அறை முழுக்கக் கவிந்த குழந்தை வாடை இதமாகக் குளிர் போர்த்தி இருந்தது

வாழ்ந்து போதீரே (அரசூர் வம்சம் நாவல் தொகுதியில் நான்காவது நூல்) நாவலில் இருந்து –

இவளை ஏமாற்றியாகி விட்டது. இந்தக் குழந்தையையும் தான்.

 

சங்கரனுக்குத் தோன்றியது.  ஒரு நல்ல புருஷனாக, ஒரு தங்கமான அப்பாவாக, இதுதான், இவர்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு எல்லாம் என்று தாங்கி முன் நடத்திப் போகிறது தானே சங்கரனுக்கு விதிக்கப்பட்டது? இதில் கொச்சு தெரிசா எங்கே வந்தாள்? அவளோடு எப்படி சுகித்திருக்கப் போனது? ஒரு வாரப் பழக்கத்தில் உடம்பு கலக்கிற அத்துமீறல் எப்படிச் செய்யப் போனது? எப்படி வந்து படிந்த உறவு அது?

 

இப்படிக் கட்டியவளுக்குத் துரோகம் பண்ணினவன் மனம் குமைந்து திரும்பி வருவான் அவளிடம்.  சாஸ்திரமும் சம்பிரதாயமும் சாகித்யமும், கலாசாரமும் எல்லாம் இதைத் தான் சொல்கிறது.

 

எத்தனை சினிமா கதாநாயகர்கள் இந்த மாதிரியான சூழலில் மனம் நோவதை தத்ரூபமாக நடித்துக் காட்டியிருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து மொறிச்சென்று குளித்து விட்டு, சுத்த வெள்ளை பைஜாமாவும் ஜிப்பாவும் அணிந்து, புஷ்டியான வடக்கத்திய பாணி கடவுள்கள் ஏகப்பட்ட பட்டு, பீதாம்பரத்தோடு பளிங்கில் உட்கார்ந்திருக்கும் கோவில்களில் நூறு படி ஏறிப் போய், அங்கே மணியை அடித்து மனம் திறந்து பாடித் துரோகத்துக்குக் கழுவாய் தேடுவார்கள் அவர்கள்.  என்ன ஏது என்று கேட்காமல், வாயைத் திறந்ததுமே மன்னிக்கத் தயாராக உள்ள, தலையில் முக்காடிட்ட, நடு வகிட்டில் குங்குமம் தீற்றிய பெண்டாட்டி உள்ளவர்கள்.

 

வசந்தி மன்னிக்க மாட்டாள். அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சங்கரனுக்குத் தோன்றவும் இல்லை. அவன் உடம்பு திசுக்களில் இருக்கிற திமிராக இருக்கலாம் இது என்று மட்டும் தோன்றியது. பரம்பரையாக வருவதோ.

 

வசந்தி குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே போனாள். ரஜாயைத் திரும்பப் போர்த்திக் கைக்கடியாரத்தில் மணி பார்க்க எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டு கண் மூடிக் கிடந்தான். அறை முழுக்க அடர்த்தியான குழந்தை வாடை. முன்பெல்லாம் வசந்தி வாடை தான் அடிக்கும்.

 

சட்டென்று அவன் உணர்வில் கொச்சு தெரிசாவின் உடல் வாடை அழுந்த அமர்ந்தது. மோகமும் காமமுமாகப் புரண்டு கிடந்து அவன் திரும்ப உறங்கிப் போனான்.

 

சாப், திங்கள்கிழமை விடிஞ்சுது. எழுந்திருந்து ஆபீஸ் போகலாம்.

 

வசந்தி எழுப்பத் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான் சங்கரன். என்ன கண்றாவி, இருபது இருபத்துநாலு மணி நேரமா உறங்கிப் போனான் அவன்? உடம்புக்கு என்ன நோக்காடு வந்திருக்கிறது தெரியலையே.

 

படுக்கைக்குப் பக்கத்து மேஜையில் வைத்திருந்த கைக்கடியாரத்தை எடுத்துப் பார்த்தான். காலை ஏழு மணி தான். அவனுக்கு ஆசுவாசம் தர, இன்னும் ஞாயிறுதான் நடந்து கொண்டிருக்கிறது.

 

வசந்தி ஓவென்று பெரிதாகச் சிரித்தபடி அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். அவளுக்குள் பாதுகாப்பாக ஒதுங்கியபடி அவள் இடுப்பை முத்தமிட்டான் சங்கரன்.

 

சனியனே. கும்பகர்ணத் தூக்கம் போட்டுட்டேனோ என்னமோன்னு பயந்தே போய்ட்டேன்.

 

ஐயோ வலிக்கறது. கடிக்க வேண்டாம். கேட்டேளா? சூல் இருந்த வயிறு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2024 22:45
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.