பொழிவு, கடிதம்
அன்பின் ஜெ அவர்களுக்கு,
நேற்று மாலை எங்களூரின் சுற்றுவட்டாரத்தில் நல்ல மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக நிலவி வந்த நிலையில் இந்த மழை சற்று இதமாக இருந்தது. பெரும்பாலும் கார்த்திகை பட்டத்தில் விதைத்த பயிர்கள் அறுவடையாகிவிட்டன அதனால் எந்தப் பரபரப்புமில்லை.
கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் தான் மழைப்பாடல் வாசித்திருந்தேன்,
கூர்ஜரத்திலிருந்து பீஷ்மர் ஒரு இலையுதிர் காலத்தில் அஸ்தினாபுரம் நோக்கி வருவார் அப்பொழுது ஒரு இடத்தில்
“அனைத்து மரங்களும் இலையுதிர்த்திருக்க, புங்கம் மட்டும் தளிர்த்து இலையொளிர நின்றது. மாதவிப்பந்தல்களில் வெண்ணிற விண்மீன்கள் என மலர்கள் சொறிந்திருந்தன” என்று வரும்,
சரியாக அதை வாசிக்கும்போது எல்லா மரங்களும் தளிர் விட தொடங்கியிருந்தபோது புங்கமரம் தளிர்த்து பூவிட தொடங்கியிருந்தது.
பின்னர் சத்யவதியின் யோசனயின்படி காந்தார இளவரசியை திருதிராஷ்டிரனுக்கு மணமுடிக்கும் நிகழ்வுகள் முடிந்தது
காந்தாரி நகர்நோக்கி வருகையில் பெய்யும் முதல்மழை, பாலை நிலத்தின் மகள் முதல்முறை நகர் நுழையும்போது நல்ல நிமித்தமாக பெய்யும் மழை,
அந்த மழை முதல் துளிகள் மண்ணில் விழும்போது ” முதுசூதர் சிறு அம்பு ஒன்று மண்ணில் தைத்த ஒலியை கேட்டார். இன்னொரு அம்பு என அருகே விழுந்தது நீர் துளிகள், நீரில் விழும் மீன்கொத்திகள் என அவை மண்ணை அறைந்து நிறைந்தன.”
என்ற வரிகளில் மழைத்துளிகளை வானிலிருந்து கொட்டும் அம்புகளுக்கு நிகராக உருவகித்திருந்தது எனக்கு பிடித்திருந்தது.
அதே சமயத்தில் அஸ்தினாபுரியில்
அரண்மனை மாடத்திலிருந்து சத்தியவதி மழைக்கு முன்பான வெப்பத்தால் சோர்ந்திருப்பார் மேலும் விதுரனிடம் பேசும்பொழுது நூற்றாண்டு காலத்தில் மழை தாமதிக்கும் வருடம் அதுவென அறிந்தபோது பெரும் சப்தத்துடன் மழை பொழியும் அப்போது மழை பற்றிய விவரணைகள் சிறப்பானது
“மழையோ ஒற்றைப்பெரும்பொழிவென திகழ்ந்தது. மழையோசை ஒன்றையே சொல்லும் முதல்மந்திரம். ஆயிரம் இலைநாவுகள் சுழித்தெழும் நாதம். பல்லாயிரம் நீர்த்தந்திகள் அதிர்ந்தெழும் நாதம். நிலமுரசின் விம்மல். நதியாழின் மீட்டல். மேகச்சல்லரியின் குமுறல். மழைத்தலின் பேரிசை.”
போன்ற வரிகளை படிக்கும்போது மழை பார்க்கவேண்டும் என்று ஆர்வம் மேலிட்டது, ஆனால் கடந்த ஆண்டு எந்தக் கோடைமழையும் பெய்யவில்லை, பருவமழை கூட சற்று பிந்தியே பெய்தது.
மழைக்காலத்தில் மழை பார்ப்பதைவிட கோடையில் மழை பார்ப்பது அழகானது. முதல் மழைக்கு முன்பு வரும் ஈரமண் வாசனையும், மழைக்கு பின் காய்ந்த நிலத்திலிருந்து வரும் வாசமும் ஒரு அலாதியான உணர்வை கொடுக்கும்.
மழைப்பாடலில் குந்தியை அறிமுகம் செய்யும்போது மழைக்காட்டில் அடர்ந்து வளர்ந்திருந்த புற்கள்,மரங்கள் மழையில் நனையும் பொழுதில் குந்தியின் அத்தியாயங்கள் நிகழும், குந்தி கர்ணனை கருவில் சுமக்கும் பொழுது அவள் அடையும் அந்த மன ஓட்டங்களை படிக்கும்பொழுது அத்தனை உணர்வுப் பூர்வமாக இருந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் எதிர்பார்த்த மழை இந்த மார்ச்சில் நேற்று பெய்தது, காலையில் நன்றாக வெயிலடிக்க பிற்பகலில் வானம் கருமை கொண்டு தூரலுடன் ஆரம்பித்து ஒரு மிதமான மழை பெய்தது.
இரவு முழுக்க சிறு சிறு தூரளுடன் வானம் சிங்கிக் கொண்டிருந்தது.
மழைக்குப் அடுத்தநாள் காலை ரம்மியமானது, கோடையில் தளிர்க்கும் மரங்களின் வாசமும், பூக்களின் வாசமும், பறவைகளின் ஒலியும் இயல்பான நாட்களை விட சிறப்பாக இருக்கும்.
போகன் சங்கரின் கவிதையொன்று,
மழை எல்லாவற்றையும்
மென்மையாக்கியிருந்தது.
நிலம் குழைந்து
காலடிகளை
ஓவியங்கள் போல
தன்னுள் பதித்துக்கொண்டது.
கூடலின் நிலம்
தன்னியல்பு மறந்து
நீர் போல ஓட முயன்றது.
கூடலின் பின்
நாணம் இல்லைதானே?
வானம் நிலத்துடன் கூடும் நிகழ்வே மழை என்று தோன்றியது.
இதை உங்களுக்கு எழுதும்பொழுதுகூட மேகங்கள் கருமை கொண்டு, தூரத்தில் பூத்திருக்கும் வாகை மலரின் நறுமணத்தை நிறைத்த காற்றை வீசிகொண்டிருக்கிறது.
மழை எங்களின் மனதை நிறைக்கும் மங்கள நிகழ்வு.
மழை பற்றிய உங்களின் நினைவுகளுக்கு நன்றி.
தமிழ்குமரன் துரை,
பெங்களூர்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

