செவ்வியல் பாரமா?
கோழிக்கோடு , மணி ரத்னம், இரண்டு நாட்கள்
அன்புடன் திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் நலம் விழைகிறேன்.
நான் வ. அதியமான்
சமீபத்திய கோழிக்கோடு கே லிட் இலக்கிய விழாவில் கவிஞர் வீரான்குட்டியுடன் தாங்கள் நிகழ்த்திய ‘கவிதையின் இன்றைய வடிவம் என்னவாக இருக்க முடியும்’ என்ற கலந்துரையாடல் கானொளியை கவனம் கொண்டேன். வழக்கம் போலவே தங்களின் மிக செறிவான கலந்துரையாடல்களில் ஒன்று.
இவ்வுரையாடலில் தேய்வழக்கற்ற புத்துணர்வான நவீன கவிதைகள் எழுவதற்கு தடையாக இருக்கும் ‘பாரம்பரியத்தின் பாரம்’ குறித்து கீழ்வருமாறு சொல்லி இருந்தீர்கள்.
“இன்று இந்திய மண்ணில், வடகிழக்கு பகுதிகளான அசாம், மணிப்பூர் மேகாலயா போன்ற பகுதிகளிலிருந்தே புத்தம் புதிய, படைப்பூக்கம் மிக்க சிறப்பான நவீன கவிதைகள் வருகின்றன.
இதற்கான காரணங்களாக நான் எண்ணுபவை
1 அங்குள்ளவர்களுக்கு சிறந்த ஆங்கில மொழிக் கல்வி வழங்கப்படுகிறது. அதனால் அவர்கள் மேற்குலக கவிதைகளை (உலக கவிதைகளை) அதிக அளவில் வாசிக்க இயல்கிறது.
2 இதைவிடவும் முக்கியமானது அவர்களுக்கு மரபின் பாரம் இல்லை. அவர்களுக்கு முன்னோடி என்று ஒருவருமில்லை. மாறாக இங்கே சங்கம்புழை உண்டு, வைலோப்பள்ளி உண்டு. எப்படி எழுதினாலும் அதில் ஒரு டி-ஸ்பூன் சங்கம்புழையோ வைலோப்பள்ளியோ நிச்சயம் கலந்திருப்பார்கள். இந்த விஷயம் அங்கே இருக்க வாய்ப்பில்லை என்பதனால் அக்கவிதைகள் மிக புத்துணர்வோடும் படைப்பூக்கத்தோடும் இருக்கின்றன.
3 அவர்களுக்கு நாட்டாரியல் கலை மரபுகள் மட்டுமே இருக்கின்றன. நாட்டாரியல் கலை மரபிலிருந்து நவீன கவிதைகள் மிக புத்துணர்வோடு எழுகின்றன.
ஆனால் செவ்வியல் கவிதைகளிலிருந்து அப்படி எழுவது சாத்தியமில்லை. தமிழிலும் இச்சிக்கல் உண்டு. செவ்வியல் கவி மொழியில் ஒரு நவீன கவிதை எழுவது சாத்தியமில்லை. மரபான சம்ஸ்கிருத மொழியிலிருந்து ஒரு நவீன கவிதை எழுவதை நீங்கள் கண்டதுண்டா?
இந்திய வடகிழக்கு பகுதியைச் சார்ந்தவர்களுக்கு செவ்வியலின் பாரம் இல்லை. அதனால் அவர்களது கவிதைகள் மிகவும் புத்துணர்வோடும், படைப்பூக்கத்தோடும் இருக்கின்றன”
மேற்கண்ட சொற்றொடர்கள் சிறிது திகைப்பை ஏற்படுத்துபவையாக இருந்தன. மரபு கவிதைகளின் முக்கியத்துவத்தை, இன்றைக்கும் தேவையாக இருக்கும் அதன் அழகியலை மிக அதிகம் சிலாகிக்கும் நவீன எழுத்தாளர் நீங்கள் தான்.
நான் தெளிவுபடுத்திக் கொள்வதற்கென தங்களிடம் கேட்க எண்ணுபவை இவைகள் தாம்
1 ஒரு மொழியில் நவீன கவிதை எழுகையில், அவற்றில் அம்மொழியில் ஏற்கெனவே நீடித்திருக்கும் செவ்வியல் கவிதைள் என்ன விதமான பாதிப்பை செலுத்துகின்றன?
2 செவ்வியல் கவிதைகள், அம்மொழியின் நவீன கவிதையின் ‘பிறிதொன்றில்லா படைப்பூக்கத்திற்கு’ தடையாகவும் பாரமாகவும் எப்படி அமைகிறது?
முன்னோடிகளின் பாதிப்பு என்கிற ஒரு விஷயம் இல்லை என்றாலே, ஒரு மொழியில் சிறந்த படைப்பூக்கம் மிக்க நவீன கவிதைகள் எழுந்துவிடுமா?
3 ஒரு மொழியின் செவ்வியல் கவிதைகள், அம்மொழியில் எழும் நவீன கவிதைக்கு சாதகமான விளைவுகள் என எதையுமே ஏற்படுத்தாதா?
4 இங்கு செவ்வியல் கவிதையின் எந்தெந்த அம்சங்கள், நவீன கவிதையின் ‘பிறிதொன்றில்லா படைப்பூக்கத்திற்கு’ தடைகளாகவும் பாரமாகவும் அமைவதாக எண்ணுகிறீகள்?
5 தமிழ் போன்ற ஒரு செழித்த செவ்வியல் இலக்கிய மரபு கொண்ட மொழியில் எழுத வரும் ஒரு நவீன கவிஞன், தமிழ் மொழியின் செவ்வியல் கவிதைகளோடு என்னவிதமான உறவைக் கொண்டிருக்க வேண்டும்?
செவ்வியல் கவிதைகள் பாரம் தான் எனில், அப்பாரத்திலிருந்து தன்னை எப்படி விடுவித்து கொள்வது அவன்?
6 கூடுதலான உலக கவிதைகள் வாசிப்பும் தேய்வழக்கில்லாத சிறந்த நவீன கவிதைகள் எழுவதற்கு ஒரு காரணமென கூறுகின்றீர்கள்.
எனில் போதுமான அளவு உலக கவிதைகள் வாசிக்கப்படும் எல்லா மொழி நவீன கவிதைகளுக்கும் இது பொருந்தும் தானே? தமிழ் நவீன கவிதை பரப்பிலும் போதுமான அளவு உலக கவிதைகள் வாசிக்கப்படுகிறது தானே. பிறகு ஏன் தமிழில் புத்தம் புதிய படைப்பூக்கத்துடன் புத்துணர்வான நவீன கவிதைகள் தொடர்ந்து அதிகம் வருவதில்லை என்கிறீகள்?
7 இக்கலந்துரையாடலில், ஒரு நவீன கவிதை தன் நிலம் சார்ந்ததாகவும், வட்டாரத் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டுமென்றும், அது கவிஞன் தன் அந்தரங்கத்தை, தன் சொந்த கனவை எழுதுகையில் இயல்பாகவே நிகழும் என்றும் கூறியிருக்கிறீர்கள். எனில் உலக கவிதை வாசிப்பு ஒரு நவீன கவிஞனுக்கு மேலதிகமாக கொடுப்பது என்ன?
8 இந்திய பிராந்திய மொழிகளில் எழுத வரும் ஒரு நவீன கவிஞன், உலக நவீன கவிதைகளுடன் என்னவிதமான உறவை பேண வேண்டும்?
(தமிழில் சில கவிஞர்கள் உலக கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு மொழிநடையிலேயே கவிதைகள் எழுதி கடும் சலிப்பை ஏற்படுத்துகிறார்கள்)
9 ஒரு மொழியில், நாட்டாரியல் மரபு கலைகளிலிருந்து நேரடியாக நவீன கவிதை எழுகையில், ஏன் அது மிகவும் புத்தம் புதியதாக இருக்கிறது?
நவீன கவிதையில் நாட்டார் மரபு இலக்கியங்கள் மற்றும் கலைகள் என்ன விதமான பங்களிப்பை ஆற்றுகிறது?
(திரு நிர்மால்யா அவர்கள் மொழியாக்கம் செய்து தொகுத்த ‘கேரள பழங்குடி கவிதைள்’ தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்)
10 ஒரு நவீன கவிஞன், தன் மொழிக்குள் இருக்கும் நாட்டாரியல் இலக்கியங்களை வாசிப்பதும் கவனம் கொள்வதும் எந்த அளவிற்கு முக்கியமானது?
11 தமிழ் மொழியில் செவ்வியல் மரபு போலவே, நவீன கவிதையின் வயதும் 80 ஆண்டுகளுக்கும் மேலாகி அதுவே ஒரு மரபாக உருக்கொண்டிருக்கிறது. உண்மையில் செவ்வியல் கவிதைகளை விடவும் இந்த நவீன கவிதை மரபுதான், தேய்வழக்கற்ற புத்தம் புதிய படைப்பூக்கத்துடன் கவிதைகள் எழுவதற்கு பெரிய தடையாக இருக்கின்றது என்பது என் எண்ணம்.
(ஏனெனில் மரபு கவிதைகளில் வாசிப்பும் ஆர்வமும் கொண்ட நவீன தமிழ் கவிஞர்கள் இந்த தலைமுறையில் மிக குறைவானவர்களே. அவர்களின் தலை முழுவதும் அழுத்திக் கொண்டிருப்பது எண்பதாண்டு கால நவீன கவிதைகளும், உலக கவிதைகளும் தான்)
இன்று எழுத வரும் ஒரு தமிழ் கவிஞன், எண்பதாண்டு கால எடை கொண்ட இந்த நவீன தமிழ் கவிதை மரபின் பாரத்திலிருந்தும் எப்படி தன்னை விடுவித்து, தனித்துவமான கலைஞனாக தன்னை வளர்த்தெடுத்துக் கொள்வது?
தீரா அன்புடன்
வ. அதியமான்.
அன்புள்ள அதியமான்,
இந்த தலைப்பை ஒட்டி ஏதேனும் கவிதையரங்கில் விவாதிக்கலாம். என் தரப்பை இப்படிச் சொல்கிறேன்.
மரபு என்பது ஒரு நவீன மனிதனுக்குச் செல்வம், ஆனால் பயன்படுத்தப்படாத செல்வம் சுமையாகவும் ஆகும். மிகச்சிறந்த உதாரணமாகச் சொல்லப்படவேண்டியது ஜாக் லண்டன் எழுதிய Love of Life. தங்கவேட்டைக்குச் சென்று, தங்கத்தைச் சுமந்து மீள்பவனுக்கு உணவில்லை, சாவு அணுகுகிறது, ஆனால் தங்கமே அவன் தப்பிப்பதற்கு தடையாக ஆகும் பெருஞ்சுமை. அதை கைவிடாமல் அவனுக்கு வாழ்வில்லை.
மரபை கற்று, அதன் அழகை உள்வாங்கி, அதற்கிணையான புதிய அழகை உருவாக்கும்போதே நவீனக் கவிதை கவிதையாக வெற்றிபெறுகிறது. மரபின் அழகை திரும்ப நிகழ்த்தினால் அது நகல். மரபின் அழகிலேயே ஒரு வாசகச்சமூகம் தோய்ந்து கிடக்குமென்றால் அது புதியகவிதையை உணரமுடியாமலாகும்.
மலையாளத்தில் மரபுக்கவிதை சம்ஸ்கிருத மரபில் இருந்து முளைத்தது. அது மிகவலுவான இயக்கமாக 1990 வரைக்கும் கூட நீடித்தது, இன்றுமுள்ளது. அந்த மரபுக்கவிதையின் செல்வாக்கால் நவீனக்கவிஞர்கள் ஒருவகை ’இரண்டும்கெட்ட’ கவிதைகளை அங்கே எழுதிக்கொண்டிருக்கின்றனர். அந்த உரையாடலில் நான் சுட்டிக்காட்டுவது அதைத்தான்.
மரபுக்கவிதை நீண்ட வரலாறு காரணமாக தனக்கான ஒரு தனி மொழிநடையை உருவாக்கிக் கொண்டிருக்கும். மரபுக்கவிதைக்கென ஒலியொழுங்கும் உண்டு. ஒலி அதாவது யாப்புக்காக அது சுற்றிவளைத்துப் பேசும். மரபான தேய்வழக்குகளையும் அணிகளையும் பயன்படுத்தும். உதாரணமாக நிலவுமுகம், நீள்விழிகள், குறுநகை என பலவகையான பழகிப்போன சொல்லாட்சிகள் மரபுக்கவிதைகளில் குவிந்துகிடக்கின்றன. அவை அணிகள். ஆனால் வெறும் ஓசைக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
நவீனக் கவிதையின் தேவைக்கான முதன்மைக் காரணம் என எஸ்ரா பவுண்ட் சொல்வது புதிய மொழிதான். அந்த மொழி ஒரேசமயம் அன்றாடப்பேச்சுமொழியாகவும் இருக்கும், செறிவானதாகவும் சுருக்கமானதாகவும் இருக்கும். புதுக்கவிதை அதை அடையவே முயல்கிறது. (நீங்கள் சொன்ன மொழிபெயர்ப்புநடை கவிஞர்கள் முதலம்சத்தை தவறவிட்டவர்கள். பலசமயம் இரண்டாம் அம்சத்தையும்)
ஆகவே மரபுக்கவிதையின் சாயல் தெரிந்தோ தெரியாமலோ ஒரு நவீனக் கவிஞனில் நிகழுமென்றால் நவீனக்கவிதையின் அடிப்படையான ‘செறிவான அன்றாடமொழி’ என்பது இல்லாமலாகும். ‘சுற்றிவளைக்கும் அணிமொழி’ அங்கே ஊடுருவும். அது நவீனக்கவிதையை அழிக்கும்.
இது மலையாள நவீனக்கவிஞர்களில் பலரிடமுள்ள குறைபாடு. அவர்களை அறியாமலேயே மரபுமொழி வெளிப்படும். மரபுக்கவிதைகளில் மட்டுமே உள்ள பல சொல்லாட்சிகளை கேரள நவீனக்கவிஞர்களில் காணலாம். பலர் மரபுக்கவிதையின் ஓசையையும் அடைய முயல்கிறார்கள். மரபுக்கவிதையின் ஓசை நவீனக்கவிதைக்கு இருந்தால் கேரளத்தின் பொதுரசிகன் அவற்றை விரும்புகிறான் என்பதும் காரணம்.
வடகிழக்குக் கவிஞர்களுக்கு இச்சிக்கல் இல்லை. அவர்கள் ஆங்கிலம் வழி நவீனக்கவிதையை அறிகிறார்கள். நாட்டார்க்கவிதையில் இருந்து தொடர்ச்சி கொள்கிறார்கள். நாட்டார்மரபு ஏற்கனவே பேச்சுமொழிமரபே. அதைச் செறிவாக்கினாலே போதும், நவீனக்கவிதையை அடையமுடியும், மரபிலக்கியத்தைக் கடக்கவேண்டியதில்லை.
தமிழ்க் கவிஞர்களைப் பொறுத்தவரை தொடக்ககாலத்தில் இச்சிக்கல் இருந்தது. ந.பிச்சமூர்த்தி கவிதைகள், தொடக்ககால நகுலன் கவிதைகள் போன்றவை உதாரணம். அவை மரபின் மொழிச்சாயலால் புதுக்கவிதைக்குரிய செறிவான பேச்சுமொழி என்னும் அம்சத்தை இழந்தவை. ஆனால் அடுத்த தலைமுறை கவிஞர்கள் மரபை பயிலாதவர்கள். நேரடியாக முந்தைய தலைமுறை புதுக்கவிஞர்களை கற்று, அப்படியே தாங்களும் எழுத ஆரம்பித்தவர்கள். ஆகவே அவர்களிடம் மரபின் மொழிச்சாயல் இல்லை.
ஆனால் அவர்கள் இழந்தது மரபு அளிக்கும் வேறு சிலவற்றை. இன்றைய நவீனக் கவிஞன் எதற்காக மரபை அறியவேண்டும்? ஒன்று, மகத்தான மானுடத்தரிசனங்களுக்காக. ஒரு கவியுள்ளம் அந்த உச்சங்களைச் சென்றடைந்த வழியை கற்றுக்கொள்வதற்காக. மிகச்சில நவீனக் கவிஞர்களிடம் மட்டுமே அந்த புரிதல் இன்றுள்ளது. மற்றவர்கள் எளிய அன்றாட உணர்ச்சிநிலைகளை திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவை சில்லறைக்கவிதைகளாகவும் உள்ளன.
இரண்டாவதாக, வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த ஒரு தொடர்ச்சியை மரபுக்கவிதையின் பெருநிலம் வழியாக நவீனக் கவிஞன் அடையமுடியும். கவிதையிலுள்ள நிலம் என்பது சொல்லில் நிகழ்ந்த நிலம்தான். அந்த தொடர்ச்சி நவீனக்கவிதையில் இன்றியமையாதது. அதை அடையாத நவீனக்கவிஞர்கள் எழுதும் கவிதைகள் எங்கும் வேர்கொள்ளாதவையாக, செயற்கையான ஒரு களத்தில் நிகழ்வனவாக உள்ளன.
இப்படிச் சொல்கிறேன். மரபுக்கவிதையில் இருந்து நவீனக்கவிஞன் மானுடத் தரிசனங்களை, பண்பாட்டுநிலத்தை அடையவேண்டும். மொழிச்சாயலை அடையக்கூடாது.
ஏன் உலகக்கவிதை வாசிப்பு தேவை? உலககக்கவிதை பற்றிய அறிதலே இல்லாமலிருந்தால்கூட ஒரு மகாகவிஞன் மகத்தான கவிதையை எழுதிக்கொண்டே இருக்க முடியும். கவிதைக்கு ‘டிரெண்ட்’ எல்லாம் தேவையே இல்லை. பேசுபொருட்களுக்காக அது வெளியே பார்க்கவேண்டியதுமில்லை.
ஆனால் இன்னொரு கோணம் உண்டு, பெருங்கவிஞன் என்பவன் பேரறிஞனும்கூட. இன்றுவரை நாம் கண்ட பெருங்கவிஞர்கள் அனைவருமே அரசியல், பொருளியல்,அறிவியல் அனைத்திலும் அறிமுகம் கொண்டவர்களே. கம்பன் முதல் பாரதி வரை. அந்த ஒட்டுமொத்தமான அறிவே அவர்களை முழுமைத் தரிசனம் கொண்டவர்களாக ஆக்குகிறது. அதுவே அவர்களின் கவிதைகளை மகத்தானவையாக ஆக்குகிறது. அதற்கு உலகளாவிய அறிமுகம் தேவை, உலகக்கவிதையை அவர்கள் அறியவேண்டும் என்பது அதன்பொருட்டே.
அடுத்த நிலைக் கவிஞர்களைப் பொறுத்தவரை மூன்று தேவைகளுக்காக அவர்கள் உலகக்கவிதையை அறியவேண்டும். அவர்கள் தங்கள் மேல் ஒரு மதிப்பீடு கொண்டிருக்கவேண்டும், தாங்கள் எழுதுவதன் அழகியல் தளம் பற்றிய ஒரு தற்புரிதல் இருக்கவேண்டும். உலகக்கவிதை அறிமுகம் அதற்கு உதவும். இரண்டாவதாக, அவர்களுக்கு அணுக்கமாக அமையும் கவிஞர்கள் உலகமெங்கும் வாழ வாய்ப்புண்டு. ஷெல்லியை பாரதி கண்டடைந்ததுபோல அவர்கள் அந்தக் கவிஞர்களைக் கண்டடையக்கூடும். மூன்றாவதாக, உலகளாவ கவிதையில் வரும் போக்குகளை கவிஞர்கள் உணரமுடியும், அவற்றில் எவை நமக்குரியவை என்றும் தனக்குரியது என்றும் அவர் கண்டடையவும்கூடும். அதன்பொருட்டு அவர்கள் உலகக்கவிதைகளை வாசிக்கலாம்.
ஆனால் பேசுபொருள் மற்றும் வடிவங்களை உலகக்கவிதைகளில் இருந்து விமர்சனமில்லாமல் பெற்றுக்கொள்வது நவீனக்கவிதையை நகல் ஆக ஆக்கிவிடும். இங்கே வசனக்கவிதை வந்தது மேலைக்கவிதையின் செல்வாக்கினால்தான். பாரதி வால்ட் விட்மானால் பாதிப்படைந்தே அதை உருவாக்கினார். ஆனால் அவருக்கு அதில் விமர்சனமும் ஏற்பும் கொண்ட பார்வையே இருந்தது. வெறும் ஆர்வத்தால் அவர் அதை நகலெடுக்கவில்லை. இங்கே வசனக்கவிதையின் தேவை உண்டு என உணர்ந்து, இந்தியநிலத்திலும் மொழியிலும் அதை பிடுங்கிநட்டு வளர்த்தார். அந்தத் தெளிவு இங்குள்ள கவிஞர்களுக்கு இருக்கவேண்டும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 852 followers

