சிறைமீறல்
முழுமையறிவு சார்ந்து தொடர்ச்சியாக இஸ்லாமிய மெய்யியல் பற்றியும் கிறிஸ்தவ இறையியல் பற்றியும் வகுப்புகள் நடத்தி வருகிறீர்கள். இப்போது உருது இலக்கிய வகுப்புகள் நிகழ்கின்றன. இவற்றை ஒரு balancing act ஆகத்தான் செய்கிறீர்கள் என்று சொல்லி மறுப்பவர்கள் உங்களிடம் பேசியிருப்பார்கள் என நினைக்கிறேன். உங்கள் தரப்பை அறிய விரும்புகிறேன்.
சரத்
அன்புள்ள சரத்,
மறுப்பவர்களில் ஒருவர் நீங்கள் என நினைக்கிறேன். நன்று.
என் முதல் மறுப்பு, உருது என்பது இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த மொழி அல்ல. உருது இலக்கியத்தின் பெரும்படைப்பாளிகளில் ராஜேந்திர சிங் பேதி போன்றவர்கள் பலர் உண்டு. உருது மொழி இலக்கியம் இந்திய முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் பெரும்பங்களிப்பை ஆற்றியது.
இந்த வகையான எளிய முன்முடிவுகளுக்கு எதிராகவே இந்த வகுப்புகளை நடத்துகிறோம் என்பதே இரண்டாவது மறுப்பு. மிகமிக எளிய புரிதல்களை மிக அறுதியானவையாகச் சமைத்துக்கொள்வது என்றுமே அறிவியக்கத்தின் எதிர்மறைப் பண்புகளில் ஒன்று. இன்றைய சமூகவலைத்தளச் சூழலில் அந்த அறுதிமுடிவுகளை ஒட்டி ஏராளமாக வாதாடியும் விடுவதனால் அந்த எல்லையை மீறாமலேயே வாழ்ந்து மடிகிறார்கள். இதைக் கருத்தியல்சிறை என்றே சொல்வேன். அந்தச் சிறையை உடைப்பதற்கான முயற்சிகள் இவை.
மிகக்குறைவாகவே இவற்றில் பங்கேற்பு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். பிற வகுப்புகளுக்கு முண்டியடிப்பவர்கள் இவ்வகுப்புகளுக்கு வருவதில்லை. இஸ்லாமிய வகுப்புகளுக்கு இஸ்லாமியர் எவரும் வருவதில்லை. கிறிஸ்தவ வகுப்புகளுக்கு கிறிஸ்வர்களும் வருவதில்லை. அவர்கள் அவற்றை தங்கள் மதம் சார்ந்த சம்பிரதாயமான அமைப்புகளிடமிருந்து கற்கவே விரும்புகிறார்கள். உருது இலக்கிய அறிமுக வகுப்பில்கூட இஸ்லாமியர் எவருமில்லை.
இங்கே ஒரு வகுப்பில் பங்கேற்பவர்கள் அது ‘பயனுள்ளது’ ஆக இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். பயன் என்பது தங்களுடைய வினாக்களுக்கான விடைநோக்கிச் செல்லுதல். அந்த வினாக்கள் அவர்களின் மதம், பண்பாடு, அன்றாடவாழ்க்கை, உடல்நலம் சார்ந்தவை. ஆகவே அவர்கள் தெரிவுசெய்யும் வகுப்புகளும் அவ்வாறே உள்ளன. அதுவே இயல்பு. அந்த பொதுப்போக்கில் ஓர் உடைவை உருவாக்கவே முயல்கிறோம்.
இத்தகைய முயற்சி இதுவரை இந்தியச் சூழலில் நிகழ்ந்ததில்லை என்பதை நீங்கள் கருத்தில்கொள்ளவேண்டும். ஓர் இடத்தில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மெய்யியல்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு. மறுப்பும் வெறுப்பும் இன்றி அவை கற்பிக்கப்படும் அமைப்பு. அவ்வாறொன்று உருவாக்கப்படவேண்டும் என்பது குரு நித்யாவின் முயற்சியாக இருந்தது. மிகக்குறுகியகாலமே அவரால் அதை நிகழ்த்தவும் இயன்றது- அம்முயற்சி அவருக்கு அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமே வெற்றியாக அமைந்தது.
ஏனென்றால் இந்தியாவில் நமக்கு பல தடைகள் உள்ளன. அகத்தடைகள்தான். மதச்சார்பின்றி தத்துவம் – மெய்யியல் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள மெய்யான சுதந்திரவாதச் (Liberalism )சிந்தனையாளர்களாலேயே இயலும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் எல்லாம் சுதந்திரவாதச் சிந்தனையாளர்களின் வலுவான சமூகம் உள்ளது. குறிப்பாக நடராஜகுரு, நித்யா ஆகியோர் பணியாற்றிய காலங்களில் ஹிப்பி இயக்கம் இருந்தது. அவர்கள் அதனுடன் இணைந்தே செயலாற்றினர். அவர்கள அடைந்த பல தீவிர மாணவர்கள் ஹிப்பி இயக்கத்தில் இருந்து வந்தவர்கள்.
இன்று அமெரிக்காவில்கூட அவ்வியக்கம் மங்கலாகிவிட்டிருக்கிறது. பழமைவாதம் ஒருபக்கம், அதீதத் தொழில்நுட்பவாதம் இன்னொரு பக்கம் என அங்குள்ள அரசியல், கருத்தியல் இரண்டும் உருமாறிவிட்டிருக்கின்றன. தாராளவாதம் என்பது பொருளியலில் மட்டுமே, கருத்தியலில் அல்ல என ஆகிவிட்டிருக்கிறது. பழைய ஹிப்பி இயக்கத்தினர் முதியவர்களாகி ஒடுங்கிவிட்டிருக்கிறார்கள்.
இந்திய சூழலில் சுதந்திரவாதச் சிந்தனை என்பது மிக அரிது. ஒரு மொழிப்பண்பாட்டிலேயே சிலநூறுபேர் கூட அப்படிப்பட்டவர்கள் இருக்க மாட்டார்கள். நம்முடைய சூழலில் சுதந்திரவாதம் அறிமுகமாகி நூறாண்டுகூட ஆகவில்லை. நாம் இன்னும் நம்முடைய சாதி, மதம், இனம், மொழிச் சூழல்களுக்குள் வாழ்பவர்கள். நம் அகத்தின் எல்லா அடிப்படைப் படிமங்களும் அவ்வாறு நமக்கு அளிக்கப்பட்டவை. நம் பார்வை இயல்பாகவே கட்டுண்டது.
சுதந்திரவாதம் என்பதற்கான வரையறையை இப்படிச் சொல்லலாம். யார் சுதந்திரவாதி? ‘தன்னுடைய பிறப்பாலோ சூழலாலோ அளிக்கப்படும் சிந்தனைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தன் அடையாளத்தையும் கருத்துநிலையையும் வகுத்துக்கொள்ளாமல் தனக்கான தேடலை தன் ரசனை, அறவியல் மற்றும் தர்க்கத்தை மட்டுமே கருவியாகக்கொண்டு முன்னெடுப்பவர், தான் அடைந்த விடைகளை மட்டுமே சார்ந்திருப்பவர்”
அத்தகைய ஒருவரால்தான் உண்மையில் வேதாந்தத்தை கற்றுக்கொள்ள முடியும். அது ‘அனைத்தில் இருந்தும்’ விடுதலையை அளிக்கும் ஒரு பிரபஞ்ச தரிசனம். முழுமுதன்மை (The absolute) என அது கூறும் பிரபஞ்சசாரம் ஒன்றை அன்றி அனைத்தையுமே சார்புநிலையானது, முழுமையற்றது (relative, incomplete) என வகுப்பது. அதை ஒருவர் தன்னந்தனியாக மட்டுமே உணரமுடியும். தன் நுண்ணுணர்வாலும் கல்வியாலும். அப்பயணத்தில் அவருடைய ஆசிரியர் கூட உடன்வரமுடியாது. தனக்கான எல்லா அடையாளங்களையும் துறப்பதனூடாக மட்டுமே அந்த தரிசனம் அல்லது உணர்தலை நோக்கிச் செல்லமுடியும்.
இந்நோக்கிலேயே இந்திய தத்துவம் கற்க வரும் ஒருவர் ‘எல்லா’ தரிசனங்களையும் கற்றாகவேண்டும் என்கிறோம். ‘தத்து சமன்வயாத்’ என பிரம்மசூத்திரம் ஆணையிடுவது அதையே. அது சமன்வயம் ஒருங்கிணைவினூடாக மட்டுமே அறியப்படும் ஒன்று. பாதராயணர் முதல் நாராயணகுரு வரையிலானவர்கள் ‘தத்துவ சமன்வயம்’ செய்ததும் அதற்காகவே. நடராஜகுருவும் நித்யாவும் மேலைச்சிந்தனைகளையும் இணைத்துக்கொண்டதும் அதன்பொருட்டே.
ஆனால் இந்தியதத்துவம் கற்க வந்தமரும் ஒருவரிடம் அதை வலியுறுத்த முடியாது. அவர் இந்திய தத்துவம் ‘தன்னுடையது’ என நினைக்கிறார். ’பிற’ தத்துவங்கள் மேல் விலக்கம் கொண்டிருக்கிறார். அந்த ’பிற’ என்னும் உணர்வை உதறாமல் அவரால் மெய்யாகவே தத்துவஞானத்தை அடையமுடியாது. அதன்பொருட்டே இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், மேலைத்தத்துவம் என எல்லா தரப்புகளும் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் கற்கவருபவர் தன்னை குறுக்கிக்கொள்ளவே முயல்வார். “அதெல்லாம் நமக்கு எதுக்கு?” என்று சுருங்கிக்கொள்வார். அது இயல்பானது. ஏனென்றால் அந்த மனநிலைக்கு இங்கே பல்லாயிரமாண்டுகளாக சாமானியர்களிடம் வேரூன்றியது. அத்வைதிகள் அன்றி எவருமே அந்த உட்சுருங்கலில் இருந்து வெளியேற முயன்றதில்லை, வெளியேறியதில்லை. ஒன்றைப்பற்றி அதனுடனேயே செல்வதே முறை என இங்கே நிறுவப்பட்டுள்ளது.
அதை உடைக்கவே முயல்கிறோம். நூற்றில் ஒருவரிடமே அந்த சிறைவிடுதலை நிகழும். எஞ்சியோர் அவர்கள் ஏற்கனவே இருக்கும் மத, கருத்தியல் நம்பிக்கைகளுக்குள்ளேயே இருப்பார்கள், கற்கும் தத்துவக்கொள்கைகளை உள்ளே இழுத்து கூடுதலாக வைத்துக்கொள்வார்கள். சிறைமீறுபவர்களே மெய்யாக தத்துவத்தை உணர்கிறார்கள். அளிக்கப்பட்டவற்றைக் கைவிட்டு கைவிட்டு முன்நகர்பவர்கள் அவர்கள். நாம் விதைகளை வீசவே முடியும், முளைத்துக் கதிர்விடுபவை சிலவே. அதுவே பிரபஞ்ச யதார்த்தம்.
ஆனால் இந்த தமிழகத்தில் ‘மற்ற தரப்பை’ அறிய ஒவ்வொருமுறையும் இருபதுபேர் வந்தமர்வதே பெரும் அதிசயம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அவர்கள் அளிக்கும் நம்பிக்கை பெரிய வெளிச்சமெனத் தெரிகிறது.
ஜெ
கிறிஸ்தவ மெய்யியல் அறிமுகம்நாள் ஏப்ரல் 11, 12 மற்றும் 13தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
உருது இலக்கிய அறிமுகம்
நாள் ஏப்ரல் 4,5 மற்றும் 6
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


