ஸானை ஒட்டி இன்ஸ்டா பிரபலர் இர்பான் Irfan’s view என்பவர் சாலையோரமாக தானதர்மங்களை வீசியெறிந்து கொண்டு ஆணவமாகச் சென்றது விவாதமாக ஆகியது. வாங்குபவர்களின் தன்மரியாதையை இழிவுசெய்யும்படியாக இந்த தானதர்மங்கள் செய்யப்பட்டன என்று எனக்கும் தோன்றியது. அப்போது என் சீனியர் நண்பர் ஒருவர் நீங்கள் எழுதிய இந்தக் கதையை சுட்டி நல்கினார். அலை அறிந்தது. அற்புதமான கதை.
ஷாகுல் அமீத்
அன்புள்ள ஷாகுல்
இர்ஃபான் என்பவரை அறிந்துகொண்டேன். பிரபலமாக இருக்கிறார் போல. ஆனால் இந்த நடத்தை நிலப்பிரபுத்துவ காலம் முதல் இருந்து வருவது. புதுப்பணக்காரர்களிடம் நீடிப்பது. தமிழில் பல ‘கொடைவள்ளல்‘ நடிகர்கள் இந்தப்பட்டியலில் வருபவர்கள். நானறிந்து இன்றைய சினிமாவின் உண்மையான கொடைவள்ளல்கள் சிவக்குமார் மகன்கள். அவர்கள் வெளியே காட்டிக்கொள்வதே இல்லை.
இர்பானின் இந்த மனநிலை இன்றைய இளைய தலைமுறையின் போக்கு. எதையும் மிதமிஞ்சிய அலட்டலாக ஆக்கிக்கொள்கிறார்கள். ஆகவேதான் மேலோட்டமான உள்ளம் கொண்ட இளைஞர்களில் பலருக்கு அவரைப்பிடிக்கிறது என நினைக்கிறேன்.
ஜெ
அலை அறிந்தது…
Published on April 01, 2025 11:31