அடிமை சாசனம், கடிதம்
ஜெ,
’அடிமைசாசனம்’ கடிதத்திற்கான எதிர்வினைகளை வெளியிட்டு, உங்கள் பல ஆயிரம் வாசகர்களுக்குள் ஒரு மிகத்தேவையான விவாதத்தை அனுமதித்திருக்கிறீர்கள். நன்றி. இந்த விவாததின் இறுதியில், உங்கள் வாசகர்களுக்கு இன்றைய பணிச்சூழல் குறித்த முழுமையான புரிதலும், அந்த புரிதலின் விளைவாக ஏற்படும் மாற்றங்களும் முக்கியமானவையாக இருக்கலாம்.
இன்று சந்தோஷ் சரவணன் அவர்களின் கடிதத்தையும் படித்தேன். நான் எழுதியிருந்தவற்றில் பெரும்பாலானவற்றை அவர் சரியாகவே புரிந்துகொண்டு எதிர்வினையாற்றியிருக்கிறார்- இரண்டு கருத்துக்கள் தவிர. அவரது எதிர்வினை பாதிக்கப்பட்டவர் தரப்பிலிருந்து வருகிறது. எனவே அவர் எழுதியிருப்பவற்றை புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பொருளாதார சுழற்சிக்குள் இருந்துகொண்டு, ஆனால் தங்களை அந்த சுழற்சி பாதிக்காமல் அதனுள்ளிருப்பவர்கள் அல்லது வெளிவந்தவர்களிடமிருந்தும், அவர்கள் அனுபவம் சார்ந்து சில எதிர்வினைகளும் வந்தால், பொதுவாசகர்களுக்கு ஒரு முழுமையான பார்வை கிடைக்கலாம்.
இனி அந்த இரண்டு கருத்துகளும். முதலாவதாக சுயநிர்வாகம் என நான் கூறியதை அவர் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. இரண்டாவதாக நான் கூறியது பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் Target பற்றியது. நிர்வாகத்திற்கு பங்குதாரர்களால் அல்லது பங்குதாரர்களின் இயக்குநர் குழுவால் கொடுக்கப்படும் Target அல்ல. முன்னது, பின்னதை சார்ந்ததுதான். ஆனாலும் நான் கூறியது, அந்தக்கடிதம் கூறவந்ததன் பின்புலத்தில், முன்னதை மட்டும்தான்!
சந்தோஷ் சரவணன் கூறியது போல, எனது கடிதத்தில் தனித்திறன்கள் பற்றி பேசும்போது, ‘கே’விற்கும் அந்த திறன் இல்லை என்னும் தொனி வந்துவிட்டது. கடிதத்தை அனுப்பிய பிறகுதான் அதைக் கவனித்தேன். ‘கே’விடம் மன்னிப்பு கோருகிறேன்.
நன்றி
–அகிலன்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 852 followers

