இளையராஜா திரைப்படம்.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன்.

அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார்.  திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.  அதைத் தொடர்ந்து  திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன்.

இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் கண்டோம். அத்துடன் ஊர்மக்களைச் சந்தித்து உரையாடினோம்.

இளையராஜாவின் பழைய நேர்காணல்கள், பத்திரிக்கைச் செய்திகள்  அவரது பழைய புகைப்படங்கள், காணொளிகள் எனச் சேகரித்துக் கொண்டேன். அவர் குறித்து வெளியான தகவல்கள் மற்றும் தொடர் கட்டுரைகளைத் தேடித்தேடி வாசித்தேன்.  அவர் கடந்து வந்த பாதை வலியும் வேதனையும் நிரம்பியது. தமிழ் திரையிசையில் அவரது சாதனைகள் நிகரற்றவை. இசையின் மானுட வடிவமே இளையராஜா.

அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். இப்படம் அவரது திரைவாழ்வில் மிக முக்கியப் படமாக அமையும்.

இரண்டு மாத கால தொடர் விவாதங்களுக்குப் பிறகு திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசன வடிவை எழுதி இயக்குநருக்குக் கொடுத்துள்ளேன்.  அவரது திருத்தம் மற்றும் மாற்றங்களுக்குப் பின்பு திரைக்கதையின் இறுதி வடிவம் உருவாகும். 

இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த எனக்கு அவரது படத்தில் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது பெருமகிழ்ச்சியைத் தருகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 02, 2024 23:55
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.