காதலின் இருவேறு பாதைகள்.
ஆஸ்திரியக் கவிஞர் இங்கேபோர்க் பாக்மென் பற்றிய திரைப்படம் ingeborg-bachmann-journey-into-the-desert. பெண் இயக்குநர் Margarethe von Trotta இயக்கியுள்ளார்.
1950-1960களில் புகழ்பெற்ற கவிஞராக விளங்கியவர் பாக்மென். 1973 இல் தனது 47 வயதில் இறந்து போனார்..

சுவிஸ் நாடக ஆசிரியர் மேக்ஸ் ஃப்ரிஷிற்கும் பாக்மேனுக்குமான காதலையும் அவர்களின் உறவில் ஏற்பட்ட விரிசலையும் பற்றிய இத்திரைப்படம் அன்றைய இலக்கிய உலகின் செயல்பாடுகள் மற்றும் கவிஞனின் ஆளுமையைச் சிறப்பாக விவரிக்கிறது. 1958 மற்றும் 1964 க்கு இடையில் கதையின் பெரும்பாலான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

1958 ஆம் ஆண்டுப் பாரிஸில் நடந்த முதல் சந்திப்பில் இங்கேபோர்க் பாக்மென் மீது மேக்ஸ் ஃப்ரிஷிற்கும் காதல் ஏற்படுகிறது. Seine பாலத்தில் அப்போலினேயரின் கவிதைகளை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் காட்சி அழகானது
அந்தக் காதலின் தீவிரத்தில் அவருடன் இணைந்து வாழுவதற்காகப் பாக்மென் சூரிச்சிற்கு இடம் மாறுகிறார். ஆனால் சில நாட்களிலே காதல் கசப்படைய ஆரம்பிக்கிறது. பரஸ்பரம் சண்டையிடுகிறார்கள். அங்கிருந்த நாட்களில் பாக்மென் எதையும் எழுத முடியாமல் போகிறார்.

தனது அறையில் மேக்ஸ் ஃப்ரிஷ் வேகமாக டைப் அடிக்கம் சப்தம் கேட்டு எரிச்சலாகும் பாக்மென் அவருடன் சண்டையிடுகிறார். சப்தம் இல்லாமல் டைப் செய்யும் மிஷின் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்கிறார் மேக்ஸ்
மனச்சோர்வும் தனிமையும் ஒன்று சேர அவள் இசைக்கலைஞர் ஹான்ஸ் வெர்னர் ஹென்ஸே போன்ற வேறு ஆண்களுடன் பழகுகிறார். இதை ஃப்ரிஷ்ஷால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளைச் சந்தேகிக்கத் துவங்குகிறார். இந்தச் சந்தேகம் அவளது நடத்தையைத் தீவிரமாக்குகிறது.
ஒரு உரையாடலின் போது பாக்மென் “You’ll make me unhappy, but I’ll take that risk,” என்கிறார். இது தான் படத்தின் அவரது தீவிரமான செயல்பாடுகளுக்கான ஒரே விளக்கம்.
கதை இரண்டு தளங்களில் நடக்கிறது. ஒன்று பாக்மெனின் பாலைவனப்பயணம். அதன் வழியே அவள் தனது கடந்தகால நினைவுகளுக்குள் மறுபிரவேசம் செய்கிறாள். இன்னொரு தளம் முறிந்து போன அவளது காதல் வாழ்க்கை மற்றும் குடிப்பழக்கம், இளைஞர்களுடன் ஏற்படும் பாலியல் தொடர்பு.
பாலைவனத்திற்குள் பயணம் செய்ய வேண்டும் என்ற அவளது நீண்டகாலக் கனவு நிஜமாகிறது. இளம் வாசகனும் காதலனுமான அடோல்ஃப் ஓப்பல் அவளை அழைத்துப் போகிறான்.
பாலைவன மணலில் தன்னைப் புதைக்கும்படி சொல்கிறாள் பாக்மென். அடோல்ஃப் ஓப்பல் அவளைப் புதைக்கிறான். அங்கே ஒரே நேரத்தில் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைகிறாள். பாலைவனம் முடிவற்ற சுதந்திரத்தின் அடையாளமாகவும் கொடூரமான மனநிலையின் அடையாளமாகவும் சித்தரிக்கபடுகிறது.
ரோம் நகரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பும் பாக்மென் கடந்தகால வடுக்களிலிருந்து விடுபட்டுக் கவிதைகள் மொழியாக்கம் செய்வதில் ஆர்வம் கொள்கிறாள். இதற்காக இத்தாலிய கவிஞர் Giuseppe Ungarettiயை சந்திக்கிறார். அவர்களின் சந்திப்பும் அப்போது நடைபெறும் உரையாடலும் அழகானவை.

தன்னைத் தேடி ரோமிற்கு வரும் மேக்ஸ் ஃப்ரிஷை அழைத்துக் கொண்டு போய்ப் புது உடைகள் வாங்கித் தரும் பாக்மென் அவரை அழைத்துக் கொண்டு விருந்திற்குப் போகும் காட்சியும் அங்கே நடைபெறும் கசப்பான நிகழ்வுகளும் இரவு வீடு திரும்பிய பிறகு மேக்ஸ் ஃப்ரிஷ் நடந்து கொள்ளும் விதமும் உண்மை நிகழ்வின் சிறப்பான படமாக்கம் என்பேன்.
மேக்ஸ் ஃப்ரிஷ் நாட்குறிப்புகளை வாசிக்கும் பேக்மேன் அதில் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவற்றைத் தீயிட்டு கொளுத்துகிறார். அது அவர்களுக்குள் பிரிவை உருவாக்குகிறது. காதலில் சிறிது காலம் மட்டுமே ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவும் நடந்து கொள்ளவும் முடியும். ஆண்களும் பெண்களும் தங்களின் தவறான புரிதல், குழப்பம் அல்லது அனைத்து உறவுகளின் சீர்குலைவு ஆகியவற்றிலிருந்து விடுபடும் வரை, ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லாமல் விலகி இருப்பதே நல்லது என்கிறார் பாக்மென்.
பாக்மெனின் உணர்ச்சிகளை மேக்ஸ் ஃப்ரிஷ் புரிந்து கொள்ளவில்லை. அவள் கொந்தளிப்பான மனநிலையே எப்போதுமிருக்கிறாள். வெளியே அமைதியாகத் தோற்றம் அளிக்கும் அவள் மனதிற்குள் அலைபாய்ந்தபடி இருக்கிறாள். பாலுறவில் மிகுந்த நாட்டம் கொண்டவளாக இருக்கிறாள். ஃபிரிஷ் மீதான பாக்மெனின் காதல் அவளை ஐரோப்பா முழுவதும் ஒரு நீண்ட பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
ஒரு சொற்பொழிவின் போது பாக்மென் “Fascism is the first element in a relation between a man and a woman.” என்று சொல்கிறார்.

கவிதையும் அழகிய நிலக்காட்சியும், சிறப்பான நடிப்பும் கொண்ட இந்தத் திரைப்படம் தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
