குற்ற முகங்கள் 3 உயரன் அவிபாதி

சுமார் 228 ஆண்டுகளுக்கு முன்பு மதராஸ் ஜார்ஜ் கோட்டையின் உள்ளே கொலை மற்றும் திருட்டிற்காக உயரன் அவிபாதி மற்றும் இரண்டு பிச்சைக்காரர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதில் அவிபாதியின் கழுத்திற்கு ஏற்ப சிறிய தூக்கு கயிறு தயாரிக்கபட்டது. ஒன்பது கொலைகள் செய்ததாகக் கைது செய்யப்பட்ட அவிபாதி நான்கு அடி எட்டு அங்குல உயரம் கொண்டிருந்தான்.

தூக்கிலிடப்பட்ட போது அவனுக்கு வயது முப்பது. ஒவ்வொரு கொலையும் தனது உயரத்தை ஒரு அங்குலம் உயர்த்திவிட்டதாக அவன் நம்பினான்.

பிறப்பிலே குள்ளனாக இருந்த அவிபாதி தனது உயரம் குறித்து மிகுந்த தாழ்வுணர்வு கொண்டிருந்தான். பொது இடங்களில் அவனைப் பலரும் கேலி செய்வதால் கோபம் கொண்டான். இதற்காகவே பகலில் வீதியில் நடமாடாமல் ஒளிந்து வாழ்ந்தான்.

வசதியான குடும்பத்தில் பிறந்தவன் அவிபாதி. ஆனால் பணத்தால் தனது உயரத்தை அதிகமாக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டிருந்தான்.

தரையில் நிற்கும் போது அவன் குள்ளமானவன் என்று தெரிவதால் தரையில் நிற்க மறுத்தான். இரவில் பூம்பூம்மாடு போல அலங்கரிக்கபட்ட காளை ஒன்றின் மீது அமர்ந்து பவனி வந்தான். பனைமர உயரத்தில் மரக்கோபுரம் அமைத்து அங்கே தங்கிக் கொண்டான். வில் வித்தையில் நிகரற்றவனாக இருந்தான். என்ன சாகசங்கள் செய்தாலும்.உலகம் அவனைக் குள்ளன் என்றே அழைத்தது.,

குற்றமே மனிதனின் உயரத்தை பெரிதாக்குகிறது என்று அவிபாதி கண்டுபிடித்தான். அதுவும் பட்டப்பகலில் சலவைத்துறையில் வைத்து வெங்குராவ் என்பவனை வெண்கலப் பூண் போட்ட தடியால் அடித்துக் கொலை செய்த போது அவிபாதி ஆறடிக்கும் மேலாக வளர்ந்து நிற்பதாக உணர்ந்தான். அவனது குரூர கொலையைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் அவன் விஸ்வரூபம் கொண்டது போலவே பயந்தார்கள்.

கொத்தவாலின் ஆட்களிடமிருந்து தப்பி ஒளிந்து கொண்டுவிட்ட அவனைக் கைது செய்வதற்காகக் காவல்படையினர் தேடுதலை மேற்கொண்டார்கள். தப்பி வாழும் போது உண்மையில் தான் விடுவிடுவென வளர்ந்து கொண்டிருப்பதாக அவிபாதி உணர்ந்தான். காவலர்களுக்குப் பயந்து பல்வேறு வேஷங்கள் புனைந்து கொண்டான். சில காலம் கரடி உருவம் கொண்டு சுற்றியலைந்தான் என்கிறார்கள்.

இந்த நாட்களில் அவன் தன்னை உயரன் அவிபாதி என்று அழைத்துக் கொண்டான். குட்டையான ஆண்களைப் பெண்கள் விரும்புவதில்லை என்பதை நினைத்து ஆத்திரம் கொண்டான் தனது உயரத்தை உலகிற்கு அடையாளம் காட்டுவது போல இரட்டையர்களான கோகிலா கோமளா இருவரையும் ஒரே மேடையில் வைத்துத் திருமணம் செய்து கொண்டான்.

அவர்கள் இருவரும் ஆறடிக்கு சற்று குறைவான உயரம் கொண்டிருந்தார்கள். மாநிறத் தோற்றம், அந்தத் திருமணத்திற்கு வரும் போது அவன் கட்டைக்காலில் நடந்து வந்தான் என்றார்கள். அதாவது உயரமான ஒரு மூங்கில் கழியில் குறுக்குக் கொம்பு ஒன்றைக் கட்டி அதன்மேல் ஏறிநின்று கைகளால் கழியைப் பற்றிக்கொண்டு தத்தித் தத்தி நடந்து வந்திருக்கிறான். தாலி கட்டும் போது மணப்பெண்கள் இருவரும் மண்டியிட்டு தான் அமர்ந்திருந்தார்கள். தன்னைப் போலப் பிள்ளை பிறந்துவிடக் கூடாது என்று நினைத்த அவிபாதி இரண்டு மனைவிகளையும் முத்தமிட மட்டுமே செய்தான் என்றும் சொல்கிறார்கள்.

இரண்டரை வருஷங்கள் தேடிச்சலித்து முடிவில் வெள்ளைக்கார அதிகாரி ஜான் ஆர். மெக்லேன் அவனைக் கைது செய்த போது இந்தக் குள்ளனா கொலையைச் செய்தவன் என்று நம்பமுடியாமல் திகைத்துப் போனார். அதை விடவும் அவன் இரண்டு பெண்களைத் திருமணம் செய்திருந்ததைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

நீதி விசாரணையின் முடிவில். அவனுக்கு விசித்திரமான தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவிபாதி மரத்தாலான சுழலும் பொறி ஒன்றினுள் நிறுத்தப்பட்டான். சூரிய வெளிச்சம் நேரடியாக அவன் கண்ணில் விழும்படி அந்தப் பொறி உருவாக்கபட்டிருந்தது. சூரியனின் நகர்விற்கு ஏற்ப அந்தப் பொறியும் இயங்கும் என்பதால் காலை முதல் சூரியன் மறைவது வரை அவனது கண்கள் சூரியனை பார்த்தபடியே இருக்க வேண்டும். தன்னை அறியாமல் அவன் கண்களை மூட முயன்றால் பொறியிலிருந்த ஊசி கண்ணுக்குள் சொருகிவிடும். ஆகவே அவன் இடைவிடாமல் சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்து ஒரே நாளில் குருடாகிப் போனான்.

இந்தத் தண்டனைக்குப் பின்பு அவிபாதி தான் ஒரு பற்குச்சியை விடவும் சிறியதாகிவிட்டது போல உணர்ந்தான். பழிவாங்க வேண்டும் என்ற ஒரேயொரு உணர்வு மட்டுமே அவனிடம் கொப்பளித்தது. தன்னை அவமானப்படுத்திய ஜான் ஆர். மெக்லேனின் மகள் மற்றும் மனைவியை இரண்டு பிச்சைக்காரர்களின் உதவியோடு கொலை செய்தான். அந்தக் கொலைகளின் காரணமாக அவன் மதராஸின் அச்சமூட்டும் பெயராக உருமாறினான்.

அதன் பின்பாக அவன் செய்த கொலைகள் எதற்கும் காரணம் கிடையாது. யாரை கொலை செய்தான் என்று கூட ஆள் அடையாளம் அவனுக்குத் தெரியாது. கொலைகளின் வழியே உயரமாகிக் கொண்டேயிருந்தான்.

கடந்தகால அவமானங்களின் கசப்பினை மனது உணரும் நாளில் அவன் திருட்டும் கொலைகளும் செய்திருக்கிறான். முடிவில் அவனையும் இரண்டு பிச்சைக்காரர்களையும் வேப்பேரி நாடக கொட்டகை ஒன்றில் வைத்து கைது செய்தார்கள்.

அதன் சில நாட்களிலே தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. இறந்த அவனது உடலை வெள்ளைக்காரர்களே புதைத்தார்கள். அவனது விருப்பப்படி உடலைப் புதைக்க ஆறடி குழி தோண்டப்படவில்லை. ஒரே குழியில் இரண்டு பிச்சைக்காரர்களுக்கு நடுவே நோயில் இறந்த சிறுவனின் உடலைப் போல அவிபாதியின் உடலும் சேர்த்துப் புதைக்கப்பட்டது.

சில மாதங்களின் பின்பு அந்தச் சமாதியின் மீது ஒற்றைப் புல் வளர்ந்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. அது ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது போலிருந்தது. அது உயரன் அவிபாதியின் கதை தானோ என்னமோ.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2025 06:20
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.