அன்னையும் செவிலியும்

சுவே சு.வேணுகோபால்

நிலமென்னும் நல்லாள்- சு.வேணுகோபால்

அன்புள்ள ஜெ,

 இந்திய சமூகம் தலையை நிலப்பிரபுத்துவத்திலும் உடலை முதலாளித்துவத்திலும் இருத்தி பிளவுபட்ட ஒரு வாழ்வை கைக் கொண்டிருக்கிறது.  ஒரு சூழலில் இயல்பாக வளர்ந்து முதிர்ந்து அடுத்த நிலைக்கு புலம் பெயர்தலும்,  பொருத்திக் கொள்ள இயலாத வகையில் மிக வேகமாக மாறும் கால சூழ்நிலையில் பிழைத்தலுக்காக புலம் பெயர்தலும் முற்றிலும் வேறானவை. குறிப்பாக, செழிப்பான பசுமையில் வேரோடியுள்ள மரத்தினை வேருடன் கெல்லி வரண்ட நிலத்தில் நடுவது போலான இந்த இரண்டாவது வகையானது வேறு வாய்ப்புகள் ஏதுமின்றி கிடைப்பதை கைக்கொண்டு பிழைக்கவும் காலந்தோறும் தொடரும் மிகுந்த துயரத்தையும் மனவலியையும் அனுபவிக்கவும் விதிக்கப்பட்ட அபலைகளுக்கானது.  மூன்றாமுலக குடிகளுக்கு விதியின் தண்டணை என்பது இதுவே. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் செயற்கை பஞ்சத்தால் உணவு தேடிதேடி கோடிக்கணக்கானோர்‌ புலம் பெயர்ந்தனர்.சுதந்திரத்திற்கு பிறகு, பெரும் விசைகளின் நடுவே சருகுப் புயல்களாக , வாழ்வு தேடி இந்த புலப் பெயர்வு நடந்து கொண்டிருக்கிறது. உள்ளத்தாலும் வாழும் மனிதருக்கு பிழைத்தல் தாண்டி இருத்தல் மற்றும் வாழ்தலை நோக்கிய பயணம் துயரமும் வேதனையும் நிரம்பியது. தான் சென்ற இடத்தில் வேரூன்ற இயன்றவர்கள் பாக்கியவான்கள். பிறர் துடிதுடித்து மட்கி அழிந்து நடைபிணமாக வாழ்வை நிறைவு செய்வார்கள்.

அவ்வாறான  சருகு ஒன்றின் அலைக்கழிப்பைப் பற்றிய நாவலே சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய நிலம் என்னும் நல்லாள்.  தேனி பகுதியிலுள்ள கிராமத்தில் தேர்ந்த பரம்பரை விவசாய குடும்பத்தில் மூன்று சகோதரர்களில் ஒருவனான பழனிக்குமார்.  மனைவி குடும்பம் கோவை புறநகரில் ஒரு பகுதியிலும் , விவசாயம் கைவிட்டதால் வேலைக்காக மதுரை நகரிலும் , தாய் சகோதரர்கள் சொந்த ஊரிலும் வாழ இவர்களுக்கு இடையே அலையும் குறு புலம்பெயர் வாழ்வை வாழ விதிக்கப்பட்டவன். 

அறிந்தோ அறியாமலோ ஏதேனும் ஒரு வகையில் இயற்கையின் மென்தீண்டல் ஒன்று கிடைக்கப்பெறுபவர்கள் உலகியலில் முற்றாக கரைந்து அழியாமல் ஆன்மாவை தக்க வைத்துக் கொள்ள தகுதியுடைய பாக்கியவான்கள். படிப்பு இல்லையென்றாலும் அசாதாரணமான உழவுத் திறனுடன் துல்லியமான கணக்குடன் மகசூலை அதிகப்படுத்திக் காட்டும் தம்பி குமரனுக்கும், சராசரி அல்பமான அண்ணன் பாஸ்கரனும் இடையில் கச்சிதமாக நிற்பவன் பழனி. தான் வேரூன்றிய நிலத்தில் இருந்து வெளியேறியதன் வலியையும் புதிய இடத்தில் வேரூன்ற அழுத்தம் தரும் சூழ்நிலைக்கும் இடையே ஊசலாடி அலைந்து இறுதியாக அமையும் நிகழ்வுகளே இந்நாவல்.

சளி சிந்திவிட்டு கையை துடைத்து மட்டும் கொள்ளும் பொன்னம்மா பின்னர் தண்ணீர் எல்லாம் கங்கை – வீணாக்கக்கூடாது என்று சொல்வதும், பொன்னி அரிசியோ பிரியாணியையோ பூரியையோ கூட ஆடம்பரமாகக் கருதி சாப்பிடாமல் ஆறு ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கியிருந்த பழனியின் குடும்பத்திற்கும் நவீன ‘நுகர்வு’ பண்பாட்டில்  ஊறிய அவனது மனைவியின் குடும்பத்திற்குமான தலைமுறை இடைவெளியையே அவன் கடக்க வேண்டியது.

கௌமாரி நோய் தாக்கி மரணத்தை நோக்கியிருக்கும் பசுவை குமரன் காப்பாற்றுவதன் சித்திரமே நாவலின் உச்சம்.அன்னையின் அரவணைப்பை விட்டு வெளியேறிய குழந்தை தனது முதல் பிடிப்பை கண்டறிந்து கொள்வது போன்று தன்னறியும் அற்புத தருணமாக அமைவது அது. ஆனால் பழனிக்கு அது தாமதமாக மனவளர்ச்சி குன்றிய சிறுமியின் ஸ்பரிசத்தில் அது தோன்றுகிறது. அறியாமலேனும் தன்னை நேசிக்கின்ற ஒருவர் இருக்கும் உணர்வு மெதுவாக அமைந்தமர வழிவகுக்கிறது.

நாவலின் இறுதியில் வரும் சினையாட்டினை காப்பாற்றும் நிகழ்வு இதற்கு அடுத்தபடி தான். 

மிளகாய், கொள்ளு, சூரியகாந்தி விவசாயம் குறித்த அற்புதமான நுண்விவரனைகள் நாவலின் பெரும் பலம். கொள்ளு விவசாயத்தில் குமரனின் சாமர்த்தியம் மிக அற்புதமாக காட்டப்பட்டுள்ளது. 

அன்னை மடியென்று எதுவும் எஞ்சாது போகும் என துரியனுக்கு பாஞ்சாலி விட்ட சாபம் அவனது வம்சமான நமக்கு தலைமுறையாக தொடர்கிறதால் தான் பிறந்த மண்ணை விட்டு அலைந்து கொண்டிருக்கிறோம். குறைந்த பட்சம் பழனிக்கு கிடைத்தது போன்று ஒரு செவிலியின் கருணையாவது கிடைக்கப்பெறுபவர்கள் பாக்கியசாலிகள்.

சங்கரன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2024 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.