நாறும்பூநாதன், தமிழ்விக்கி
அன்புள்ள ஜெ
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை புத்தகவிழாவில் (நீங்கள் கலந்துகொண்டீர்கள் என்று நினைவு. யுவன் சந்திரசேகரும் வந்திருந்தார்.) நாறும்பூநாதனும் நீங்களும் பேசிக்கொண்டிருந்தீர்கள். அப்போது ஒரு முற்போக்கு இலக்கிய எழுத்தாளர் உங்களை மிகக்கடுமையாக விமர்சித்தார். அவன் இவன் என்றெல்லாம் வசை. தமிழ்விக்கி என்ற அதிகாரத்தைக் கட்டமைக்கிறீர்கள், அதன் வழியாக எழுத்தாளர்களை மதிப்பிட்டு தீர்ப்புசொல்லும் பீடமாக உங்களை ஆக்கிக்கொள்கிறீர்கள் என்றெல்லாம் சொன்னார். தமிழ்விக்கியை உடனே தடை செய்யவேண்டும், அதிலுள்ள தகவல்கள் மேல் வழக்குபோடவேண்டும் என்றெல்லாம் சொன்னார். கூட இரண்டு பேர் நின்று அதை ஆதரித்தார்கள்.
முற்போக்கு எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைந்தபோது கூகிளில் தேடினால் வந்த முதல் பதிவு தமிழ்விக்கி போட்டது. நான் உட்பட அத்தனை இதழாளர்களும் அதைக்கொண்டுதான் செய்தி போட்டோம். எல்லா இடங்களிலும் தமிழ்விக்கியின் அடிப்படையில்தான் அஞ்சலி, புகழ்மொழி எல்லாம் வந்துகொண்டிருந்தது. (ஆனால் தமிழ்விக்கியை எவரும் குறிப்பிடவுமில்லை. இணையத்தில் இருந்து எடுத்த தரவுகள் என்றுதான் சொன்னார்கள்)
வசைபாடியவர்கள் தமிழுக்கு எதுவுமே செய்ததில்லை. செய்யவும் ஏலில்லை. ஆனால் செய்பவர்கள் மேல் அப்படி ஒரு காழ்ப்புடன் அலைகிறார்கள். மனநோயாளிகள் என்றுதான் சொல்லவேண்டும். இத்தனை மனச்சிக்கல்களையும் பொருட்படுத்தாமல் உங்கள் பணிகளில் முன்னால்சென்றுகொண்டே இருக்கிறீர்கள். அந்த அர்ப்பணிப்பும் சேவையும் தலைவணங்கத்தக்கவை
ஆர்
இரா நாறும்பூநாதன் தமிழ் விக்கி
அன்புள்ள ஆர்,
தமிழ்விக்கியை குறிப்பிடவேண்டியதில்லை. இணையவெளியில் தரவுகள் கிடைக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒரு காலகட்டத்தில் தமிழிலக்கியவாதிகள் பற்றிய தரவுகளே எங்கும் இல்லை. நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் எழுதும்போது நான் நேரில் ஒவ்வொருவரையாகக்கூப்பிட்டு அவர்களின் பிறந்த ஊர், தேதி போன்ற செய்திகளை கேட்டு பதிவுசெய்தேன். தமிழ்விக்கியிலும் அப்படித்தான்.
அந்த ஆவணப்பதிவுதான் எழுத்தாளர்களை வரலாற்றில் வாழவைக்கிறது. அதிலும் முன்னோடிகள் பற்றிய மதிப்பீடுகளில் திட்டவட்டமாக அவர்களின் இடம் வகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம், அதைத்தான் இன்று கல்வித்துறைகூட பின் தொடர்கிறது.
புகழ்மொழி செல்லவேண்டியது பெயர்கூட பதிவாகாது என்று தெரிந்தும் எந்த தனிப்பட்ட பயனும் இல்லாமல் இதில் பங்களிப்பாற்றும் என் நண்பர்களுக்கே. (அவர்களில் பலர் இங்கே பங்களிப்பாற்றுவதையே வெளியே சொல்வதில்லை. தெரிந்தால் பலர் வசைபாடுகிறார்கள் என்பதனால்)
எல்லா காலகட்டத்திலும் பெரிய முயற்சிகளுக்கு எதிராகச் சிறிய உள்ளங்கள் இப்படித்தான் செயல்பட்டுள்ளன. உ.வெ.சா, எஸ்.வையாபுரிப்பிள்ளை, மு.அருணாசலம், பெரியசாமித் தூரன் உட்பட அனைவரும் சந்தித்தச் சிறுமைதான் இது. நான் எம்மாத்திரம்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

