தெற்கின் காதல்

தான் விரும்பியவனை அடைய முடியாமல் போன பெண்ணைப் பற்றி எத்தனையோ கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் கான் வித் தி விண்ட் போல நிராகரிப்பின் வலியை, ஆழமாக, அழுத்தமாகத் தனது காலகட்ட சரித்திர நிகழ்வுகளுடன் சொன்ன கதை வேறு எதுவுமிலை.

Gone with the Wind திரைப்படத்தை ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு முறை பார்த்துவிடுவேன். எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று.

மார்க்ரெட் மிட்செல் எழுதிய இந்த நாவல் 1936ல் வெளியானது. அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளிலிருந்து இந்த நாவலை உருவாக்கியுள்ளார்.

அந்த நாட்களிலே இந்த நாவலை திரைப்படமாக்க ஐம்பதாயிரம் டாலர் பணம் கொடுத்து உரிமையைப் பெற்றிருக்கிறார் டேவிட் ஓ. செல்ஸ்னிக்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படம் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஒடக்கூடியது. ஹாலிவுட்டின் காவியம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார்கள். படத்தில் நான்கு இயக்குநர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். நான்காவது இயக்குநரான விக்டர் ஃப்ளெமிங் பெயரே திரையில் இடம்பெற்றுள்ளது.

மார்க்ரெட் மிட்செல் தனது வாழ்நாளில் இந்த ஒரேயொரு நாவலை மட்டுமே வெளியிட்டுள்ளார். சிறந்த நாவலுக்கான புலிட்சர் பரிசைப் பெற்ற அவர் தனது 48 வயதில் இறந்து போனார். அவரது மறைவிற்குப் பின்பு அவர் இளமையில் எழுதிய இன்னொரு நாவலும் அவரது வேறு எழுத்துகளும் வெளியிட்டப்பட்டன

There is no remedy for love but to love more என்கிறார் தோரூ. படம் முழுவதும் ஸ்கார்லெட் அதையே செய்கிறாள்.

அமெரிக்க உள்நாட்டுப் போரின் வரலாற்றையும் அழியாத காதல்கதையினையும் இணைந்து உருவாக்கபட்ட கான் வித் தி விண்ட் இன்றளவும் அமெரிக்கச் சினிமாவின் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. படத்தில் ஸ்கார்லெட் ஓ’ஹாராவாக விவியன் லீயும், ரெட் பட்லராகக் கிளார்க் கேபிளும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

அமெரிக்கச் சினிமாவின் மிகவும் பிரபலமான பெண் கதாபாத்திரமாக ஓ’ஹாராவைக் குறிப்பிடுகிறார்கள். அவள் தனது தந்தை வழியில் ஐரிஷ் வம்சாவளியைச் சார்ந்தவள். தாய் வழியில் பிரெஞ்சுப் பெண்.

1861 ஆம் ஆண்டு ஜார்ஜியா மாகாணத்தில் கதை நடக்கிறது. அப்போது ஸ்கார்லெட் ஓ’ஹாராவுக்குப் பதினாறு வயது. திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் இளம்பெண். பணக்கார பெற்றோர்களின் ஆசை மகள். புத்திசாலிப் பெண். அவளது பக்கத்து பண்ணையைச் சேர்ந்த ஆஷ்லேயைக் காதலிக்கிறாள். அங்கே நடைபெறவுள்ள விருந்திற்காகத் தயராகிக் கொண்டிருக்கிறாள்.

அவளது இரண்டு சகோதரிகள் மற்றும் கறுப்பினத்தைச் சேர்ந்த வீட்டுப்பணிப்பெண், ஸ்கார்லெட்டின் தந்தை தாய் அவர்களின் வசதியான வாழ்க்கையைப் படம் ஆரம்பக் காட்சியாகச் சித்தரிக்கிறது. அதில் அனைவரும் ஸ்கார்லெட் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறார்கள். குறிப்பாகப் பணிப்பெண் அவரைச் சாப்பிட வைக்கும் காட்சி. அதில் வெளிப்படும் பொய் கோபம் அழகானது.

அழகியான ஸ்கார்லெட் விருந்தில் தனது காதலன் ஆஷ்லேயை சந்திக்கக் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு புறப்படுகிறாள்.

ஆஷ்லே அவளுடன் நட்பாகப் பழகுகிறான். ஆனால் காதலிக்கவில்லை. ஸ்கார்லெட் அவனை ஒருதலையாகக் காதலிக்கிறாள். எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறாள்.

விருந்தில் தனக்குப் பிடித்தமான மெலனி ஹாமில்டனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆஷ்லே அறிவிக்கிறான். அதனை ஸ்கார்லெட்டால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வருத்தமடைகிறாள். கோபம் கொள்கிறாள்.

ஆஷ்லேயிடம் நேருக்கு நேராகச் சண்டையிடுகிறாள். அவளை விடவும் மெலனி ஒரு சிறந்த மனைவியாக இருப்பாள் என ஆஷ்லே குறிப்பிடுகிறான். அவர்கள் சண்டையை ரிட் பட்லர் என்ற ஒய்வு பெற்ற ராணுவ வீர்ர் ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர். மனைவியை இழந்த நடுத்தர வயது நபர்

எப்படியாவது ஆஷ்லேயின் திருமணம் நின்று போய்விடாதா என ஸ்கார்லெட் ஏங்குகிறாள். அந்தக் கோபத்தில் சார்லஸ் என்ற மெலனியின் சகோதரனை அவசரமாகத் திருமணம் செய்து கொள்கிறாள். ஆனாலும் அவளுக்கு ஆஷ்லேயின் மீதான காதல் மறையவேயில்லை.

தன்னை நிராகரித்த ஆஷ்லேயை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என அவனது குடும்பத்துடன் நெருங்கிப் பழகுகிறாள். மெலனியின் நெருக்கமான தோழியாகிறாள்.

திடீரென உள்நாட்டுப் போர் துவங்குகிறது. ஆஷ்லே போருக்குப் போகிறான். ஸ்கார்லெட் ஓ’ஹாராவின் கணவனும் போருக்குப் போகிறான். போரில் அவளது கணவன் இறந்து போகிறான். ஆஷ்லே என்ன ஆனான் என்று தெரியவில்லை.

யுத்தநிதி சேகரிக்கும் நடனநிகழ்வு ஒன்றில் விதவையான அவள் ரெட் பட்லரை மறுபடியும் சந்திக்கிறாள். அவர்கள் கைகோர்த்து நடனமாடுகிறார்கள். படத்தின் மிகச்சிறப்பான காட்சியது. அப்போது ரெட் பட்லர் அவளது அழகில் மயங்குகிறான். தனது காதலை வெளிப்படுத்துகிறான். அவனைத் தான் ஒரு போதும் ஏற்க முடியாது என்று மறுக்கிறாள் ஸ்கார்லெட்

ஆனாலும் அதன்பிறகான நாட்களில் ரெட் பட்லர் அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருகிறான். அவள் என்றாவது மனம் மாறுவாள் எனக் காத்திருக்கிறான்.

உள்நாட்டுப் போரில் தனது மகனை இழந்த பெற்றோரை ஸ்கார்லெட் ஓ’ஹாரா சந்திக்கும் காட்சி முக்கியமானது. இறந்து போனவர்களின் பட்டியல் வாசிக்கப்படுவது மற்றும் அந்த மைதானமெங்கும் காணப்படும் துயர முகங்கள். கேவல்கள். காயம்பட்டவர்களுக்கு அளிக்கபடும் சிகிட்சைகள். கைகால்கள் போனவர்களின் வலி. வேதனை எனப் போரின் அவலத்தைப் படம் அழுத்தமாகச் சித்தரித்துள்ளது.

போரின் காரணமாக ஏற்பட்ட தாக்குதல். இதன் காரணமான உயிர் இழப்பு என அவர்களின் இயல்பு வாழ்க்கை மாறுகிறது. பெற்றோரை இழந்து, வீட்டை இழந்து ஸ்கார்லெட் அகதி போலாகிறாள். ஆனாலும் ஆஷ்லே மீதான காதல் மறையவில்லை.

ஸ்கார்லெட்டின் வாழ்க்கை காற்றில் அடித்துச் செல்லப்பட்ட இறகைப் போலத் திசைமாறிப் போய்க் கொண்டேயிருக்கிறது. உள்நாட்டுப் போரில் அழிந்து போன தனது பண்ணைக்குத் திரும்பும் ஸ்கார்லெட் மீண்டும் பருத்தி விவசாயம் செய்வதும் இழந்த வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வதும் சிறப்பான பகுதி. நிலம் எவரையும் கைவிடுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

வசதியான வாழ்க்கையிலிருந்து எளிமையான விவசாய வாழ்க்கைக்கு ஸ்கார்லெட் திரும்புகிறாள். அவள் மனது மாறிவிட்டிருக்கும் என நாம் நினைக்கும் போது ஆஷ்லே வீடு திரும்புகிறான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு காயம்பட்ட ஆஷ்லே வீடு திரும்புவது. படத்தின் நிகரற்ற காட்சியாகும். அதன்பிறகு ஆஷ்லே மாறிவிடுகிறான்.

ஆஷ்லே வீடு திரும்பியதால் மெலனியை விடவும் ஸ்கார்லெட் அதிகச் சந்தோஷம் கொள்கிறாள். ஆஷ்லேயுடன் திரும்பவும் பழக ஆரம்பிக்கிறாள். விதவையான தன்னை ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுகிறாள். ஆனால் ஆஷ்லே அவளை ஏற்கவில்லை..

மெலனியின் பிரவசத்திற்காக மருத்துவரை அழைத்துவருவது. மரணப்படுக்கையில் மெலனியை சந்தித்துப் பேசுவது, ரெட் பட்லரிடம் உதவி கேட்பதற்காகச் செல்வது போன்ற காட்சிகளில் விவியன் லீ அபாரமாக நடித்திருக்கிறார்.

ஸ்கார்லெட் அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் அவளது வாழ்வை புரட்டிப் போடுகின்றன. ரெட் பட்லரின் திருமணம் மூலம் வசதியும் அந்தஸ்தும் கிடைக்கின்றன. ஆனால் மகிழ்ச்சி கிடைக்கவில்லை. அவர்களின் பிரம்மாண்ட வீடு. அதன் படிக்கட்டுகள். பலவந்தமாக ரெட் பட்லர் கொள்ளும் உடலுறவு. அடுத்த நாள் அவன் கேட்கும் மன்னிப்பு என அந்த வாழ்க்கை அவள் எதிர்பாராத்து. ரெட் பட்லர் விரும்பியது இது தானா என்று கேள்வி அவனுக்குள்ளாக எழுகிறது.

வெறுப்பிற்கும் நேசத்திற்கும் இடையில் ஸ்கார்லெட் ஊசலாடுகிறாள். அவளால் சரியாக முடிவு எடுக்க முடியவில்லை. வசதியால், ஆடம்பரங்களால் சந்தோஷத்தை ஏற்படுத்தித் தந்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்கிறாள்.

தன்னைப் பிரிந்து ரெட் பட்லருடன் போன ஆசைமகள் வீடு திரும்பும் போது ஸ்கார்லெட் காட்டும் அன்பு அபூர்வமானது. அது போல ரெட் பட்லர் அவளை நிராகரித்துப் போகும் போது காட்டும் கண்ணீரும் மறக்கமுடியாதது.

ஆஷ்லேயின் நிராகரிப்பு தான் ஸ்கார்லெட்டின் வாழ்க்கையை மாற்றுகிறது. பிடிவாதமான சிறுமியைப் போலவே கடைசிவரை நடந்து கொள்கிறாள். முடிவில் எது காதல் என்ற உண்மையை உணரும் போது எல்லோராலும் கைவிடப்படுகிறாள். மறுபடியும் ஸ்கார்லெட் காத்திருக்கத் துவங்குகிறாள்.

ஒன்று சேராத காதலின் ஊடாக அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் படம் விவரிக்கிறது. மூன்றரை மணி நேரம் ஒடும் திரைப்படத்தில். ஸ்கார்லெட்டின் முழுவாழ்க்கையினையும் காணுகிறோம்.

GONE WITH THE WIND (1939)
Clark Gable, Vivien Leigh

ஸ்கார்லெட் ஓ’ஹாரா தனது காலகட்டத்த பெண்களிலிருந்து மாறுபட்டவள். அவள் எதையும் வெளிப்படையாகப் பேசுகிறாள் . தனது உரிமைக்காகச் சண்டையிடுகிறாள். நெருக்கடியை தைரியமாக எதிர் கொள்கிறாள். ஆனால் காதலின் பித்து அவளைத் தடுமாற வைக்கிறது.

ஸ்கார்லெட் ஆஷ்லேயை காதலிப்பது போல மெலனி கூட அவனைக் காதலிக்கவில்லை. ஆனால் ஆஷ்லேயிற்கு மெலனியை தான் பிடித்திருக்கிறது. அது ஏன் என்று அவனிடமே ஸ்கார்லெட் கேட்கிறாள். அவனால் சரியான காரணத்தைச் சொல்ல முடியவில்லை.

மெலனியின் இடத்தில் தன்னை வைத்துக் கொள்ளும் ஸ்கார்லெட் ஆஷ்லேயிற்காகவே அவர்கள் குடும்பத்துடன் நெருங்கி பழகுகிறாள். உதவிகள் செய்கிறாள். . மெலனியே கூட அவளது மரணத்தின் பின்பு ஆஷ்லேயை அவள் கவனித்துக் கொள்ள வேண்டும் என வாக்குறுதியை பெறுகிறாள். . ஆனால் மெலனியின் மரணம் ஆஷ்லேயின் மனதில் ஆழமான வடுவை உருவாக்கிவிடுகிறது. அவன் தன்னால் ஒரு போதும் ஸ்கார்லெட்டை ஏற்க முடியாது என்கிறான்.

படத்தில் ஆஷ்லேவிற்குப் பல்வேறு வழிகளில் ஸ்கார்லெட் உதவுகிறாள். இதனை அறிந்தே ரெட் பட்லர் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். உண்மையில் அவர்கள் திருமணம் ஒரு சமூக ஒப்பந்தம். ஆனால் ஸ்கார்லெட் கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தவுடன் அவனது மனது மாறிவிடுகிறது. ரெட் பட்லர் தனது மகளிடம் காட்டும் பாசம் மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஜார்ஜியாவில் உள்ள தாரா என்ற இடத்திலுள்ள அவர்களின் பண்ணை ஒரு குறியீடாகவே படத்தில் மாறுகிறது. கறுப்பின மக்களைப் படம் சரியாகச் சித்தரிக்கவில்லை என்றொரு விமர்சனத்தை இன்று இப்படம் எதிர்கொள்கிறது. தெற்கின் கதையைச் சொல்லும் இப்படத்தை இயக்கிய விக்டர் ஃப்ளெமிங் தெற்கைச் சேர்ந்தவர். ஆகவே தெற்கு கூட்டணியின் வெற்றியாகவே இப்படத்தைக் கருதுகிறார்கள்.

படத்தில் குழந்தை பருவத்திலிருந்தே ஸ்கார்லெட்டை வளர்த்து வரும் பணிப் பெண் கதாபாத்திரத்தில் நடித்த ஹாட்டி மெக்டேனியல் தனது நடிப்பிற்காக ஆஸ்கார் விருதை வென்றார். இந்த விருதைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே.

எர்னஸ்ட் ஹாலர் படத்திற்குச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். நிலக்காட்சி ஓவியம் போலத் தோற்றமளிக்கும் பல காட்சிகள் இன்றளவும் தேர்ந்த ஒளிப்பதிவின் சாட்சியமாக உள்ளன.

பிரம்மாண்டமான அரங்க அமைப்பு. ஒப்பனை. அந்தக்கால உடைகள் என யாவும் கச்சிதமாக உருவாக்கபட்டிருக்கின்றன. குறிப்பாக நடனவிருந்து காட்சி மற்றும் போர்களக்காட்சிகள் சிறப்பானவை.

படத்தின் முதல்பாதி முடியும் போதே ஒரு முழுமையான படத்தைப் பார்த்த உணர்வை அடைந்துவிடுகிறோம். கதையின் அடுத்தப் பாகம் போலவே பிற்பகுதி அமைந்துள்ளது,

1940ல் வெளியான இப்படம் இன்றும் அதன் புத்துணர்வு மாறாமலிருக்கிறது.

போரும் வாழ்வும் என்ற தலைப்பு இந்தப் படத்திற்கே பொருத்தமானது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2025 03:45
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.