மிட்சிகன் உரை, கடிதம்

ஆசிரியருக்கு,

2021ம் ஆண்டிலிருந்து விஷ்ணுபுரம் விருது விழா, குரு நித்யா காவிய முகாம், பூன் இலக்கிய முகாம் என தொடர்ச்சியாக வருடம் ஒருமுறையேனும் ஒரு பெரிய நிகழ்வின் பகுதியாக உங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த வருட பூன் முகாமில் கலந்துகொள்ள இயலாத நிலை. அமெரிக்க வாழ்வுக்கே உரிய சில நடைமுறை காரணங்கள். மிக்ஷிகன் மாகாணம் உங்கள் பயணத் திட்டங்களில் இருந்தது ஒரு பெரும் ஆசுவாசத்தை அளித்தது. நண்பர்கள் சங்கர் நாராயணனிடமும் மதுநிகாவிடமும் பேசி ட்ராய் நகரில் நீங்கள் பங்கேற்கும் கூடுகைக்கு முன்பதிவுசெய்துகொண்டேன், கொலம்பஸ் நகரிலிருந்து வடதிசையில் மூன்றரை மணிநேர பயணம்.

நிகழ்வுக்கு ஒருமணிநேரம் முன்னரே அரங்கிற்கு சென்றுவிட்டேன் (Troy Community Center). சங்கர் நாராயணன் மெல்லிய பதற்றத்துடன் அலைந்துகொண்டிருந்தார். மிக்ஷிகன் நகரில் நீங்கள் ஆற்றும் முதல் உரை என்பதால் அதை சலனங்கள் இல்லாமல் நிகழ்த்தவேண்டிய கடமை அவருக்கு. உங்கள் கூட்டங்களில் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் சில நிபந்தனைகளை அறிவித்தனர். விஷ்ணுபுரம் குழுவுக்கு வெளியே பொதுவான இலக்கிய ஆர்வம் கொண்டவர்களால் நிறைந்த அரங்கு என்பதால் இந்த நிபந்தனைகளின் அவசியம் புரிந்தது.

நண்பர் லஷ்மண் தசரதன் சில நிமிடங்களில் மிக்ஷிகன் நகரின் தமிழ் இலக்கியம் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்த ஒரு சித்திரத்தை அளித்து, உங்களுடைய வருகையின் முக்கியத்துவத்தை உணர்த்தி அரங்கை உங்களிடம் கையளித்தார். கடற்கரையில் பெரும் எண்ணிக்கையில் காணக்கிடைக்கும் பூச்சியொன்றின் வெளி ஓடுகளை உருவகமாக வைத்து உங்கள் உரை அமைந்திருந்தது. பூச்சிகள் வெளியேறி கடலுக்கு சென்றவுடன் அந்த ஓடுகள் கைவிடப்படுகின்றன. நம்முடைய வாழ்வும் இந்த ஓடுகளைப் போன்று இறுதியில் தனித்துவிடப்படுமா என்ற கேள்வியை முன்வைத்தீர்கள்.

நிலப்பிரபுத்துவ முறையிலிருந்து நகர்ந்து முதலாளித்துவ சமூகத்தின் அங்கமாக இருக்கும் தற்போதைய மனிதனின் வாழ்வு அளிக்கும் இடர்களை எப்படி எதிர்கொள்வது?, அதற்கு கலை இலக்கியம் போன்ற தனித்துவமான ரசனைகள் எப்படி உதவும் எனவும் உங்கள் உரை உணர்த்தியது. எந்த விதமான இலட்சியமும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக தொடர்ச்சியாக பேணப்படாவிட்டால் அது வெறும் தொலைதூரக் கனவாக நீர்த்துப்போய்விடும் எனும் கருத்தை முன்வைத்தீர்கள். கற்றல் என்பதே வாழ்வின் தலையாய இன்பங்களில் ஒன்று எனவும், அது இல்லாத கேளிக்கைகள் கசப்பான அனுபவங்களாக சுருங்கிவிடும் நிலையையும் வலியுறுத்தினீர்கள்.

உரையில் “என்னுடைய வாழ்வு இந்த கடற்கரைப் பூச்சிகளின் வெளி ஓட்டைப்போல அர்த்தமற்று தனித்து விடப்பட்டது அல்ல” என்றும், “நான் உங்களை மகிழ்விக்க இங்கு வரவில்லை” என்றும் “அது என்னுடைய வேலை அல்ல” என்றும் சற்று தீவிரமாகவே உங்களை முன்வைத்தீர்கள். ஒரு ஆழமான மையத்தைச் சுற்றி அமைந்த பண்பாடு, கொண்டாட்டம், நவீன வாழ்வு, ஆன்மீகம், கலை ரசனை என பல தளங்களைத் தொட்டுச் சென்ற மிகக் கூர்மையான உரை. எழுத்தைப் போன்றே உரைகளிலும் உங்களுக்கே உரிய தனி முத்திரை ஒன்று உருவாகியிருப்பதை உங்கள் உரைகளைத் தொடர்பவர்களால் எளிதாக உணரமுடியும். பத்தரை மணிக்கு தொடங்கி பன்னிரண்டு மணிக்கு சில நிமிடங்கள் முன்னதாக ஒன்றரை மணிநேரத்தில் கச்சிதமாக தொடங்கி வளர்ந்து முடிந்த உரை.

கால் மணிநேரம் அரங்கினரின் கேள்விகளுக்கு பதில் சொன்னீர்கள். சங்கர் தயக்கத்துடன் உங்களுடைய ஒப்புதலைப் பெற்ற பின்னரே கேள்வி பதில் நேரத்தை அனுமதித்தார். ‘அகப் பயணத்தை எப்படி அமைத்துக்கொள்வது?’, ‘நவீன வாழ்வில் மனிதர்களின் அனுபவங்கள் சுருங்கிவிடனவா? அவற்றை எப்படி மேம்படுத்திக்கொள்வது’ போன்ற சில குறிப்பிடத்தக்க கேள்விகள் எழுந்தன. என்னுடைய பின்வரிசையில் வெண்முரசு முழுத் தொகுப்பை வாசித்த ஒரு வாசகர் இருந்தார். உங்களுடைய கையெழுத்துக்காக ‘இந்திரநீலம்’ தொகுப்புடன் வந்திருந்த வாசகரையும் கண்டேன்.

சங்கர் கூட்டம் தொடங்கும் முன் “நாங்கள் நாற்பது பேரை எதிர்பார்க்கிறோம்” என்று சொன்னார். அந்த எண்ணிக்கை எண்பதாகக் கூடியிருந்ததை அரங்கில் காணமுடிந்தது. ‘திசைகளின் நடுவே’ தொகுப்பில் உங்கள் கையொப்பத்தை வாங்கிக்கொண்டு நண்பர்களிடம் விடைபெற்று மழைத் தூரல்களுக்கிடயில் கொலம்பஸ் திரும்பினேன். இந்த வருடமும் உங்களை நேரில் கண்டுவிட்ட மகிழ்ச்சி எனக்கு.

 

அன்பும் நன்றிகளும்,

பாலாஜி ராஜூ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2024 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.