காலஅகாலம்- கடிதம்

 விஷ்ணுபுரம் நாவல் வாங்க

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 

விஷ்ணுபுரம் நாவலின் புதிய பதிப்பிற்காக நீங்கள் எழுதிய  காலன் அகாலன் என்ற தலைப்பை பார்த்ததிலிருந்து எனக்குள்ளாக ரொம்ப நாட்களாக காலம் பற்றிய சிந்தனையே ஓடிக் கொண்டிருந்தது.  காலம் ஈட்டி என்றால் அது நம்மை தொடும் புள்ளியே சாவு. 

மொத்த தத்துவமும் அறிவியலும் கலந்த ஒரு ஆழமான வரி.என் மனது உங்களது கரு குறுநாவலையும் இதனுடன்  இணைத்துக் கொண்டது.

முதல் முதலில் தோன்றிய ஒரு எளிய உயிர் காலம் என்பதை எப்படியாக உருவகித்திருக்கும்? காலம் என்ற கருத்து  எப்பொழுது ஆரம்பித்திருக்கும்? காலம் என்பதே இருத்தலில் இருந்து  இருத்தலின்மை என்பதே.  மிகத் தெளிவாக கண்களுக்கு புலப்படும் சூரியனே ஒவ்வொரு நாளும் இருக்கும் , பின்பு இரவுகளில் இல்லாமல் ஆகி விடுகிறது.  இதனாலேயே எல்லா காலக்கணக்குகளும் சூரியனிலிருந்து தொடங்குகின்றன.  எளிய உயிரினங்களுக்கு எதிர்காலம் பற்றிய புரிதல் இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அதுவும் நம் மொழியில் கடந்த காலம் என்பதற்காக இறந்த காலம் என உபயோகிப்பது மிகச் சரியாகவே உள்ளது. இன்றுமே பல ஆப்பிரிக்க பழங்குடிகளில்  மொழிகளில் நேற்றும் நாளையும் ஒரே சொல் தான். இருக்கு/ இல்லை என்பது மட்டும்தான் இருக்கலாம் என்பதே இல்லை அவர்கள் மொழிகளில் இல்லை.

சூரியனின் மகனே காலனாகிய எமதேவன். ஆரம்பித்து வைத்தவனிடமே முடிவது தான் சரி. நாயாக நம் பின்னால் வருவது.

விஷ்ணு புரத்தில் காலத்தில் இருந்து அகாலத்திற்கு நேராகச் சென்றது. ஆனால் கரு நாவலில்,  இடம் காலம் என்பது நேர்கோட்டில் செல்லாமல்  வளைந்து நெளிந்து சென்றது. C.S.லீவிஸ்இன் நார்னியாவில் வருவது போல் ஒரு கதவை திறந்தால்  வேறொரு உலகத்திற்கு வேறு ஒரு காலகட்டத்தில் செல்வது போல்,  சூசனின் மகன் ஆகிய பிரம்மபுத்திரன் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்கட்டங்களில் வெவ்வேறு வடிவத்தில் தோன்றுகிறான்.   முத்தா கூறுவது போல் சில காலம்/நேர எச்சங்கள் எங்கெங்கோ மிச்சம் இருக்கின்றன.

நதி ஒரே திசைக்கே செல்கிறது. அதிலிருக்கும் மீன்கள் நான்கு திசைக்கும் செல்வன. மீன்களை பிடிக்கும் பறவைகள் ஐந்தாவது திசையையும் அறிந்தவை. அருகே மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யும் யோகியின் உள்ளம் ஆறாவது திசையையும் அறிந்தது”

பௌத்த தத்துவத்தின்படி காலம் என்பது முழு வட்டம்  இல்லை.   வளைந்து செல்லுமே தவிர முழு வட்டமாக ஆக முடியாது என்று  விஷ்ணுபுரத்தில் அஜிதர்  கூறினார். முதன் முதலில் அதை படித்த பொழுது அதை ஒரு ஜிலேபியாக உரு வகித்திருந்தேன். ஒரு கால வட்டம் முடிகையில் அந்த இடத்தை விட்டு கொஞ்சம் நகர்ந்து வந்திருக்கும்.

கால நேரங்கள் ஒரே அம்பாக செல்வதற்கு விஷ்ணுபுரமும், கால நேரங்கள் வளைந்து செல்வதற்கு கரு நாவல் என என் புரிதலுக்கு எடுத்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

மீனாட்சி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2024 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.